”பங்கஜம் இனி நம்மளவா ஆட்சி தான்டீ. ராமன் கோயில் திறந்த அந்த நிமிஷத்திலேயே ராமராஜ்ஜியம் வந்திருச்சு. அமித்ஷா இதை அறிவிச்சுட்டாரு, இனி ஆயிரம் ஆண்டு ராமராஜ்ஜியம் தான் என்று அவரே கூறிட்டாரு. பாஜக தேசியக் குழு தீர்மானமே போட்டுடுச்சுடீ. போய் பால் பாயாசம் கொண்டு வா” இப்படி ஆனந்தக் கூத்தாடி இருக்கும் ஒரு கூட்டம். அவர்களுக்கு பல பெயர்கள் உண்டு. சமூக ஆர்வலர்கள், வலதுசாரி, அரசியல் ஆய்வாளர், பாஜக, இந்து முண்ணனி என்று பல பல முகமூடிகளில் வருவார்கள். தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பார்கள். எதிர்த்து பேசுபவர்களின் நெத்தியடி கேள்விகளால் திக்குமுக்காடினாலும் கூச்சல் போட்டு மடைமாற்றம் செய்துவிடுவார்கள்.இவர்களெல்லாம் யார்? ஒற்றை இந்தியாவைப் போல ஒற்றை வரியில் சொல்லப்போனால் சங்கிகள் பாமர வாக்காளர்களுக்கு தலை சுற்றுகிறது. அவர்களுக்கு பல சந்தேகங்கள் வந்துவிட்டன. சங்கிகள் என்ன கூறுகிறார்கள், பாமர மக்கள் என்ன நினைக்கிறார்கள். இருவரும் நேருக்கு நேராக சந்தித்தால்… ஒரு உரையாடல்

பாமர வாக்காளன் : ஜீ, ராமராஜ்ஜியம் என்றால் அது என்னவென்றே எங்களுக்கு தெரியவில்லையே.

சங்கி : அதுவா கூறுகிறேன் கேள். கோசலா என்ற பகுதியை அயோத்தியை தலைநகரமாகக் கொண்டு ராமன் ஆட்சி செய்தான். அந்த ஆட்சி பத்தாயிரம் ஆண்டுகள் நடந்தது. வானம் மும்மாரி பொழிந்தது. மக்களுக்கு நோய் நொடி எதுவுமில்லை. சுற்றுச்சூழல் பாதிப்பு எதுவுமில்லை. இதற்கெல்லாம் காரணம் ராமன் பிராமணர்களை அழைத்து யாகம் நடத்தியது தான். ஒரே ஒருமுறை மட்டும் ஒரு தவறு நடந்துவிட்டது. ஒரு பிராமணன் வீட்டில் பச்சிளம் குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டது. கொதித்தெழுந்தான் அந்த பிராமணன். நேராக ராமனிடம் போனான். ராமா? இந்த ஆட்சியில் ஏதோ தவறு நடக்கிறது. அந்த தவறுக்கு நீ உடந்தையாகிவிட்டாய். தர்மம் மீறி நடப்பதை நீ தட்டிக்கேட்க மாட்டாயா? என்னுடைய வீட்டில் பிறந்த குழந்தை உடனே இறந்துவிட்டது. இந்த சாவுக்கு நீதான் பொறுப்பேற்க வேண்டும். உடனே என் குழந்தையை காப்பாற்று இல்லாவிட்டால் உன்னுடைய அரண்மனை வாயிலில் நானும் என் மனைவியும் உயிரைத் துறந்துவிடுவோம் என்று மிரட்டினான். பதறினான் ராமன். என்ன நடக்கிறது இங்கே என்று ஆவேசமடைந்தான்.

