மக்கள் ஜனநாயகத்துக்கு உயிர் கொடுத்து மக்களுக்கு அதிகாரத்தையும், மக்களுக்கும் அரசுக்கும் உள்ள இடைவெளியை குறைக்கவும் வேண்டி உருவாக்கப்பட்டதுதான் 73- வது இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தம் கூறும் பஞ்சாயத்து அமைப்புக்கள். பஞ்சாயத்து அமைப்புகளின் மூலம் தான் மக்களுக்கும் அரசுக்கும் உள்ள இடைவெளியை குறைப்பதுடன் மக்கள் தங்களுக்கான உரிமை சார்ந்த அதிகாரத்தையும் தருவதுதான் இச்சட்டத்தின் நோக்கம். மக்கள் ஜனநாயகத்தின் அடித்தளமே கிராம சபை (எ) மக்கள் சபைதான் இதன் மூலமே மக்களின் நேரடி பங்கேற்பை அளிப்பதன் மூலம்தான் மக்கள் ஜனநாயகத்தை உருவாக்க முடியும், அந்த அமைப்புதான் மக்களை அதிகாரப்படுத்தும் என்று கூறுகிறது பஞ்சாயத்துச் சட்டம்.

village panchayat

எப்படி மக்கள் ஜனநாயகத்தை கிராம சபையின் மூலம் நிலைநாட்டி மக்களை அதிகாரப்படுத்தமுடிகிறது? இந்த ஒட்டுமொத்த அமைப்பிலும் அரசியல் தலையீடு இல்லாமல் மக்களின் அதிகாரம் எவ்வாறு கிராம சபை (எ) மக்கள் சபையின் மூலம் பிரதிபலிக்க முடியும் என்பதைக் காண வேண்டி கடந்த ஜனவரி 26-ம் தேதி நடக்க இருந்த ஒரு கிராம சபை கூட்டத்தை பார்வையிட சென்றிருந்தேன். கிராம சபை கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே மக்கள் கூட்டம் கிராம சபை கூட்டம் நடக்கும் இடத்தில் கூடத் தொடங்கினர். கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் ஆண்களைவிட பெண்கள்தான் அதிகமாக இருந்தனர். கிராம சபை கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரும் வசதிபடைத்தவர்கள் அல்ல, பொரும்பாலும் ஏழைகள் அதிலும் குறிப்பாக பிற்படுத்தப்பட்ட தலித்துக்கள்.

சரியாக 11 மணிக்கு பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் வந்தவுடன் கிராம சபை தொடங்கியது. முதலில் பஞ்சாயத்து செயலர் கடந்த ஆண்டு முடிவடைந்த பணிகள் மற்றும் இந்த ஆண்டு எந்தெந்தத் திட்டங்களுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று வரவு செலவுகணக்குகளை முறையாக வாசித்து முடித்தார். அவர் முடித்த பின்னர் மக்கள் தங்களுடைய குறைகளையும் தேவைகளையும் ஒவ்வொன்றாக விவாதிக்க ஆரம்பித்துவிட்டனர். மக்கள் கூட்டத்தில் ஓர் சிறு சலசலப்பு, கூட்டத்தில் இருந்த ஒருவர் எங்கள் பகுதியில் உள்ள குடிநீர் குழாய்கள் அகற்றப்பட்டுவிட்டது, அதற்கு காரணம் கேட்டால் அது ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் போடப்பட்டது தற்போது அதில் தண்ணீர் வருவதில்லை அதனால் அந்தக் குழாய்  போக்குவரத்துக்கு இடையூராக இருப்பதாக கூறி அகற்றிவிட்டீர்கள், தற்போது அந்த குழாய்கள் எங்கு உள்ளன என்பதை விளக்க வேண்டும் என்றார், அதற்கு பதில் கூறிய பஞ்சாயத்து தலைவர், போக்குவரத்துக்கு இடையூராகவும், வாகனங்கள் குழாயின் மீது ஏறி செல்லும்போது குழாய்கள் சேதம் அடைவதனால் அப்பகுதியில் உள்ள குழாய்கள் அகற்றப்பட்டு பஞ்சாயத்து குடவுனில் வைக்கப்பட்டிருக்கிறது வேண்டுமானால் பஞ்சாயத்து குடவுனில் சென்று பாருங்கள் என்று பதில் கூறினார்.

