babri masjid incidentவடநாட்டில்:

வரலாறு நெடுகிலும் தமிழ்நாடு ஆகச் சிறந்த ஆளுமைகளால் வழிநடத்தப்பட்டு வந்திருக்கிறது. ஓர் ஒப்பீட்டில் அதனைக் கூற வேண்டுமானால் எனக்கு சட்டென நினைவில் வந்தது பாபர் மசூதியில் குழந்தை ராமன் திடீரெனத் தோன்றியதும் மற்றும் சென்னை தியாகராயர் நகரில் உள்ள காவல் நிலையம் அருகாமையில் இசுலாமியர்களுக்கென்று கலைஞரால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தில் திடீரென பிள்ளையார் சிலை தோன்றிய அநீதியான கதைகளும் தான்.

1949ஆம் ஆண்டு திசம்பர் 22 அன்று நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் அபிராமதாஸ் மற்றும் நான்கு நபர்கள் பாபர் மசூதியை நெருங்குகிறார்கள். அச்சமயம் மசூதிக்கு வெளியில் காவல் துறையினர் பாதுகாப்பிற்காக நிறுத்தப் பட்டிருந்தார்கள்.

ஏனெனில் இந்துக்கள் எப்போது வேண்டுமானாலும் மசூதியில் பிரச்சனைகள் செய்யலாம். எனவே அதனைத் தடுப்பதற்காக காவல்துறையினர் நிறுத்தப் பட்டிருந்தனர். மேலும் மசூதியின் உட்பக்கம் அன்று இரவு காவல் பணியில் இருந்தது அபுல் பரக்கத் என்பவர்.

அன்றிரவு பாபர் மசூதியினுள் புகுந்து குழந்தை ராமன் சிலையினை திருட்டுத்தனமாக வைப்பது என்று திட்டமிடப் பட்டிருந்த நிலையில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினர் மசூதிக்குள் நள்ளிரவில் நடக்கவிருக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் கண்டு கொள்ளாமல் விட்டுவிட வேண்டும் என்பதுதான் பைசாபாத் மாவட்ட நீதிபதியான கே.கே.நாயர் மற்றும் பைசாபாத் மாநகர நீதிபதியான குருதத் சிங் ஆகியோரது கட்டளைகளாகும்.

அதன்படியே அபிராம்தாஸ் (அனுமன்கர்ஹி தலைமைச் சாது) மற்றும் இரண்டு நபர்கள் பாபர் மசூதிக்குள் நுழைகிறார்கள். மசூதியின் நடுப்பகுதியில் அமர்ந்துக் கொண்டு குழந்தை ராமன் சிலையை அபிராம்தாஸ் கைகளால் இறுக்கி பிடித்தவாறு அமர்ந்துக் கொள்கிறார்.

விடியற்காலை ஐந்து மணியாகிறது. அபிராம்தாசின் இளைய சகோதரன் (ஆவாத் கிஷோர்) தனது அண்ணன் நேற்றிரவு பாபர் மசூதி என்று ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார். இதுவரை அவரைக் காணவில்லையே என்று பதட்டத்துடன் பாபர் மசூதியை நோக்கி ஓடுகிறார்.

பாபர் மசூதிக்குள் சென்று பார்த்தபோது அவர் கலவரமடைந்தார். ஏனெனில் அவர் கண்ட காட்சி அப்படி இருந்தது. அங்கே அபிராம்தாஸ் குழந்தை ராமனை கையில் பிடித்தவாறு அமர்ந்திருந்தார். அவர் அருகில் மூன்று அல்லது நான்கு சாதுக்கள் நின்று கொண்டிருந்தார்கள். மற்றும் இன்துஷேகர்சா, யுகள் கிஷோர்ஜா ஆகியோர் நின்று கொண்டிருந்தார்கள்.

சற்று தொலைவில் நின்று கொண்டு கொண்டு பைசாபாத் மாவட்ட நீதிபதியான கே.கே.நாயர் அபிராம்தாசை நோக்கி, “மகாராஜ், இந்த இடத்தை விட்டு நகராதீர்கள்! குழந்தை ராமனை விட்டு விடாதீர்கள்!” என்று சத்தமாக கத்திக் கொண்டிருந்தார் என ஆவாத் கிஷோர் பின்னர் விவரித்தார்.

