சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடுவது தொடர்பான வழக்கில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ‘பெண்களின் மாதவிடாய் தீட்டு அல்ல, அப்படிக் கருதினால் அது தீண்டாமை ஆகும்’ என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கியுள்ளது.
இந்தத் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்துக்கும், இதனை நடைமுறைப்படுத்துவதாக உறுதி அளித்த கேரள இடதுசாரி அரசுக்கும், திருநங்கைகளை சபரிமலையில் வழிபட அனுமதித்ததற்கும் நன்றி. சபரிமலை தீர்ப்புக்கு எதிராக நாயர் சோஷியல் சர்வீஸ் அமைப்பு தாக்கல் செய்த சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவை எல்லாம் மகிழ்ச்சி அளித்தாலும், இன்று வரை பெண்கள் வழிபடச் செல்ல முடியாமல் இருப்பது வருத்தமளிப்பதாக உள்ளது.
சபரிமலைக்கு சென்று பெண்கள் வழிபடுவதை வெறும் கோவில் நுழைவாக மட்டும் பார்க்க முடியாது. அதையும் தாண்டி வீடு, அலுவலகம் என அனைத்து இடங்களிலும் பெண்கள் சமமாக நடத்தப்படாமல் ஒடுக்கப்படுவதன் நீட்சியாக, சபரிமலைக்கு செல்ல விடாமல் தடுக்கும் நடைமுறைக்கு எதிரான போராட்டமாக ‘மனிதி’ அமைப்பு கருதுகிறது. கோவில் என்பது ஒரு பொது இடம். சாதி அடிப்படையிலோ பாலின அடிப்படையிலோ அங்கு செல்லவிடாமல் தடுப்பது மனிதத் தன்மைக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைக்கும், பிறப்புரிமைக்கும் எதிரானது.
இந்த அடிப்படையில்தான் ‘மனிதி’ அமைப்பு சபரிமலைக்குச் செல்ல விரும்பும் பெண்களை ஒருங்கிணைத்து அழைத்துச் செல்ல முடிவு எடுத்ததுடன், முகநூலில் அழைப்பு விடுத்தும் பதிவிட்டது. இதைப் பார்த்து தமிழகம்/ கேரளம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண் பக்தர்கள் அணுகினர். அவர்கள் முறைப்படி விரதத்தை கடைப்பிடித்து வர இருப்பதாகவும் தெரிவித்தனர்.
அதேநேரத்தில், 21-11-2018 அன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பி சபரிமலை வருவதற்கான சூழல், வழித்தடம், அங்குள்ள பாதுகாப்பு சாத்தியப்பாடு மற்றும் தேதி உள்ளிட்டவை குறித்து வழிகாட்டுமாறு கேட்டிருந்தோம்.
முதல்வர் அலுவலகத்திலிருந்து 12-12-2018 அன்று அரசு சார்பாக முதல்வரின் இணைச்செயலாளர் (Deputy Secretary of Chief Minister’s Computer Cell, Government of Kerala) “தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என பதில் மின்னஞ்சல் அனுப்பினார். அதன் பிறகே டிசம்பர் 23, 2018 அன்று சபரிமலை செல்ல முடிவெடுத்து, அதனை 13-12-2018 அன்று கேரள அரசுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தோம். ஊடகங்களுக்கும் முறைப்படி தகவல் அளித்தோம். அதனைத் தொடர்ந்து அன்றே பம்பை எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து தொலைபேசியில் அழைத்து, எங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்தனர். அதன் அடிப்படையில் கேரள அரசு சார்பாக ஆறு போலீசார் தமிழகம் வந்தனர். அதில் மூவர் மனிதி அமைப்பின் ஒரு குழுவோடு மதுரையில் இருந்து டிசம்பர் 22, 2018 அன்று மாலை 5.30 மணிக்கு பம்பைக்குப் புறப்பட்டோம். இரண்டாவது குழுவினர் மற்ற மூன்று போலீசாருடன் 22 டிசம்பர் 2018 அன்று மாலை 4 மணிக்கு கோயம்புத்தூர் வழியாக பயணத்தை மேற்கொண்டோம்.
