இந்திய அணுசக்தித் திட்டம்

அணுசக்தியை எந்த நாளிலும் அழிவு வேலைகளுக்குப் பயன்படுத்த மாட்டோம். அதை ஆக்க வேலைகளுக்கும், சமாதானப் பணிகளுக்கும் மட்டுமே பயன்படுத்துவோம் என்று திடமான உறுதியான ஓர் அணுக் கொள்கையைக் கொண்டிருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் ஒரு நாடு இந்தியா.

அணு ஆராய்ச்சியோ, அணுசக்தி நிலையங்களோ, அதையொட்டிய திட்டங்களோ, அனைத்தும் சமாதானத்தையே இலட்சியமாகக் கொண்டவைகளே அன்றி வேறு எந்த அழிவு நோக்கத்தையும் இலட்சியமாகக் கொண்டதல்ல என்று மீண்டும் மீண்டும் அடித்துக் கூறி வந்த ஒரு நாடு இந்தியா.

அதோடு உலகம் பூராவும் சமாதானத்தைப் பரப்புவதையே இலட்சியமாகக் கொண்ட சமாதானப் புறாவையே முதல் பிரதமராகவும் கொண்டிருந்த ஒரு நாடு இந்தியா.

இந்த நாடு 1947 சுதந்திரத்துக்குப் பின் ஒவ்வொரு துறையிலும் சுயமான வளர்ச்சியை நோக்கி முன்னேறி எல்லா துறையிலும் தன்னிறைவு பெறுவதற்கான பல திட்டங்களைத் தீட்டியது. இவ்வாறே தனது அணுசக்திக் கொள்கைக்கேற்ப அணுசக்தித் துறையிலும் முன்னேற திட்டங்கள் தீட்டப்பட்டன.

1960 ஆண்டு, அதாவது சுதந்திரம் பெற்று 13 ஆண்டுகள் கழித்து இந்திய அணுசக்திக் கமிஷன், திட்டக் கமிஷனுக்கு ஒரு வடிவமைப்பைத் தந்தது. இதன்படி இந்தியாவில் அணு சக்திக்காக எங்கெங்கே என்னென்ன வளங்கள் உள்ளன, அதையொட்டி எங்கெங்கே அணுசக்தி நிலையங்கள் நிறுவலாம் என்று ஆலோசனை வழங்கியது.

கூடவே இப்படி நிறுவப்படும் அணுசக்தி மூலம் கிடைக்கும் அணுமின் சக்தி, இதர அனல், புனல் மின் நிலையங்கள் மூலம் பெறப்படும் மின்சக்திக்கு இணையாக உற்பத்திச் செலவு ஏறக்குறைய ஒரே சமமாயிருக்கும் என்பதையும் அது சுட்டிக் காட்டியது.

எனவே, திட்டக் கமிஷன், அணுசக்திக் கமிஷனின் ஆலோசனையை ஏற்று, அதன்படி அரசுக்கு சிபாரிசு செய்து நாட்டில் அணுசக்தி நிலையங்கள் நிறுவ ஏற்பாடு செய்தது.

இப்படி அணுசக்தி நிலையங்களை நிறுவ, அரசு தெம்போடு அங்கீகாரம் அளித்ததற்கு முக்கியமான காரணங்கள் பல.

1) இந்தியாவில் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் (Tata Institute of Fundamental Research - TIFR) பணியாற்றிப் பயிற்சி பெற்ற திறமையும் ஆர்வமும் மிக்க விஞ்ஞானிகள் இருந்தார்கள்.

இவர்கள் ஏற்கெனவே அணுசக்தி பற்றி, அணு உலைகள் பற்றி சொந்தமாகப் பல ஆராய்ச்சிகள் செய்து இரண்டு சோதனை உலைகளையும் நிறுவியிருந்தார்கள். ஓர் உலை அப்சரா (APSARA) . இன்னொன்று ஜெர்லினா (ZERLINA) .இத்துடன் கனடா தொழில்நுட்பக் கூட்டுடன் சைரஸ் (CIRUS) என்கிற உலையையும் நிறுவியிருந்தார்கள். எனவே, இது அணுசக்தித் தொழிலுக்குப் போதுமான தொழில் நுட்பத்தையும், தொழில் நுட்பம் தெரிந்த விஞ்ஞானிகளையும் பெறுவதற்கான நம்பிக்கை அளித்தது.

2) பீஹார் மாநிலத்தில் ஜடுகுடா பகுதியில் யுரேனியப் படிவுகளும், கேரள மாநிலத்தில் மோனசைட் மணல் பகுதியில் தோரியப் படிவுகளும் ஏராளமான அளவில் படிந்திருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது. இது அணு உலைகளுக்கான எரிபொருள் பிரச்சினையைத் தீர்ப்பதாக இருந்தது.

3) அப்போதைய சூழ்நிலையில், அதாவது இந்திய மண்ணில் புதைந்துள்ள நிலக்கரி மற்றும் எண்ணெய் வளங்கள் முழுதாக ஆராயப்படாமலும், கண்டுபிடிக்கப்படாமலும் இருந்த சூழ்நிலையில் இந்த இயற்கை வளங்கள் இன்னும் 20, 25 ஆண்டுகளுக்குத்தான் வரும் என்று அணுசக்திக் கமிஷன் கூறியிருந்தது. எனவே மாற்று வழிகளில் சக்தியைத் தேடும் அவசியமும் அந்த மாற்று அணுசக்தியைத் தவிர வேறெதுவும் இல்லை எனவும் நம்பப்பட்டது.

