அணு சக்தியைப் பொறுத்த வரைக்கும் அதை ஆக்கப் பணிகளுக்கே, சமாதானப் பணிகளுக்கே பயன்படுத்துவோம் என்று அடிக்கடி சொல்லி வந்த இந்தியா 1974இல் உலகமே வியக்கும் ஓர் அற்புதமான காரியத்தைச் செய்தது. அந்த வருடம் மே மாதம் 18ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரானில் பூமிக்கடியில் ஓர் அணுகுண்டு வெடிப்புச் சோதனையை நிகழ்த்தியது.

அணுவை ஆக்கப் பணிகளுக்கே பயன்படுத்துவோம் என்றும், அழிவு வேலைகளுக்கு அதைப் பயன்படுத்த மாட்டோம் என்றும் பேசிவந்த இந்தியா இப்படி வல்லரசு நாடுகள் போல் அணுகுண்டு வெடிப்புச் சோதனையில் இறங்கியது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

‘வாய்மையே வெல்லும்’ என்று தன் தேசிய இலச்சினைப் பட்டயத்தில் பொறித்துள்ள இந்தியா, தான் இதுநாள் வரை பறைசாற்றி வந்த கொள்கையைப் பொய்மையாக்கிவிட்டு இப்படி அணுகுண்டு வெடிப்புச் சோதனையில் இறங்கிவிட்டதே என்று இதர நாடுகள் இந்தியாவைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கத் தொடங்கின.

இதற்கு இந்தியா எவ்வளவோ சமாதானம் கூறினாலும், தற்காப்பு நடவடிக்கைகளுக்காகவே இந்தச் சோதனை, மற்றபடி எந்த நாட்டின் மீதும் வலிந்து போர் தொடுப்பதற்காக அல்ல என்று விளக்கமளித்தாலும் இந்தியாமீது இதர நாடுகள் கொண்டுள்ள சந்தேகத்தைப் போக்க முடியவில்லை. இந்தியா அணு சக்தியை ஆக்கப் பணிகளுக்காகவே, சமாதானத்தை நிலை நாட்டுவதற்காகவே மட்டும்தான் பயன்படுத்தும் என்கிற நம்பிக்கையையும் உறுதிப்படுத்த முடியவில்லை.

இதன் விளைவாக கனடா இந்தியாவோடு கொண்டுள்ள அணுசக்தித் தொழில் நுட்பக் கூட்டுறவை முறித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா தாராபூர் அணுமின் நிலை யத்துக்குச் செறிவூட்டப்பட்ட யுரேனியம் சப்ளை செய்வதை நிறுத்தியிருக்கிறது அல்லது சுணக்கம் காட்டியிருக்கிறது.

இந்தியா, அழிவு வேலையெனக் கருதப்படும் அணுகுண்டு வெடிப்புச் சோதனை நிகழ்த்தியதற்கும், ஆக்கப் பணியெனக் கருதப்படும் தாராபூர் மின் நிலையத்துக்கு யுரேனியம் சப்ளையை நிறுத்துவதற்கும் என்ன சம்பந்தம் என்று சிலருக்குத் தோன்றலாம்.

சம்பந்தம் இருக்கிறது. அணு உலை இயக்கமும், அணு குண்டு வெடிப்பும், அதன் கோட்பாட்டளவில் சாராம்சத்தில் ஒன்றே என்று ஆரம்பத்திலேயே குறிப்பிட்டோம் அல்லவா...

அதேபோல அணுவிலிருந்து ஆக்க வேலைக்கான ‘வெப்பம்’ தயாரித்தால் அழிவு வேலைக்கான கதிரியக்கக் கழிவுகளும் கூடவே பிறக்கிறது. அணுவை அழிவு வேலைக்கான அணுகுண்டாகத் தயாரித்தால், அதில் ஆக்க வேலைக்கான வெப்பமும் பிறக்கிறது. எனவே ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை என்று ஆகிறது. ஆனால் இரண்டுமே கட்டுப்படுத்த முடியாதது என்பதையும் எப்போதும் நாம் மறந்துவிடக் கூடாது.

