சூன் 21 ஞாயிற்றுக்கிழமை முதலாவது உலக யோகா நாள், பாகிஸ்தான் தவிர, உலகில் 192 நாடு களில் கொண்டாடப்பட்டது. மேற்குவங்காளம் தவிர, இந்தியாவின் பிற மாநிலங்களில் பல நகரங்களில் உலக யோகா நாள் நிகழ்ச்சிகள் நடந்தன. தலைநகர் தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை அமைந் துள்ள ‘இராசபாதை’யில் 21.6.2015 அன்று காலை 7 மணிமுதல் 7.35 வரை 35,985 பேர் யோகாசனம் செய்த நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியைத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரை யாற்றியதுடன் அவரும் யோகாசனங்கள் செய்தார். ஆண்டுதோறும் சனவரி 26 அன்று குடியரசு நாள் நிகழ்ச்சி மட்டும் இராசாபாதையில் நடைபெறும். “இந்த இராசபாதை, யோகா பாதையாக மாறும் என்று முன்பு நாம் நினைத்திருப்போமா!” என்று மோடி பெருமிதத் துடன் கூறினார்.

தில்லியில் நடந்த யோகா நிகழ்ச்சிக்காகச் சீனாவி லிருந்து 37,000 விரிப்புகள் வரவழைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியைப் பொது மக்கள் பார்ப்பதற்காக 2000 டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டன. 15 கோடி உருபா செலவிடப்பட்டது. 84 நாடுகளிலிருந்து வந்தவர்கள் உட்பட 35,985 பேர் இராசபாதையில் 15 யோகா சனங்களைச் செய்த நிகழ்ச்சி கின்னஸ் புத்தகத்தில் சாதனையாக இடம்பெற்றது.

நியூயார்க் நகரில் உள்ள அய்க்கிய நாடுகள் மன் றத்தின் தலைமை அலுவலகத்தில் அதன் பொதுச் செயலாளர் பான்-கி-மூன் அவரது மனைவி, யோகா சனப் பயிற்சியில் பங்கேற்றனர். இந்தியாவின் அயல்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்நிகழ்ச்சியில் உரை யாற்றினார். இந்தியாவில் மாநிலங்களின் தலைநகரங் களில் நடத்தப்பட்ட உலக யோகா நாள் நிகழ்ச்சியில் நடுவண் அரசின் அமைச்சர்கள், பா.ச.க.வின் உயர் மட்டத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அய்க்கிய நாடுகள் மன்றத்தின் பொது அவைக் கூட்டத் தில் நரேந்திர மோடி “அனைவருக்கும் யோகா கலை யைக் கற்பிக்கவும், அந்தக் கலை பற்றிய விழிப்புணர் வை ஏற்படுத்தும் வகையிலும் சர்வதேச யோகா நாளைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்ற வேண்டுகோளை முன்வைத்தார். 11.12.2014 அன்று நடைபெற்ற அய்க் கிய நாடுகள் பேரவைக் கூட்டத்தில் 2015ஆம் ஆண்டு முதல் சூன் 21ஆம் நாளை உலக யோகா நாள் எனக் கடைப்பிடிப்பதென்று தீர்மானிக்கப்பட்டது.

47 முசுலீம் நாடுகள் உட்பட 177 நாடுகள் இத்தீர்மானத்தை ஆதரித் தன. சூன் 21 என்ற நாளை மோடி அரசுதான் பரிந்து ரைத்தது. ஏனெனில் அந்நாள் ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் நிறுவனர் ஹெட்கேவர் பிறந்த நாள். காலப்போக் கில் யோகா பயிற்சி நிகழ்ச்சியை ஆர்.எஸ்.எஸ். நடத் தும் ‘ஷாகா’ போல் மாற்றுவதே இந்துத்துவப் பாசிச சக்திகளின் உள்நோக்கமாகும்.

தில்லியில் இராசபாதையில் மோடி உலக யோகா நாள் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தபோது, “சர்வதேச யோகா நாளைக் கொண்டாட்ட நாளாகக் கருதாமல், உலக அமைதி, நல்லிணக்கத்தை நோக்கிய புதிய சகாப் தத்தைத் தொடங்க மனித உள்ளங்களுக்குப் பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளோம்” என்று பெருமிதத்துடன் கூறினார். அதேநாளில் அய்க்கிய நாடுகள் மன்றத்தின் தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய சுஷ்மா சுவராஜ், “உலகம் முழுவதும் ஒரு குடும்பம். நாம் அதை யோகா மூலம் ஒன்றுபடுத்துவோம். தற்போது, சமுதாயங்களைச் சீரழிக்கும் அச்சுறுத்தல்களாக இன மோதல்களும், பயங்கரவாதிகளின் வன்முறையும் இருக் கின்றன. எதிர்மறையான சிந்தனைப் போக்கிலிருந்து விடுபட்டு, இணக்கமான, அமைதியான பாதையில் செல்வதற்கு யோகா வழிவகுக்கும்” என்று கூறினார்.