4) ஆற்றல் தயாரிப்புக்கு இதர நிலக்கரி, பெட்ரோல், டீசல் எரிபொருள்களைவிட அணு ஆற்றலுக்கு மிகக் குறைவான எரிபொருளே தேவைப்பட்டது. (1 கிலோ யுரேனியம் - 2000 டன் நிலக்கரிக்கு சமம் இல்லையா). எனவே இது எரிபொருள் சிக்கனத்துக்கு வழி கோலும் எனச் சொல்லப்பட்டது.

5) அப்போதைய சூழ்நிலையில் சுதந்திர இந்தியாவின் ‘சுயமான தொழில் வளர்ச்சிப் போக்கிற்கு’ அனல், புனல் நிலையங்கள் மூலம் கிடைத்த மின் சக்தி போதுமானதாக இல்லாமல் பற்றாக்குறையாக இருந்தது. எனவே இந்த வளர்ச்சிக்கு அதிகமான மின்சக்தியும் தேவைப்பட்டது.

இப்படிப்பட்ட பல்வேறு காரணங்களால் ‘சமாதான காரியங்களுக்கே அணுசக்தியைப் பயன்படுத்தும் கொள்கை கொண்ட இந்தியா அணுசக்தி நிலையங்கள் அமைக்க திட்டங்கள் தீட்டியது.

இத்திட்டம் மூன்றுவித படிநிலை வளர்ச்சிகளைக் கொண்டதாக இருக்கும் என்று சொல்லப்பட்டது.

படி ஒன்று : இது இயற்கை யுரேனியத்தை எரிபொருளாகக் கொண்ட கனநீரை முறைப்படுத்தியாகப் பயன்படுத்தும் அணு உலைகளைக் கொண்டதாக இருக்கும். இவ்வுலைகளின் கழிவுகளிலிருந்து அதிகமான அளவு புளூட்டோனியம் கிடைக்கும். இப்புளூட்டோனியத்தைக் கொண்டு அதை எரிபொருளாகப் பயன்படுத்தும் பரிசோதனை வேக ஈனுலைகளும் இதே காலத்தில் நிறுவப்படும். இது 1970 - 80 ஆண்டுக்காலப் பகுதிகளில் செயல்படுத்தப்படும்.

படி இரண்டு : இது மேற்கூறிய இயற்கை யுரேனிய எரிபொருள் உலைகளிலிருந்தும், பரிசோதனை வேக ஈனுலை களிலிருந்தும் பெறப்படும் தோரியத்தைக் கதிரியக்கமூலமாக வேக ஈனுலைகளில் யுரேனியம் - 233ஐ ஈனுவதாக அதை எரிபொருளாகப் பயன்படுத்துவதாக இருக்கும். கூடவே, மேற்கூறிய இரு வகை அணு உலைகளின் அனுபவமும் தோரியம் சுழற்சியைப் பிரதானமாகக் கொண்டதாக அமையும் வகையில் சோதனை உலைகளும் நிறுவப்படும். இது 1980 - 85 காலப் பகுதியில் செயல்படுத்தப்படும்.

படி மூன்று : இது 1985ஐத் தாண்டிய காலப் பகுதியைக் கொண்டதாக இருக்கும். இக்காலப் பகுதியில் நான்கு வகையான அணு உலைகள் செயல்பாட்டில் இருக்கும். 1. இயற்கை யுரேனிய எரிபொருள் அணு உலை. 2. முன்னேறிய அணு உலை, 3. புளூட்டோனிய எரிபொருளைக் கொண்ட வேக ஈனுலை, 4. தோரியம் சுழற்சியைப் பயன்படுத்தும் ஈனுலை.

ஆகவே இவ்வாறாக இந்திய அணுசக்தி வளர்ச்சி, அதாவது சமாதானப் பணிகளுக்கான அணுசக்தி வளர்ச்சி இருக்கும் என்று திட்டமிடப்பட்டது அல்லது எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்தத் திட்டம் எந்த அளவுக்கு நிறைவேறியது. இடையில் இந்தத் திட்டத்திற்கு நேர்ந்த கேடு அல்லது இடையூறு என்ன? இந்தியாவின் அணுசக்திக் கொள்கை என்ன ஆயிற்று என்பதெல்லாம் மிகவும் சுவாரஸ்யமான திகைப்பூட்டும் விஷயங்கள். இதுபற்றி பின்னால் பார்ப்போம்.

அதற்கு முன் இந்தத் திட்டத்தில் நிறைவேறிய அணுமின் நிலையங்கள் எவை எவை? அவை எங்கெங்கு நிறுவப்பட்டு எவ்வாறு செயல்படுகின்றன என்று பார்த்துக் கொண்டு மேலே செல்வோம்.

முதல் அணுமின் நிலையம்

இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் சர்வதேச முட்டாள்கள் தினத்தன்று, அதாவது 1969 ஏப்ரல் முதல் தேதியன்று செயல்படத் துவங்கியது. இது மகாராஷ்டிரா மாநிலத்தின் மேற்குக் கடற்கரை யோரத்தில் பம்பாய்க்கு வடக்கே சுமார் 100 கி.மீ. தொலைவில் தாராபூருக்கு அருகில் அமைந்துள்ளது. எனவே இது தாராபூர் அணுசக்தி நிலையம் என அழைக்கப்படுகிறது.