தாராபூர் அணு மின் நிலையம் ஆண்டு ஒன்றுக்கு 135 கி.கி. புளூட்டோனியத்தை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. இதைக் கொண்டு 20,000 டன்கள் TNT கொண்ட அணு ஆயுதங்கள் தயாரிக்கலாம் என்கிறார்கள். இது நாகசாகி ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டுகளை விட 12 மடங்கு வலிமை கொண்டதாக இருக்கும் என்று சொல்லப் படுகிறது. இதே போக்கில் போனால் இன்னும் சில ஆண்டுகளில் தாராபூர் அணு மின் நிலையத்திலிருந்து மட்டும் 3 முதல் 4 டன் வரையான புளூட்டோனியம் அணுகுண்டு தயாரிப்புக்காக இந்தியாவிற்குக் கிடைத்துவிடும் என்று வல்லுநர்கள் கருதினார்கள்.

ஆனால் இதில் ஒரு சிக்கல். தாராபூர் அணுமின் நிலையத்தில், புளூட்டோனியத்தை மறு பதனம் செய்யும் தொழில்நுட்ப வசதி மிகச் சிறிய அளவிலேயே உள்ளது.

அதிக அளவில் மறுபதனம் செய்ய அதற்கு மேலும் அதிக அமெரிக்க தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. இதற்கு அமெரிக்கா மறுத்துவிட்டது.

சரி, தேவையான அளவு மட்டும் மறு பதனம் செய்து கொண்டு எஞ்சியதை எங்காவது கொட்டிவிடலாம் என்றால் அபாயகரமான இக்கழிவை எங்கேயும் கொட்டிவைக்க முடியாது என்கிற பிரச்சினை.

ஆக எரிபொருள் பிரச்சினை, கழிவுப் பிரச்சினை எல்லாமு மாகச் சேர்ந்து தாராபூர் அணுமின் நிலையத்தை இறுக்குகிறது.

இந்த நெருக்கடிக்கிடையில் அமெரிக்கா, 1978ஆம் ஆண்டு மார்ச் 10இல் அணு ஆயுத மிகையுற்பத்தித் தடைச் சட்டம்  (Non-Proliferation Of Nuclear wepons Act 1978) என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. இச்சட்டம், அமெரிக்கா பிற நாடுகளுக்கு அணுசக்தித் தொழில் நுட்பத்தையோ, அணு உலைகளையோ, அல்லது அணு உலைகளுக்கான கருவி களையோ ஏற்றுமதி செய்வதில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது.

இதன்படி தாராபூர் அணு மின் நிலையத்துக்குத் தொடர்ந்து யுரேனிய எரிபொருள் வழங்கவும், கழிவுகளை அப்புறப்படுத்தவும் தொடர்ந்து அமெரிக்க ஒத்துழைப்பு தேவைப்படுமானால் தாராபூர் அணுமின் நிலையத்தில் சர்வதேச அணுசக்தி முகமை (International Atomic Energy Agency)யின் மேற்பார்வையில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை முன்வைத்தது. இதற்கு இந்தியா இணங்கவில்லை என்று தெரிகிறது.

அணுசக்தி பற்றிய ஒப்பந்தங்கள், நடவடிக்கைகள் எல்லாமே மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதால் இப்போது தாராபூர் அணுமின் நிலையத்தின் கதி என்ன என்பது முழுமையாக வெளியே தெரியாமல் இருக்கிறது.

ஆக, 1974 பொக்ரான் அணுகுண்டு சோதனை வெடிப்பு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியது. இருந்தும், இதற்கு 24 ஆண்டுகள் கழித்து 1998 மே 1, 13 தேதிகளில் அதே ராஜஸ்தான் பாலைவனம் பொக்ரான் பகுதியில் இந்தியா வாஜ்பேயி ஆட்சிக்காலத்தில் மீண்டும் இருஅணுகுண்டு வெடிப்புச் சோதனைகளை நிகழ்த்தியது.

இந் நடவடிக்கைகளை வைத்து, தன்னோடு போட்டுக்கொண்ட தாராபூர் ஒப்பந்தத்திற்கு இந்தியா துரோகம் செய்து விட்டது என்று அமெரிக்கா கூறுகிறது. அமெரிக்கா வாக்குப்படி நடந்துகொள்ள வில்லை என்று இந்தியா குமுறுகிறது.

