திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்னும் பழமொழி சங்க காலத் தமிழரின் மனித இனத்தின் வாழ்வோடு கலந்த கோட்பாடுகளில் ஒன்றாகும். பண்டைத் தமிழக எல்லைக்குள்ளேயே தொழிலின் காரணமாக இடம் பெயரும் தலைவனை எண்ணி வருந்தும் தலைவியின் முல்லைநிலப் பாடல்கள் கூட தமிழரின் தொழில் வணிக பொருள்தேடல் முயற்சிக்கு சான்றாக நிற்கின்றன.

migrant labors 600

     இலங்கை, சுமத்ரா, சாவகத் தீவுபோன்ற நாடுகளுக்குச் சென்ற தமிழரில் சிலர் அங்கேயே தங்கி, தமிழர் நாகரிகம், பண்பாட்டைப் பரவச் செய்த செய்திகளும் வரலாறு நெடுக விரவிக் கிடக்கிறது. இப்படிச் சென்று தங்கிய தமிழரில் சிலரால் அவர்கள் தங்கிய நாடுகளின் தேசிய இன அடையாளத்துக்கு கேடு ஏதும் நேர்ந்ததாக வரலாறு இல்லை.

     18 ஆம் நூற்றாண்டில் இலங்கை, பர்மா, மலேசியா போன்ற நாடுகளுக்கு தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டங்களில் வேலைக்குச் சென்ற தமிழரில் இலட்சக்கணக்கானோர் அங்கேயே தங்கினர். அந்நாடுகளில் அவர்கள் குடியுரிமை, வாக்குரிமை முதலிய சிவில் உரிமைகளைப் பெற்றனர். பெரும் போராட்டங்களுக்குப் பிறகே இவை கிடைத்தாலும் படிப்படியாக உரிமைகள் பெற்றனர்.

     இலங்கை தோட்டத் தொழிலாளர்களாக மலையகத் தமிழர்கள் அங்கு ஏன் சென்றார்கள்? எப்படிச் சென்றார்கள்? சொல்ல முடியாத விவரிக்க முடியாத தீண்டாமைக் கொடுமைகளாலும், சாதிய அவமானங்களாலும், அடக்குமுறைகளாலும், தொடர் வறுமையினாலும் இலங்கையின் தேயிலைத் தோட்டங்களுக்கு வாரக்கூலிகளாக, மாதக்கூலிகளாகச் சென்றனர். அவர்களில் பல்லாயிர‌க்கணக்கான தமிழர்களை சாஸ்திரி - ஸ்ரீமாவோ பண்டாரநாயக உடன்படிக்கையின்படி இந்தியா திரும்ப அழைத்து தமிழகத்தில் குடியேற்றியது.

     சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகளுக்கு இன்றளவும் தமிழர்கள் வேலைக்குச் செல்வதும், சம்பாதிப்பதும் நாடு திரும்புவதும் வாடிக்கையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஒரு நிகழ்ச்சிப் போக்கானது மனித இனத்தின் பன்னெடுங்கால தொடர்ச்சிதான்.

     தமிழகத்துக்குள் தற்போது வந்துள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களை விரட்ட வேண்டும்; அவர்களுக்கு குடும்ப அட்டை கொடுக்கக் கூடாது; வாக்காளர் அடையாள அட்டை அளிக்கக்கூடாது என்று இயக்கம் நடத்தும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தமிழகத்துக்கு வெளியே உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் அந்நாடுகளில் என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்ல வேண்டுமல்லவா?

     இப்படி வரலாறு நெடுக மனித குலத்தின் தொழிலாளி வர்க்கத்தின் பொருள் தேடலுக்கான நடவடிக்கைகளில் ஒன்றாக ஊர்விட்டு ஊரும், நாடுவிட்டு நாடும் செல்வது, பலர் திரும்பி தாயகத்துக்கு வந்து விடுவது, சிலர் அங்கேயே தங்கி விடுவது புதியதும் அல்ல; புதுமையும் அல்ல.

     தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை அரசியலுக்கு இந்தியாவின் பிற தேசிய இனங்களிலிருந்து வருபவர்களால் பெரிய கேடொன்றும் நிகழ்ந்து விடவில்லை; நிகழ்ந்துவிடப் போவதுமில்லை. பம்பாயின் தாராவியில் தமிழர்கள் பணிக்குச் சென்று வாழவில்லையா?    