முதல் குழுவில் 6 ஐயப்ப பெண் பக்தர்களும், 5 ஆதரவாளர்களும், இரண்டாவது குழுவில் 3 ஐயப்ப பக்தர்களும் சென்றோம். விரதமிருந்த 9 பேரை மட்டும் சபரிமலையில், கோவிலுக்குள் வழிபட அழைத்துச் சென்றால் போதும்.,ஆதரவாகச் சென்றுள்ள மற்ற ஐந்து பேரும், ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு முன் காவல்துறை சொல்லும் இடத்தில் நின்று விடுவதாக காவல்துறையினரிடமும், மீடியாவிடமும் தெரிவித்துவிட்டு தான் பயணத்தைத் தொடங்கினோம்.
இதனிடையே, சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் என்ற அமைப்பு, சென்னையில் இருந்து கிளம்ப இருந்த இரண்டாவது குழுவை இரயில் நிலையத்திலேயே தாக்கப் போவதாக மிரட்டல் விடுத்தது. இவற்றையும் மீறி எங்கள் பயணம் தொடர்ந்தது. கேரள எல்லைக்குள் நுழைந்ததில் இருந்தே எங்களின் வாகனத்தைத் தாக்கியும், கோஷமிட்டும், கல்லெறிந்தும் சிலர் எதிர்ப்பை வெளிட்டனர். இதனால் மாற்றுப்பாதையில் நீண்ட பயணமாக அழைத்துச் சென்றனர். கேரளத்திலிருந்தும், மற்ற மாநிலங்களில் இருந்தும் வந்த பெண்களுடன் கோட்டயத்தில் காலை 8.30 மணிக்கு இருப்பதாகத்தான் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊடகங்களுக்குத் தகவல் தெரிவித்திருந்தோம். ஆனால் உடன் வந்த காவலர்கள் தமிழகத்திலிருந்து சென்ற எங்களை “கோட்டயத்தில் பிரச்சினையாக உள்ளது” எனக் கூறி பம்பைக்கு நேரடியாக கூட்டிச் சென்றனர். நாங்கள் அதிகாலை 3.30 மணிக்கு போலீசார் துணையுடன் பம்பை சென்றடைந்தோம்.
பம்பை நதியில் நீராடி இருமுடிக்கான பணம் செலுத்தி டோக்கன் பெற்றோம். இருமுடி கட்டுமிடத்திற்கு சென்றபோது அங்கே இருந்த தந்திரிகள் “இருமுடி கட்ட முடியாது” என மறுத்து விட்டனர். “இருமுடிக்கான பொருட்களைத் தொடக் கூடாது, பக்கத்தில் நிற்கும்போது காற்று பட்டால்கூட தீட்டு” எனச் சொல்லி கணபதி கோவிலில் எங்களுக்கு வழங்க வேண்டிய பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டனர். பிறகு, எங்களின் குழுவில் இருந்த 53 வயதான மூத்த சகோதரி திருமதி. கலா அவர்களை குருசாமியாக அமர்த்தி எங்களுக்கான இருமுடியை சரண கோஷத்தோடு நாங்களே கட்டிக் கொண்டோம்.
இருமுடி கட்டிய பிறகு அதிகாலை 4 மணி அளவில் மலைக்குச் செல்ல முற்பட்ட போது, இருமுடியே இல்லாத சுமார் 30 பேர் எங்களை வழிமறித்து சரண கோஷமிட்டனர். காவல் துறை நினைத்திருந்தால் அந்த முப்பது பேரை தடுத்து நிறுத்தி எங்களை சபரிமலை நோக்கி அழைத்துச் சென்றிருக்கலாம். ஆனால் காவல்துறை அதைச் செய்யாமல் “அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை” என எங்களிடம் கூறிவிட்டனர். இதனால் “எங்களை அழைத்துச் செல்லும் வரை அந்த இடத்திலேயே உட்காருவோம்” என்று கூறியதுடன் தரையில் அமர்ந்து போராடினோம். எங்களுக்கு எதிரிலேயே அந்த 30 பேரும் அமர்ந்து, நாங்கள் உள்ளே போகக் கூடாதென கூச்சலிட்டனர். போலீசாருடன் News 18 Kerala, Asianet News, Malayala Manorama, Janam Tv ஆகிய தொலைக்காட்சிகளும் அங்கு இருந்தனர். அவர்கள் அனைத்தையும் பதிவு செய்து கொண்டும் எங்களோடு பேசிக்கொண்டும் இருந்தனர்.