அம்மாநில தலைமைச்செயலர் மற்றும் காவல்துறைத் தலைவர் ஆகியோர் பாபர் மசூதிக்குள் வைக்கப்பட்ட சிலையினை அப்புறப்படுத்துமாறு எவ்வளவோ கேட்டுக் கொண்ட போதிலும் அதனைக் கண்டு கொள்ளாமல் பூசைகளை செய்ய ஆரம்பித்தனர்.

முன்னேற்பாடாக மசூதி அருகில் இருந்த அச்சகத்தில் துண்டுப்பிரசுரங்கள் இரவுமுழுவதும் அச்சடிக்கப்பட்டு, இந்துக்கள் மத்தியில் விநியோகம் செய்வதற்காக தயார்நிலையில் இருந்தன. அதில் இருந்த வாசகங்கள் 'ராமன் தனக்கான இடத்தை தானே பிடித்துக் கொண்டான்' என்பதாகும்.

அதனைத் தொடர்ந்து முதல்தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது. முதல் குற்றவாளியாக அபிராம்தாஸ் சேர்க்கப்பட்டார்.

நீதிமன்றத்தில் சாட்சியாக 22.12.1949 அன்று இரவு காவல்பணியில் இருந்த அபுல் பரக்கத் கூறிய பதில்தான் அந்த சந்நியாசிக் கூட்டத்திற்கு சாதகமாக அமைந்து போனது அல்லது சாதகமாக்கிக் கொண்டார்கள்.

அபுல் பரக்கத் கூறியதாவது “22/12/1949 அன்று இரவு ஒரு மணியளவில் மசூதியின் உட்பகுதியில் பிரகாசமான ஒளி தெரிந்தது. அவ்வொளியின் நடுவே நான்கு அல்லது ஐந்து வயதுள்ள சிறு உருவம் ஒன்று தெரிந்தது. அதுபோன்று ஒரு நிகழ்வினை என் வாழ்நாளில் நான் கண்டதேயில்லை” என்று கூறியிருந்தார்.

உடனே அங்கு குழுமியிருந்த சாதுக்கள் கூட்டமும் இந்துமக்கள் என்று தங்களைக் கூறிக் கொள்பவர்களும், “பார்த்தீர்களா, ஒரு முஸ்லீம் கண்களுக்கு குழந்தை ராமன் காட்சியளித்திருக்கிறான். எனவே மசூதிக்குள் நடந்த அனைத்தும் உண்மைதான். ராமன் அவனுக்குச் சொந்தமான இடத்தினை பிடித்துக்கொண்டான்” என்ற பொய்யான செய்தியினை காட்டுத் தீ போல நாடு முழுவதும் பரவவிட்டார்கள்.

பாஸ்கர் தாஸ், அபுல் பரக்கத்திடம், “ஏன் அவ்வாறு கூறினாய்?” என்று கேட்டபோது அவர் கூறியதாவது,

நான் இரவுப் பணியில் இருந்த போதல்லவா அந்நிகழ்வு நடந்துள்ளது? எனக்கு வேறு வழியே இல்லை, ஆகையால் அவர்கள் என்ன கூறவென்றும் என்று கட்டளையிட்டார்களோ அதனையே கூறினேன். அத்துடன் என் குடும்பத்தினரையும் மதவாத கும்பலிடமிருந்து காப்பாற்றிக் கொள்ளத்தான்” என்றார்.

அதன்பின்னர் நடந்தது நாடறியும். இரண்டு மதத்தினரும் ஒரே இடத்தில் வழிபட அனுமதியளிக்கப்பட்டது

06.12.1992 அன்று பாபர் மசூதி சங்பரிவார கும்பல்களால் சிதைத்து உருகுலைக்கப்பட்டது.