யார் எதிரி?

     தமிழ்த்தேசிய விடுதலை மட்டுமல்ல, அனைத்து தேசிய இனங்களின் விடுதலைக்கும் பொது எதிரி 1990களுக்குப் பிறகு எந்தச் சட்ட திட்டங்களும் வரையறைகளும் கட்டுப்பாடுகளும் இன்றி தமிழகத்திற்குள் வந்து குவிந்துள்ள தேசங்கடந்த கார்ப்பரேட் கம்பெனிகளும் அவர்களை வரவழைத்து சுரண்ட அனுமதிக்கும் இந்திய நடுவண் அரசும், மாநில அரசுகளும் தான்.

     மேலே சொல்லப்பட்டுள்ள பொது எதிரிகள் தான் வடமாநிலத் தொழிலாளர்களின் மிகை எண்ணிக்கை வருகைக்கு முதன்மைக் காரணம். எய்தவனை விட்டுவிட்டு அம்பை நோகும் தமிழின இனவாதக் குழுக்களுக்காக பெரிதும் வருந்துகிறோம்.

     இப்படி எழுதுகிற நாங்கள் தமிழ்த் தேசிய விடுதலைக்கான உரிமைக்கான போராட்டங்களில், தமிழ்த் தேசிய விடுதலைப் போர் ஒடுக்குமுறைக்கு உள்ளான போதெல்லாம் தமிழக மனித உரிமைக் கழகம், தமிழக மக்கள் புரட்சிக்கழகம் என்ற எங்கள் அமைப்பின் வழி நின்று தனித்தும் பிற இயக்கங்களாடு கூட்டாகவும் நடத்திய போராட்டங்களும் எதிர்கொண்ட சிறைவாசங்களும் யாருக்கும் குறைந்தது அல்ல என்பதை தமிழத் தேசிய, தமிழக ஆதரவுப் போராட்டங்களின் வரலாற்றின் பக்கங்கள் சொல்லும்.

     தேசிய இன விடுதலைக்கான இயக்கத்தை இனவாதப் பாசிச அடிப்படைகளைக் கொண்ட இயக்கமாக மாற்றிவிடக்கூடாது என்ற கொள்கை அடிப்படையிலேயே வெளிமாநிலத் தொழிலாளர் விரோதப் போக்கைக் கொண்டுள்ள தமிழின அமைப்புக்கள் சிலவற்றை விமர்சனம் செய்கிறோம்.  

மூலதனத்தின் பணி

     மூலதனம் எங்கெல்லாம் முதலாளித்துவத்தால் குவிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் தொழிலாளி வர்க்கம் திரளுவது தவிர்க்க இயலாததாகும். தமிழ்த் தொழிலாளிக்கு சவுதி அரபியா சொர்க்கம் என்றால் பீகார், மேற்கு வங்கத் தொழிலாளிக்கு தமிழகம் சொர்க்கம்!

     வடமாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளிகளுக்கு தத்தமது மாநிலங்களில் கிடைக்கும் கூலியைவிட தமிழகத்தில் கிடைக்கும் கூலி அதிகம். அதே வேளையில் இக்கூலியானது தமிழக‌த் தொழிலாளிக்கு தமிழகத்தில் கிடைக்கும் சராசரிக் கூலியைவிட குறைவானது.

     இந்த முரண்பாட்டைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் பன்னாட்டு இந்திய முதலாளிகள் நடத்தும் சூழ்ச்சியில் தொழிலாளி வர்க்க உரிமைக்கும் பாதுகாப்புக்கும் ஐக்கியத்துக்கும் போராடுவதை விடுத்து இனவாதத்துக்குப் பலியாவது கம்பெனி முதலாளிகளுக்கும் இனப்பகைச் சண்டையை மூட்டிவிட்டு குளிர்காய நினைக்கும் இந்திய அரசின் நலனுக்கும் துணைபோய்விடக்கூடிய ஆபத்தே நேரும்.

     பன்னாட்டு நிறுவன முதலாளிகளின் இந்தச் சூழ்ச்சிகளையும் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கிற இந்திய அரசுக்கு எதிராகவும் நாம் எடுக்கிற போராட்டங்கள் தேசிய இன விடுதலைப் போராட்டத்துடன் இணைக்கப்படவேண்டும். அதுவே கம்யூனிஸ்டுகள், தேசிய விடுதலை இயக்கங்களின் முன்னுள்ள முதன்மைக் கடமையாகும்.

