Adityanath with his monkeyஆர்.எஸ்.எஸ் சாகாவில் காக்கி டவுசர்களுக்கு குச்சி சுத்துவது, கோலி விளையாடுவது, குஸ்தி போடுவது போன்றவை சொல்லிக் கொடுக்கப்பட்டாலும், முதன்மையான பயிற்சி என்பது சாதாரண மூளையை எப்படி மாட்டு மூளையாக மாற்றுவது என்பதுதான். அதற்காக பல பிரத்தியோக கல்வித் திட்டங்களை அவர்கள் வைத்திருக்கின்றார்கள். அதுவும் செலவே இல்லாத கல்வித் திட்டம். மாட்டு மூத்திரத்தையும், மாட்டுச் சாணியையும் மட்டுமே மூலதனமாக வைத்துக் கொண்டு உலக நாடுகளுக்கு சவால்விடும் அளவிற்குப் பயிற்சி அளிக்கின்றார்கள். முப்பத்து முக்கோடி தேவர்களும் உறைந்திருக்கும் பசு மாட்டின் மூத்திரத்தையும், மாட்டுச் சாணியையும் தின்பது என்பது அந்த முப்பத்து முக்கோடி தேவர்களின் மூத்திரத்தையும், மலத்தையும் தின்பதற்கு சமம் என்பது ஐதீகம் என்பதால் பக்தாள்கள் அதை ஒரு தெய்வ சங்கல்ப்பமாகவே கருதுகின்றார்கள். இப்படி மாட்டு மூத்திரத்தையும், மாட்டுச் சாணியையும் தின்று வளர்ந்தவர்கள் இயல்பாகவே சாதாரண மனிதர்களிடம் இருந்து மேம்பட்ட முறையில் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள். ‘நாட்டுக்கு ஒரு பிரச்சினை என்றால் நாட்டை காட்டிக் கொடுப்போம், மாட்டுக்கு ஒரு பிரச்சினை என்றால் மனிதனை வெட்டுவோம்’என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கையை தீவிரமாக செயல்படுத்த மாடு போல உழைக்க ஆரம்பித்து விடுவார்கள்.

அப்படி ஆர்.எஸ்.எஸ் சாகாவில் பயிற்சி பெற்று வெளியே வந்த மாட்டு மூளைக்காரர்கள் நாடு முழுவதும் களப்பணியாற்றிக் கொண்டு இருப்பது நமக்குத் தெரியும். எங்கெல்லாம் மாடு சம்மந்தமான கலகங்களும், கலவரங்களும், கொலைகளும் நடக்கின்றனவோ அங்கெல்லாம் மாட்டு மூளைக்காரர்கள் நடமாட்டம் இருக்கின்றது என்பதாக நாம் புரிந்து கொள்ளலாம். அவர்களைப் பொருத்தவரை மாடுதான் இந்தியாவின் தேசிய விலங்கு. அதைத் துன்புறுத்துபவர்கள் அனைவரும் தேசவிரோதிகள், அது போன்ற தேசவிரோதிகளை வேட்டையாடுவதுதான் ஓர் உண்மையான ஆர்.எஸ்.எஸ்.காரனின் பணி. ஆனால் இதுபோன்ற தெய்வப் பணி எப்போதும் கிடைப்பது கிடையாது, எப்போதாவது வலிமை குன்றிய, அடிக்கத் திராணியற்ற, கேட்க ஆளற்ற முஸ்லிம்களும், தலித்துக்களும் வசமாக மாட்டும் போது மட்டுமே இருக்கும். அதுபோன்ற நேரங்களில் நேரத்தை வீணடிக்காமல் சாதிக்கலவரங்களைத் தூண்டி விடுவது, மதக் கலவரங்களைத் தூண்டி விடுவது, பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடுவது போன்ற நாட்டை முன்னேற்றும் காரியத்திலும், மூத்திரத்திற்கும் குவாண்டம் தியரிக்கும், சாணிக்கும் நானோ டெக்னாலஜிக்கும், பிள்ளையாருக்கும் பிளாஸ்டிக் சர்ஜரிக்கும், புஷ்பவிமானத்திற்கும் ஏரோநாட்டிகல் சயின்ஸ்க்கும் உள்ள தொடர்பை வேதங்களை மேய்ந்து, உபநிடதங்களைக் கடித்துத் துப்பி, புராணங்களில் புரண்டு, இதிகாசங்களை செரித்து அதை ஆன்மீக அறிவியலாக வெளிக்கு இருக்கும் வேலையைச் செய்வார்கள்.

இப்படி மாட்டு மூளைக்காரர்கள் இந்த நாட்டுக்கு ஆற்றிவரும் சேவையின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியாக குரங்குவின் (அனுமான்) சாதி என்ன என்பதை தன்னுடைய மொட்டை மண்டையில் இருந்து மூளை கொப்பளித்து வெளியே வரும்வரை ஆராய்ந்து வெளிப்படுத்தி இருக்கின்றார் பிரபல ‘ஆன்மீக ஆராய்ச்சி’ சாமியார் புகழ் ஆதித்யநாத் அவர்கள். குழந்தைகளை ஆக்சிஜன் இல்லாமல் எப்படிக் கொல்வது, முஸ்லீம்கள் வாழும் பகுதியில் எப்படி நொண்டிச் சாக்கை வைத்து கலவரம் செய்வது, ஏற்கெனவே இருக்கும் ஊரின் பெயர்களை மாற்றி அதற்கு எப்படி புராணப் பெயர்கள் வைப்பது, மாட்டை காரணமாக வைத்து எப்படி கும்பல் வன்முறையில் ஈடுபடுவது, மக்களின் வரிப்பணத்தில் இருந்து ராமனுக்கு எப்படி சிலை வைப்பது போன்ற அதி முக்கியமான வேலைகளுக்கு மத்தியில், குரங்கின் சாதியைக் கண்டுபிடித்து ‘சாதி ஆராய்ச்சித்’ துறைக்கு பெரும் பங்களிப்பை செய்திருக்கின்றார்.