இது ஏற்கெனவே இந்திய அரசு திட்டமிட்ட, இந்திய விஞ்ஞானிகள் வடிவமைத்த அப்சரா முறையோ, ஜெரிலினோ முறையோ, அல்லது கனடத் தொழில்நுட்பக் கூட்டுடன் அமைந்த சைரஸ் முறையோ அல்லாமல் முற்றிலும் மாறுபட்டு, அமெரிக்காவிடமிருந்து கடன் வாங்கிப் பெறப்பட்ட அணு உலைகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டது. இந்நிலையத்தில் உள்ள இரண்டு உலைகளும் ஒவ் வொன்றும் 190 மெ.வா. உற்பத்தித் திறன் கொண்டவை.

இதற்கான, அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமான இரு தரப்பு பரஸ்பர ஒப்பந்தம், 1963 ஆகஸ்டு 8இல் போடப்பட்டது. ஒப்பந்த அடிப்படைகள் பற்றியதாக இது கையெழுத்திடப் பட்டாலும், உண்மையாக தாராபூர் அணு உலைக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருளை அமெரிக்க அணுசக்திக் கமிஷன் இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கான ஷரத்துகள் அடங்கிய ஒப்பந்தம் 1966 மே 17இல் கையெழுத்தாகியது.

இந்த ஷரத்துகளில் மிகவும் முக்கியமானது தாராபூர் அணு மின் நிலையம் எவ்வளவு காலம் இயங்குகிறதோ அவ்வளவு காலத்துக்கும் அமெரிக்கா செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எரிபொருளாக இந்த நிலையத்துக்கு விற்பனை செய்யும் என்பதாகும்.

இந்நிலையம் தன் மின் உற்பத்தியை ஏப்ரலில் துவங்கினாலும், முழுமையான உற்பத்தி அக்டோபரில்தான் கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அக்டோபர் கடந்து ஒரு ஆண்டுகாலம் ஆகியும் உற்பத்தி முழுமையாகக் கிடைக்கவில்லை. 1970 நவம்பர் வாக்கில்தான் நிலையம் ஓரளவு முழுமையாகச் செயல்படத் துவங்கியது. அதற்குப் பிறகு ஆறு ஆண்டுகள் வரை 1970 - 76க்குள் மிகப் பெரியதும் சிறியதுமான 242 மாற்றங்கள் அணு உலையில் செய்யப்பட்டன. மிக மோசமான தொழில் நுட்பம் கொண்ட இவ்வணு உலையை எப்படியாவது இயங்க வைக்க வேண்டும் என 1977 வாக்கில் மேலும் 58 மாற்றங்கள் செய்யப்பட்டன.

இவ்வளவுக்குப் பிறகும் 1980ஆம் ஆண்டு வாக்கில் உலையில் ஏற்பட்ட ஒரு கசிவினால் அபாயகரமான கதிரியக்கம் வெளிப்பட்டது. இது மிகச் சாதாரண சிறிய கசிவே என்று மூடி மறைக்கப்பட்டது.

தாராபூர் அணுமின் நிலையத்தில் வெளிப்படும் கதிரியக்க அளவு, வரையறுக்கப்பட்ட அளவைவிட மீறியிருப்பதாகவும், அணுமின் நிலையத்தைத் தாண்டி 40 முதல் 50 கி.மீ. தூரம் வரை, அதன் கதிரியக்கம் பரவியிருப்பதாகவும் சொல்லப் படுகிறது.

1972இல் நடந்த ஒரு சிறு விபத்தில் இரண்டு எஞ்சினியர்கள் அணு நிலையத்திலேயே இறந்திருக்கிறார்கள். ஒருவர் அபாயகரமான நிலைக்கு ஆளாகிப் பின் சிகிச்சைக்காக அமெரிக்கா அனுப்பப்பட்டு அங்கேயே இறந்திருக்கிறார். ஆனால் இது விபரம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப் படவில்லை.

இந்நிலையத்தில் 1974 - 78க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட 5 ரெம் அளவையும் தாண்டி அதிகமான கதிர் வீச்சுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

1975 ஓர் ஆண்டில் மட்டும் இப்படிப்பட்ட அளவைத் தாண்டியவர்கள் 190 பேர் என, கதிரியக்க அளவைத் தாண்டும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நிலையத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அணு உலை மாதிரி, கொதிநீர் அணு உலை வகை (Boiling Water Reactor - BWR) எனப்படுகிறது.

இந்தியப் பொருளாதாரத்துக்கு ஏற்ற அணு உலை, கனடா கன நீர் அணு உலைதான் என்றும் (Canadian Heavy Water Reactor, இது சுருக்கமாக CANDU என அழைக்கப்படுகிறது) , இதில் இயற்கை யுரேனியத்தை அப்படியே எரிபொருளாகப் பயன்படுத்தலாம் என்றும் சொல்கிறார்கள்.