மோடியும் சுஷ்மாவும் கூறுவது, “சாத்தான் வேதம் ஓதுகிறது” எனும் சொலவடையை நினைவூட்டுகிறது. மக்களை ஒன்றுபடுத்துவதற்கான மாபெரும் கொடையாக யோகாவை உலகிற்கு வழங்கியிருப்பதாகப் பீற்றிக் கொள்ளும் இந்தியாவில், 2500 ஆண்டுகளாக வருணா சிரமத்தின் அடிப்படையில் மக்களை நான்காயிரம் சாதிகளாகப் பிரித்து, அவர்களுக்கிடையே உயர்வு-தாழ்வு சிந்தனைப் போக்கும், அதன் அடிப்படையிலான வாழ்வியல் நடைமுறைகளும் ஒடுக்குமுறைகளும் இன்றளவும் நீடித்திருப்பது ஏன்? தீண்டாமை புதிய வடிவங்களில் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றனவே! மக்கள் தொகையில் 15 விழுக்காட்டினராக உள்ள பார்ப்பனர் மற்றும் பிற மேல்சாதியினரே நீண்ட நெடுங்காலமாக நாட்டின் வளத்தில், வருவாயில், உயர் அதிகாரப் பதவிகளில் 85 விழுக்காடு அளவுக்கு அனுபவித்துக் கொண்டு ஆதிக்கம் செய்து கொண்டிருப் பது ஏன்? இந்நிலையில் இந்தியாவை வைத்துக் கொண்டு உலக மக்களை உள்ளத்தால் ஒன்றிணைத் திட யோகாவே சிறந்த மருந்து - தீர்வு என்று மோடி அரசு ஆரவாரத்துடன் முழங்குவது கடைந்தெடுத்தக் கயமையல்லவா?

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, “நாயின் உடல் இயக்கமே யோகா பயிற்சி; யோகா பயிற்சியின் அனைத்து நிலைகளையும் நாயின் உடல் இயக்கத் தில் காணமுடியும். எடுத்துக்காட்டாக நாய் படுக்கை யிலிருந்து எழுந்ததும் முன்புற மற்றும் பின்புற கால் களை நீட்டிப் பெருமூச்சுவிடும். அதுபோன்ற பயிற்சி யோகாவில் உள்ளது. யோகா தினம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கானோரை அணிதிரள வைத்துள்ளது மோடி அரசு. நாட்டின் மதச்சார்பற்ற மற்றும் சனநாய கக் கட்டமைப்பைப் பலி கொடுத்துவிட்டு, இந்துத்துவா கொள்கையை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்திலேயே யோகா நாள் கொண்டாட முடிவு செய்யப்பட்டது” என்று யோகா நாளின் உண்மை யான உள்நோக்கத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார் (தி இந்து 23.6.2015).

பகுத்தறிவாளர்கள், பொதுவுடைமையாளர்கள், அறிவியல் சிந்தனையாளர்கள் மட்டுமின்றி பல ஆண்டு களாக நாள்தோறும் யோகா பயிற்சி செய்து வருவோ ரில் சமூக அக்கறை கொண்ட பலரும், மோடி தலை மையிலான பா.ச.க அரசு, யோகா நாளை அரசு நிரு வாகம் முழுவதையும் ஈடுபடுத்தி, வெறும் பகட்டு ஆர வாரம் மூலம் தன்னுடைய இந்துத்துவப் பாசிசக் கொள் கைகளைப் பரப்புவதற்காகப் பயன்படுத்துகிறது என்று கண்டித்துள்ளார்.