அவரது ஆராய்ச்சி முடிவின் படி குரங்கு (அனுமான்) ஒரு தலித் ஆவார். இப்படி ஒரு முடிவுக்கு மேதகு மொட்டை விஞ்ஞானி வந்ததற்குக் காரணம் குரங்குகள் இன்றும் காடுகளில் தான் அதிகம் வசிக்கின்றன, அதே போல இன்றும் பழங்குடியின மக்களும் காடுகளில்தான் அதிகம் வசிக்கின்றார்கள். பழங்குடியின மக்களை இந்திய அரசு தலித்துகள் என்றே வகைப்படுத்தி இருக்கின்றது, ராமன் காட்டிற்குச் சென்றபோது மனித வடிவில் இருந்த குரங்குதான் அவருக்கு உதவியது, அப்படி என்றால் குரங்கு, காடு, ராமன், தலித்துகள் எல்லாவற்றையும் ஒன்றாக மாட்டு மூளையில் போட்டு தீர்க்கமாக ஆராய்ந்தால் கிடைக்கும் முடிவு குரங்குகள் அனைத்தும் தலித்துகள் என்பதுதான். இப்படித்தான் கோடான‌ கோடி குரங்குகளுக்கு சாதி அடையாளத்தைக் கண்டுபிடித்து மொட்டை விஞ்ஞானி அழியாத புகழைப் பெற்றிருக்கின்றார். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டு இருக்கின்றது. ஆர்.எஸ்.எஸ் பயிற்சிப் பட்டறையில் இருந்து மொட்டை விஞ்ஞானியைப் போலவே பல மாட்டு மூளைக்காரர்கள் வெளிவந்து இருப்பதால், மொட்டை விஞ்ஞானியின் ஆராய்ச்சி முடிவை மறுக்கும் நிலை ஏற்பட்டு இருக்கின்றது. ஓர் ஆராய்ச்சி முடிவை அடுத்துவரும் ஆராய்ச்சி முடிவு மறுப்பதுதானே அறிவியல்.

எப்படி மொட்டை விஞ்ஞானி குரங்குகள் தலித் என்ற முடிவுக்கு வந்தாரோ, அதே போல மற்ற மாட்டு மூளைக்காரர்கள் குரங்குகள் முஸ்லீம்கள் என்றும், ஜாட் சமூகத்தைச் சேர்ந்தது என்றும், ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தது என்றும் ஆராய்ச்சி முடிவுக்கு வந்திருக்கின்றார்கள். இன்னொரு விஞ்ஞானி இவர்களிடம் இருந்து மாறுபட்ட முறையில் ஆராய்ச்சி செய்து குரங்கு ஒரு விளையாட்டுவீரர் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றார். இதுவும் ஒரு நல்ல ஆராய்ச்சி முடிவுதான், காரணம் குரங்குகள் கிளைக்கு கிளை தாவுவது, குட்டிக்கரணம் அடிப்பது போன்ற பயிற்சிகளை மேற்கொள்வதால் இந்த முடிவுக்கு அந்த விஞ்ஞானி வந்திருக்கின்றார். இத்தனை விஞ்ஞானிகளை இந்த நாட்டிற்கு உற்பத்தி செய்து கொடுத்த ஆர்.எஸ்.எஸ் - பிஜேபியை நினைத்து இன்று நாடே பெருமைபட்டுக் கொண்டு இருக்கின்றது. ஆனால் நாம் பார்க்கும் குரங்கு கோயில்களில் எல்லாம் குரங்குக்கு பூணூல் போட்டே வைத்திருக்கின்றார்கள். இராமாயணத்தில் கூட குரங்கு பூணூல் போட்டு பார்ப்பனக் குரங்காகவே வருகின்றது. அப்படி இருந்தும் ஏன் குரங்கை பார்ப்பனக் குரங்கு என்று சொல்ல மறுக்கின்றார்கள் என்பது தெரியவில்லை. அதை ஆராய்ச்சியாளர்களின் முடிவுக்கே நாம் விட்டு விடுவோம்.

இனி வரும் காலங்களில் நாய், பன்றி, எருமை, ஆடு, கழுதை, பெருச்சாளி போன்ற அனைத்து விலங்குகளின் சாதியைப் பற்றியும் மாட்டு மூளை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க வேண்டும். இதற்காக இந்திய மக்களின் வரிப்பணம் எவ்வளவு செலவானாலும் சரி, அதை மனமுவந்து இந்திய மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். உலகிற்கு இந்தியாவின் அறிவியல் பங்களிப்பாக இது இருக்கும் என்பதில் இருவேறு மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது. மோடி, ஆதித்யநாத் போன்றவை எல்லாம் வெறும் பெயரைக் குறிக்கும் சொற்கள் அல்ல; ஒரு சகாப்தத்தைக் குறிக்கும் சொற்கள். மாட்டு மூத்திரத்தையும், மாட்டு சாணியையும் தின்று, கங்கைக் கரையில் அனைத்தையுமே ஆதியிலேயே கண்டுபிடித்து வாழ்ந்த பெருமைமிகு இனத்தின் அடையாளங்கள் இவர்கள். இவர்களைப் போற்றி வணங்குவது தேசபக்தி மிகுந்த ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும்.

- செ.கார்கி

Pin It