     ஆனால் இதற்கு மாறாக தமிழ் நாட்டிற்குள் வந்து குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் மட்டும் தமிழ்த் தேசத்தின் எதிரியாக குறிவைத்து தாக்குவதும், எதிர்ப்பதும் அவர்கள் அன்றாடம் உயிர்வாழ்வதற்கான உணவு, தண்ணீர் போன்ற வாழ்வுரிமைகளை மறுப்பதும், மறுத்து இயக்கம் நடத்துவதும் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பகுதிச் சிக்கல் அல்ல; அப்பட்டமான இனவாத பாசிசத்தின் வெளிப்பாடே.

     வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை வழங்காதே எனத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தொடங்கி வைத்த இத்திருப்பணியை இன்னும் சில தமிழின அமைப்புக்கள் 'வெளியாரை வெளியேற்றுவோம்' என்ற முழக்கத்தை மிகத் தந்திரமாக சாதுரியமாக வெளிமாநிலத் தொழிலாளிக்கு எதிராக மட்டுமே முழங்கி, தேசிய இனவிடுதலைப் போராட்டத்தின் முனையையே மழுங்கச் செய்து கொண்டிருக்கின்றன.

     இந்திய தேசியமாக இருந்தாலும் தமிழ்த்தேசியமாக இருந்தாலும் சர்வதேசியமாக இருந்தாலும் அதில் வெளிப்படும் இனவாதப் பாசிசத்தை எதிர்த்துப் போராடுவதும் தேசிய விடுதலைப் போராளிகளது கடமைகளில் ஒன்றுதான். அக்கடமை தமிழ்த் தேசிய விடுதலைக்கான போராட்டத்தில் இன்னும் கூடுதல் தேவையாக உள்ளது.

தமிழ்த் தேசிய முதலாளிகள் இடம் பெயர்வது ஏன்?

     வெளிமாநில, இந்திய சர்வதேசிய முதலாளிகள் தமிழ் நாட்டிற்குள் வந்து முதலீடு செய்யும் போது அதனால் பாதிக்கப்படும் தமிழ்த் தேசிய முதலாளிகள் அவர்களை எதிர்த்துப் போராடாமல் சொந்த தேசத்தைவிட்டு ஆந்திராவுக்கும், கர்நாடகத்துக்கும், சில வட மாநிலங்களுக்கும் ஓடுவது ஏன்? தங்கள் முதலீட்டுக்கு ஏற்ற மாநிலங்களை கோவை போன்ற மாநகர்களில் உள்ள தமிழ்த்தேசிய முதலாளிகள் தேர்ந்தெடுக்கும் போது வட இந்திய மாநிலத் தொழிலாளர்களில் சில ஆயிரம் பேர் தமிழ் நாட்டுக்கு வருவதை மட்டும் எதிர்ப்பது ஏன்?

     ஆந்திரா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் தமிழ்த்தேசிய முதலாளிகள் தமிழகத்தைவிட மலிவான உழைப்புச் சுரண்டலில் ஈடுபடுவதை ஏன் கண்டிப்பதில்லை? பொதுவாகவே தோழர்.பெ.மாவின் தலைமையில் இயங்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி இராசராசன், இராசேந்திரசோழன் போன்ற மன்னர்கள் இலங்கை மீதும், வட நாட்டின் மீதும் படையெடுத்தால் அது தமிழர் வீரம் என்றும் தமிழகத்தின் மீது வேறு நாட்டினர் படையெடுத்தால் அது தமிழினத்தின் மீதான தமிழகத்தின் மீதான ஆக்கிரமிப்புப் போர் என்றும் எழுதும் கலாச்சாரத்துக்கு சொந்தக்காரர்கள்.

     வெளிமாநிலங்களுக்குச் செல்லும் தமிழ்த் தேசிய முதலாளிகள் தனது மூலதனத்தை தமிழகத்திலேயே போட்டு தமிழ்த் தொழிலாளிக்கு ஏன் வேலை கொடுக்கக் கூடாது? முதலாளியின் குணம் இலாபம் ஈட்டுவதும், உழைப்புச் சுரண்டலுமே தவிர வேறு எந்த தேசிய இனப்பற்றும் அவர்களுக்கு இருப்பதில்லை என்பதற்கு தமிழ்த் தேசிய முதலாளிகளின் இடப்பெயர்வுகள சான்றாகும்.