மற்றொரு புறம் கேரளத்தின் ஆதிவாசிப் பெண்கள் சங்கத்தின் தலைவர் அம்மணி அவர்களின் குழுவும், சுமார் முப்பது பெண்கள் கோட்டயத்திலிருந்தும், எர்ணாகுளத்தில் இருந்தும் பெண்கள் வந்து கொண்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், எங்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதிலேயே காவல்துறை முனைப்புடன் இருந்தது. அதிகாலை 3.30 மணிக்குச் சென்ற எங்களை மலை ஏறவிடாமல் காவல் துறையினர் காலம் தாழ்த்திக் கொண்டே இருந்தனர். காலை 8 மணிக்கு பிறகு காவி நிற உடையணித்திருந்த, இருமுடியில்லாத நூறு பேர் அங்கு கூடினர். பின்னர், சுமார் 9 மணி அளவில் எங்களின் ஒருங்கிணைப்பாளர் செல்வி அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறை அதிகாரிகள், திரும்பிச் செல்லுமாறு பல்வேறு வழியில் வலியுறுத்தினர். ஆனால், ஐயப்பனைத் தரிசிக்காமல் போவதில்லை என முடிவு செய்தோம்.
எங்களுக்கு மிக அருகில் 100 அடி தூரத்தில் சரண கோஷம் எழுப்பியவாறு, எங்களைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தவர்களை சுட்டிக்காட்டி, அந்த இடத்திலிருந்து சென்று விடுமாறு காவல்துறை கூறியது. சபரிமலை கோவிலுக்குச் செல்ல பாதுகாப்பு அளிப்பது காவல்துறையின் கடமை எனக் கூறி பெண் பக்தர்கள் அங்கேயே அமர்ந்தனர். காலை சுமார் 11.30 மணி அளவில் திடீரென எங்களுக்கு எதிராக கத்திக் கொண்டிருந்த கும்பலில் இருந்த மூன்று பேரைப் பிடித்து குண்டுக்கட்டாக தூக்கி காவல்துறை வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர். அவசர அவசரமாக எங்களையும் மலையேறும் பாதைக்கு அழைத்துச் சென்றனர். நாங்கள் அமர்ந்து போராடிக்கொண்டிருந்தபோது 30 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் இருந்தனர். ஆனால் பெண்களை மலையேற அழைத்துச் செல்லும் போது வெறும் 7 காவல்துறையினரே இருந்தனர். எங்களுக்கு எதிராக கூச்சலிட்டவர்களில் மூன்று பேரைக் கைது செய்த பிறகு, எஞ்சியிருந்த கூட்டத்தினர் ஆக்ரோஷமாக சரண கோஷமிட்டனர்.
உடனே காவல்துறை எங்களை நோக்கி "ஓடு ஓடு" எனக் கத்தினர். அதைக் கேட்டதும் எங்களில் சிலர் போலீசார் மற்றும் செய்தியாளர்களுடன் ஓட ஆரம்பித்தோம். மீதமுள்ளோர் அவர்கள் பின்னால் வேகமாக நடந்து சென்றோம். அதன் பிறகு, காவல் துறையின் வண்டியில் ஏறி திரும்பிச்சென்று விடுமாறு எங்களை வலியுறுத்தினர். ஆனால், விரதமிருந்து மாலை அணிந்து சென்ற பெண்கள், ஐயப்பனைப் பார்க்காமல் செல்ல மாட்டோம் என உறுதியாக இருந்தனர். இருப்பினும் காவல்துறை எங்களை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பியது. வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தோம். ஐயப்பனைத் தரிசிக்காமல் செல்ல மாட்டோம் என 8 மணி நேரத்திற்கு மேலாக உறுதியாகப் போராடிக் கொண்டிருந்த எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என காவல் துறை கைவிரித்து திருப்பி அனுப்பியது.