அடுத்து ஒருவர் எழுந்து அருந்ததியர் மக்களுக்கு என்று நமது கிராமத்துக்கு ஒதுக்கப்பட்ட சுடுகாட்டிற்கு செல்லப் பாதை வசதியில்லை, எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் சுடுகாட்டிற்கான நிலமானது ஆற்றிற்கு அப்பால் உள்ளது. ஆற்றைக் கடந்து செல்லவேண்டும் அதுவும் ஆற்றைக் கடக்கும் இடம் அதிக ஆழமாகவும் ஆண்டில் அதிக நாள் தண்ணீர் இருக்கும் இடம் என்பதால் திடீர் என்று ஏதேனும் இறப்பு என்றாலும் பிணத்தை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலைவரும்போது ஆற்றில் பிணத்தை வைத்துக்கொண்டு நீந்திதான் அக்கறை சென்று பிணத்தை தகணம் செய்ய வேண்டியுள்ளது. ஒருவேளை பிணத்தை வேறுவழியில் எடுத்து செல்ல வேண்டுமானால் அது தனியார் நிலத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும் அதற்கு நிலத்தின் உரிமையாளர்கள் அனுமதிப்பதில்லை. எனவே தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்களின் இறுதி சடங்கிற்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்கு செல்ல ஆற்றின் குறுக்காக பாலம் கட்டித்தர வேண்டும் என்று அருந்ததியர் மக்கள் சார்பாக கேரிக்கை வைக்கிறோம் என்று கூறி முடித்தார்.

இதை கேட்டுக் கொண்டிருந்த பஞ்சாயத்துத் தலைவர் இந்த பிரச்சனை குறித்து அருந்ததியர் மக்கள் சார்பாக ஒரு கோரிக்கை மனுவை முறைப்படி பஞ்சாயத்து தலைவர் என்ற முறையில் என்னிடம் கொடுங்கள், இப்பிரச்சனை குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பேசி ஆவணம் செய்கிறேன் என்று கூறிமுடித்தார். பின்னர் மக்கள் வசிக்கும் இரண்டு காலனிகளின் பெயர்களைக் கூறி அப்பகுதிகளில் உள்ள சாக்கடைக் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படுவதில்லை, அதே போல் குடிநீரும் சரியாக வருவதில்லை என்று பெண்கள் கூட்டத்தில் இருந்து கேள்விகள் எழுப்பப்பட்டது, அதற்கு பஞ்சாயத்துத்தலைவர் சாக்கடை சுத்தம் செய்ய பஞ்சாயத்து துப்புரவாளர்களை அப்பகுதியில் உள்ள சாக்கடைகளை சுத்தம் செய்ய நாளை அனுப்புவதாகவும், குடிநீர் குறித்த கேள்விக்கு நமது பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தண்ணீர் பற்றாக்குறை குறித்து கூறிவிட்டு, மின்சார சிக்கனம் குறித்து மேலிடத்தில் இருந்து தனக்கு வரும் கட்டுப்பாடுகள் குறித்து மக்களிடம் விளக்கமாக கூறினார்.