அப்படியிருந்தும், மாறாக அமெரிக்காவின் கெடுபிடி நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இந்த வெற்றிகரமாகச் செயல்படாத BWR உலையைத் தாராபூரில் நிறுவியதற்காக, இந்திய அணு ஆய்வுச் சுதந்திரத்தையே அப்போதைய அணு சக்திக் கமிஷன் தலைவர் பாபா அமெரிக்காவுக்கு அடகு வைத்துவிட்டார் என்று பரவலாக, ‘பாபா’ மேல் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது.

காரணம், BWR ஒரு பாதுகாப்பான, முழுமையான தொழில் நுட்பம் நிறைந்த உலை இல்லையென்றும், இது அமெரிக்காவில் பரீட்சார்த்தமாகச் சோதிக்கப்பட்டு, பின் பல இடங்களில் நிறுவ திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் பரீட்சார்த்த சோதனைகளில் இது நம்பிக்கை அளிக்காததால், அமெரிக்காவிலேயே திட்டமிட்டப்படி இது ஓர் இடத்தில் கூட நிறுவப்படவில்லை என்றும் அதற்குள் பாபா அவசரப்பட்டு 1960லேயே இந்த ஒப்பந்தத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டார் என்றும், பாபா அணுசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் (Baba Atomic Research Centre) மூத்த விஞ்ஞானி ஒருவரே கூறியிருக்கிறார்.

அதோடு அமெரிக்கா இதுவரை 564 மெ.வா. உற்பத்தித் திறனைவிட, உற்பத்தியின் திறன் குறைவாக உள்ள ஓர் உலையைக்கூட எந்த நாட்டுக்கும் ஏற்றுமதி செய்ததில்லை எனவும் இந்த உலையில் ஏற்பட்ட பரீட்சார்த்த தோல்வி காரணமாகவே இதை நம் தலையில் கட்டிவிட்டது எனவும் இந்நிலையில் அமெரிக்கா இப்படி இதை நம் தலையில் கட்டவும் பாபாவே காரணமாக இருந்தார் என்பதும் பாபா மேல் குற்றச்சாட்டு சுமத்தப்படுவதற்கு மற்றொரு காரணம்.

இப்படிப்பட்ட தோல்விகரமான அணு உலையைத்தான் ‘வேலியில் கிடப்பதை எடுத்துக் காதில் விட்டுக் கொண்டு குடைகிறது, குடைகிறது என்பது போல்’ நம் நாட்டில் இறக்குமதி செய்து வைத்துக் கொண்டு, தினம் தினம் நம் மக்கள் கதிர்வீச்சு அபாயத்துக்குள்ளாகிக் கொண்டும் செத்துக் கொண்டும் இருக்க வழி வகுத்திருக்கிறார்கள்.இதற்கான திட்டச் செலவு 1962இல் 48 கோடியாக இருந்து, 1970இல் 68 கோடியாக மாற்றம் பெற்று, 1981இல் இது 97.12 கோடியாக உயர்ந்திருக்கிறது. அதாவது 97,12,00,000 ரூபாய். இப்போது இது இன்னும் பல மடங்கு கூடியிருக்கும்.

ராஜஸ்தான் அணுமின் நிலையம்

இது ராஜஸ்தான் மாநிலத்தில் கோடாவுக்கு அருகில் ராணா பிரதாப் சாஹர் என்ற இடத்தில் உள்ளது. எனவே ராஜஸ்தான் அணுசக்தி நிலையம் (RAPS) என அழைக்கப் படுகிறது. இங்கு நிறுவப்பட்டுள்ள இரண்டு அணு உலைகள் ஒவ்வொன்றும் 190 மெ.வா. உற்பத்தித் திறன் கொண்டவை. முதல் உலை ஆகஸ்டு 1972லும், இரண்டாவது உலை ஜூன் 1976 லும் செயல்படத் தொடங்கியது.

ஏற்கெனவே அமெரிக்க உதவாக்கரை அணு உலையைத் தாராபூரில் நிறுவிய அனுபவமோ, என்னவோ, மீண்டும் அந்த வம்புக்குப் போகாமல், கனட நாட்டுத் தொழில் நுட்பத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட (CANDU) முறை அணு உலை இங்கு நிறுவப்பட்டது. இது அழுத்தம் நிறைந்த கனநீர் உலை (Pressurised Heavy Water Reactor - PHWR) என அழைக்கப்படுகிறது. மிகவும் சிக்கனமானது, பாதுகாப்பானது என்று கருதப்பட்ட இந்த உலையும் சும்மா இல்லை. இதன் முதன் உலை நிறுவப் பட்ட 10 ஆண்டுகளுக்குள் கடும் சேதத்துக்குள்ளாகியது.

10 ஆண்டு என்பது நீண்டகாலப் பகுதியானாலும் இதற்காக கொட்டிய பணத்தையும், நிறுவ எடுத்துக் கொண்ட காலப் பகுதியையும் பார்த்தால் இந்த 10 ஆண்டு என்பது மிக அற்பமே. வெறும் 10 ஆண்டு உற்பத்திக்கா இவ்வளவு பணமும், இவ்வளவு உழைப்பையும் செலவிட்டு நிறுவுவது என்று தோன்றும். ஆக இதுவும் சேதத்துக்குள்ளாகியது. பிறகு அதையடுத்து 1982 மார்ச் 4இல் அணு உலைக் கவசத்தில் மென்னீர் கசிவு காரணமாக செயல் முடக்கம் செய்யப்பட்டது.