     இதுபோலவே ஆந்திராவைச் சேர்ந்த அனல் மின் கழக முதலாளிகள் தமிழகத்தில் முதலீடுகளைக் குவிப்பதும் ஆகும். தேர்ந்தெடுத்துக் கொண்ட தொழில், நிலம், நீர், துறைமுக வாய்ப்பு, தொழிலுக்குத் தேவையான கச்சாப்பொருட்கள், உழைப்புச் சுரண்டல், சந்தை வாய்ப்பு, குறிப்பிட்ட தொழில் நடக்கும் இடங்களில் உள்ள அரசுகள் அளிக்கும் ஆதரவு இவைதான் முதலாளிகள் மாநிலம் விட்டு மாநிலம், நாடு விட்டு நாடு செல்லக் காரணங்களாகும்.

     முதலாளிகளின் நிலைமையே இதுதான் என்றால் ஏழைத்தொழிலாளி தன் உழைப்பையும் தன்னையும் விற்றுக் கொள்ளுகிற ஏழைகள், உயிர்வாழும் உரிமைக்காக வாழ்வூதியம் தேடி மாநிலம் விட்டு மாநிலம், நாடுவிட்டு நாடு பயணிப்பதை எப்படிக் குறை கூறமுடியும்? ஒரு தேசிய இனம் தனது நாட்டின் இயற்கை வளங்களையும், மனித ஆற்றலையும் எப்படி ஒன்றுபடுத்தி தனது வாழ்க்கைத் தரத்தையும், வாழ்வாதாரத்தையும், இறையாண்மையையும் பெருக்கிக் கொள்வது; அதே நேரத்தில் தனது இயற்கை வளங்களை வருங்காலத் தலைமுறைகளுக்கும் பயன்கிட்டும் வகையில் விட்டுவைப்பதும், வளர்த்தெடுப்பதும் என்ற தொலைநோக்கு அரசியல் அறிவியல் திட்டங்களாடு முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

     அதற்கு மாறாக ஒவ்வொரு தேசிய இனத்திலும் உள்ள உழைக்கும் மக்களை தங்களது எதிரியாக பாவிக்கும் இனவாதத் தூண்டல்கள் தேசிய இனத்தின் பெயரால் யார் செய்தாலும் அது இந்திய ஆளும் வர்க்கத்துக்கும் அதன் அரசுக்கும் பன்னாட்டுக் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் அவர்களது வல்லரசுக்கும் செய்கிற முதலாளித்துவ சேவையே தவிர வேறொன்றும் இல்லை.

தனிமனித குழுக்களின் திருட்டு, கொலை, பாலியல் குற்றங்கள் தனி ஒரு பண்பாடா?

     அலையலையாக வந்து குவியும் வடமாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை உயர்வால் தமிழகத்தில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை, கொலை, பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்கள் அதிகரித்துவிட்டதாக தமிழக போலீசு போலவே தமிழினக் குழுவினரும் பேசுவதுதான் பெரும் அபத்தமாக இருக்கிறது.

     திருட்டு, வழிப்பறி, கொள்ளை, கொலை, பாலியல் பலாத்காரம், சீண்டல் எல்லாம் 1990களுக்கு முன்பு தமிழகத்தில் நடந்ததே இல்லையா? வடமாநிலத் தொழிலாளர்கள் வந்தபிறகுதான் இத்தகைய குற்றங்கள் நடைபெறுகிறதா? தமிழகத்தில் உள்ள தமிழர்கள் நடத்தும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் பலாத்காரம், சீண்டல்களுக்கு ஆயிரமாயிரம் சான்றுகள் உள்ளன.

உதாரணத்திற்காக சிலவற்றை மட்டும் பட்டியலிடுவோம் :

     அண்மையில் திருவாரூர் மாவட்டத்தில் சாந்தி என்ற ஆசிரியை தன் கள்ளக்காதலனாக, தனது கணவரை ஒரு மருத்துவரைக் கொண்டு விஷஊசி போட்டுக் கொலை செய்தது எந்த இனத்தைச் சேர்ந்தவரால் நடந்தது? திருச்சி சோதிடன் கண்ணனும் அவனது காதலி மோகனாவும் செய்த ஐந்து கொலைகள் எந்த இனத்தின் பண்பாடு?