எந்தவொரு ஆதிக்க அரசும் வெகுமக்கள் தங்கள் வாழ்க்கைத் துன்பங்களுக்கான உண்மையான கார ணங்களைக் கண்டறிய விடாமல் திசை திருப்பவும், அவர்களுக்கு நல்லதோர் எதிர்காலம் காத்திருக்கிறது என்று ஆசைகாட்டி மயக்கவும் பல்வேறு ஏமாற்று உத்திகளைப் பயன்படுத்தி வருகின்றன. நேரு சோசலி சப் பாணியிலான சமுதாயத்தை இந்தியாவில் உருவாக் கப் போவதாகக் கூறிக்கொண்டிருந்தார். இந்திராகாந்தி ‘வறுமையை ஒழிப்போம்’ என்றார். அதற்காக இருபது அம்சத் திட்டத்தைத் தடபுடலாக அறிவித்தார். தாயுடன் குட்டி நாயும் குரைப்பது போல், சஞ்சய் காந்தி 5 அம்சத் திட்டத்தைஅறிவித்தார்.

கலைஞர் கருணாநிதி தமிழ் மொழி, தமிழ் மக்கள், திராவிட இனம் ஆகிவற்றைக் காப்பதற்காகவே தி.மு.க.வும் தானும் உழைத்துக் கொண்டிருப்பதாகக் கூறிவருகிறார். எம்.ஜி.ஆர். ‘ஏழைப் பங்காளனாக’த் திரைப் படத்தில் நடித்ததுடன், அதைச் செயல்படுத்தவே தனிக் கட்சி தொடங்கி முதலமைச்சரானார். பல ஆயிரம் கோடிக்குச் சொந்தக்காரரான செயலலிதாவும் எம்.ஜி.ஆர். சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்.

நரேந்திர மோடி, 2014 தேர்தலில் ஊழலை ஒழித்து, அயல்நாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்டு, நாட்டை நாலுகால் பாய்ச்சலில் வேகமாக முன்னேற் றப் போவதாக மக்களை ஈர்க்கும் வகையில் முழங்கினார். நாட்டில்நிலவும் ஆட்டுமந்தை அரசியல் சனநாய கம், மோடியைத் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி யில் அமர்த்தியது. அதன்பின் ‘தூய்மை இந்தியா’, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ போன்ற பல வெற்று ஆரவார முழக்கங்களை முன்னிறுத்தினார்.

சூன் 21 அன்று யோகா நாளில் கூட்டம் கூட்டிக் கூத்தாடியது போல், “தூய்மை இந்தியா” என்ற பெயரில் சில நாள் கள் பா.ச.க. தலைவர்கள் கையில் விளக்குமாறுடன் புகைப்படத்துக்கு ‘போஸ்’ கொடுத்தார்கள். மூன்று மாதங்களுக்குள் அயல்நாட்டில் உள்ள பல இலட்சம் கோடி உருபா கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் பத்து இலட்சம் உருபா வரவு வைக்கப்படும் என்று தேர்தல் பரப்புரையின் போது மோடி முழங்கினார்.

ஒற்றைக்காசு கருப்புப் பணம் கூட மீட்கப்படவில்லை. ஆட்சியில் அமர்ந்த பிறகுகூட ‘நல்ல காலம் வருகிறது’ (அச்சா-தின்) என்று பா.ச.க.வினர் கூறிக்கொண்டிருந்தனர். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ‘ஜன்தன்’ என்ற பெயரில் பத்து மாதங் களுக்குள் வங்கிகளில் 15 கோடி ஏழை எளிய மக்களுக் குக் கணக்குத் தொடங்கினார்கள். ‘சர்க்கரை’ என்று தாளில் எழுதி நக்கிக் கொள்வதுபோல், ‘ஜன்தன்’ திட்டத் தில் சேர்க்கப்பட்ட 15 கோடிப் பேரின் வங்கிக் கணக்கு களில் பத்துக்காசுகூட இல்லை. ஆட்சியில் அமர்ந்த ஓராண்டுக்குப் பின் ‘நல்ல காலம் பொறக்குது’ என்று கூறி, குடுகுடுப்பை ஆட்டுவதை நிறுத்திக் கொண்டனர்.

மோடி அரசுதான், மக்களைத் திசைத்திருப்ப யோகாவின் பெயரைச் சொல்கிறது என்று கூறினால், 47 இசுலாமிய நாடுகள் உள்ளிட்ட 177 நாடுகள் அய்க்கிய நாடுகள் அவையில் யோகா நாளை ஆதரித்தது எப்படி என்ற வினா எழுகிறது! 1917 முதல் சோசலிசத்தைக் கொள்கையாகக் கொண்டிருந்த - அமெரிக்க ஏகாதிபத்தி யத்துக்கு மாபெரும் போட்டியாகவும் எதிரியாகவும் விளங்கிய சோவியத் ஒன்றியம் 1990இல் சிதறுண்டது. அதற்கு முன்பே சீனா முதலாளியப் பாதையில் நடை போடத் தொடங்கிவிட்டிருந்தது. இதன்விளைவாக மக்களின் பொதுநலனே முதன்மை எனக் கொண்ட சோசலிசக் கொள்கைக்கு இருந்த செல்வாக்குப் பெரு மளவில் சரிந்தது. இதனால் பழமைவாத - பிற்போக் கான மத ஆதிக்கச் சக்திகள் வளர்ந்தன.