இந்தக் கசிவு அபாயகரமான கதிரியக்கம் கொண்டதாக இருந்ததால் மனிதர்கள் கிட்டே நெருங்க முடியாத நிலையில் இருந்தது. தொலைக் கட்டுப்பாட்டுக் கருவி மூலம் (Remote Control) கசிவை அடைக்கும் வசதியும் இல்லை. கடுமையான வேறு பல முறைகளைக் கையாண்டு பல மணி நேரம் போராடி கசிசை அடைக்க முனைந்தார்கள். இதன் விளைவாக என்ஜினியர்களும் தொழிலாளர்களுமாக சுமார் 2,000 பேருக்குமேல் கடுமையான கதிரியக்கத்துக்கு ஆளானார்கள். 300 பேர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்கள்.

இது தவிர இக்கசிவால் சுற்றுப்புறத்தில் எவ்வளவு கதிரியக்கம் பரவியது, சுற்றுச் சூழலில் எவ்வளவு மாசு ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இது பற்றி அணுசக்தித் துறை எதுவுமே மூச்சு விடவில்லை. மேலை நாடுகள் போல் இதுபற்றி ஆய்வுகள் நடத்த தனிப்பட்ட ஆய்வு அமைப்புகளும் இந்தியாவில் இல்லை.

இந்நிலையில் அணு உலையில் ஏற்பட்ட தொடர்ந்த இடையூறு காரணமாக 1985 மே 20இல் இந்த உலை நிரந்தரமாக மூடப்பட்டது.

1981 செப்டம்பர் 27இல் இரண்டாவது உலையில் வெப்ப மாற்றுக் குழாயில் கசிவு ஏற்பட்டது. இது குழாயின் தரக் கேடான தயாரிப்பு காரணமாக ஏற்பட்டதாக அறியப்பட்டது. இதனால் அபாயகரமான கதிரியக்கம் வெளிப்பட்டது. இதனால் ஏற்பட்ட விளைவுகள் பற்றியும் ஏதும் தெரியவில்லை.

ஆக, கனடா நாட்டுத் தொழில் நுட்ப அணு உலையும் கையை விரித்து விட்டது. அதுவும் ஆபத்தில்லாமல் இயங்க முடியாது என்பது மெய்ப்பிக்கப்பட்டதோடு மட்டுமல்ல, நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாது என்பதையும் கண்கூடாக நிரூபணம் செய்துவிட்டது.

அதற்கான திட்டச் செலவு எவ்வளவு தெரியுமா? முதல் உலை 1964இல் 33.95 கோடியாக திட்டமிடப்பட்டு 1973இல் 73.27 கோடியாக உயர்ந்தது.

இரண்டாவது உலை 1972இல் 58.16 கோடியாகத் திட்டமிடப் பட்டு 1980இல் 92.26 கோடியாக உயர்ந்தது. ஆக, இரண்டு உலைக்குமான திட்டச் செலவு மொத்தம் 165 கோடியே 53 லட்ச ரூபாய்.

கல்பாக்கம் அணுமின் நிலையம்

சென்னைக்குத் தெற்கே 60 கி.மீ. தொலைவில் வங்கக் கடற்கரையோரம், கல்பாக்கம் என்னும் இடத்தில் கட்டப் பட்டுள்ள அணுமின் நிலையம் இது. இது 235 மெ.வா. உற்பத்தித் திறன் கொண்ட இரு அணு உலைகளைக் கொண்டதாகும். இதன் முதல் உலை MAP – 1 1977லும், இரண்டாவது உலை MAP - 2 1979லும் உற் பத்தியைத் தொடங்கும் என்பதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிறகு 1985லேயே முழு அளவிலான உற்பத்தி சாத்தியம் என்று சொல்லப்பட்டது.

இது ராஜஸ்தானில் கையை விரித்து ஊற்றி மூடிய அதே கனடத் தொழில் நுட்பத்தைக் கொண்ட ‘காண்டு’ முறை அணு உலைதான் என்றாலும், இது முழுக்க முழுக்க 90 சதவீதம் இந்தியத் தொழில் நுட்பத் திறமையுடன் இந்திய விஞ்ஞானி களால் வடிவமைக்கப்பட்டது என்கிறார்கள்.

என்றாலும் இந்த உலையும் சும்மா இல்லை. இதன் முதல் உலையை 1984 ஜூலையில் அப்போதைய பிரதமராயிருந்த திருமதி இந்திராகாந்தி தொடங்கி வைக்க, சில நாள்களுக்குள்ளேயே உலையில் சிறு வெடிப்பு ஏற்பட்டது. அதை உடனடியாகச் சரிசெய்ய முடியாது என்பதால், அதை சரிப்படுத்தும் சில மாதங்கள் வரை உற்பத்தி தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இவ்விபத்து பற்றிய விவரங்களோ விளைவுகளோ இதுவரை எதுவும் வெளியே அறிவிக்கப்படவில்லை.

86ஆம் ஆண்டில் மட்டும் இந்நிலையம் பலமுறை மூடப்பட்டது. மூடப்பட்ட ஒவ்வொரு முறையும் பல மாதங்கள் உற்பத்தித் தடங்கல் ஏற்பட்டது.