நாரதன் வந்தான், ”நான் சொல்கிறேன் ராமா? ஒரு சூத்திரன் தனக்கு விதிக்கப்பட்ட கடமையை மீறி பிராமணர்கள் செய்யும் தவத்தை செய்து கொண்டிருக்கிறான். புரோகிதர்களை அவமதித்துவிட்டான் என்று நாரதன் கூறினான். அப்படியா? என்னுடைய ராஜ்ஜியத்தில் அப்படியா நடக்கிறது என்று பதறிய ராமன் “இலட்சுமணா இங்கே வா! இந்த பிராமண குழந்தையின் உடலை கெட்டுப் போகாமல் எண்ணெய் ஊற்றி அப்படியே வை. நான் அந்த சூத்திரனை கண்டுபிடித்து வதம் செய்து திரும்புகிறேன் என்று புறப்பட்டான். வலைவீசி தேடினான். ஓரிடத்தில் சம்பூகன் தலைகீழாகத் தொங்கி தவம் செய்து கொண்டிருந்ததை பார்த்தான். எந்த கேள்வியையும் கேட்கவில்லை, சம்பூகன் தலையை வெட்டி வீழ்த்தினான். உடனே செத்துப் போன பிராமண குழந்தை உயிர் பிழைத்துக் கொண்டது. தலையை வெட்டிய ராமன், அந்த தலையை தூக்கிக் கொண்டு காவல் நிலையத்துக்கு சென்றானா? சரணடைந்தானா? எப்.ஐ.ஆர், கிரிமினல் வழக்குகள் எதுவும் பதிவானதா? இல்லை. இவையெல்லாம் ராமராஜ்ஜியத்தில் கிடையாது. அங்கே நடந்தது வர்ணாசிரம ஆட்சி. பிராமண நிந்தனைக்கு எவன் உள்ளானாலும் மரண தண்டனை தான். இவற்றையெல்லாம் வால்மீகி ராமாயணம் உத்திரகாண்டம் 73வது சருக்கம் தெளிவாக விவரிக்கிறது.

சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட, பலருக்கும் தெரியாமல் மறைக்கப்பட்ட அந்த கருத்தை இப்போது நான் உள்ளது உள்ளபடி கூறியிருக்கிறேன்.இதுதான் ராமராஜ்ஜியம்.

வாக்காளன் : இப்போ புரியுது ஜீ. ஒரு சூத்திரன் செத்தால் பிராமண குழந்தை உயிர் பிழைக்கும். அவ்வளவு தானே நீங்கள் சொல்ல வருகிற செய்தி. சரி ராமராஜ்ஜியத்தில் நாடாளுமன்றம், எம்பி, எம்.எல்.ஏக்கள், கட்சித் தாவல்கள், ஆட்சிக் கவிழ்ப்புகள் எல்லாம் நடந்ததா? ஜீ. இப்போதெல்லாம் நடந்து கொண்டிருக்கிறதே?

சங்கி : இந்த கேடுகெட்ட அமைப்புகள் எல்லாம் ராமராஜ்ஜியத்தில் கிடையாது. பிரிட்டிஷ்காரன் நம் தர்மத்தை சீர்குலைப்பதற்காகவே இவைகளை நம்மீது திணித்துவிட்டு போனான். நாம் அதை பிடித்து தொங்கிக் கொண்டு பிரிட்டிஷ் அடிமைகளாக இருக்கிறோம். ராமன் வனவாசம் போன போது கூட 14 ஆண்டுகள் ராமனின் ’பாதணி’ (அதாவது இதை செருப்பு என்று தமிழில் கூறுவதுண்டு) தான் அரசு பீடத்தில் அமர்ந்து ஆட்சி செய்தது.

வாக்காளன் : ஓ அவ்வளவு புண்ணிய பூமியா ராமராஜ்ஜியம்? இப்போ மோடி – அமித்ஷா ராமராஜ்ஜியத்தில் நாடாளுமன்றம், தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என்று நீங்கள் கூறிய பிரிட்டிஷ் நடைமுறைகள் எல்லாம் தொடர்கிறதே?

சங்கி : இவையெல்லாம் இருக்கும் ஆனால் இருக்காது.