அடுத்ததாக கூடியிருந்த திரளான பெண்கள் அனைவரும் கையில் வங்கிக்கணக்கு புத்தகத்துடன் அதிகமான சலசலப்புடன் நூறுநாள் வேலைவாய்ப்புத்திட்டத்தின் கீழ் வேலை செய்தும் இன்றுவரை எங்களுடைய வங்கிக்கணக்கில் பணம் ஏற்றப்படவில்லை, ஆனால் எங்களுடன் வேலை செய்த ஒருசிலரது வங்கிக்கணக்கில் மட்டும் வேலை செய்ததற்கான பணம் ஏற்றப்பட்டுள்ளது, அதே போல ஒருசாராருக்கு மட்டும் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமான சம்பளம் ஏற்றப்பட்டுள்ளது இது குறித்து எங்களுக்கு விளக்கம் வேண்டும் அத்தோடு மீதம் இருக்கும் சம்பளபாக்கியையும் எங்களுடைய வங்கிக்கணக்கில் ஏற்றவேண்டும் என்று பஞ்சாயத்து தலைவரிடம் வாதிட்டனர். இதை அமைதியாக கேட்ட பஞ்சாயத்து தலைவர் உடனடியாக ஊரக வேலைவாய்ப்புத்திட்ட பணித்தள பொறுப்பாளரை அழைத்து பெண்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் தர வேண்டும் என்று கூறினார்.

பணித்தள பொருப்பாளார் கூறியதாவது, நாங்கள் யார் யார் வேலை செய்துள்ளனர் அதுவும் எவ்வளவு வேலை செய்துள்ளனர். அதன் அளவை கணக்கிட்டு ஒவ்வொருவருக்கும் சம்பளம் என்று பிரித்து அனுப்புவதுடன் எங்கள் பணிமுடிந்தது. மாறாக பயனாளிகளுக்கு சம்பளத்தை அவர்களது வங்கிக்கணக்கில் ஏற்றுவதை தாலுகா அலுவலர்கள் தான் செய்வார்கள், அது போல நீங்கள் கூறுவதுபோல ஒருவருக்கு மட்டும் அதிக சம்பளம் தரபடமாடாது, சம்பளம் மாறுபட காரணம் பயனாளிகள் வேலை செய்யும் அளவை பொறுத்தது, அவர்களுடைய சம்பளம் மாறுபடும் இது அனைவருக்கும் ஒரே மாதிரியான சம்பளம் ஏற்றப்படுவதிலை. 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே பயனாளிகளின் சம்பளம் ஏற்றப்படும், ஆனால் நீங்கள் கூறும் சிலருக்கு வங்கிக்கணக்கில் ஏற்றப்பட்டது குறித்து நாளை விளக்கம் கேட்பதுடன் கூடியவிரைவில் பயனாளிகள் அனைவருக்கும் சம்பளபணம் ஏற்ற கேட்டுக்கொள்வதாக கூறினார்.

அடுத்ததாக 25 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் பஞ்சாயத்து தலைவரிடம் நமது கிராமத்தில் கிராம நூலகம் ஒன்று உள்ளது, அதில் பணிபுரிய ஒரு நூலக உதவியாளரும் உள்ளார், மாறாக போதிய இட வசதி செய்து தராமல் ஒரு சிறிய அறையில்தான் கிராம நூலகம் உள்ளது. அரசிடம் இருந்து கிராமப்புற மாணவர்களின் மேம்பாட்டுக்காக வருடா வருடம் புதுப்புது புத்தகங்கள் வழங்கப்படுகிறது. ஆனால் அவற்றை முறையாக பராமரிப்பதற்கு போதிய அலமாரிகள் இல்லாத காரணத்தால் புத்தகங்கள் வீணாகும் நிலையில் உள்ளது, எனவே போதிய இடவசதி மற்றும் கூடுதல் அலமாரிகள் அமைத்துத்தர பஞ்சாயத்துத்தலைவர் முன்வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு பஞ்சாயத்துத்தலைவர், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி ஆவணம் செய்யப்படும் என்று கூறினார்.