அத்துடன் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அமெரிக்காவின் கூட்டுத்திட்டமான தாராளமயம், தனி யார்மயம், உலகமயக் கொள்கை உலக அளவில் 1990 முதல் எல்லா நாடுகளிலும் செயல்படுத்தப் பட்டது. இச்சூழல் பழைமைவாத வலதுசாரி சிந்தனைப் போக்கு மேலோங்கி ஆதிக்கம் செய்ய வழிவகுத்தது. இதன்காரணமாகத்தான் 47 இசுலாமிய நாடுகள் உட்பட 177 நாடுகள் ஆன்மிகத்தை முன்னிலைப் படுத்தும் யோகாவை ஏற்றுக்கொண்டன.

மேலும் இன்றைய முதலாளித்துவ சமூகத்தின் ஆதிக்கவர்க் கத்தினரின் கொழுத்துப் பெருத்துவிட்ட உடலின் சீரான இயக்கத்துக்கு யோகா தேவைப்படுகிறது. பன்னாட்டு உணவு வகைகளாலும், கலாச்சாரத்தாலும் சீர்குலைந்து விட்ட உடல் நலனை மீண்டும் பேணிப்பாதுகாப்பதற்கான ஒரு பயிற்சியாகவே மருத்துவ வல்லுநர்களும் யோகாவைப் பரிந்துரைக்கின்றனர். குறிப்பாக எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம் தொடர்பான குறைபாடுகளுக்கென்று மருத்துவத் துறையில் யோகாவோடு தொடர்பு இல்லாத பல உடற்பயிற்சிகள் உருவாக்கப் பட்டுள்ளன. பொதுவாக நாள்தோறும் முக்கால் மணி நேரம் ஓரளவுக்கு வேகமான நடைப்பயிற்சி மேற் கொள்வது பலவகையிலும் உடலுக்கு நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

யோகா என்ற சொல்லுக்கு ஒன்றுதல், சேர்தல், இணைதல் என்று பொருள் கூறப்படுகிறது. உடல், மனம், ஆன்மா மூன்றையும் யோகா ஒன்றிணைக் கிறது என்கின்றனர். இதில், இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி என எட்டு வகைப் பிரிவுகள் உள்ளன. இதை ஒட்டுமொத்தமாக அஷ்டாங்க யோகம் என்று கூறுகின்ற னர். ஆனால் இவற்றில் ஆசனம், பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி), தியானம் ஆகிய மூன்று மட்டுமே யோகா நிலையங்களில் கற்பிக்கப்படுகின்றன.

கடந்த முப்பது, நாற்பது ஆண்டுகளில் நமது வாழ்க் கையில் உணவுப் பழக்கவழக்கங்களில், தொழில் நுட்பச் சாதனங்களில், உற்பத்தி முறையில், உழைப்புப் பிரிவினையில் பெருமுதலாளிய நிறுவனங்கள் அரசு களின் அரவணைப்புடன் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள், நெருக்கடிகள் காரணமாகப் பலவகையான உடல் நோய்களும், மனம் சார்ந்த நோய்களும் அதிகமாகி யுள்ளன. குறிப்பாக நகரங்களில் இவை அதிகமாக இருக்கின்றன.

உலகமயத்தின் பெயரால் கல்வியும், மருத்துவமும் கிட்டத்தட்ட முற்றிலுமாகத் தனியார் மயமாகிவிட்டன. இதனால் ஏழை, நடுத்தரக் குடும் பங்கள் தாங்க முடியாத பணநெருக்கடிக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகித் தவிக்கின்றனர். பெரு முதலாளித்துவ உற்பத்தியின் சமூகப் பொறுப்பற்ற - பெருங்கொள்ளைப் பேராசையின் சுரண்டலால், நீர், நிலம், காற்று, உணவுப் பொருட்கள் எல்லாம் நஞ்சாகி விட்டன. நச்சுக்காற்றை ‘பிராணாயாமம்’ செய்வதால் நன்மை ஏற்படுமா?