வாக்காளன் : புரியவில்லையே ஜீ. கொஞ்சம் விவரமா பேசுங்க,

சங்கி : நாட்டில் என்ன நடக்கிறது என்பது கூட உனக்கு தெரியாதா? இதையெல்லாம் நான் விவரமா சொல்லித் தொலைக்கனுமா? இப்போ நாடாளுமன்றக் கட்டடம் புதுசா கட்டிட்டோம். அது இருக்கு. ஆனால் நாடளுமன்றம் உயிருடன் இருக்கிறதா? அது இல்லை. ராம அவதாரம் எடுத்துள்ள மோடி என்றைக்காவது நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்கு பதிலளித்தது உண்டா? அவையில் அந்த நேரத்தில் இருந்தது உண்டா? புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அழைத்தோமா? ஏன் அவர் ஒரு பெண் அதுவும் கணவனை இழந்தவர். சட்டத்தை பாதுகாக்கும் நாடாளுமன்றக் கட்டடத்தில் சனாதனத்தை பாதுகாத்தோமா? இல்லையா? சரி ஒரே நேரத்தில் 146 உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ய வைத்தோமே அது எதைக் காட்டுகிறது? நாடாளுமன்றம் உயிருடன் இல்லை என்பதற்குத் தானே. அப்படி அவர்களையெல்லாம் வெளியேற்றிவிட்டு அவசர அவசரமாக சட்டங்களை நிறைவேற்றினோமே, அப்போதே நாங்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்தை கருத்தில் கொள்ளவில்லை என்பதை நீ புரிந்து கொள்ளவில்லையா? இவையெல்லாம் ராமராஜ்ஜியத்தின் அடையாளங்கள்.

அதேபோலத்தான் மோடி ராமராஜ்ஜியத்தில் நீதிமன்றங்கள் இருக்கிறது. ஆனால் நீதிகள் கிடைக்காமல் தடுப்பதில் தீவிர முயற்சிகள் செய்துவருகிறோம். தேர்தல் ஆணையம் இருக்கிறது. அது எங்கள் கட்டுப்பாட்டில் தான். தேர்தல் அதிகாரிகளை வைத்தே எதிர்க்கட்சி ஓட்டுகளை செல்லாமல் காலி செய்து விடுவோம். சண்டிகர் மேயர் தேர்தலில் நீங்கள் பார்க்கவில்லையா?

வாக்காளன் : ராமராஜ்ஜியம் பிராமண ராஜ்ஜியம் என்று சொல்லுவது உண்மைதானா?

சங்கி : சங்கடமான கேள்வியா இருக்கே சரி, உண்மையை சொல்லிவிடுகிறேன். உண்மையில் ராமராஜ்ஜியம் பிராமண ராஜ்ஜியம் தான் ஆனால் நாங்கள் அதை ஏழைகள் ராஜ்ஜியம் என்று பொய் சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டுள்ளோம். உண்மையைச் சொன்னால் சூத்திர பஞ்சம ஓட்டுகள் எங்களுக்கு கிடைக்குமா? ராமராஜ்ஜியம் எப்படி நடந்தது என்பதைப் பற்றி சில ரகசியங்களை சொல்கிறேன் கேட்டுக்கொள்.

ராமன் பிராமணர்களை கடவுளாக வணங்கினான். அவனுக்கு ஆலோசகர்களாக இருந்தவர்கள் எல்லாம் எங்கள் பிராமண மூதாதையர்கள் தான். காட்டுக்குள் செல்லும் போது கூட அவன் பிராமணர்களை மட்டும் அழைத்தான். தான் அணிந்திருந்த தங்க நகைககளையும், மனைவி சீதா அணிந்திருந்த தங்க நகைகளையும் பிராமணர்களுக்கு தானமாக வழங்கி அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுதான் காட்டுக்கு போனான். பரதன் தன்னை காட்டுக்குள் சந்திக்க வந்த போது கேட்ட முதல் கேள்வி, ஆட்சியில் பிராமணர்களுக்கு ஏதும் தொல்லை இல்லையே, அவர்களை கவனமாக பார்த்துக் கொள். நமது ராஜ்ஜியத்தில் திருடர்கள் புத்தன் என்ற பெயரில் ஊடுறுவி இருப்பார்கள். அவர்களை அழித்துவிடு, எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ராமன் அறிவுரை கூறினான். இவையெல்லாம் வால்மீகி ராமாயணத்தில் இருக்கிறது. அதை தமிழில் எழுதிய கம்பன் இந்த செய்திகளை எல்லாம் மூடிமறைத்து தமிழ்நாட்டு மக்களின் காதில் பூ சுற்றிவிட்டான். சீதை அக்னி பிரவேசம் செய்ததையோ, ராமனின் பிள்ளைகள் – சீதை தற்கொலை செய்து கொண்டதையோ கம்பராமாயணம் கூறவில்லை. உத்தரகாண்டத்தையே அவன் நீக்கிவிட்டான். ஆனால் அப்பாவி சூத்திரர்கள் கம்பன் காவியத்தை புகழ்ந்து தள்ளுகிறார்கள். வால்மீகி ராமாயணத்தை மறைத்து கம்பராமாயணத்தை தமிழ்நாட்டு மக்களிடம் திணித்து ராமனை அவதாரமாக்கி இப்போதும் ராமராஜ்ஜியத்தை பேசிக்கொண்டு எங்கள் பிராமண தர்மத்தை காப்பாற்றிக் கொண்டு இருக்கிறோம். இவையெல்லாம் ரகசியம், வெளியில் போய் யாரிடமும் சொல்லிவிடாதே..