இப்படியாக பல கேள்விகளை மக்கள் கேட்பதும், அதற்கு மக்கள் பிரதிநிதிகளும் நேரடியாக மக்களுக்கு பதில் கூறுவதும்தான் மக்கள் ஜனநாயகம் அடிப்படை. இந்த அமைப்புதான் மக்களை அதிகாரப் படுத்துகிறது. கிராம சபையைத்தவிர மற்ற எந்த அமைப்புகளும் மக்களுக்கு அதிகாரத்தை வழங்கியதாக தெரியவில்லை, காரணம் மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் உள்ள இடைவெளியை குறைத்து, மக்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரதிநிதிகளை நேரடியாக சந்தித்து தங்கள் தேவைகளை எடுத்துக் கூறுவதும், மக்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதை வெளிப்படையாக நம்பகத்தன்மையுடனும் செய்வதுதான் சிறப்பு.

பல ஆய்வுகள் கிராம சபைகளில் மக்கள் பங்கேற்பு குறைந்து வருகிறது, மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வுகள் இல்லை என்று கூறும் நிலையில் நாம் பார்த்த இது போன்ற பஞ்சாயத்துக்களில் மக்கள் விழிப்பாகவும் தங்களுக்கான அடிப்படை தேவைகளை நேரடியாக கிராமசபையின் ஒப்புதலுடனும் நிறைவேறும் செய்கைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மற்றொருபுறம் மக்களின் பங்கேற்பு குறைந்து வருவதற்கு காரணம் சம்மந்தப்பட்ட ஊரில் எந்த மக்கள் கிராம சபையில் பங்கேற்கின்றனரோ அவர்கள் அனைவரும் உண்மையில் முழுக்க முழுக்க ஏழைகளாகவும் சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட மக்களாக இருப்பதாலேயோ என்னவோ கிராம சபைகளை மக்கள் சபை என்றும் கூறுவதுண்டு.

இந்தியா ஒரு மக்கள் ஜனநாயக நாடு என்பதை நாம் மத்திய மாநில அரசுகளில் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது. காரணம் மக்கள் ஜனநாயகம் என்பது மாறி இன்று கட்சி ஜனநாயகமும் அதற்கு துணையாக முதலாளித்துவமும் இருக்கிறது. ஆனால் கீழ்நிலையில் மட்டுமே மக்கள் தங்களுக்கான ஜனநாயாக உரிமையான மக்களின் பிரதிநிதிகளை நேரடியாக கேள்வி கேட்கும் உரிமையை பெறுவதன் வாயிலாக பஞ்சாயத்து அரசாங்கங்கள் மக்களுக்கு வெளிப்படைத்தன்மையுடனும் நம்பகத்தன்மையுடனும் மக்களுக்கான ஆட்சியை நடத்த முடிகிறது. ஆட்சியாளர்களும் மக்கள் பிரதிநிதிகளும் மக்களுக்குக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாவிடில் மக்களின் கேள்விக்கும் மக்கள் முன்னிலையில் வரவு செலவு கணக்குகளில் முறையீடு செய்தால் மாட்டிக்கொள்ள கூடும் என்று எண்ணியாவது மக்களுக்கு வெளிப்படைத் தன்மையுடனும் நம்பகத் தன்மையுடனும் நிர்வாகம் நடத்த முற்படுவர். அவ்வப்போது இதிலும் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் ஒட்டு மொத்த இந்தியாவில் மக்கள் ஜனநாயகம் என்று பார்க்கும் போது கிராம பஞ்சாயத்துக்களில் நடக்கும் கிராம சபைகளின் மூலம் மட்டுமே மக்கள் ஜனநயகம் உயிர் பெற்றுவருகிறது என்பதை மறுத்தும் விடக்கூடாது அதே நேரம் மறந்தும்விடக்கூடாது. 

- ஞா.ஜார்ஜ், ஆராய்ச்சியாளர், அரசியல் அறிவியல் மற்றும் வளர்ச்சி நிர்வாகத்துறை, காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகம், காந்தி கிராமம்-624302

Pin It