1986 மார்ச் மாதம் மின்சார டிரான்ஸ்ஃபார்மர் எரிந்து குளிரூட்டும் சாதனம் பழுதுபட்டதால் கதிரியக்கமுள்ள கனநீர், 16 டன்னுக்கு மேல் உலையில் அடிப்பகுதியில் கொட்டியது. இதில் இடுப்பளவு நீரில் நின்று தொழிலாளர்கள் வேலை செய்திருக்கிறார்கள். இக்கனநீரின் கதிரியக்கத் தன்மை பற்றியோ, அதில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றியோ நிர்வாகம் எதுவுமே அறிவிக்கவில்லை.

1986 ஆகஸ்டு 14ஆம் தேதி ஆஹஞ - 2 இல் தீய்ந்துபோன எரிபொருள் கலவை பண்டல்களை வெளியே எடுக்கையில் அவை உடைந்து எங்கெங்கோ சிக்கிக் கொண்டன. இதுவரை எந்த உலையிலும் ஏற்படாத ஒரு சிக்கல் இது என்று அணுசக்தித் துறைத் தலைவர், டாக்டர் ராஜா ராமண்ணா கூறியிருக்கிறார். இப்படிச் சிக்கிய துகள்களை, சாதாரண தொழிலாளர்களைப் பயன்படுத்தி, கையை உள்ளே விட்டு எடுக்கச் சொல்லிவிட்டு, எந்திர மனிதனைத் (Robot) தயார் செய்து அதனை எடுத்து விட்டதாகப் பொய்யான தகவல் அளித்திருக்கிறார்கள்.

கல்பாக்கம் டவுன்ஷிப் பகுதியில் வசிப்பவர்களைத் தவிர, சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து தினம் இங்கு சுமார் நூற்றுக்கணக்கானோர் தினக் கூலிகளாக வந்து கட்டட வேலை செய்து போகின்றனர். இவர்களில் பலர் அணு உலைப் பகுதியில் அபாயகரமான பகுதிகளிலும் வேலைக்கு ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களுக்கு ஏற்படும் கதிர்வீச்சு பற்றியோ அதன் பாதிப்பு பற்றியோ இவர்களுக்கு எதுவுமே தெரியாது. நிர்வாகமும் சொல்வது இல்லை.

1986, நவம்பர் 20ஆம் தேதி கல்பாக்கம் டவுன்ஷிப்பில் உள்ள ஊழியர் கோ-ஆப்பரேடிவ் ஸ்டோருக்கு (கூட்டுறவு பண்டக சாலைக்கு) வேண்டி வாங்கி வரப்பட்ட பொருள்கள் 1.5 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ளவை எரிக்கப்பட்டன. இப்பொருட்களை ஏற்றி வந்த லாரி ‘சென்ட்ரல் வேஸ்ட் மெடீரியல் ஃபெசிலிட்டி’ நிறுவனத்தைச் சேர்ந்தது என்பதால் வாங்கி வந்த பொருட்கள் கதிரியக்கம் கலந்தது என்பதே பொருட்களை எரித்ததற்கான உண்மையான காரணம். ஆனால் இந்தப் பொருட்களை எரித்ததற்கும் அதன் உண்மையான காரணத்தைச் சொல்லாமல் பொருள்கள் மிகவும் பழசாகப் போய், பழைய சரக்குகளைக் காலி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டதாலேயே அவற்றை எரித்து விட்டதாகப் பொய்யான தகவலைச் சொல்லியிருக்கிறார்கள்.

இப்படித் தொட்டதெல்லாம் வம்பாக முடியும் இந்த அணு சக்தியைக் கல்பாக்கத்தில் நிறுவ ஆன செலவு எவ்வளவு தெரியுமா...? முதல் உலை 1973ல் 61.78 கோடியாகத் திட்டமிடப் பட்டு 1980ல் 107.87 கோடியாக உயர்ந்தது. இரண்டாவது உலை 1975ல் 70.63 கோடியாகத் திட்டமிடப் பட்டு 1980ல் 103.02 கோடியாக உயர்ந்தது. ஆக இரண்டு உலைக்குமான செலவு 210 கோடியே 89 இலட்சம் ரூபாய்.

இதுபோதாதென்று இங்கு ஒரு பரிசோதனை வேக ஈனுலை 1979 வாக்கில் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால், இது திட்டமிட்டப்படி சாத்தியப்படாமல் ஆறு ஆண்டுகள் கழித்து 1985 அக்டோபர் 15லேயே தொடங்கப் பட்டதாகச் சொல்லப் படுகிறது. இந்தப் பரிசோதனை வேக ஈனுலைக்கு (Fast reeder Test Reactor) எவ்வளவு திட்டமிடப்பட்டது. பிறகு அது எவ்வளவாக உயர்ந்தது என்கிற விபரம் தெரியவில்லை.

நரோரா அணு சக்தி நிலையம்

இது உத்திரப் பிரதேச மாநிலம் புலாந்தர் மாவட்டத்தில் உள்ள நரோரா என்னும் இடத்தில் கட்டப்பட்டுள்ளது. எனவே, நரோரா அணுசக்தி நிலையம் (NAP) என அழைக்கப்படுகிறது. 1974ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்ட இந்நிலையம் 14 ஆண்டுகள் கட்டுமானப் பணியை முடித்து 1988ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று இதன் முதல் உலை (NAP.I) இயங்கத் தொடங்கியது.