     இத்தகைய வக்கிரக் கொலைகளும், திருட்டு வழிப்பறியும், கொள்ளையும் பாலியல் பண்பாட்டுச் சீரழிவுகளும் முதலாளித்துவ சமூகத்தின் தீய விளைவுகளேயேயன்றி குறிப்பிட்ட தேசிய இனத்தின் பண்பாட்டுச் சிக்கல் அல்ல.

     நிலப்பிரபுத்துவ முறையே பாலியல் பலாத்கார சீரழிவுகளுக்கான காரணம், உற்பத்தி முறையும் உற்பத்தி உறவுகளும் பெண்களை அடிமைப்படுத்தி, சாதிய உறவுகள், சாதிய உரிமைகள் வழியாக இங்கே பெண்களை கட்டுப்படுத்திய காலத்திலும் பெண்கள் கட்டுப்பாட்டை மீறிய பொழுது இத்தகைய கொலைகள் நடந்தன‌. பெண்கள் எப்போதெல்லாம் புதிய வழிக் கட்டுப்பாடுகளை உடைத்து வெளியே வருகிறார்களோ, அப்போதெல்லாம் பிரபுத்துவ வாரிசுரிமையாக வரும் சொத்துரிமை தன்சாதி ஆண்களிடமே இருக்க வேண்டும் என்று எண்ணுகிற சாதி அதிகார, ஆணாதிக்க சக்திகள் புதிய புதிய சட்டங்களையும் விதிகளையும் உருவாக்கி கட்டுப்படுத்தி வருகிறார்கள். அப்படி உருவாக்கப்பட்டதுதான் குழந்தை மணம், உடன்கட்டை ஏறுதல், விதவை மறுமணத்தடை, தேவதாசி முறை முதலிய பிற்போக்கான பெண்ணடிமைத் தனப் பண்பாட்டு வடிவங்களாகும். இந்த பிரபுத்துவ பண்பாட்டு சமூக உறவுகள் கூட தமிழர்களில் உள்ள பல உழைக்கும் மக்கள் சமூகங்களில் செல்வாக்குச் செலுத்தவில்லை. வலிமையான நிலப்பிரபுத்துவம் இன்று இல்லையாயினும் அது உருவாக்கிய பண்பாட்டின் அடித்தளங்கள், உற்பத்தி உறவுகள் இன்னும் நீடிப்பதால்தான் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வோர் கொடூரமாக கொல்லப்படும் கௌரவக் கொலைகள் நீடிக்கின்றன.

     இன்னொருபுறம் உலக மயமாக்கலுக்குப் பிறகு தயாரிப்பு, உற்பத்தித்துறை தொழில் வளர்ச்சி குறைந்து சேவைத் துறைத் தொழில்களின் வளர்ச்சியும் (தொலைக்காட்சி, செல்போன், கம்ப்யூட்டர், இணையதளம் போன்றன) அதைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டுள்ள நுகர்வு வெறிக் கலாச்சாரமும், அந்நியமாதல் பண்பாடும் பல மடங்கு கூடியுள்ளது. ஏகாதிபத்திய உலகமயமாதல் கலாச்சாரமானது பெண்களை ஆண்களின் நுகர்வுப் பொருளாகப் பாவிக்கும் இழிநிலைக்கும், சில வளர்ந்த மேட்டுக்குடிப் பெண்களும் கூட ஆண்களை நுகர்ந்து தூக்கிவீசும் கலாச்சாரத்துக்கும் இட்டுச் சென்றுள்ளது. பாலியல் பண்பாட்டுச் சீரழிவுப் போக்குகள் என்பது நிலப்பிரபுத்துவ, ஏகாதிபத்திய, உலக மயமாதலின் விளைவுகளேயன்றி இச்சிக்கல் எந்த ஒரு குறிப்பிட்ட தேசிய இனத்தின் சிக்கல்கள் என்றும் தனியாக வ‌ரையறுத்துவிட முடியாது.

