எப்போதும் அச்சு ஊடகங்களால் பரபரப்பாக பேசப்படுகிற அல்லது காட்சி ஊடகங்கள் நிரம்பி வழிகிற காலத்தில் அவர்களால் முக்கியம் என்று காட்சிப்படுத்தப்படுகிற நிகழ்வுகளுக்குப் பின்னால் ஒளிந்து கிடக்கின்ற உண்மைகளை அவ்வளவு எளிதில் கண்டறிய முடியாது என்பது தொடர்ந்து நிருபிக்கப்பட்ட உண்மை. அது சட்டக்கல்லூரி பிரச்சினை என்று ஊடகங்களால் அழைக்கப்படும், டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி சம்பவத்திலும் புதைந்து கிடக்கிறது.

காலம் காலமாக கட்டமைக்கப்படுகின்ற ஒருவிதமான சமூக பொதுபுத்தி தான் பார்க்கும் சம்பவங்களை தனது தேவைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளுகிறது. இந்தப் பிரச்சினையிலும் அதுதான் நடந்தது. பொதுவாக மாணவ சமூகம் குறித்து காட்சிப்படுத்தப்படுகிற பிம்பம் ஏன் அவர்கள் பொறுப்பில்லாதவர்களாக சித்தரிக்கப்படுகிறது என்பது விவாத்திற்குரிய ஒன்று. ஆனால் மாணவர்கள் உரிமைகளுக்காகப் போராடினால் அதை கண்டுகொள்ளாத ஊடகங்கள் அவர்களது தேவைகளுக்காக ஒரு பிரச்சினையை வெட்டியும் ஒட்டியும் காட்டுவது ஒரு வேளை இத்தகைய பிம்பத்தை உருவாக்கி இருக்கலாம். ஆனால் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் தங்களது உரிமைகளுக்காக ஏதாவது போராட்டம் நடத்தினார்களா என்றால் ஓரிரு சம்பவங்களைத் தவிர ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த சண்டை சம்பவம் குறித்துப் பிறகு பார்க்கலாம். அதற்கு முன்பு கடந்த இரண்டு ஆண்டுகளில் சட்டக்கல்லூரி சம்பந்தமான சில வழக்குகளைப் பார்ப்போம்.

* 26.02.07 அன்று 7ஹெச் பேருந்தில் டிக்கெட் எடுக்காத காரணத்தால் மாணவர்களுக்கும் நடத்துனருக்கும் மோதல் ஏற்பட்டு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தாக்கப்பட்டு குறளகம் எதிரில் நடந்த மறியலில் 150 மாணவர்கள் மீது வழக்கு.

* 25.02.08 அன்று என்.எஸ்.எஸ் கேம்பில் தங்களை அனுமதிக்காததை எதிர்த்து என்.எஸ்.எஸ் ஆபிசரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

* 29.02.08 காட்சி ஊடகங்களில் கடுமையாக தாக்கப்பட்டு அய்யோ என்று பதற்றத்துடன் விழுந்த பாரதிகண்ணன் என்ற மாணவன் 29.02.08ந் தேதி அதாவது டி.வி புகழ் சண்டைகாட்சிக்கு எட்டு மாதங்களுக்கு முன்பு தலித் மாணவர்களை தாக்கிட 20 மாணவர்களுடன் கத்தி, உருட்டுக் கட்டை போன்ற ஆயுதங்களுடன் சென்ற போது, கைது செய்யப்பட்டு வழக்கு பதிந்திருப்பது பலருக்குத் தெரியாது.

* 29.02.08 அன்று கல்லூரி கேட்டை உடைத்து தகராறு செய்த 20 மாணவர்கள் மீது வழக்கு (முன்பு நடந்த சம்பவத்தின் எதிர்வினை)

* 06.03.08 குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டவர்களை அந்தப் பக்கம் போன எஸ்.ஐ விசாரித்ததால் அவர் மீது தாக்குதல் - 3 பேர் மீது வழக்கு

* 16.04.08 சீனியர் - ஜுனியர் பிரச்சனையில் என்.எஸ்.சி சாலையில் தகராறு - 79 பேர் மீது வழக்கு

* 22.07.08 கல்லூரி கேட் அருகில் சீனியர் - ஜுனியர் பிரச்சனையில் கத்தி, உருட்டுக் கட்டையுடன் மோதிக்கொண்டு சிலர் மருத்துவமனையில் அனுமதி - 7 பேர் மீது வழக்கு

* அதன்பின் 12.11.08 அன்று தற்போது நடந்த பிரச்சனையின் வழக்குகளும்

* 13.11.08 அன்று இரண்டு மாதத்திற்கு முன் நடந்த குழுச்சண்டையில் சிலர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போல் கல்லூரி விடுதியில் 20.09.06 முதல் 10.10.07 வரை சீனியர் ஜுனியர் பிரச்சனை மற்றும் ஹோட்டலில் சாப்பிட்ட பிரச்சனை என்று 152 பேர் மீது வழக்கு உள்ளது.