இதில், 1968இல் உலக நாடுகள் சேர்ந்து உருவாக்கிய அணு ஆயுத மிகையுற்பத்தித் தடை ஒப்பந்தத்தில் (Treaty on the Non-proliferation of Nuclear Weapons of 1968) இந்தியா கையெழுத்திட வில்லை. ஆகவே, இந்தியா மேல் எந்தவித குற்றச்சாட்டையும் சுமத்த முடியாது என்று ஸ்வீடன் நாட்டின் முன்னாள் இந்தியத் தூதுவரான ஆல்வா மிர்தால் என்ற பெண்மணி கூறுகிறார். என்றாலும் அணுகுண்டு வெடிப்பில் சண்டைக்கான வெடிப்பு, சமாதானத்துக்கான வெடிப்பு என்று தனித்தனியாகப் பார்க்கு மளவுக்கு இரண்டிலும் சாராம்சத்தில் ஒன்றும் வேறுபாடு கிடையாது. இரண்டும் ஒன்றுதான். குண்டு குண்டுதான் என்பதும் இவர் கருத்து.

வாக்கைக் காப்பாற்றத் தவறியது யார் என்பதில் பிரச்சனை இருந்தாலும் எப்படியோ இந்தியா அணுகுண்டு வெடித்து விட்டது. வெடித்துச் சோதனை நிகழ்த்தியதோடு இல்லை. மேற்கொண்டும் அணுகுண்டு தயாரித்து வைத்திருக்கிறது. தயாரிப்பில் இறங்காமல் சும்மா தமாசுக்கா சோதனை. ஆக இந்தியாவும் அணுகுண்டு தயாரித்து வைத்திருக்கிறது. இப்போது இந்தியாவிடம் சுமார் 20 (பாகிஸ்தானிடம் 4) அணுகுண்டுகள் இருக்கலாம் என்று 8-7-88 இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது...

சரி, இந்தியா ஏன் அணுகுண்டு தயாரித்தது? இதுவரை அது சமாதானம் பற்றிப் பேசி வந்ததெல்லாம் சும்மாவா. அல்லது சந்தர்ப்பவசத்தால் இப்படித் தயாரித்து வெடித்து விட்டதா..? அல்லது அப்படியே தயாரித்து வெடித்தால்தான் அதில் என்ன தவறு..? என்ற சந்தேகங்கள் நமக்கே கூட எழலாம்.

இந்தியா, அணுசக்தியை ஆக்கப் பணிகளுக்குத்தான் பயன் படுத்துவோம், சமாதானப் பணிகளுக்குத்தான் அதை வெளிப் படுத்துவோம் என்று ஆயிரம்தான் சொன்னாலும், அண்டைப் பக்கத்திலுள்ள சிறு நாடுகளை அச்சுறுத்தவோ, அல்லது அந் நாடுகளைவிட தான் ராணுவ பலத்தில் உயர்ந்தவன் என்று காட்டிக்கொண்டு மேலாதிக்கம் செலுத்தவோ, அல்லது சிறு யுத்தம் வந்தால் சமாளிக்கவோ இந்த அணுகுண்டு வெடிப்புச் சோதனையில் இறங்கியிருக்கலாம். அணுகுண்டும் தயாரித்து வைத்திருக்கலாம்.

இல்லாவிட்டால் சர்வதேச அந்தஸ்து கருதியோ, அல்லது உள்நாட்டில் உள்ள நிர்ப்பந்தம் - நிர்ப்பந்தம் என்றால் ஆளும் கட்சி அதன் பின்னால் உள்ள ஆதிக்க சக்திகளின் நிர்ப்பந்தம் தான் - காரணமாகவும் இப்படிப்பட்ட காரியங்களில் இறங்கி யிருக்கலாம்.

எது எப்படியானாலும் ஏதோ ஒரு யுத்த நோக்கம் கருதியோ அல்லது யுத்த எதிர்பார்ப்பு நோக்கம் கருதியோதான் இந்தியா இந்த வேலையில் இறங்கியிருக்கிறது என்பது தெளிவு.