     எனவே வெளிமாநிலத் தொழிலாளர்கள்தான் கற்பழிப்பு, திருட்டு, வழிப்பறியில் ஈடுபடுகிறார்கள் என்ற தமிழினக் குழுக்கள் சிலவற்றின் குற்றச் சாட்டில் உண்மை இல்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலரும் கூட வெளிமாநிலங்களில் குறிப்பிடத்தக்க சில குற்றச் செயல்களில் ஈடுபடுவது பற்றிய செய்திகள் நாளிதழ் ஊடகங்களில் வரத்தான் செய்கின்றன.

     மீண்டும் மீண்டும் நாம் வலியுறுத்திச் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். வெளிமாநிலத் தொழிலாளர் வருகையையும் தமிழ்த்தேசிய விடுதலையையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை என்பதுதான். மீறியும் அப்படிச் சொல்பவர்கள் ஆளும் வர்க்கச் சேவகர்கள்!

தமிழரின் வாழ்வைப் பறித்தவர்கள் யார்?

     திருவள்ளுர் மாவட்டம் தேர்வாய் கண்டிகையில் அமைக்கப்பட்டிருக்கும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த மிக்லேன் டயர் கம்பெனிக்கு கருணாநிதியும் ஜெயலலிதாவும் என மாறி மாறி ஆட்சி செய்தவர்கள் 1500 ஏக்கர் ஏழை விவசாயிகளின் நிலங்களைப் பிரித்து தானம் செய்தனர். அதே டயர் கம்பெனிக்காக தேர்வாய் கண்டிகையை ஒட்டியுள்ள சிறுவாடா கண்ணன்கோட்டை விவசாயிகளின் நிலங்களையும் அந்நிலங்களுக்குப் பாசன வசதி அளித்த குளங்களையும் ஒன்றிணைத்து ஒரு பெரிய ஏரியை ரூ.330 கோடி ரூபாய் செலவில் முதலமைச்சர் ஜெயலலிதா 2013 ஆம் ஆண்டு உருவாக்கிக் கொடுத்துள்ளார். நிலத்தை இழந்த விவசாயிகள் அனைவருமே தமிழர்கள்தான். விவசாயிகள் நிலத்தை இழந்தார்கள்; விவசாயக்கூலிகள் வாழ்வாதாரத்தை இழந்தார்கள். இதற்குக் காரணமான தமிழக அரசையும் பிரான்சின் மிக்லேன் கம்பெனியையும் விட்டுவிட்டு அதில் பணியாற்றும் வட மாநிலத் தொழிலாளர்களை மட்டும் குறிவைத்து தமிழத்தேசப் பொதுவுடைமைக் கட்சி போராடுவது எதைச் சாதிப்பதற்காக? யாருடைய நலனைப் பாதுகாப்பதற்காக?

     இப்படிப் பட்டியலிட்டால் தமிழக விவசாயிகள் கூலிகளாக்கப்படும் உண்மைகள் தெளிவாகும். அப்படிக் கூலிகளாக்கப்பட்டவர்களுக்கு வேலை கொடுக்காமல் பன்னாட்டு நிறுவனங்களில் வெளிமாநிலத்தவர்களுக்கு வேலை கொடுப்பதையும் எதிர்ப்பது என்ன விதமான தருக்கத்தை உருவாக்குகிறது? "தமிழர்களின் சொத்துக்களைப் பறித்து பன்னாட்டு நிறுவனங்கள் வேரூன்றட்டும். ஆனால் அதில் ஒப்பந்தத் தொழிலாளர் பணியை மட்டும் தமிழருக்கே கொடு!" இதை விட பன்னாட்டு முதலாளிய சேவை வேறு இருக்க முடியுமா?

     பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்தில் ஒரு சோசலிச சமுதாய‌த்துக்கான தொழிலுற்பத்தி, தொழில் வளர்ச்சி, பஸ் சீட்டு முறைகளைத் தேடாமல், நாடாமல், அதற்காகப் போராடாமல், ஏகாதிபத்திய உலகமயமாதல் முதலாளித்துவக் கண்ணோட்டத்திலேயே தொழில்வளர்ச்சியை அணுகுவது தமிழ்த்தேசிய இயக்கங்கள் சிலவற்றின் ஆளும் வர்க்கக் கண்ணோட்டம் அல்லது அறியாமையையே வெளிப்படுத்துகிறது.  