மேற்கண்ட விபரங்களைக் கூறிட அடிப்படைக் காரணம் மாணவர்கள் மீது விழுந்த எந்த வழக்கும் கல்வி சார்ந்தோ கல்விநிலைய அடிப்படை பிரச்சனைகள் சார்ந்தோ, அதற்கான மாணவர்கள் போராட்டம் சார்ந்தோ எழுந்ததல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாயிரம் மாணவர்கள் படிக்கும் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நிரந்தர ஆசிரியர்கள் 12 பேர் மட்டுமே (பொறுப்பு முதல்வர் உட்பட) அதாவது 167 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர். இதுவல்லாமல் பகுதி நேரமாக 14 ஆசிரியர்கள் உள்ளனர். இவர்கள் வகுப்புக்கு வந்தால் ரூபாய் 150 சம்பளம். மொத்தம் கல்லூரியில் 13 வகுப்பறை மட்டுமே உள்ளது. 50 கம்ப்யூட்டர்கள் கொண்ட அறை பூட்டியே கிடக்கும். இண்டர்நெட் வசதி இல்லை. இதுவரை சட்டக்கல்லூரி புத்தகங்கள் தமிழில் கிடையாது. 90 சதமான மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் தமிழ்வழியில் படித்தவர்கள் என்ற பின்னணியுடன் இதை இணைத்துப் பார்த்தால் நன்று. இதைவிடக் கொடுமை அவர்களது பாடத்திட்டம் 1970ல் வடிவமைக்கப் பட்டதாகும். மோட்டார் வாகன சட்டம் கூட அதில் இல்லை எனில் எப்படி சைபர் கிரைம் என்ற இண்டர்நெட் குற்றவாளிகள் குறித்த சட்டம் தெரியும்? இப்படி தங்கள் கல்விநிலைய கோரிக்கைகளுக்காகக் கோபப்படாதவர்கள் குறைந்தபட்சம் பி.எல் ஹானர்ஸ் படிப்பை பார்த்தாவது கோபப்பட்டிருக்கலாம்.

டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் நடக்கும் பிஎல் ஹானர்ஸ் படிப்புகள் ஜெயலலிதா ஆட்சியில் துவக்கப்பட்டது . ஒரு வகுப்புக்கு 40 பேர், 24 மணி நேர இண்டர்நெட் வசதி, மூட்கோர்ட் எனப்படும் மாதிரி நீதிமன்றம். வாரம் ஒரு முறை சர்வதேச அளவில் தரம் உள்ள நவீன படிப்பு வசதி, நவீன எல்.சி.டி ஸ்கிரீன் வசதி தேசத்தில் தலைசிறந்த சட்டவல்லுநர்களின் மாதாந்திர ஆலோசனை, நன்கு வடிவமைக்கபட்ட சீருடை என இயங்கும், இங்கு வருட கட்டணம் நாற்பதாயிரம். அதைவிட முக்கியம் 70 சதவீத மதிப்பெண் இருந்தால் மட்டுமே இங்கு விண்ணப்பம் போட முடியும்.

இப்போது புரிந்து இருக்கும் இது யாருக்கான படிப்பு என்று. மிக உயர்ந்த மேட்டுக்குடியினர் பிள்ளைகள் படிக்க உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம் இது. எனவே தங்கள் கண் எதிரில் கேவலப்பட்டு நிற்பதை எதிர்த்து எந்தவித கடுமையான போராட்டங்களுக்கும் செல்ல அவர்கள் தயாராக இல்லை. இந்த மனநிலைக்கு காரணம் என்ன ? தங்களது கல்வியும், கல்விநிலையமும், பாடத் திட்டமும் மிக மோசமான நிலையில் இருப்பினும் கூட அதற்கு எதிராக போராட வேண்டியது குறித்து எந்த கோப உணர்ச்சியும் எழாதது ஏன்? விவாதத்திற்குரிய கேள்விகள் தொடர்கின்றன.