09.11.2019 அன்று உச்சநீதிமன்றம் ஒரு அதிசயமான தீர்ப்பளித்தது அது 'பாபர் மசூதி' இருந்த இடத்தில் ராமன் பிறந்ததாக அனைத்து மக்களும், குறிப்பாக இந்துமக்கள், நம்புவதால் நம்பிக்கையின் அடிப்படையில் பாபர் மசூதி தற்போது இருக்கும் இடம் ராமஜென்மபூமி அறக்கட்டளைக்கு அளிக்கப்படுகிறது. அங்கே அவர்கள் ராமன் கோவிலை கட்டிக்கொள்ளலாம்’ என்றார்கள்.

தமிழ்நாட்டில்:

1970 காலகட்டத்தில் இசுலாமியர்கள் சென்னை தியாகராயர் நகர் பகுதியில் தங்கி வியாபாரம் செய்து வந்தார்கள். அவர்களுக்கென ஒரு மசூதி கட்டி வழிபட அன்றைய அரசிடம் ஓர் இடத்தினை வாங்கி அதில் மசூதி கட்டும் வேலைகளை தொடங்கியிருந்த சூழலில், திடீரென அந்த இடத்தில் பிள்ளையார் சிலை இரவோடு இரவாக வைக்கப்பட்டது.

உடனடியாக தியாகராயர் நகரில் வசிக்கும் அனைத்து பார்ப்பனக் கூட்டமும் பூசைப்பொருள்களோடு கூடி அங்கிருந்த பிள்ளையாருக்கு பஜனை செய்யத் தொடங்கினர். அப்பகுதி இசுலாமியர்கள் செய்வதறியாது தவித்து அப்பகுதியில் இருந்த அய்யா பழக்கடை ஜெயராமன் அவர்களிடம் சென்று முறையிட்டனர்.

உடனே பழக்கடை ஜெயராமன் அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களிடம் சென்று பார்ப்பனச் சதிச்செயலை கூறினார். அப்போது கலைஞர் அவர்கள் முதன்முறை தமிழ்நாடு முதல்வரான சமயம். தாமதம் செய்யாமல் உடனே அன்று மாலையே அந்தப் பகுதியில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யச் சொன்னார் கலைஞர்.

அக்கூட்டத்தில், தமிழ் நாட்டில் மதக்கலவரம் ஏற்படுத்தவும், கழக ஆட்சிக்கு இடையூறு செய்வதற்கும் ஒரு கூட்டம் முயல்வதாகவும் “அதை உடனே தடுத்து நிறுத்த அதிரடியாய் விசாரணை செய்ய உத்தரவிட்டிருக்கிறேன்” என்றும் கலைஞர் முழங்கினார்

விரைவில் அவ்விசாரணை அறிக்கை வந்தது. அதில் தி.நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஒரு முதுநிலைக் காவலர் ஒருவர்தான் அதைச் செய்தது எனத் தெரியவந்தது. உடன் அப் பிள்ளையார் சிலையை மெரினா கடற்கரையில் கரைத்து விடுங்கள் என்று உத்தரவிட்டார் முதல்வர் கலைஞர்.

திடீர் தியாகராயர் நகர் பிள்ளையார் தடம் தெரியாமல் காணாமல் போனார்.

பகுத்தறிவாளராக இருந்த கலைஞர் அவர்கள் சிந்தித்து செயல்பட்டார் திடீர்ப் பிள்ளையாரை ஒன்றுமில்லாமல் ஆக்கினார்.

ஆனால் பாபர் மசூதி!

சிலை வைக்கப்பட்டது!

மசூதி இடிக்கப்பட்டது!

இப்போது இந்துத்துவ அரசியலின் இதயமாக பாபர் மசூதி என்கிற ராமர் கோவில் திகழ்கிறது.

Highlights:

"நான் இரவுப் பணியில் இருந்த போதல்லவா அந்நிகழ்வு நடந்துள்ளது? எனக்கு வேறு வழியே இல்லை, ஆகையால் அவர்கள் என்ன கூறவென்றும் என்று கட்டளையிட்டார்களோ அதனையே கூறினேன். அத்துடன் என் குடும்பத்தினரையும் மதவாத கும்பலிடமிருந்து காப்பாற்றிக் கொள்ளத்தான்” என்றார்.

- முகில்

Pin It