இந்தியாவுக்கு இந்த யுத்த அவசியம் அல்லது யுத்த எதிர்பார்ப்பு அவசியம் எங்கிருந்து வந்தது? அதன் பின்னணி என்ன? இந்தியா இப்படி அணுகுண்டு வெடிப்புச் சோதனை நிகழ்த்தவும் தயாரிக்கவும் காரணமானவர்கள் யார்? அல்லது காரணமான சக்திகள் எவை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

எனவே, இதற்குப் பின்னணியாக உள்ள இந்திய அணுசக்திக் கமிஷனின் வரலாற்றை ஓரளவு பார்த்துக்கொண்டு பிறகு அடுத்துச் செல்வோம்.

முதல் அணுசக்திக் கமிஷன்

இந்தியாவில் அணுசக்தி விஞ்ஞான ஆராய்ச்சியின் வளர்ச்சி 1930க்கும் 48க்கும் இடைப்பட்ட ஆண்டுகளிலிருந்து தொடங்குகிறது. இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் டாக்டர் சர்.சி.வி. ராமன், சர் ஜகதீச சந்திரபோஸ் மற்றும் மெஹ்னாத் சாகா ஆகிய மூன்று அறிவியல் அறிஞர்களும் அணுசக்தி துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளில் இறங்கியிருந்தார்கள்.

முன்னதாக அறிவியல் மேதை ஐன்ஸ்டினின் பாராட்டைப் பெற்ற போஸ் - ஐன்ஸ்டின் புள்ளியியலை நிறுவிய எஸ்.என். போஸ் எனப்படும் சத்திய நாராயண போஸ் என்பாரும் அணு இயற்பியல் ஆய்வுகளில் பல அடிப்படை உண்மைகளை நிறுவினார்.

சர் சி.வி.ராமன் பங்களூரில் இருந்த இந்திய அறிவியல் கழகத்தின் (Indian Institute of Sciences) முதல் இந்திய இயக்குநர் ஆனார்.

மெஹ்னாத் சாகா அணுக்கரு இயற்பியல் ஆராய்ச்சிக்கென முதல் இந்திய கழகத்தை (First Indian Institute of Nuclear Physics) கல்கத்தாவில் நிறுவினார். இவரது முயற்சியால், இவரது மாணவரும், பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் சைக்ளோட்ரானிக் விஞ்ஞானத்தில் டாக்டர் பட்டம் பெற்றவருமான பி.டி. நாக் சௌத்ரி என்பவர், முதல் சைக்ளோட்ரானை 1942இல் இந்தியாவுக்குக் கொண்டுவந்தார்.

இந்த முயற்சிகளுக்கெல்லாம் பின் புலமாயிருந்த டாக்டர் ஹோமி. ஜே. பாபா, 1944இல் டாடா அடிப்படை ஆய்வுக் கழகத்தை (Tata Institute of Fundamental Research -TIFR) நிறுவினார். இந்த முயற்சிகள் யாவும் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

அதோடு முக்கியமான ஒன்று டாக்டர் ஹோமி ஜே. பாபா என்பவர், இந்திய அணுசக்தியின் வரலாற்றில் அதன் முக்கியமான நபர்களில் ஒருவர். இவர், இந்தியா ஏகபோகத் தொழில் குடும்பங்களில் ஒன்றான டாடாவின் சகோதரர் மகன். இவரை மேல் நாடுகளுக்கு அனுப்பியதும், செலவு செய்து படிக்க வைத்ததும் டாடாதான்.

இவர் படித்து முடித்ததும் டாடா என்ஜினியரிங் நிறுவனங்களில் பாபா முதன்மை ஆராய்ச்சியாளராகப் பணியாற்றுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இவருடைய ஆராய்ச்சிகள் சுதந்திரமாகவும் தங்கு தடையின்றியும் நடைபெற வேண்டும் என பங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் இவருக்கென ஒரு தனி மையமும் உருவாக்கப் பட்டது. இதன் பிறகுதான் பாபாவின் தனிப்பட்ட வேண்டு கோளின் பேரில், இயற்பியல் துறையிலும், கணிதத் துறையிலும் பிரத்யேக ஆய்வுகளுக்கென டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் TIFR உருவாக்கப்பட்டதும்.

