இந்திய அரசியல்வாதிகளில் கலைஞர் அளவிற்கு முற்போக்காக செயல்பட்டவர்களை நம்மால் பார்க்க முடியாது. தேர்தல் அரசியல் வரம்பிற்குள் நின்று என்ன செய்ய முடியுமோ, அதை முடிந்தவரை செய்ய முயற்சித்தவர் கலைஞர். அண்ணாவிற்கு அடுத்து பெரும் அறிவுஜீவியாய் அனைத்தைப் பற்றியும் அறிவு கொண்டவராய் இருந்தார் கலைஞர். சாதியைப் பற்றியும், பார்ப்பன மேலாதிக்கத்தைப் பற்றியும், இந்திய மக்களை அழித்துக் கொண்டிருக்கும் மூடப்பழக்க வழக்கங்களைப் பற்றியும் அவருக்கு தெளிவான பார்வை இருந்தது. அனைத்து மக்களும் சாதி பேதமின்றி ஒரே இடத்தில் வாழ, பெரியார் நினைவு சமத்துவபுரத்தை உருவாக்கினார். தமிழகமெங்கும் ஏறக்குறைய 237 சமத்துவபுரங்களை உருவாக்கி அதில் தலித்துகள் 40 சதவீதமும், பிற்படுத்தப்பட்டவர்கள் 25 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 25 சதவீதமும், மற்ற வகுப்பினருக்கு 10 சதவீதமும் இடம் கொடுக்கப்பட்டது. மேலும் 1970 டிசம்பர் 2 அன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தைக் கொண்டுவந்து, கருவறை தீண்டாமைக்கு சாவு மணி அடிக்க முயன்றார். இது எல்லாம் தேர்தல் வரம்பிற்குள் நின்று கலைஞர் செய்ய முயன்ற புரட்சிகள்.

karunanidhi

கம்யூனிஸ்ட்கள் ஆளும் மேற்குவங்கத்தில் ஒழிக்க முடியாத கைரிக்ஷாக்களை ஒழித்தார். நில உச்சவரம்பு சட்டம் கொண்டுவந்து ஜமீன்தார்கள் கையில் குவிந்து கிடந்த நிலங்களைப் பறிமுதல் செய்து ஏழை விவசாயிகளுக்கு வழங்கினார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினார், நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை உருவாக்கினார். இடைத்தரகர்கள் மூலம் விவசாயிகள் சுரண்டப்படுவதைத் தடுக்க விவசாயிகள் தங்கள் பொருட்களை நேரடியாக சந்தையில் விற்க தமிழகம் முழுக்க 103 உழவர் சந்தைகளைக் கொண்டு வந்தார். இரண்டு முறை விவசாயக்கடனை தள்ளுபடி செய்தார். திமுக ஆட்சியில் 200க்கும் மேற்பட்ட தடுப்பணைகளும், நூற்றுக்கணக்கான சிறிய, பெரிய வாய்க்கால்களும் கட்டப்பட்டன. இன்று தமிழ்நாட்டின் விவசாய உற்பத்தி மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் சிறப்பாக இருப்பதற்கும், விவசாயிகள் தற்கொலை குறைந்திருப்பதற்கும் மிக முக்கிய காரணம் கலைஞர் ஆவார்.

மாநில சுயாட்சிக்காக அவரது குரல் எப்போதுமே ஓங்கி ஒலித்தது. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற முழக்கத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதற்காக இந்தியாவிலேயே வேறு எந்த மாநில முதல்வரும் செய்யாத, செய்யத் துணியாத ஒரு காரியத்தையும் செய்தார். அதுதான் மத்திய, மாநில அரசுகளின் உறவைத் தெளிவாக்க 1969 இல் நீதிபதி ராஜமன்னார் தலைமையில் குழுவை உருவாக்கியது. அந்தக் குழு முன்வைத்த கருத்துக்கள் தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்திரா காந்தி 1975 ஜூன் 25 அன்று நெருக்கடி நிலையை அறிவித்தபோது அதற்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயணனுடன் இணைந்து குரல் கொடுத்தார். மனோன்மணீயம் பெ.சுந்தரனார் எழுதிய ‘நீராரும் கடலுடத்த’ என்ற பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக்கினார்.

