பார்ப்பனிய அரசின் கூட்டோடும், காவல் துறையின் துப்பாக்கியோடும், மீண்டும் ஒரு முறை தேவர் சாதி ஆதிக்க வன்முறை தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

ஊடகங்களும், பல வண்ணக் கூட்டணிக் கட்சிகளும், 'கலவரக்காரர்களின் அத்துமீறலால் தான் காவல்துறையும் அத்துமீறிவிட்டது. மாறாக, காவல்துறை மென்மையாகக் கையாண்டிருக்கலாம். சாதுரியமாகக் கையாண்டிருக்கலாம்' என சாதி ஆதிக்க மனோபாவத்தை மென்மையாக வெளிப்படுத்தி அரசைக் காப்பாற்றிக் கொண்டிருக்கையில், ஜெயாவோ பகிரங்கமாகவே, தேவரை இழிவாக எழுதியதால்தான், பரம‌க்குடிப் படுகொலைகள் என சட்டசபையில் அறிவித்து என்னுடையது (சாதி) தேவர் ஆதிக்க ஆதரவு அரசுதான் என தாழ்த்தப்பட்ட மக்களை எச்சரித்திருக்கிறார்.

மேட்டுக்குடி தமிழ்த்தேசியம் பேசும் நம்மில் சிலரோ கள்ள மௌனம் சாதிப்பதும், இந்திய அரசு மற்றும் தி.மு.க.வின் சதி எனச் சுருக்கி மஞ்சள் பத்திரிக்கை பாணியில் ஆதிக்க சாதித்தனத்தை ஆபாசமாகப் பேசுவதும், நன்றி புரட்சி, போஸ்டர் புரட்சி என புரட்சித்தலைவியே புல்லரிக்கும் பல புதிய புரட்சிகள் புரியும் சிலர் பொதுவில் அரச வண்முறையைப் பேசி (அதாவது பொதுவில் மரணதண்டனை எதிர்ப்பைப் பேசி ராஜீவ் கொலையின் நியாயத்தைப் பேசாதது போல), ஜெயா அரசின் ஆதிக்கச் சாதி வெறியை மூடி மறைப்பதும் என இவர்களது செயல்பாடு தமிழ்த் தேசிய ஓர்மையில் சாதி வெறிக்கு எதிரான சனநாயகப் பண்பை மூடி மறைப்பதாகும். அதே போன்று அடித்தள மக்களின் எழுச்சியிலே ஓர் உண்மையான தமிழ்த் தேசிய ஓர்மை உருவாகும் என்பதும், போலீசின் மிருக பலத்திற்கு முன் வெறும் கையோடும், கம்போடும் நின்ற வீரஞ்செறிந்த இம்மக்களே போராட்டத்திற்குத் தலைமைத்துவத்தைக் கையிலெடுப்பார்கள் (ஈழத்தில் கையிலெடுத்தார்கள்) என்பதையும் இம்மேட்டுக்குடி மர மண்டையர்களுக்கு எச்சரிக்க வேண்டியிருக்கிறது.

அடுத்ததாக, தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் பதவி வேட்டைக்காரர்களும், பிழைப்புவாதிகளும் கலவரத்தை விஷமிகள் தூண்டிவிட்டார்கள் எனவும், போலீசார் மென்மையாக அணுகியிருக்கலாம் என்றும் பச்சைப் படுகொலைகள் நிகழ்ந்தபோதும், துணிவு காட்டாமல், மக்களைக் காட்டிக்கொடுத்து, அரசிடம் நல்ல பிள்ளையாகப் பாடம் படிக்கிறார்கள்.

இதை நாம் எவ்வாறு பார்க்கப் போகிறோம்?

90களின் இறுதியில் நடந்த தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சியில் கடந்த 10 ஆண்டுகளாக பம்மிக் கிடந்த தென் மாவட்ட ஆதிக்கச் சாதி வெறி, எங்கே இம்மானுவேல் சேகரன் நினைவு விழா, அனைவரும் பங்கேற்கும் பொது விழாவாக, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் திரட்சியாக மாறிவிடுமே என்ற அச்சத்தால் கவ்விப் பிடிக்கப்பட்டிருக்கிறது. இதன் வெளிப்பாடுதான், அரசின் துணையோடு நடந்த பரம‌க்குடி பயங்கரம். இப்பயங்கரத்தை நாம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்?