இப்படி உருவாக்கி வளர்க்கப்பட்ட ஆராய்ச்சிகள், இந்தியா சுதந்திரம் பெற்றபின், நிர்வாக வரையறைகள் அதிகாரக் கெடு பிடிகள், அல்லது மந்தங்கள், அனாவசிய தலையீடுகள், காரணமாகத் தடங்கல் படக்கூடாது எனவும், இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் சுதந்திரமாகச் செயல்பட வேண்டுமெனவும் இதற்கான ஒரு தனி கமிஷன் அமைத்து அந்தக் கமிஷனின் கீழ் இந்த விஞ்ஞானிகள் செயல்பட வேண்டும் எனவும் பாபா கருதினார்.

அதன்படி இந்திய அரசு 1948 ஆகஸ்டு 10ஆம் தேதியன்று வெளியிட்ட ஓர் அறிக்கையின் பேரில், முதல் இந்திய அணுசக்திக் கமிஷன் (Atomic Energy Commission - AEC) 1948இல் தோற்றுவிக்கப்பட்டது.

மூன்றே மூன்று நபர்கள் அடங்கிய இந்தக் கமிஷனில், கமிஷனின் தலைவர் டாக்டர் ஹோமி ஜே. பாபா. மற்ற இரு உறுப்பினர்கள் (1) டாக்டர் கே.எஸ்.கிருஷ்ணன், (2) டாக்டர் எஸ்.எஸ்.பட்நாகர். இவரே இதன் செயலாளரும் ஆவார்.

ஆக, இந்தியா அணுசக்திக் கமிஷன் என்பது பாபாவைத் தலைவராகக் கொண்டும் கூட இன்னோர் உறுப்பினர் செயலாளர், இன்னோர் உறுப்பினர் ஆகிய மூன்று பேரை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்டது. கமிஷனின் விதிகளின்படி, இது பிரதம அமைச்சரின் வழிகாட்டுதலின்படி நடக்கவேண்டும் என்று சொல்லப்பட்டது.

அப்போது பிரதமராயிருந்தவர் பண்டித ஜவஹர்லால் நேரு. நேரு மிகச் சிறந்த அறிவாளி, மேதை என்று பலராலும் பாராட்டப் பெற்றவர்தான் என்றாலும், அணுசக்தி அறிவியல் என்பது ஒரு பிரத்யேக அறிவியல். இப்படிப்பட்ட ஒவ்வொரு பிரத்தியேக அறிவியலிலும் ஒவ்வொரு பிரதமரும் வல்லுநராக இருக்க முடியாது. இருக்க முடியும் என்பதும் சாத்தியமில்லை. ஆகவே விதிகளின் படி கமிஷன் பிரதமரின் வழி காட்டுதலின் படி இயங்க வேண்டும் என்று இருந்தாலும், கமிஷன் என்பது குறிப்பிட்ட அந்த அணுசக்தி அறிவியல் வல்லுநர்களைக் கொண்ட குழு என்பதால் அந்த கமிஷனின் வழிகாட்டுதலுக்கு இணங்கவே பிரதமர் நேரு செயல்பட வேண்டியிருந்தது. செயல்பட்டார் என்பதே உண்மை.

அதோடு, பிரதமராயிருந்தவர் அரசியல் கொள்கைகளுக்கு ஏற்ப, அணுசக்தியைப் பயன்படுத்தவேண்டும் என்று கமிஷனுக்கு ‘கொள்கை’ வழி காட்டுநராக மட்டுமே இருக்க முடியுமே தவிர, அணுசக்தியின் உள் தொழில் நுட்ப;ம் ஏதும் தெரிந்திருக்கக் கூடியவராக இருக்கமுடியாது என்பதால் அதற்கான திட்டங்கள் தீட்டுவதிலும், நிதி ஒதுக்கீடு செய்வதிலும் அணுசக்திக் கமிஷன் என்ன சொல்கிறதோ அதற்கு இணங்கிப் போகக்கூடியவராகவே இருப்பார், இருந்தார்.

