கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

மக்கள் கலை இலக்கிய கழகம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக உழைக்கும் மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக போராடி வரும் இயக்கம். மக்கள் பிரச்சனைகளுக்காக சமரசமின்றி தன்னலமற்ற தோழர்களால் அளப்பரிய ஈகங்களைச் செய்துவரும் அவ்வியக்கத்தின் கொள்கைப் பாடல்களை, தோழர் கோவன் பாடல்களை எழுதியும் இசையமைத்தும் மக்களை ஈர்க்கும்வண்ணம் பாடி புரட்சிகரப் போராட்டங்களுக்கு உந்துதல் அளிப்பவர்.

kovan 1அண்மையில் மூடு டாஸ்மாக்கை- மக்கள் அதிகாரம் என்ற பெயரில் மதுக்கடைகளுக்கு எதிரான கடுமையான பரப்புரையையும் நடத்திவரும் தோழர் கோவன் தெருமுனைகளில் பாட்டுப்பாடி மக்களை மதுவுக்கு எதிராகத் தட்டி எழுப்பினார். இதில் தன்னை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதாகக் கருதிக்கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா தோழர் கோவன் மீது காவல்துறையை ஏவி, தேசத்துரோகக் குற்றப்பிரிவு, இரு சமூகங்களிடையே கலவரத்தைத் தூண்டுதல் ஆகிய குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்துள்ளதை தமிழக மக்கள் முன்னனி வன்மையாகக் கண்டிக்கிறது. தொடர்ந்து அவரை பிணையில் விடுவதற்கும் மறுத்துவருவதுடன், பழைய வழக்குகளையும் தூசுதட்டி எடுத்து மேலும் சில காலம் சிறைவைக்கத் துடிக்கிறார் ஜெயலலிதா! இது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கையாகும்.

ஜெயலலிதா முதல்வராகவும், ஒரு கட்சியின் தலைவராகவும் இருப்பதால்தான் விமர்சனத்துக்கு உள்ளாகிறார். விமர்சனங்களிலிருந்து அவர் தப்பிக்க ஒரே வழி அவர் பொதுவாழ்விலிருந்து முற்றாக விலகிக் கொள்வதுதான். ஒரு கட்சியின் தலைவராக, முதல்வராக இருக்கும்போது அவரது நடவடிக்கைகளில் முரண்படுகிறவர்கள் விமர்சிக்கத்தான் செய்வார்கள். அதைத் தாங்கிக்கொண்டு சீர்தூக்கிப் பார்த்து தன்னுடைய செயல்பாடுகளை மாற்றிக் கொள்வதை விடுத்து, விமர்சிப்பவர்களை கைது செய்து அடக்க நினைத்தால் அது, அவரது அரசியல் முதிர்ச்சியின்மையையும், தான் ஒரு ஜனநாயக விரோதி என்பதையும் அவரே ஒப்புக்கொள்வதாகத்தான் பொருளாகும்.

ஜெயலலிதாவைப் போன்ற ஓர் ஒப்பனை முகமூடியைத் தயார் செய்து அவர் பிறருக்கு மது ஊற்றிக் கொடுப்பதாக, கோவன் தெருமுனைப்பாட்டு நிகழ்ச்சி நடத்தினார் என்பதும் கோவன் மீதான கோபத்துக்கான காரணமாகச் சொல்லப்படுகிறது. மாத, வார நாளிதழ்களில் எத்தனையோ கோட்டோவியங்கள் (காட்டூன்கள்) வழியாக தலைவர்களை கேலிச்சித்திரம் தீட்டிக்காட்டுவது பத்திரிக்கை ஜனநாயகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. இது போலவே இணையவழி தொலைக்காட்சி ஊடகங்களில் தலைவர்களை கிராபிக்ஸ் செய்துகாட்டி அரசியல் கருத்துகளை வெளிப்படுத்தும் மரபும் நடைமுறையில் இருந்து வருகிறது. இதன் இன்னொரு வடிவம்தான் ஜெயலலிதாவின் முகமூடி ஒப்பனையுடன் கலைநிகழ்ச்சி நடத்துவதும் ஆகும். நம்முடைய பழைய பதுமைக்கூத்தும், தெருக்கூத்தும் மாட்டுத்தலை, மயில்தலையுடன் செய்யப்பட்ட ஒப்பனைக்குள் ஓர் ஆள் நின்று ஆடுவதுபோன்ற நிகழ்வுகளின் கலை வடிவங்களில் ஒன்றுதான் கோவனின் கலைநிகழ்சி ஆகும்.

ஒரு அரசியல் கருத்தை கலைவடிவில் காட்சிப்படுத்தும் முறையில் வரும் ஒப்பனை வடிவத்தையும் பாடல்வரிகளையும் சகித்துக் கொள்ள முடியாத முன்னாள் திரைப்படக் கலைஞர், இன்னாள் முதல்வர் ஜெயலலிதா தோழர் கோவனை கைது செய்திருப்பது, அவரது பிரச்சாரத்தைக் கண்டு அஞ்சுவதையே காட்டுகிறது. கோவனின் கலைநிகழ்ச்சி 2016ம் ஆண்டு தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் ஜெயலலிதாவுக்கு இருக்குமானால் தோழன் கோவனை உடனடியாக விடுதலை செய்து, மதுவிலக்கை நடைமுறைக்கு கொண்டுவருவதே சரியானது என்பதை தமிழக மக்கள் முன்னணியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

- அரங்க.குணசேகரன், தலைவர், தமிழக மக்கள் முன்னணி