ஸ்ரீராமஜெயம்; அப்படின்னா. ‘ராமன் வெற்றிபெற வேண்டும் என்பது இதன் அர்த்தம்; ராமனுக்கு அப்படி என்ன சோதனை என்று கேட்கிறீர்களா? அவன் காட்டுக்கு போன போது சீதையை இராவணனிடம் இருந்து மீட்க பல்வேறு சூழ்ச்சிகளை நடத்திp போராடினான். இன்றைய இஸ்ரேலைப் போல! சுக்ரீவன்கள், அனுமார்கள், விபீஷணர்களை எல்லாம் பயன்படுத்தினான். அந்த காலத்தில் மக்கள் ராமன் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக ராமஜெயம் என்று கூறியதாக பக்தி பிரச்சாரகர்கள் பேசுகிறார்கள். ராமன் சீதையை மீட்டு, மீண்டும் அயோத்தியில் ஆட்சிக்கு விட்டான். இப்போது என்ன பிரச்சனை? எதற்காக ஸ்ரீ ராமஜெயம்?

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்ற போது ராம பக்தர்கள் ராமஜெயம் என்று கூச்சல் போட்டார்கள். உச்சநீதிமன்றமே ராமன் பிறந்த இடத்தை ‘சட்டப்படி’ உறுதி செய்துவிட்டது. அங்கே மோடி கோயில் கட்டி ராமனை குடியேற்றப் போகிறார். இப்போது, என்னப்பா, ராமனுக்கு நெருக்கடி? குடியுரிமைப் பாதுகாப்பு சட்டம் வேறு இருக்கிறது!

நெருக்கடி ராமனுக்கு அல்ல, மோடியின் கட்சிக்காரர்களுக்குத்தான். தாமரை சின்னத்துக்கு ஓட்டுக் கேட்க ராமனை பயன்படுத்த துடிக்கிறார்கள். விளையாட்டு மைதானத்திலும் மதவெறியா என்று சர்வதேசமும் முகம் சுழிக்கிறது. ஆனாலும் இவர்களுக்கு வெட்கம் இல்லை.

ராமனுக்காக தனது வாலில் வெடிகுண்டை கட்டிக்கொண்டு (நெருப்பை) இலங்கையில் வீசி எரித்தான். ராமாயண கால சர்வதேச பயங்கரவாதி அனுமான். தற்கொலைப்படையாக ராமனுக்கு செயல்பட்ட அனுமானை ராமன் மதித்தானா? இல்லை; பிராமணர்களையே உயர்வாகக் கருதினான். தான் முடிசூட்டும் போது பிராமணர்களுக்கு மட்டும் ஒரு லட்சம் குதிரைகளையும், பசுமாடுகளையும் பரிசாக அளித்து முதல் மரியாதை செய்தான். ஆனால் சஞ்சீவி மலையையே தூக்கிக் கொண்டுவந்து ராமனுக்கு மூலிகை வைத்தியம் செய்து காப்பாற்றிய அனுமானுக்கு அளிக்கப்பட்ட நினைவு பரிசு என்ன தெரியுமா? இரண்டு துண்டுகள் (வஸ்திரங்கள்) மட்டும்தான் என்று வால்மீகி ராமாயணம் கூறுகிறது. இப்போதும் கூட பார்க்கலாம், ராம கதாகாலட்சேபம் நடக்கும் மேடைகளில் அனுமன் தரையில் தனது வாலின் மீதுதான் ஒரு ஓரத்தில் உட்கார வைக்கப்படுகிறான்.

ராமனின் பாதுகை (செருப்பு) பதினான்கு ஆண்டுகாலம் அரச சிம்மாசனத்தில் உட்கார்ந்து பாரதத்தில் சனாதன ஆட்சி நடத்தியிருக்கிறது. இதை அந்த காலத்து தேர்தல் ஆணையமும் ஆட்சியின் ஆணையை ஏற்று அங்கீகரித்திருக்கிறது. செருப்பு ஆட்சி செய்த தேசத்தில் பாஜக ஆட்சி நடத்தக் கூடாதா? என்று ராம பக்தர்கள் உணர்ச்சிவயப்படலாம், என்ன செய்வது? அனுமார்களும், அண்ணாமலைகளும், முருகன்களும் இருக்கும் வரை இப்படி பேசுகிற ஒரு கூட்டம் இருக்கவே செய்யும்.

அன்று ‘செருப்பு’ ஆண்டது, இன்று ‘வெறுப்பு’ ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், எங்களுக்கு தேவை ராமஜெயம் அல்ல, வாழ்க்கை ஜெயம் எனக் கேட்கத் தொடங்கி விட்டார்கள்.

- கோடங்குடி மாரிமுத்து

Pin It