இவ்வாறாக, இந்திய ஏகபோகத் தொழில் குடும்பங்களின் உதவியோடு படித்த, அப்படிப்பட்ட குடும்பங்களின் உறவினரான டாக்டர் ஜே. ஹோமி பாபாவின் திட்டங்களுக் கெல்லாம் நேருவும் அதன் மூலம் இந்திய அரசும் வளைந்து கொடுத்து வந்த வரலாறுதான் இந்திய அணுசக்தித் துறையின் வரலாறு.

அதாவது சுருக்கமாக, இந்திய மக்களின் கோடானு கோடி ரூபாய் வரிப் பணம், டாக்டர் ஹோமி. ஜே. பாபா என்கிற தனி நபரின் விருப்பங்களுக்கு ஏற்பத் திட்டமிடப்பட்டது, செலவிடப் பட்டதுதான் இந்திய அணுசக்தித் துறையின் வரலாறு என்பதை மட்டும் நாம் ஞாபகத்தில் கொண்டால் போதும்.

இரண்டாவது அணுசக்திக் கமிஷன்

சுதந்திர இந்தியாவில், அறிவியல் ஆய்வுகளுக்காக உள்ள அரசுத் துறை இந்திய அறிவியல் ஆய்வுத் துறை (Department of Scientific Research) இதனுடைய அறிவிப்பின்படிதான் முதல் அணுசக்திக் கமிஷன் தோற்றுவிக்கப்பட்டது. இந்த அணுசக்திக் கமிஷன், அணுசக்தித் துறையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவும், செயல்படவும், அதற்கான பிரத்தியேக நிதி ஒதுக்கீடுகளை வசதிப்படுத்தவும், அணுசக்திக் கென்று பிரத்தியேகத் துறை தேவைப்பட்டது. அதன்படி (Department of Atomic Energy - DAE 1954) ஆகஸ்டில் தோற்றுவிக்கப்பட்டது.

கூடவே, முதல் அணுசக்திக் கமிஷன் தோற்றுவிக்கப்பட்ட 10 ஆண்டுகளுக்குள் அணுசக்திக் கமிஷனின் பணிகளை மேலும் விரிவாக்கவும் வலுப்படுத்தவும் இரண்டாவது அணுசக்திக் கமிஷன் 1958 மார்ச் 1இல் நிறுவப்பட்டது. அதாவது முதல் கமிஷனோடு சேர்த்து இரண்டாவது ஒரு கமிஷன் அல்ல. முதல் கமிஷனையே, மறு நிர்மாணம் செய்து இரண்டாவது கமிஷன் உருவாக்கப்பட்டது.

இந்தக் கமிஷனுக்குப் புதிய சட்டத்தின்படி முழு நிர்வாக அதிகாரமும் நிதி அதிகாரமும் வழங்கப்பட்டது. இதன்படி,

1) அணுசக்திக் கமிஷனின் தலைவரும் அணு சக்தித் துறையின் செயலாளரும் ஒரே நபராகவே இருப்பார். அவர் பாபாவாகவே இருப்பார்.

2) இந்த அணுசக்திக் கமிஷன் முழு நேர, மற்றும் பகுதி நேரப் பணியாளர்களைக் கொண்ட மூன்று உறுப்பினர்களுக்குக் குறையாமலும் 7 உறுப்பினர்களுக்கு அதிகப்படாமலும் இருக்கும்.

3) குழுவை மூன்றுக்கு மேல் ஏழுக்குள் எத்தனை உறுப்பினர்களைக் கொண்டதாகவும் அமைப்பது கமிஷன் தலைவரின் அதாவது ‘பாபா’வின் விருப்பத்தைப் பொறுத்தது.

4) இந்தத் தலைவர் பாபா, இந்தியப் பிரதமர் நேரு ஒருவருக்கு மட்டுமே கட்டுப்பட்டவர், பதில் சொல்லக் கடமைப் பட்டவரே தவிர வேறு யாருக்கும் கடமைப்பட்டவர் அல்ல.

5) கமிஷனின் எந்தத் திட்டங்களும், சிபாரிசுகளும், நிதிக் கோரிக்கைகளும் எல்லாமுமே தலைவர் பாபாவின் மூலமே அரசுக்கு அதாவது பிரதமருக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

6) கமிஷனின் இதர உறுப்பினர்களின் ஆலோசனைகளை நிராகரிக்கவோ, மறுக்கவோ தலைவர் பாபாவுக்கு முழு அதிகாரம் உண்டு.