எங்களின் மற்றொரு குழுவையும், கேரள பெண் பக்தர்களையும், ஆதரவாளர்களையும் பார்க்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தோம். அதனையும் செவிமடுக்க காவல் துறை மறுத்துவிட்டது. வலுக்கட்டாயமாக எங்களை அழைத்து வந்து கேரள எல்லையில் விட்டனர். தமிழக எல்லைக்குள் நுழைந்த பிறகு கம்பத்திலும், சின்னமனூரிலும் இந்துத்துவ அமைப்பினர் எங்களின் வாகனத்தின் மீது கற்களை வீசியும், கண்ணாடிகளை சுக்குநூறாக உடைத்தும் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் வாகனம் பெரும் சேதம் அடைந்தது. இருக்கைகளுக்கு அடியில் மறைந்திருந்து எங்கள் குழுவினர் தப்பினோம். போதுமான பாதுகாப்பு அளிக்காமல் 3 காவலர்களின் பாதுகாப்பில் மட்டுமே பதற்றமான சூழலில் மதுரை வந்தடைந்தோம்
மனிதியின் இரண்டாவது குழு சுமார் 5 மணிக்கு பத்தினம் திட்டா காவல் நிலையத்தை சென்றடைந்தனர். முதல் குழுவின் பயண அனுபவத்தை அறிந்திருந்த அவர்கள், அங்கிருந்த காவல்துறை எஸ்.பி. ரபீக்கிடம் 3 கோரிக்கைகளை வைத்தனர். அவை, 1. முதலமைச்சர் பினராயி விஜயனை சந்திக்க முன் அனுமதி கோரியும், 2. அனுமதி கிடைக்கும் வரை பாதுகாப்பான தங்குமிடம் வழங்க வேண்டும். 3.பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு ஆகிய கோரிக்கைகளை வைத்தனர். அவற்றை நிறைவேற்ற எஸ்.பி.யும் ஒப்புக்கொண்டார். பின்பு 3 பெண்களின் தொலைபேசி எண்களையும் மற்றும் முகவரிகளையும் வாங்கிக் கொண்டனர்.
அங்கிருந்து காரில் புறப்பட்ட 10 நிமிடத்திற்குள் இரண்டு பேருக்கு ஊடகங்களில் இருந்து செல்பேசிக்கு அழைப்பு வந்துகொண்டே இருந்தது. காவல் துறையினர் தவிர யாருக்கும் எண்கள் கொடுக்கப்படாததால், அவர்கள் மூலமாகவே ஊடகங்களுக்கு சென்றிருப்பது உறுதி செய்துகொள்ள முடிந்தது. இதுபற்றி எஸ்.பி. ரபீக்கை செல்போனில் தொடர்புகொண்டு, ஊடகங்களுக்கு செல்போன் எண்களைக் கொடுத்தது பற்றி புகார் அளித்தபோது, கவனிப்பதாகத் தெரிவித்தார். பின்னர் மூன்று பெண்களையும் பாதுகாப்பாக திருவனந்தபுரம் கூட்டிச் சென்றனர். பாதுகாப்பான தங்குமிடம் கோரியதால் அங்கு கூட்டிச் செல்வதாக நினைத்து மூவரும் அமர்ந்தனர். ஆனால் எந்த முன்னறிவிப்பும் இன்றி, திருவனந்தபுரம் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ரயில் நிலையம் சென்ற 5 நிமிடத்தில் மீடியாவும், இந்துத்துவ அமைப்பினரும் வந்துவிட்டனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத அவர்கள், தங்களின் கோரிக்கை ஏன் நிறைவேற்றவில்லை என கேள்வி எழுப்பினர்.
