முஸ்லிம்களுக்கும் கலைஞருக்குமான தொடர்பு கிட்டத்தட்ட திராவிட இயக்கங்களின் ஊற்றான நீதிக்கட்சியிலிருந்து தொடர்கிறது. முஸ்லிம்களின் மிலாடி நபி திருவிழா மேடைகளில் இயக்கத்தவர்கள் காட்டிய நெருக்கத்திலிருந்து இந்தப் பிணைப்பு இன்னும் உறுதியானது. அடுத்தடுத்து வந்த அண்ணா கூறிய 'ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்' என்ற கோட்பாடு முஸ்லிம்களுக்கு இன்னும் ஒரு படி நெருக்கத்தை அதிகப்படுத்தியது.

karunanidhi and IUMLஅதுமட்டுல்லாமல் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த மற்ற கட்சியினர் ஆட்சியில் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள். காமராஜர் ஆட்சியில் இருந்த அந்த 7% இட ஒதுக்கீட்டையும் ரத்து செய்து முஸ்லிம்களை மிக பின்னிலைக்கு தள்ளினார். அதற்குப் பிறகாக வந்த எம்.ஜி.ஆர் ஆட்சியில் நிகழ்ந்த இரண்டு சம்பவங்களான மீனாட்சிபுரம் மதமாற்றம் மற்றும் குமரியின் மண்டைக்காடு கலவரமும் முஸ்லிம்கள் அதிமுக'வில் இருந்து விலகக் காரணமாக அமைந்தது . மேலும் எம்ஜிஆர் இந்து முன்னணியுடன் மிக அதிகமான நெருக்கத்தை உருவாக்கிக் கொண்டார். எம்.ஜி.ஆர் கட்சியின் நிர்வாகிகள் பலர் இந்து முன்னணியின் மேடைகளில் அமரத் தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் 'முஸ்லிம்களுக்கு ஒரு முஸ்லிம் லீக் இருப்பது போல இந்துக்களுக்கு ஒரு இந்து முன்னணி' என்று பேசியதும் முஸ்லிம்களின் ஒட்டுமொத்த ஆதரவும் திமுக'வை நோக்கியே இருந்தது. எம்ஜிஆர் ஆட்சி காலகட்ட்த்திலேயே விநாயகர் ஊர்வலங்கள் ஆங்காங்கே தொடங்கப்பட்டது. இந்த ஊர்வலங்கள் ஜெயலலிதா ஆட்சியில் பரவலாக்கப்பட்டு எல்லா இடங்களிலும் நடத்தப்பட்டு கலவரங்கள் வெடித்தன.

காயிதே மில்லத் இறப்பிற்குப் பிறகு, அவருடன் மிக நட்பில் இருந்த கருணாநிதி, காயிதே மில்லத் தாங்கிக் கொண்ட முஸ்லிம் சமூகத்தை தன் கையில் தாங்கிக் கொண்டார் என நாளேடுகள் பதிவு செய்ய ஆரம்பித்தன.

1927 முதல் 1947 வரை இஸ்லாமியர்கள் நமது மாகாணத்தில் 16% இடஒதுக்கீட்டைப் பெற்று வந்தனர். 1947ல் முதல் அமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களால் இந்த சதவீதம் 7% ஆக குறைக்கப்பட்டது. இந்த இடஒதுக்கீடு 1954 வரை இருந்து வந்தது. அதன் பிறகு காமராஜர் ஆட்சியில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு முழுமையாக நிராகரிக்கப்பட்டு நிர்க்கதியாக நின்றார்கள் முஸ்லிம்கள். இதற்குப் பின்னானான நாட்களில் திமுக, உங்களுக்கான இடஒதுக்கீட்டை நாங்கள் பெற்றுத் தருகிறோம் என்று முஸ்லிம்களின் முழு ஆதரவை சம்பாதித்தார்கள். பின்பு 1973ல் ஆட்சிக்கு வந்த கலைஞர் இஸ்லாமியர்களை அப்போது இருந்த 31% சதவிகித பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் இடம் பெற வைத்தார். பின்பு தனி ஒதுக்கீட்டுக்காக போராடி வந்த முஸ்லிம்களுக்கு சச்சார் குழுவின் அறிக்கையின் படியும், முஸ்லிம்களின் தொடர் அழுத்தத்தின் காரணமாகவும் 2008ம் ஆண்டு 3.5% சதவிகித இட ஒதுக்கீட்டை உறுதி செய்து நடைமுறைப்படுத்தினார்.

கலைஞருக்கும் முஸ்லிம்களுக்குமான உறவுகளில் கோவை கலவரம் உட்பட பல்வேறு விமர்சனங்களும் இருக்கத் தான் செய்கிறது. ஆனால் வெவ்வேறு கட்சிகளை ஒப்பிடும் போது, கலைஞர் முஸ்லிம்களால் கொண்டாடப்பட வேண்டியவர் தான்.

-அபூ சித்திக்

Pin It