ஓசூர் ஓர் அனுபவம்:

     வெளிமாநில, வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்த் தொழிலாளிகளின் உழைப்பை பறித்துக் கொள்வதாகப் புலம்பும் செம்பரிதி என்பவருக்காக சில தகவல்களைப் பரிமாறுவோம்! விரல்கள் என்னும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள குறும்படமும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான பேராசிரியர் மார்க்ஸ் அவர்கள் அளித்த தகவல்கள்.

     ஓசூரில் 40000க்கும் மேற்பட்ட வெளிமாநிலத் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் பெரும் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் உதிரிபாகங்கள், பொருட்கள், துணைப் பொருட்கள், கருவிகள் தயாரித்துக் கொடுக்கும் துணைத் தொழில் நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். கல்லுடைக்கும் தொழிலிலும், மாத்திரைகள் உற்பத்தி செய்யும் இயந்திரங்களையும் இயக்கும் பணிகளில் உள்ள தொழிலாளர்களில் சிலருக்கு விரல்கள் இருப்பதில்லை. மேற்கண்ட பணிகளின்போது விரல்கள் துண்டிக்கப்படுவதே காரணம். லாட்ஜ்களில் வடமாநில பெண் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்கள் எளிதில் பாலியல் தொழிலுக்கு மாறும் அபாயத்தை நம்மால் மறுத்துவிடமுடியாது.

     40000 தொழிலாளர்களுமே ஒப்பந்தத் தொழிலாளர்கள் தான். இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.3500 முதல் 4500 வரை மட்டுமே ஊதியம் கிடைக்கிறது. 600 தொழிலாளர்களைக் கொண்ட ஒரு (யூனிட்டை) தொழிலாளர் குழுவை தொழிற்சாலைக்கு அளிக்கும் ஒப்பந்ததாரர் ஒருவர் ரூ.100 க்கு 10 கமிஷன் தொகையாக மாதந்தோறும் 600 பேரிடமும் ரூ.2.5 லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள். இப்படி ஒப்பந்தத் தொழிலாளர்களை நிறுவனங்களுக்கு வெளியகப்பணியாக அளிக்கும் ஒப்பந்ததாரர்களில் தமிழின ஒப்பந்ததாரர்களும் தான் அடக்கம். இத்தகைய ஒப்பந்ததாரர்கள் அனைத்து கட்சியைச் சேர்ந்தவர்களாகவும் அனைத்து சாதியைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பதையும் யாரும் மறுத்துவிடமுடியாது!

     வெளியகப்பணி ஒப்பந்ததாரர்களிடம் நீங்கள் ஏன் தமிழர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாக அனுப்புவதில்லை என்று கேட்டபோது உள்ளூர் ஆட்கள் என்றால் தொழிற்சங்கம், சாதிச்சங்கம் போன்றவை தோன்றி எங்கள் தொழிலுக்கும் கமிஷன் சம்பாத்தியத்துக்கும் வேட்டுவைக்கும்; நிறுவனங்களும் இதை விரும்புவதில்லை என்றே பதில் கூறுகின்றனராம்.

     வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு எவ்வித சட்டப் பாதுகாப்பும் இல்லை. அவர்கள் குறித்த கணக்கெடுப்பை ஜெயலலிதா அரசு போலீசு மூலம் மட்டுமே எடுத்தது. உண்மையில் தொழிலாளர் நல ஆணையர்கள் மூலம்தான் கணக்கெடுப்புச் செய்ய வேண்டும். இதுதான் படிப்படியாக தொழிலாளர் உரிமை கோரவும் பெறவும் வழிவகுக்கும். மாறாக போலீசு எடுக்கும் கணக்கு அவர்களை குற்றப்பின்னணி கொண்டவர்களாகப் பாவிக்க மட்டுமே பயன்படும்.

     சாலை வசதி இல்லாததற்கு வெளிமாநிலத் தொழிலாளி காரணமாக ஏப்ரல் மாதத் தமிழர் கண்ணோட்டத்தில் தோழர் செம்பரிதி என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் 'வெளியாரை வெளியேற்றுவோம் என்பது அடாவடி அல்ல! அறம்!' என்று தலைப்பிட்டுள்ளார். அது அடாவடியும் அல்ல; அறமுமல்ல; அபத்தம்!