காவல்துறையினரோ அங்கிருந்து செல்லுமாறு தொடர்ச்சியாக வற்புறுத்திக் கொண்டிருந்தனர். மூவரும் உறுதியாக மறுத்ததால் ரயில் நிலையத்திலேயே அறை எடுத்து தங்க வைக்கப்பட்டனர். பின்பு முதலமைச்சரை சந்திக்கவும், பத்திரிக்கையாளர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்வதாக காவல் துறையினர் கூறினர். ஆனால் அடுத்த நாள் காவல் துறை துணை ஆய்வாளர் “முதலமைச்சர் ஊரில் இல்லை, அதனால் இப்போது சந்திக்க இயலாது” என்று கூறினார். பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்ய முடியாது எனவும், பைலட் போலிஸ் பாதுகாப்புடன் சென்னை அனுப்பி வைப்பதாகவும் கூறினார். முதல் குழுவையும் இப்படி அனுப்பியதாக காவல் துறையினர் கூறியதால், இரண்டாவது குழுவில் இருந்த பெண்களும் இறுதியில் ஒப்புக்கொண்டனர். “பைலட் பாதுகாப்பு செலவுக்கு ஆகும் ரூ.30 ஆயிரத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், டோல் மற்றும் எல்லையில் ஆகும் செலவுகளை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றும் அவர்கள் கூறினர். இதனை இரண்டாவது குழு பெண்கள் ஏற்றுக் கொண்டனர். சிறிதுநேரத்தில் “பைலட் சர்வீஸ் தர முடியாது, ரயிலில் ஏற்றி அனுப்பி வைக்கிறோம். சில காவலர்களை உடன் அனுப்பி வைக்கிறோம்” என்றனர். வேறு வழியில்லாமல் அவர்களும் ஒத்துக்கொண்டனர். ரயில் நிலையம் சென்று ரயிலில் ஏறியவுடன் ஆர்.எஸ்.எஸ்., பாஜக அமைப்பினர் கும்பலாக நின்று சத்தம் போட்டு தகாத வார்த்தைகளில் திட்டினர். ரயில் ஜன்னல்களை உடைக்கவும் முயன்றனர். காவல் துறையினர் அவர்களைக் கட்டுப்படுத்த முயற்சி எடுக்கவில்லை. அடுத்தடுத்த ரயில் நிறுத்தங்களிலும் இதேபோல தாக்குதல்களை அந்த அமைப்பினர் தொடர்ந்தனர். நெய்யாட்டின்கரா என்கிற ரயில் நிலையத்தில் கலாட்டா செய்து முட்டை, கற்களை எங்கள் மீது வீசினர். வீடியோக்களில் அதனைப் பார்த்தபோது உண்மையிலேயே இந்த நாட்டில் பெண்களின் நிலையை நினைத்து வேதனை அடைகிறோம். பின்னர் நாங்கள் பயணித்த பெண்கள் பெட்டியிலிருந்து மாற்றுத் திறனாளிகள் பெட்டிக்கு மாறி பயணம் செய்து தப்பினோம்.
சென்னை வரை வருவதாக உறுதியளித்த காவல்துறையினர், திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இறங்கி விட்டனர். இதனால் அச்சுறுத்தல் ஏற்பட்டு இரண்டாவது குழுப் பெண்கள் மூவரும் மதுரையில் இறங்கினர். மதுரை ரயில் நிலையத்திலும் இந்துத்துவ அமைப்பினர் கலாட்டா செய்ய சூழ்ந்தனர். மாற்றுத் திறனாளிகள் பெட்டியில் இருந்த மூவரும், வாட்சாப் வீடியோ அழைப்பு மூலம் பாதுகாப்பு கோரி பல்வேறு அமைப்புகளையும், தங்களுக்கு தெரிந்த அமைப்புகளின் பொறுப்பாளர்களையும் ரயில்வே போலீசாரையும் அழைத்து பாதுகாப்பு கேட்டனர். தகவல் அறிந்து மதுரை ரயில் நிலையத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள், சமநீதி வழக்கறிஞர் சங்கம், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை முன்னெடுத்த தைப்புரட்சி அமைப்பு உள்ளிட்டவற்றின் பொறுப்பாளர்கள் விரைந்து வந்தனர். எங்களின் இரண்டாவது குழுவை அவர்கள் பத்திரமாக அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு மனிதி உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறோம். அதற்குள் சமூக வலைத்தளங்களிலும் எங்களைப் பாதுகாக்க கோரி வலுவாக குரல்கள் எழுப்பப்பட்டன.