சனநாயக ஆற்றல்களும், தமிழ்த்தேசிய சக்திகளும் என்ன கோரிக்கை விடுக்கப் போகின்றோம்?

ஆதிக்கச் சாதிவெறியின் அத்தனை அத்துமீறல்களோடும், ஆபாசங்களோடும் நடைபெறும் தேவர் குரு பூஜை பொது விழாவென்றால், ஒடுக்கப்பட்ட சாதி தன்னை ஆதிக்கத்திற்கு எதிராக அணி திரட்டிக் கொள்ளும் அரசியல் விழாக்களை கலவரமாக்கும், சீர்குலைக்கும், ஆதிக்கச் சாதி அரச வன்முறையை எதிர்க்க ஒடுக்கப்பட்ட தமிழர்களோடு நாம் ஒன்றிணைய வேண்டாமா?

தேவரை இழிவாக எழுதினால், பழனிகுமாரும் எழுவரும் படுகொலை செய்யப்படுவார்கள் என்றால், சாதி வெறியூட்டப்பட்ட காவல்துறை கொலையையும், அதன் பின்னிருந்து இயக்கும் ஆதிக்கச் சாதிக் கும்பலையும் அடையாளப்படுத்தி எதிர்க்க வேண்டாமா?

பரக்குடியில் கலவரத்தை அடக்க துப்பாக்கிச் சூடு என்றால், மதுரையிலும், இளையான்குடியிலும் எதைச் சீர்குலைக்க நடத்தப்பட்டது துப்பாக்கிச்சூடு? யாரை எச்சரிக்க, யாரை அச்சுறுத்த நடந்தது துப்பாக்கிச் சூடு? ஆதிக்கச் சாதிகளின் ஊர்வலத்தில் என்றாவது துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறதா எனக் கேள்வி எழுப்ப வேண்டாமா?

எழுவோம்! தமிழக அரசின் ஆதிக்கச் சாதி வெறிக்கூட்டை அம்பலப்படுத்துவோம்! ஆதிக்கச் சாதி வெறிக்கு எதிராய் அணி திரள்வோம்! ஆதிக்கத்திற்கு எதிரான போரில் ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்குத் தோள் கொடுப்போம்! இவற்றிலிருந்து ஒரு சனநாயக தமிழ்த் தேசிய ஓர்மையைக் கட்டியமைப்போம்!

தமிழக மக்களே!

சாதி ஆதிக்கச் சக்திகளுக்கு எதிராக அணிதிரள்வோம்!

சாதி ஒழித்த சமூகம் அமைப்போம்!

ஒடுக்கப்பட்ட பரமக்குடி தமிழர்களின் பக்கம் நிற்போம்!

ஆதிக்கச் சாதி வெறியை அடித்து நொறுக்குவோம்!

கண்டனக் கூட்டம்

நாள்: 22.09.2011 வியாழன் மாலை 5.30 மணி

இடம் : இக்சா மையம், கன்னிமாரா நூலகம் எதிரில், எழும்பூர்.

தலைமை

தோழர் சதீஷ்குமார்

வரவேற்புரை:

தோழர் அருண்சோரி

கண்டன உரை:

தோழர் தியாகு (தமிழ்த் தேசியப் விடுதலை இயக்கம்)

தோழர் குமாரதேவன் (பெரியார் திராவிடர் கழகம்)

தோழர் சன்முகவேல், தமிழ்த் தேசிய பேரவை, (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)

தோழர் பாவேந்தன் (தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்)

தோழர் சாமுவேல் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி)

தோழர் புனிதபாண்டியன் ஆசிரியர், தலித் முரசு

தோழர் சிம்சன் (ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி)

தோழர் பரிதி, எழுத்தாளர்

தோழர் திறன், எழுத்தாளர்

தோழர் சிவலிங்கம், தலித் சுயரியாதைச் சக்தி, கர்நாடகம்

தோழர் பகத்சிங், வழக்கறிஞர்

தோழர் சிவபெருன் (அம்பேத்கர் சிறுத்தைகள்)

தோழர் அருள்எழிலன், ஊடகவியலாளர்

 

- தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை

9940963131, 9003154128

Pin It