நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் இது போன்ற வரிகளைக் கேட்டாலே தமிழ் வியாபாரிகளுக்கு வயிற்றில் புளி கரைப்பது ஏனோ தெரியவில்லை. வருகிற நவம்பர் 20 நீதிக்கட்சி நூற்றாண்டு துவக்க நாளை முன்னிட்டு சென்னையிலே திராவிடர் கழகத்தால் 'நீதிக்கட்சி நூற்றாண்டு விழா' அறிவிப்பு வெளியானது தான் தாமதம் பேனாவை தூக்கி விட்டது தமிழர் கண்ணோட்டம்.

"நீதிக்கட்சிக்கும் திராவிடர் கழகத்திற்கும் என்ன சம்பந்தம்? நாயரும், தியாகராயரும் தோற்றுவித்த நீதிக்கட்சியை கேரளாவில், ஆந்திராவில் கொண்டாடாமல் தமிழ்நாட்டில் கொண்டாடுவதன் உள்நோக்கம் என்ன? நீதிக்கட்சியினர் திராவிடர் என்ற சொல்லையே ஏற்றுக் கொள்ளவில்லை. பெரியார் இட ஒதுக்கீட்டிற்கு என்ன சாதித்து கிழித்துவிட்டார்?" இப்படி பொய்யும் புனையுமாக புரண்டோடுகிறது கட்டுரை.

periyar justice party leaders

நீதிக்கட்சியை தூக்கி நிறுத்த, பெரியார் சிறைபட்டிருந்த காலத்தில் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் தனது தோளுக்கிட்ட மாலையை பெரியாரின் காலுக்கிடுகிறேன் என்று சொல்லி, மேடையில் இருந்த பெரியார் படத்திற்கு இட்டு அவரை நீதிக்கட்சியின் தலைவராக்கிய வரலாறையெல்லாம் அறியாதவர்களா தமிழக மக்கள்?

பார்ப்பனரல்லாதாரின் நலனுக்காக 1916 நவம்பர் 20ம் நாள் தென்னிந்திய நல உரிமை சங்கம் திராவிடர் இயக்கத் தலைவர்களால் இதே சென்னை மாநகரில் விடோரியா பப்ளிக் ஹாலில் தானே துவக்கப்பட்டது. சென்னையில் துவக்கப்பட்ட ஒரு இயக்கத்திற்கு ஆந்திராவில் ஏன் கொண்டாடவில்லை? ஆப்பிரிக்காவில் ஏன் கொண்டாடவில்லை? எனக் குதர்க்க கேள்விகள் ஏன்?

பின்னாளில் நீதிக்கட்சி என்று அறியப்பட்ட தென்னிந்திய நல உரிமை சங்கத்தின் பிதாமகன்களில் ஒருவரான டாக்டர் நடேசனார் அவர்களாலே துவக்கப்பட்டதுதான் "மெட்ராஸ் யுனைட்டட் லீக்" அமைப்பு. 1912ல் துவக்கப்பட்ட அந்த அமைப்பின் முதலாமாண்டு விழா சென்னையில் டாக்டர் நடேசனாரின் மருத்துவமனை தோட்டத்திலே நடைபெற்றது. மெட்ராஸ் யுனைட்டட் லீக் எனும் பெயரை "திராவிடர் சங்கம்" எனும் பெயர்மாற்ற தீர்மானம் ஏகோபித்த ஆதரவில் அன்று இயற்றப்பட்டதுதானே வரலாறு. ஒருவகையில் நீதிக்கட்சிக்கும் இந்த திராவிடர் சங்கம் தான் முன்னோடி.

1916ல் துவங்கப்பட்ட தென்னிந்திய நல உரிமை சங்கத்திற்காக "ஜஸ்டிஸ்" எனும் ஆங்கிலப் பத்திரிக்கை துவங்கப்பட அப்பத்திரிக்கையின் பெயரே பிரதானமாகி "ஜஸ்டிஸ் பார்ட்டி" என ஆங்கிலத்திலும், "நீதிக்கட்சி" என தமிழிலுமாக அந்த அமைப்பையே அழைக்கத் துவங்கினர். அதே ஆண்டில் நீதிக்கட்சியினரால் தமிழில் வெளியிடப்பட்ட பத்திரிக்கை "திராவிடன்" என்பதை இவர்கள் அறிவார்களா?

தமிழகத்தில் அன்றைக்கு சென்னையிலும், திருச்சியிலும் மட்டுமே முதல்தரக் கல்லூரிகள் இருந்தன. அங்கே பார்ப்பனர்களால் நடத்தப்பட்ட விடுதிகளில் பார்ப்பனரல்லாத மாணவர்கள் அமர்ந்து சாப்பிடுவதற்கான அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாயினர். இதை உணர்ந்த டாக்டர் சி.நடேசனாரால் 1916ம் ஆண்டில் சென்னை திருவல்லிகேணியில் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்காக துவக்கக்கப்பட்ட விடுதிக்குப் பெயர் "திராவிடர் சங்க விடுதி".

திராவிடர் இயக்கத்திற்கும் நீதிக்கட்சிக்கும் என்ன தொடர்பு என்பதை நீங்கள் அறியாமல் இருக்கலாம். இது பாட்டனுக்கும்-தந்தைக்குமான உறவு! தந்தைக்கும்-மகனுக்குமான உறவு! என்பதை தமிழர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள்.

பெரியாரை விமர்சிப்பதே ஒரு பிழைப்பாய், விளம்பரமாய் இன்னும் எத்தனை காலத்தை வீணடிக்கப் போகிறீர்கள்? தொடர்ந்து அம்பலப்பட்டு முகத்திரை தாறுமாறாக கிழிந்து தொங்குகிறது. பிசினஸை மாற்றுங்கள்!

- கி.தளபதிராஜ்

Pin It