இரண்டாவது உலை (NAP.II) 1990ஆம் ஆண்டு மே 31 வாக்கில் தொடஙகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதுவும் கனடத்தொழில் நுட்ப மூலம் கொண்ட CANDU- PHWR வகைப் பட்டதேயாகும்.

470 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இந்நிலையம், இரண்டு 235 மெ.வா. உலைகள் கொண்டது. ஏற்கெனவே இந்தியாவில் ‘இயங்கி வரும்’ கோடாவில் உள்ள ராஜஸ்தான் அணுமின் நிலையம் மற்றும் கல்பாக்கத்தில் உள்ள சென்னை அணுமின் நிலையம் ஆகிய நிலையங்களின் செயல்பாட்டு அனுபவங்களைக் கணக்கில் கொண்டு, மிகச் சிறந்த பாதுகாப்பு வசதிகளுடன் நிறுவப்பட்டுள்ளதாகவும், அதற்காகவே இதனை நிறுவ இத்தனை ஆண்டுகள் பிடித்தன என்றும் அரசுத் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் இந்த நிலையம் கட்டுவதற்காகப் பயன்படுத்தப் பட்ட துணைக்கருவிகள் 1975இல் வாங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக திறந்த வெளிகளில் கிடந்ததால், அவை பாதுகாப்பற்றவைகளாகி விட்டன என்றும், நிலையம் துவங்கிய பிறகு இந்த இரண்டாம் தரமான கருவிகளால் ஏதும் விபத்து நேருமாயின் அது பெரும் அழிவுக்கு வழிவகுக்கும் என்றும் எனவே இதன் கட்டுமானப் பணியை நிறுத்துமாறும் பகுதி வாழ்மக்களும் பல்வேறு - சமூகவியலாளர்களும் கோரியிருக்கிறார்கள். இவ்வாறு கோரியவர்களில் திருமதி விஜயலட்சுமி பண்டிட், வி.ஆர். கிருஷ்ணய்யர், பேராசிரியர் மது தந்த வாடே, மால்கம் ஆதிசேஷய்யா, ஐ.கே. குஜ்ரால், ஜனரல் ஜக்ஜீத்சிங் அரோரா, சோலி சராப்ஜி, நயன்தாரா சஹால் ஆகியவர்கள் முக்கியமானவர்கள்.

அதோடு இந்த அணுசக்தி நிலையம் மக்கள் நெருக்கம் மிகுந்த டெல்லி, மதுரா, ஆக்ரா, அலிகார் ஆகிய நகரங்களால் சூழப்பட்டிருக்கிறது. தவிரவும், வட இந்தியாவின் வளம் கொழிக்கும் முக்கிய மூன்று ஜீவ நதிகளான கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா ஆகியவற்றைத் தோற்றுவிக்கும் இமயமலைப் பகுதிக்கும் இது நெருக்கமாக இருக்கிறது.

எனவே, நிலையத்தில் ஏதும் கோளாறோ அல்லது விபத்தோ ஏற்படுமாயின் இது சுற்றுப்புறப் பகுதிகளிலுள்ள நகரங்களைப் பாதித்து லட்சக்கணக்கான மக்களை அபாயத்துக்குள்ளாக்குவதோடு, மூன்று நதிகளது நீரையும் கதிரியக்கத் தாக்கத்துக்குள்ளாக்கும் பயங்கர ஆபத்தும் ஏற்பட வாய்ப்புண்டு என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அரசு எது பற்றியும் லட்சியம் செய்து கொள்ளாமல் தன் திட்டப்படி நிலையத்தைக் கட்டிமுடித்து முதல் உலையையும் இயங்க வைத்துவிட்டது.

இந்த நிலையம் கட்ட எடுத்துக்கொள்ளப்பட்ட 15 ஆண்டுகளையும் சேர்த்து மொத்தம் 25 ஆண்டுகளே இயங்க இருக்கும் இந்நிலையம், ஒவ்வொரு விநாடியும் ஆபத்தோடு இயங்க இருப்பதோடு இது உற்பத்தி செய்ய இருக்கும் திட, திரவ அணுக் கழிவுகள் 25,000 ஆண்டுகளுக்கும் மேலாக விஷத் தன்மை கொண்டவையாகவும் நீடித்துவரப் போகிறது.

வளமான வண்டல் மண் படிந்த பகுதியான சிந்து கங்கைச் சமவெளியையே இந்தக் கழிவுகள் பாழ்படுத்தி நாசம் செய்ய இருக்கிறது. இந்நிலையில் இந்நிலையத்தின் பாதுகாப்பிற்கும் இக்கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கும், அணுசக்தித்துறை என்ன வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது என்பதே இன்று அனைவர் மத்தியிலும் கேள்வியாக உள்ளது.