கேரள காவல்துறை முதல் குழுவின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளித்ததை நாங்கள் நன்றியுடன் தெரிவித்துக் கொள்ளும் அதேநேரத்தில், இரண்டாவது குழுவை நடுவழியிலேயே தவிக்க விட்டுச் சென்றதால் அவர்கள் கடும் மனஉளைச்சலுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாகினர் என்பதை மறுக்க முடியாது. கேரளத்தில் இடதுசாரி அரசு பொறுப்பிலிருந்தும், பெண்களின் வழிபாட்டு உரிமையை உறுதி செய்ய விருப்பம் காட்டிய போதும், அதற்கு மாறாக காவல்துறையே எங்களை அலைக்கழித்ததும், வழிபாட்டு உரிமையைப் பெற கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் வேண்டுமென்றே தவறவிட்டதையும் கேரள இடதுசாரி அரசின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறோம். இது அங்கு அரசுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர் அரசியலாக்கி கொண்டிருக்கும் சபரிமலைப் பிரச்சினைக்கு மேலும் வலுசேர்ப்பதாகவே அமையும் எனக் கருதுகிறோம். கேரள காவல்துறையினரின் இத்தகைய ஆணாதிக்க சிந்தனை, செயல்பாடுகளை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இடதுசாரி அரசுக்கு இருப்பதாகக் கருதுகிறோம்.
மக்களிடமும் / அமைப்புகளிடமும் கேரள அரசிடமும் மனிதிகள் கோருவது:
கேரள முதல்வரை சந்திக்க உடனடியாக வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும். கேரள முதல்வர் நேரடியாகத் தலையிட்டு சபரிமலை ஐயப்பனை வழிபட விரும்பும் பெண்களை அழைத்துச் செல்ல வேண்டும் என மனிதி விரும்புகிறது. தோழமை அமைப்புகளும் இதற்கு உதவ வேண்டும்.
பெண்கள் பயந்து ஓடுவதாக வந்த நேரலைச் செய்தியில் பெண்களுடன் சேர்ந்து ஏன் போலீசாரும் ஓடினர் என நெய்யாட்டிங்கர காவல் ஆய்வாளரிடம் கேரள டிஜிபி விளக்கம் கேட்டிருப்பதை வரவேற்கிறோம்.
வழிபாட்டுக்கான எங்களுடைய அனைத்து முன் செயல்பாடுகளின் போதும், இருமுடி கட்டும் போதும், பல நூறு ஆண்கள் இருமுடியுடன் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் எங்களுக்கு எந்தத் தொந்தரவும் செய்யவில்லை. குறிப்பாக சிறுநீர், மலம் கழிக்க அங்கிருந்த ஆண் பக்தர்களின் கழிவறையை (வேறு வழியில்லாமல்) நாங்கள் பயன்படுத்தினோம். அங்கும் இருந்த இருபதுக்கும் மேற்பட்ட ஆண் பக்தர்கள் எங்களை எதுவும் செய்யவில்லை. இது ஓர் உண்மையை வெளிப்படுத்துகிறது. சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என்றும், செல்பவர்கள் மீது வன்முறையை ஏவி விடுவதும் இந்துத்துவ அமைப்பினர்தான் என்பதை வெட்ட வெளிச்சமாகக் காட்டுகிறது.