7) கமிஷனின் நிதி மற்றும் நிர்வாகத்தை கவனிக்கும் பொறுப்பிலுள்ள உறுப்பினர் மட்டும், அதுவும் நிதி சம்மந்தப்பட்ட விஷயங்களில் மட்டும், கமிஷனின் கருத்தைப் பிரதமரின் பார்வைக்குக் கொண்டு செல்லலாம்.

8) இந்தக் கமிஷன் தனக்குத் தேவைப்படும்போது, தேவைப்படும் புதிய சட்டங்களைத் தானாகவே உருவாக்கிக் கொள்ளலாம்.

9) இந்தக் கமிஷன், தலைவர் பாபா எப்போது எங்கு கூடவேண்டும் என்று விரும்புகிறாரோ அப்போது இது அங்கு கூடும்.

என்று, இப்படித் தலைவர் பாபாவுக்கு வானளாவிய அதிகாரங்கள் வழங்கி இரண்டாவது கமிஷன் மறுசீரமைக்கப் பட்டது. ஆக டாக்டர் பாபா அணுசக்திக் கமிஷன் தலைவராகவும், அணுசக்தித் துறைச் செயலாளராகவும் ஆனார், இதுவல்லாமல் தனது குடும்பம் சார்ந்த சுயேச்சை நிறுவனமாக TIFR க்கும் அவரே இயக்குநராக இருந்தார்.

இதன்மூலம் இக்காலப் பகுதியில் பாபாவே, இந்திய அணுசக்தி நிறுவனத்தின் பேரரசராகத் திகழ்ந்தார் என்று சொல்லப்படுகிறது.

அதோடு, அணுசக்தி பற்றிய ஆய்விலும், அணுசக்தியின் எதிர்காலத் திட்டங்களிலும் பிரதமர் நேரு முழுக்க முழுக்கவும் பாபாவைச் சார்ந்து இருந்ததால், பாபாவுக்கும் நேருவுக்குமான உறவு மிகவும் நெருக்கமாகவும் இருந்தது. நேருவுக்கு அடுத்தப்படியாக இந்தியாவின் இரண்டாவது குடிமகனாக பாபா ஆனார். நேருவை பாபா ‘சகோதரனே’ என்று விளிக்கு மளவுக்கு அவர் நேருவிடம் உரிமை பெற்றிருந்தார். இப்படிப் பட்ட உரிமையின்மூலம், நேருவின் தலைமையில் இருந்த இந்திய அணுசக்தித் துறை முழுக்க முழுக்க பாபா என்கிற ஏகபோகத் தொழில் குடும்பங்களைச் சார்ந்த ஒரு தனி நபரின் தலைமையில் இயங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

இதன் விளைவாக, பாபாவின் செல்வாக்கை வைத்து, தனது சிற்றப்பாவும், ஏகபோகத் தொழில் குடும்பங்களில் ஒன்றான டாடா நிறுவனத்தின் தலைவருமான டாட்டாவை நேருவிடம் சொல்லி இந்திய அணுசக்திக் கமிஷனில் உறுப்பினராகவும் ஆக்கிக் கொண்டார். இதற்காகப் பிரதமர் நேருவின் பலகீனங்களைப் பயன்படுத்திக் கொண்டு அவரை இதற்கு இணங்கவைக்கச் சில மறைமுக உத்திகளும் கடைப்பிடிக்கப்பட்டன என்றும் சொல்லப்படுகிறது.

ஆக, ஏகபோகத் தொழில் குடும்பங்களைச் சார்ந்த சீமான் பாபாவின் முன்முயற்சியால் உருவாக்கப்பட்ட முதல் அணுசக்திக் கமிஷன் மறு நிர்மாணத்தின் மூலம் கிட்டத்தட்ட பாபாவின் தனிச் சொத்தாகவே ஆக்கப்பட்டது. அதன்மூலம் பாபாவே இந்திய அறிவியல் உலகத்தின் மூடிசூடா மன்னராகவும் ஆக்கப்பட்டார்.

(தொடரும்)

- இராசேந்திர சோழன்

Pin It