(2)

இந்த கல்வி நிலைய பின்னணியிலும் நாம் டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி பிரச்சினையை அனுகலாம். முக்குலத்தோர் மாணவர் பேரவை என்ற அடையாளத்துடன் டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி வளாகத்தில் துவக்கப்பட்ட அமைப்பினர் முத்துராமலிங்க தேவர் பிறந்த நாளை கொண்டாடும்போது அடிக்கும் துண்டுப்பிரசுரம் மற்றும் போஸ்டரில் டாக்டர் அம்பேத்கர் பெயரை வெட்டி எறிவது இயல்பானதா அல்லது இந்த சாதிய சமூகம் பயிற்றுவித்ததா என்பதற்கு ஆராய்ச்சிகள் தேவையில்லை.

ஒவ்வொரு மணிநேரமும் தலித் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களை நமது சமூகம் மௌனமாய் அனுமதிப்பதன் விளைவுதானே டாக்டர் அம்பேத்கர் என்ற பெயரே ஒவ்வாமையாய் மாறியது. அதனால்தான் இந்த தேசத்தின் சட்டமேதை, அரசியல் சட்ட நிபுணர் என்று புகழப்படுகிற ஒரு மகத்தான மனிதரை தலித் என்ற வார்த்தையால் புறம் தள்ள முடிகிறது. இப்படி சாதி சுயகவுரவமும், அதுகுறித்த பிரச்சனையில் ஈடுபடுகிற போக்கும் எதிர்விளைவை உருவாக்கும்போது மட்டும் பெரிய பிரச்சனையாக பார்க்கப்படுவது ஜனநாயக குணாம்சமா என்பது கேள்விகளுக்கு அப்பாற்பட்டதா?

தாங்கள் படிக்கிற கல்லூரி பெயரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பெயரை வேண்டுமென்றே புறக்கணித்ததால் எழுந்த பிரச்சனையின் விளைவுதான் சன் பிக்சர்ஸ் மன்னிக்கவும் சன் டி.வி வெளியிட்ட சண்டை காட்சி. அதன்பின் தலித் மாணவர்கள் மட்டும் தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டதும், பலர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதும் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பாரபட்சமற்ற முறையில் வழக்கு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்த பின்பு மற்றவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

பல்லாயிரம் ஆண்டுகளாய் பொதுபுத்தியில் உறைந்துள்ள சாதி குறித்த பார்வையின் வெளிப்பாடு என்பது உண்மைதானே ! திண்ணியத்தில் மலம் திணித்ததும், மேலவளவில் முருகேசன் தலையை அறுத்ததும், கயர்லாஞ்சியில் போட்மாங்கே குடும்பம் கதறக் கதற சிதைக்கப்பட்டதும், உத்தபுரத்தில் 18 ஆண்டுகளாய் தனிநாட்டில் வசித்ததும் ஒளிபரப்பப்பட்ட வன்முறையை விட எத்துணை கொடூரமானது.

எனவே, சாதிய குணம் நிரம்பி வழிகிற மாணவக் கூட்டத்தை உருவாக்கும் சமூக அமைப்பிற்குள் கல்வி நிலைய ஜனநாயக உரிமைகளை கேட்டுப் போராடும் குணத்தை உருவாக்குவது கடினமான ஒரு சவால்தான். இதே டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் 450 பேர் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்ட சம்பவம் இரண்டு மாதங்களுக்கு முன் நடந்தது. காரணம் இக்கல்லூரியில் உள்ள அடிப்படை தேவைகளுக்காகவும், பி.எல். ஹானர்ஸ்க்கு நிகராக அனைத்து சட்டக் கல்லூரிகளின் தரத்தையும் மேம்படுத்தி அனைவருக்கும் சமமான சட்டக் கல்வியை வழங்கிட இந்திய மாணவர் சங்கம் என்ற அமைப்பினர் போராட்டம் நடத்தினர், இதைத் தவிர கல்விக்கான போராட்டம் நடந்தது மிகக்குறைவுதான்.

ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி மறுக்கப்படும் சூழலில் உலகமயம் கல்வியை வியாபாரப் பொருளாக மாற்றும் காலத்தில் அனைவருக்கும் கல்வி என்ற கோஷம் மனுதர்மத்தின் எதிர்க்கலக கோஷம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் மிகுந்து வரும் நேரத்தில், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக ஒன்றுபட்டு போராட வேண்டிய மாணவர்கள் மிக எளிதாக சாதிய உணர்ச்சியில் தள்ளப்படுவது யாருக்கு அல்லது எந்த சமூக அமைப்பிற்கு லாபம் என்பதை உரக்கப் பேச வேண்டிய தருணமிது.