வாக்காளன் : சரி, ராமராஜ்ஜியத்தை மேலும் வலிமையாக்க அடுத்த என்னென்ன திட்டங்கள் வைத்துள்ளீர்?

சங்கி : அப்படி கேள், முதலில் தமிழ்நாட்டில் எங்களுக்கு சவாலாக இருக்கும் திராவிட மாடலை ஒழிப்போம். தமிழ்நாட்டை மூன்று மாநிலங்களாக உடைப்போம். ஜம்மு – காஷ்மீரை பார்க்கவில்லையா? திராவிடத்துக்கு சமாதி கட்ட அது ஒன்றுதான் வழி. மூன்று மாநிலங்களிலும் ஜாதித் தலைவர்கள் முதல்வர்களாக வந்துவிடுவார்கள். பிறகு வர்ணாசிரமம் வந்துவிடும், பிறகு ராமராஜ்ஜியம் தான். தேசியக் கல்விக் கொள்கைகளை திணிப்போம், நீட் தேர்வை தொடக்கப் பள்ளியிலேயே அறிமுகப்படுத்துவோம். சமஸ்கிருதம் – இந்தியை கட்டாயமாக்குவோம். மக்களை ஏமாற்ற தமிழின் பெருமையை அவ்வப்போது வாயால் மட்டும் பேசுவோம்.

மாநிலங்களே இருக்காது. அதிபர் ஆட்சி வரும். ராணுவத்தில் முப்படை தளபதிகளை அகற்றிவிட்டு ஒரே தளபதியின் கீழ் கொண்டு வந்துவிட்டோம். தேசபக்தர்களான அம்பானி – அதானியிடம் நாட்டின் தொழில் துறையை முழுமையாக ஒப்படைத்து விடுவோம். உயர்ஜாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை 10 சதவீதத்தில் இருந்து 69 சதவீதமாக உயர்த்துவோம். உயர்கல்வி – உயர் பதவிகளில் சூத்திரர் பஞ்சமர்கள் நுழைந்து விடாமல் இப்போது எங்கள் பிரதமர் அலுவலகத்தில் இருப்பது போல பாதுகாப்போம். கோயில்களை அறநிலையத்துறையிடம் இருந்து மீட்போம், பாஜகவினரிடம் அதை ஒப்படைப்போம். கிரிமினல் குற்றவாளிகளாக இருந்து எங்கள் கட்சியில் இணைந்த தேசபக்தர்கள் அதை பராமரிப்பார்கள். இலவசங்களை ஒழித்துக் கட்டுவோம். இப்படி எண்ணற்றத் திட்டங்கள் எங்கள் கைவசம் உள்ளது.

வாக்காளன் : அடேய் ஜீ, நிறுத்துடா..

சங்கி : என்ன மரியாதை குறையுது

வாக்காளன் : ‘இதுக்கு மேல உனக்கு மரியாதை வேண்டுமாடா’ என்று ஆத்திரம் கொப்பளிக்க தனது காலில் இருந்த செருப்பைக் கழட்டுகிறான். டேய், இது ராமன் பாதணி அல்ல, பாமர வாக்காளனின் செருப்பு. இதை தலையில் சுமக்கப் போகிறேனா? அல்லது ஆயுதமாக்கப் போகிறேனா? என்பதை வருகிற தேர்தலில் உனக்கு உணர்த்துவோம்.

இன்று போய் நாளை (தேர்தல் முடிந்த பிறகு) வா...

- கோடங்குடி மாரிமுத்து

Pin It