கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

நடிகர்களான கூத்தாடிகள் தங்களின் கூத்தை திரை அரங்குகளில் மட்டும் அரங்கேற்றுவதோடு நிறுத்திக் கொண்டால் அதுவே, அவர்களின் சுக போக வாழ்விற்கு காரணமாக இருக்கும் தன் இரசிகர்களுக்கும், இந்த சமூகத்திற்கும் அவர்கள் செய்யும் மாபெரும் தொண்டு... 

kamal haasan 271தன்னை முற்போக்குவாதிகளாகவும், புரட்சியாளர்களாகவும் காட்டிக் கொள்ளும் கூத்தாடிகளின் உண்மை முகமும், மறைமுக உள்ளக் கிடக்கையும் சந்தர்ப்பங்கள் அமையும்போது வெளிப்பட்டே தீரும்... அதுவும் அவர்கள் தன் கருத்திற்கு முன் வைக்கும் வாதம் இந்த தேச ஒற்றுமைக்கு என்பதும், தான் அனைத்து மக்களின் நலம் விரும்பி என்பதும் [நல்லவனும், கெட்டவனுக்கும்], பிரிவினைகளை விரும்பாத மகா ஆத்மா என்பதும் கேலிப்பொருளாய் இருக்கிறது.... சமமற்ற சமூக நீதி, பொருளாதாரம் கொண்ட இந்த நாட்டில் எல்லோரையும் சகித்துக் கொண்டு செல்பவன் எப்படி பகுத்தறிவாதியாக இருக்க முடியும்? 

இந்த பிழைப்புவாதிகளின் தேவை அரசினை அண்டிப் பிழைக்கும் செயல் அன்றி, வேறு எதுவாக இருக்க முடியும்? 

ஹைதராபாத்தில் நடந்த விருதளிப்பு விழா ஒன்றில் நடிகர், பகுதறிவாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் திரு.கமல்ஹாசன் அவர்கள், விருதினை எழுத்தாளர்கள், கலைத்துறையினர் திருப்பி அளிப்பது அரசை அவமரியாதை செய்வது என்றும், அறிவுஜீவிகளுக்கும் சகிப்புத்தன்மை வேண்டும் என்றும், படைப்புகளின் வழியே கவனத்தை ஈர்க்க வேண்டும் என்றும், தான் இந்த நாட்டை நேசிப்பவன் என்றும் கூறி விருதை திருப்பி அளிக்கும் செய்கையை விமர்சித்து உள்ளார். 

என் கேள்விகள் திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு...

1. விருதினை திருப்பி தருதல் அரசை அவமதிப்பது என்றால், அரசின் மீது உள்ள கோபத்தை எப்படி வெளிப்படுத்த முடியும்?

2. வேறு ஏதாவது போராட்ட வடிவங்கள் உங்களிடம் உண்டா? அனைவரையும் இணைத்து சரியான ஒரு போராட்டத்தை உங்களால், வாய்மூடிக் கிடக்கும் அரசிற்கு எதிராக முன்னெடுக்க முடியுமா?

3. இல்லை, கருத்துரிமைக்கு எதிராக அரசு செய்யும் அடக்குமுறைகளை நீங்களும் மறைமுகமாக ஆதரிக்கிறீர்களா?

4. அறிவுஜீவிகளுக்கும் சகிப்புத் தன்மை வேண்டும் என்று சொல்லும் நீங்கள் அடித்தவனையும், அடிப்பட்டவனையும் ஒன்றாக நினைக்கும் அறிவிற்கு சொந்தக்காரரா? உரிமை இழக்கும்போது, குரல்கள் எழத்தான் செய்யும்.... அடி வாங்கிக்கொண்டு சகிப்பு உணர்வோடு இருந்தால் நீதி கிடைக்காது.... அறிவுஜீவிகளின் சகிப்புத்தன்மை அப்துல்கலாம்களைத் தான் உருவாக்கும்..

5. ஆதிக்கம் செலுத்துபனுக்கு சகிப்புத் தன்மையை கற்றுக் கொடுக்கத் தயாரா?

6. படைப்பு ஆக்கத்திற்கு தான் கொலைகளே நடக்கிறது எனும் போது, மீண்டும் படைப்பின் வழியே கவனத்தை ஈர்ப்பது எப்படி சாத்தியம்? [எதிர்ப்பைக் காட்டுங்கள் என்று சொல்லும் துணிவு கூட இல்லை]

மீண்டும் பல கொலைகளைத் தான் உண்டாக்கும்.

7. நாட்டை நேசிப்பது வேறு, நாட்டை ஆள்பவனை விமர்சிப்பது வேறு. இந்த அடிப்படை கூடத் தெரியாதவரா நீங்கள்? நாட்டுப் பற்று, இந்திய இறையாண்மையை காக்க விரும்பும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. உங்களின் நாட்டுப்பற்று நாட்டை ஆள்பவன் மீது உள்ள பற்று......

8. அத்தனையும் இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லும் தைரியம் உண்டா உங்களுக்கு? தன்மானம் உள்ளவர்கள் விருதுகளைத் திருப்பித் தரட்டும்..... உண்மையில் சமூக அக்கறை கொண்ட படைப்பாளர்கள் செய்யட்டும்... உங்கள் விருது உங்கள் விருப்பம்... 

ஆனால், இந்த அறிவுரைகளும், கருத்துகளும் உங்களை ஒரு பிழைப்புவாத, சந்தர்ப்பவாத கூத்தாடி என்றே நிரூபிக்கிறது. 

-    கவுதமி தமிழரசன்