(3)

திரைப்படங்களில் கிளைமாக்ஸ் காட்சியில் வருகின்ற காவல்துறையினர் போல் இந்த கட்டுரையின் இறுதியில் "ஸ்கார்ட்லாந்து யார்டுக்கு" இணையானவர்கள் என்று புகழப்படும் தமிழக காவல்துறையினரைப் பற்றி குறிப்பிடாமல் முடிக்க முடியாது. கண்ணெதிரே நடக்கும் தாக்குதலை கண்டும் காணாமல் நின்றது மட்டுமல்லாமல், ஊடகங்கள் தங்களைப் படம் பிடிக்கும் சுரணையற்ற உணர்வு நிலைக்கு அவர்கள் சென்றது வியப்பானதுதான். இந்த சுரணையற்ற உணர்வு நிலையிலிருந்து விடுபட்டவர்கள் அடுத்து செய்த காரியங்கள் அபத்தத்தின் மற்றுமொரு எல்லை. ஏதோ பின்லேடனை பிடிக்கும் சாகசக்காரர்கள் போல கையில் கிடைத்த மாணவர்களையெல்லாம் பிடித்தனர். ஒரே நிபந்தனை அந்த மாணவன் தலித்தாக இருக்க வேண்டும். கடமை உணர்ச்சி அளவுக்கு அதிகமாகப் பொங்கி ஊற்ற வெளிமாநிலத்தில் படிக்கும் மாணவனைக் கூட கைது செய்தனர். காரணம் அவர் டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதுதான். சரி இவர்கள் இப்படி என்றால் நீதித்துறை எப்படி.

ஏதோ கல்லூரி விடுதி மாணவர்கள்தான் அணைத்து பிரச்சினைகளுக்கும் அடிப்படை காரணம் என்பதுபோல, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி விடுதியை மூடிவிட வேண்டுமென உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. சட்டக் கல்லூரி விடுதியின் தரத்தினை மேம்படுத்தி, அடிப் படை வசதிகளை முழுமையாகச் செய்து கொடுப்பதோடு முழுநேர விடுதி காப்பாளரை நியமிப்பதன் மூலம் விடுதியிலுள்ள பெரும்பாலான பிரச்சனை களுக்குத் தீர்வு காணமுடியும். ஆனால், இத்தகைய ஆக்கப்பூர்வமான தீர்வினை சொல்வதற்குப் பதிலாக விடுதியை மூடிவிட்டு சென்னை புறநகரில் வேறுஇடத்தில் விடுதியை கட்டவேண்டுனெ உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

சரி சட்டமன்றத்தில் அடிதடி நடந்தபோது இப்படி இடமாற்ற தீர்ப்பளித்திருந்தால் இவர்களது நீதி மெச்சத்தகுந்தது என்று கூறலாம். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் 99 சதம் தங்கி இருக்கும் விடுதி குறித்து இப்படி தீர்ப்பு சொன்னால் இது அம்மாணவர்களை மறைமுகமாக குற்றவாளி என்று தீர்ப்பளிக்கும் செயல்தானே. அதுசரி இடஒதுக்கீட்டையே ஆதரிக்காத நீதிமான்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்.

சாதாரண கிராமப்புற பின்னணியில் வந்து விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவது கிடக்கட்டும், அவர்களது பாதுகாப்பு கிடக்கட்டும், அவர்கள் பாடதிட்டம் மிகக்கேவலமாய் கிடக்கட்டும், தேவர் பிறந்தநாள் பெயரால் அவமானப் படுத்தப்படட்டும், கல்லூரிப் பிரச்சினையை வைத்து அப்பாவி மாணவர்கள் புழல் சிறையில் கிடக்கட்டும் நமக்கு மும்பை பிரச்சினையைப் போல அடுத்த பரபரப்பு சம்பவங்கள் காத்திருக்கிறது. நமது அரசுக்கு புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டும் வேலை இருக்கிறது. கொஞ்ச காலம் கழித்து ஆட்சியை விட்டு வெளியேற்றப்பட்டதும் ஈராக் குறித்து உளவுத்துறை தப்பான தகவல் கொடுத்ததாக ஒப்புக்கொண்ட ஜார்ஜ்புஷ் போல வருத்தம் தெரிவிக்கலாம்.

- எஸ்.ஜி.ரமேஷ்பாபு

Pin It