இந் நிலையத்துக்கான திட்ட ஒதுக்கீடு 1974ஆம் ஆண்டில் 323 கோடி ரூபாய். பிறகு மேலும் ரூ. 209 கோடி ஒதுக்கீடு செய்து அதன் திட்டச் செலவு 532 கோடியாக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் 21 ஆண்டு உழைப்பில் 530 கோடி டாலர் செலவில் மிகச் சிறந்த பாதுகாப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் 900 மெ.வா. ‘ஹோர்ஹாம்’ அணுமின் நிலையத்தை மக்களின் எதிர்ப்பு காரணமாகவும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தின் காரணமாகவும் அமெரிக்க அரசு மூடும்போது அதில் 20இல் ஒருபங்கே செலவிட்டுள்ள இந்நிலையத்தை மக்கள் நலன் கருதியும், இயற்கை வளங்கள் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் கருதியும் மூடிவிடுவதில் ஒன்றும் பெரிய இழப்பு நேர்ந்து விடாது என்பது அறிஞர்கள் மற்றும் வல்லுநர்களின் கருத்து. ஆனால், அரசு எதையும் காதில் போட்டுக் கொள்வதாக இல்லை.

கைகா அணுமின் நிலையம்

இது கர்நாடக மாநிலத்தின் மேற்குக் கடற்கரை ஓரமாக கார்வாருக்குக் கிழக்கே 32 கி.மீ. தூரத்தில் உள்ளது. 235 மெகாவாட் திறன் கொண்ட கைகா I, கைகா II ஆகிய இரு அணு உலைகளும் 1995 வாக்கில் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்த புகழ்பெற்ற எழுத்தாளர்கள் சிவராம கரந்த், யூ.ஆர். அனந்தமூர்த்தி மற்றும் பங்களூர் இந்திய அறிவியல் கழக விஞ்ஞானிகள், பங்களூர், மைசூர், தார்வார் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஆகிய பலரும் இதை எதிர்த்து வந்துள்ளனர்.

மேற்குத் தொடர்ச்சி மலைகளின் வளம் நிறைந்த காட்டில் 2,220 ஏக்கர் பரப்பை, ஆக்ரமிக்கும் இத்திட்டம் ஏற்கெனவே தன் காடு அழிப்பு வேலையைத் தொடங்கிவிட்டது. இத்துடன் மைசூருக்கு அருகில் ரத்னஹள்ளி என்ற இடத்தில் செறிவூட்டப்பட்ட யுரேனியத் தயாரிப்பு நிலையம் கோலார் தங்க வயலுக்கு அருகில் அணுக்கழிவுகளைக் கொட்டிப் புதைக்க பரீட்சார்த்த ஆய்வுக் கூடம், ஆகியவற்றையும் சேர்த்தே கர்நாடக மக்கள் எதிர்த்து வருகிறார்கள். இருந்தும் அரசு விடாப்பிடியாக இத்திட்டங்களைத் தொடர்வதன் காரணம்;

கார்வாருக்கு அருகே மீனவர்களையும், விவசாயிகளையும் வெளியேற்றியும் 5,000 ஏக்கர் காட்டை அழித்தும் 8,000 ஏக்கர் பரப்பில் நிறுவ இருக்கிற ‘கடல் பறவை’ என்கிற கப்பற்படைத் தளத்துக்கு அணுசக்தியால் இயங்க இருக்கும் நீர் மூழ்கிக் பல்களுக்கும், அக்கப்பல்களில் நிறுவ இருக்கும் அணு ஆயுதங்களுக்கும் புளூட்டோனியம் சப்ளை செய்வதற்காகத்தான் என்று சந்தேகப்பட வைக்கிறது.

இந்தத் திட்டத்தையொட்டி எழுந்த எதிர்ப்பின் காரணமாக அப்போதை கர்நாடக முதல்வராயிருந்த ராமகிருஷ்ண ஹெக்டே ‘அணுசக்தியை ஏன் எதிர்க்கிறீர்கள். இது பற்றி நாடு தழுவிய விவாதத்துக்கு ஏற்பாடு செய்வோம் என்று சொன்னதாகவும், மத்திய அரசும் அணுசக்திக் கமிஷனும் இந்த விவாதத்தை விரும்பவில்லையாதலால், விவாதம் கிடப்பில் போடப்பட்டதாகவும் ஒரு தகவல் அறியப்படுகிறது.

ஆனால், கண்துடைப்புக்காக 88ஆம் ஆண்டு டிசம்பரில் விவாதம் என்கிற பெயரில் பங்களூரில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் சிவராம கரந்த் கலந்து கொணடு “இந்த மண்ணும் காற்றும், மற்றுமுள்ள இயற்கை வளங்களும் மக்களுக்குச் சொந்தமானவை, அணுசக்தியால் அதை மாசுபடுத்தாதீர்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

‘அதெல்லாம் ஒன்றும் ஆகாது. வீணாக அஞ்சத் தேவையில்லை' என்று அப்போதைய அணுசக்திக்கமிஷன் தலைவர் எம்.ஆர். சீனிவாசன் தெரிவித்து அத்தோடு விஷயத்தை ஏறக் கட்டியிருக்கிறார்கள்.

1987ஆம் ஆண்டு ஆகஸ்டு 6, ஷிரோஷிமா தினத்தன்று இந்நிலையம் நிறுவப்படுவதை எதிர்த்துப் போராடியதில் இரண்டு காட்டுவாசிகள் துப்பாக்கி சூட்டில் பலியானதுதான் மிச்சம். அரசு எதையும் காதில் வாங்கிக் கொள்வதாய்த் தெரியவில்லை.

இதன் திட்ட மதிப்பு 730 கோடி ரூபாய்.

- இராசேந்திர சோழன்

Pin It