அனைத்துப் பிரச்சனைகளும் முடியும் வரை போலீசார் உடனிருந்தும் உணவு, தண்ணீர் வழங்கப்படவில்லை. கோரிக்கை விடுத்தும் தரவில்லை. அடிப்படைத் தேவையான குடிநீர், உணவை வழங்காததுடன், அதனைத் தருவது தங்களின் வேலை இல்லை. பாதுகாப்பு அளிப்பது மட்டுமே தங்களின் பணி என காவல் துறையினர் கைவிரித்து விட்டனர். “எங்களின் வயிறே காலியாக இருக்கிறது” (Our belly is also empty) என தங்களின் வயிற்றை தட்டிக் காட்டினர்.
வடஇந்தியாவைப் போலவே கேரளத்திலும் இந்துத்துவ அமைப்பினர் கட்டவிழ்த்து விட்டிருக்கும் கும்பல் வன்முறைக் கலாச்சாரம் குறித்து தென் மாநில மக்களும் விழிப்புணர்வு அடைய வேண்டிய அவசியத்தை எங்களின் அனுபவம் உணர்த்துகிறது.
இந்துத்துவ அமைப்பினரின் தாக்குதல் முயற்சிகளுக்கு உள்ளான மனிதிகளுக்கு ஆதரவாக குரலெழுப்பி ஆதரவுக் கரம் நீட்டிய அனைத்திந்திய மாதர் சங்கம், கேரளப் பெண்கள் அமைப்புகள், ஜனநாயக அமைப்புகள், சமநீதி வழக்கறிஞர் சங்கம், தைப்புரட்சி இயக்கம், அனைத்துப் பெண்கள் கூட்டமைப்பு மற்றும் உடனிருந்து பாதுகாத்த விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் மனிதி சார்பாக நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம்.
சபரிமலைக்குச் சென்று வந்த பெண்களை அச்சுறுத்தும் வகையில், பொது வெளியில் இந்துத்துவ அமைப்புகள் மேற்கொண்டுள்ள பொய்ப் பிரச்சாரங்களை முறியடிக்க முற்போக்கு அமைப்புகள் குரல் எழுப்ப வேண்டும். அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கவும் உதவ வேண்டும்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் இந்துத்துவ அமைப்புகளுக்கு முரண்பாடு இருந்தால், சட்டரீதியாக நீதிமன்றத்தை அணுக வேண்டுமே தவிர, கும்பலாகச் சேர்ந்து சாமானியப் பெண்களை அச்சுறுத்துவது தவறானது. கண்டிக்கப்பட வேண்டியது.
ஊடகங்கள் தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை தீர விசாரித்து ஊடக அறத்துடன் செய்திகளை வெளியிட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம்.
கல்வி நிலையங்கள், பணியிடங்கள், அரசுத்துறைகள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பெண்களின் பங்கேற்பை விலக்கி வைத்திடச் (Mass exclusion) செய்யும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டு வரும் பிற்போக்குச் சூழலை உற்றுக் கவனிக்க வேண்டும். கடந்த இரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக நம்முடைய தலைவர்கள், பெண்கள் போராடி பெற்ற உரிமைகள்/ பெண்களுக்கான வெளிகள் மேலும் மேலும் குறுக்கப்படுவதை பெண்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக சபரிமலை பயணத்தை ஒருங்கிணைத்தோம்.
மிக நேர்மையாகவும் உண்மையாகவும் விரதமிருந்து கோவிலுக்குச் செல்லும் ஆண்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து, திரும்பி வரும்வரை விளக்கேற்றி வைத்து காத்திருக்கும் தங்கள் வீட்டுப் பெண்களை, இழிவுபடுத்தி தீட்டென தள்ளி வைக்கும் ஆண்களுக்கு எதிராக நம் வீட்டு ஆண்களே ஏன் குரலெழுப்பாமல் இருக்கின்றனர்? இது குறித்து பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே உரையாடல் நிகழ வேண்டும் என விரும்பிகிறோம்.
நாடெங்கிலும் பொதுவெளிகளில் தீண்டாமை தலைவிரித்தாடி வருவதை சொந்த அனுபவங்களின் மூலம் மக்களின் முன் வைத்திருக்கிறோம். இனி உங்கள் கையில், சமூகத்தின் கையில்!!
தொடர்புக்கு: செல்வி - 9080535115