இன்று தமிழ் நாட்டில் முஸ்லிம்கள் நிம்மதியாக இந்துமதவெறி காலிகளால் தொந்தரவு ஏதுமின்றி வாழ்கின்றார்கள் என்றால், அதில் கலைஞரின் பங்களிப்பு மிகப் பெரியது. எப்போதுமே திமுக முஸ்லிம்கள் அதிகம் விரும்பும் கட்சியாக இருந்து வந்துள்ளது. முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் தனியாக இட ஒதுக்கீடு வழங்கியது, தமிழ்நாட்டு சிறுபான்மையினர் ஆணையத்துக்கு சட்டப்படி அங்கீகாரம் வழங்கியது, உருது பேசும் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது, நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மீலாது விழாவை அரசு விடுமுறையாக அறிவித்தது போன்றவை சிறுபான்மையினர் நலன் மீது கலைஞர் கொண்டிருந்த அக்கறையைக் காட்டுபவை.

ஈழப் பிரச்சினையை காரணம் காட்டி இரண்டு முறை திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. திமுக நினைத்திருந்தால் ஈழப்போர் நடக்காமல் தடுத்திருக்க முடியும் என்று இன்று தங்களை ஈழ ஆதரவாளர்கள் போல காட்டி ஈழத்தமிழ் மக்களிடம் பணம் பறிக்கும் சில கும்பல்கள் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஒரு மாநில முதல்வர் நினைத்தால் பல உலக நாடுகளின் பங்களிப்புடன் நடத்தப்பட்ட ஓர் இன அழிப்பு நடவடிக்கையை தடுத்த நிறுத்தியிருக்க முடியும் என்பதே, சொல்பவர்களின் அரசியல் அற்ற பார்வையை வெளிப்படுத்தி விடுகின்றது.

இந்தியாவிலேயே முதன் முறையாக 1989 இல் பெண்களுக்கு சொத்துரிமை கொண்டு வந்தது, உள்ளாட்சியில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்தது, அருந்ததியினருக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு கொண்டு வந்தது, ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீடுகள் கட்டிக் கொடுத்தது, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 தனி ஒதுக்கீட்டை கொண்டு வந்தது, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், டைடல் பூங்கா, தமிழகத்தின் பெருமைமிகு அடையாளமான கோட்டூர்புரத்தில் ரூ 170 கோடியில் கட்டப்பட்ட ஆசியாவின் மிகப் பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகம், கன்னியாகுமரியில் அமைக்கப்பட்ட 133 அடி திருவள்ளுவர் சிலை என சொல்லிக்கொண்டே போகலாம்.

திரைப்படத் துறையிலும், இலக்கியத்துறையிலும் அவரின் பங்களிப்பு மிகப் பெரியது. பராசக்தி போன்ற ஒரு திரைப்படத்தை இனி யாராலும் எடுக்க முடியாது என்ற அளவிற்கு அந்தத் திரைப்படத்தின் வசனங்கள் அமைந்தன. கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா, சங்கத்தமிழ் போன்றவை காலத்தை வென்ற படைப்புகள். பத்திரிகைகளில் வரும் அவரது கேள்வி பதில் வடிவிலான கட்டுரைகளும், அதில் தெறிக்கும் நகைச்சுவை உணர்வும் வேறு எந்த ஒரு எழுத்தாளனுக்கும் கைவரப் பெறாதவை. சேது சமுத்திரத் திட்டத்தை முடக்க காவி பயங்கரவாதிகள் ராமனை பயன்படுத்திக் கொண்ட போது ‘ராமன் எந்த இஞ்ஜினியரிங் காலேஜில் போய் படித்தான்’ என்று அவர்களின் செவிட்டில் அறைந்தவர்.periyar anna karunanidhi and mgr