எனவே அரசுகள், பெருமுதலாளிகளின் இலாப வேட்டைக்குக் கையாளாகச் செயல்படும் கேடான நிலையை மாற்றி, சமூக உற்பத்தியும் நுகர்வும் அரசின் செயற்பாடுகளும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், புரட்சிகரமான மாற்றங் களை ஏற்படுத்தும் போதுதான், வாழ்க்கையைப் பற்றிய கவலை நீங்கி, மக்கள் மகிழ்ச்சியுடன், மன அமைதியுடனும் வாழும் சூழல் உருவாகும். வெறும் யோகாவால், தியானத்தால் மனஅமைதியோ வாழ்வில் வளமோ கிட்டாது. யோகா பயிற்சியைச் செய்வதால், மற்ற பயிற்சிகளைச் செய்வதால் ஏற்படுவதுபோன்ற புத்துணர்வு உண்டாகும். அவ்வளவே!

இந்தியாவில் அரசின் கூற்றுப்படியே நாள்தோறும் 14 கோடி மக்கள் வயிற்றில் பசித் தீ எரித்திட இரவில் படுக்கின்றனர். இதைத்தான் வள்ளுவர், “நெருப்பில் கூட படுத்துத் தூங்கிவிட முடியும்; ஆனால் கொடிய வறுமையில் அரை நொடியும் கண்துஞ்ச முடியாது” (குறள் 1049) என்று சொன்னார். 5 அகவைக்கு உட் பட்ட சிறுவர்களில் 47 விழுக்காட்டினர் ஊட்டச்சத்துக் குறைபாடுகளுடன் உள்ளனர்.

ஊரகப் பகுதியில் 40 விழுக்காடு வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை. 60 கோடிப் பேர் திறந்த வெளியில் மலம் கழிக்கின்றனர். நாற்தோறும் அரைமணி நேரத்து ஒரு உழவர் எனக் கடந்த இருபது ஆண்டுகளாகத் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சுருக்கமாகச் சொன்னால் அய்க்கிய நாடுகள் ஆண்டுதோறும் வெளியிடும் மனிதவள மேம்பாட்டு அறிக்கையின்படி, 173 நாடுகளில் இந்தியா 137ஆவது இடத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது.

இக்கேடான நிலைகளிலிருந்து மக்களை விடுவிக் காமல், தான்மட்டும் நலமாக வாழவேண்டும்; தன்னு டைய ஜீவாத்மா, பரமாத்வோடு இணைந்திட மோட்சம் போக வேண்டும் என்பதை முதன்மைப்படுத்துகின்ற - வெகுமக்களின் நல்வாழ்வு பற்றிக் கவலைப்படாத - தன்னலத்தையே தலையாயதாகக் கொண்ட யோகா வை அரசு முன்னெடுப்பது என்பது, மக்கள் தங்கள் துன்பத்துக்கான உண்மையான காரணங்களைக் கண்டறியவிடாமல் தடுப்பதுடன், ஆன்மிகம் என்கிற மத மூடநம்பிக்கைகளில் அவர்களை மேலும் ஆழ்த்து வதேயாகும்.

தனிமனித அமைதி, குடும்ப அமைதி, சமுதாய அமைதியின் மூலம் உலக அமைதியை ஏற்படுத்துவதே யோகாவின் நோக்கம் என்று கூறுவது மத ஆதிக்கவாதிகள் காலங்காலமாகக் கூறிவரும் பித்தலாட்டமாகும். இந்தப் பித்தலாட்டத்தின் மூலம் பாபா ராம்தேவ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்ட பலர் யோகா நிறுவனங்களை அமைத்துக் கோடிக்கணக்கில் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்ற னர். நாட்டின் அரசு தான் மக்களின் நலன்களைப் பேணிப் பாதுகாக்கக் கடமைப்பட்டது என்கிற உண்மை யை மறைக்க முயல்கின்றனர்.

எனவே யோகா உடற்பயிற்சி முறைகளில் ஒன்று. ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு தங்கப்பதக்கம்கூட வெல் வதற்கு வக்கற்ற இந்தியாவுக்கு யோகாவின் ‘அற்புத ஆற்றல்களை’ப் பற்றிப் பேசத் தகுதி இல்லை. யோகா என்ற பெயரில் அதற்கு ஆன்மிகப் போர்வை போர்த்தி, மத ஆதிக்க அரசியல் செய்ய முயலும் மோடி அரசின் கேடான நோக்கத்தை முறியடிப்போம்.

Pin It