கலைஞர் எப்போதுமே பார்ப்பனிய சக்திகளால் வெறுக்கப்படுபவராக இருந்தார். அவர் திராவிட அரசியல் இயக்கத்தின் கடைசி எச்சமாக, திராவிட கருத்தியலுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் நபராக இருந்தார். தேர்தல் அரசியலுக்கு உட்பட்டு எந்த அளவிற்கு பெரியாரின் சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு அதை செயல்படுத்த முயன்றார். கலைஞரின் புகழை ஒழித்துக் கட்டி அவரை தமிழினத்தின் துரோகியாக கட்டமைக்க இங்கிருக்கும் பார்ப்பன சக்திகள் தொடர்ந்து முயன்று வந்திருக்கின்றன, வருகின்றன. காவி பயங்கரவாதிகளும், வெறும்கையில் முழம்போடும் சில சில்லரைக் கும்பல்களும் எவ்வளவு முயன்றும் தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் இருந்து கலைஞரை ஒழித்துக் கட்ட முடியவில்லை. கலைஞர் காவிரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக அதிகமாக அவதூறுகளை பரப்பியவர்கள் யார் என்று பார்த்தால் காவி பயங்கரவாதிகளும், அவர்களுடன் கள்ளக் கூட்டணி வைத்திருக்கும் சில தமிழ்த் தேச அமைப்புகளும் தான்.

ஆனால் கலைஞர் தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த நன்மைகள் எல்லாம் நம்முன்னால் பார்த்த இடமெல்லாம் சாட்சிகளாக இருக்கும்போது பொய்யர்களின் புளுகுகள் எல்லாம் அம்பலப்பட்டுப் போகின்றன. தனக்கு எதிரான அனைத்துச் சதிகளையும் சட்டப்படியே முறியத்த கலைஞர் இறுதியாக தன் உடலை மெரினாவில் புதைக்க விடாமல் பார்ப்பன பயங்கரவாதக் கூட்டம் செய்த சதியையும் முறியடித்து இருக்கின்றார். ராஜாஜி ஹாலின் வெளியேயும் மெரினாவிலும் கூடி இருக்கும் இலட்சக் கணக்கான திமுக தொண்டர்கள் எல்லாம் வெறுமனே கலைஞரைப் பார்ப்பதற்காக வந்தவர்கள் இல்லை. அவர்கள் ஒவ்வொருவரும் கலைஞரால் பயனடைந்து இருக்கின்றார்கள். தங்கள் வாழ்க்கையை ஏதோ ஒருவகையில் கலைஞரின் திட்டங்கள் மூலம் முன்னேற்றிக் கொண்டவர்கள் அவர்கள். சட்டசபையில் வெற்று திட்டங்களை அறிவித்துவிட்டு ஊரை ஏமாற்றும் '420' அரசியல்வாதிகளுக்கு மத்தியில் அறிவித்த திட்டங்களை செயல்படுத்திக் காட்டியவர் கலைஞர்.

அவர் மீது விமர்சனமே இல்லையா என்று கேட்பவர்களுக்கு நாம் சொல்லிக் கொள்வது ‘நிச்சயம் உள்ளது, நிறைய உள்ளது’ என்பதுதான். தேர்தல் அரசியலின் வரம்பை முழுவதுமாகப் புரிந்துகொண்டு நாம் கலைஞரை மதிப்பிட வேண்டும். அப்படி மதிப்பிட்டால் இந்தியாவில் எந்த ஒரு தலைவரைக் காட்டிலும் அவர் உயர்ந்தவராக நிற்பார். மானமிகு சுயமரியாதைக்காரனுக்கு விடை கொடுப்போம். சென்று வாருங்கள் தமிழினத்தின் முதுபெரும் தலைவரே!

- செ.கார்கி

Pin It