     தேனி மாவட்டம் மேகலை எஸ்டேட் பகுதியில் ஆயிரக்கணக்கான தமிழக‌த் தொழிலாளர்கள் பணியாற்றி வந்தார்களாம். அவர்கள் பல தேவைகளுக்காக மலையிலிருந்து கீழே சின்னமனூர், கம்பம், தேனி போன்ற நகரங்களுக்கு நல்லபாதை, சாலை வழி கேட்டுப் போராடியும் அது கிடைக்காததால் பயணிக்க முடியாத சாலையில் அடிக்கடி விபத்து நேர்ந்து உயிரிழப்பு ஏற்படுகிறதாம். தமிழக அரசோ, தனியார் முதலாளிகளோ துளியும் அசைந்து கொடுக்க வில்லையாம். மரணங்களும் நின்ற பாடில்லையாம்.

     வெறுத்துப்போன தமிழ்த் தொழிலாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி சிதறிக் கொண்டிருக்கிறார்களாம். அந்த இடத்தை வெளிமாநிலத் தொழிலாளர்கள் கைப்பற்றி விட்டார்களாம்!

     என்னே பேதமை! இனிமேல் வெளிமாநிலத் தொழிலாளிகள் அரைகுறை வயிற்றுக்கஞ்சியோடு சாலை விபத்துக்களை எதிர்கொண்டு மரணத்தை தழுவலாம். எஞ்சியோர் உயிர்வாழலாம் என்று செம்பரிதி கருதுகிறாரா?

     பாதைவசதி, சாலை வசதி, குடிதண்ணீர் வசதி, கழிப்பறை வசதி செய்து கொடுக்காத தமிழக அரசு, தனியார் முதலாளிகளின் குற்றத்துக்கு தமிழ்த் தொழிலாளி வெளியேறிய இடத்துக்கு வந்து சேர்ந்த வெளிமாநிலத் தொழிலாளி என்ன செய்வான்? தமிழ்த் தொழிலாளிகளின் வீரஞ்செறிந்த போராட்ட மரபு என்ன ஆனது?

     இதர பகுதி மக்களயும் இயக்கங்களையும் இணைத்து அரசுக்கும், நிறுவனங்களுக்கும் எதிராகப் போராடவேண்டிய தமிழ்த் தொழிலாளிகள் சிதறி ஓடியது மட்டும் எப்படி சரியாகும்? இதற்கும் வெளிமாநிலத் தொழிலாளி தான் காரணமா?

     வீட்டைக் கொடுத்துவிட்டு வீதியில் குடும்பம் நடத்த முடியாது என்று பேசும் செம்பரிதி அவர்கள், வீட்டை கொடுத்து அல்ல, வீட்டைப் பறித்து வீதியில் குடும்பம் நடத்த தமிழர்களைத் தள்ளியது யார்? நேரிடையாக நேர்மையாகப் பதில் சொல்லுங்கள்!

     பன்னாட்டு முதலாளியமும் அவர்களுக்குப் பட்டுக் கம்பளம் விரித்து, பாதுகாப்பு கொடுக்கும் அரசுகள் இல்லையா? திரிபுவாத திசையில் தமிழ்த்தேசிய அரசியலை திசைமாற்றாதீர்கள்.

     இந்தியக் கட்டமைப்பும் இந்திய அரசும் பன்னாட்டுக் கார்ப்பரேட் முதலாளியமும் தகர்க்கப்படாதவரை நிலப்பிரபுத்துவக் காலப் பண்பாட்டு உறவுகளுக்கு எதிராக சாதித்தமிழர்கள் தமிழ்த்தேசியராக தன்னைத் தகவமைத்துக் கொள்ளாதவரை இங்கே தமிழ்த் தேசியம் நல்ல கனவாக மட்டுமே இருக்கமுடியும்.

     நிலப் பிரபுத்துவ, ஏகாதிபத்திய, உலகமாயமாதல் சமூகம் உருவாக்கியுள்ள கண்ணோட்டங்களோடு தமிழரைத் திரட்டும் தமிழ்த் தேசியம் ஒருபோதும் தேசிய விடுதலையாகாது; பிரிவினையாக மட்டுமே இருக்க முடியும். இந்து இந்தியாவின் ஏகாதிபத்திய நவீன காலனி இந்தியாவின் படி மாதிரியான தனித்தமிழ் நாட்டை பொற்தட்டில் வைத்துக் கொடுத்தாலும் அந்தத் தமிழ்த்தேசம் தேவையில்லை.

     தமிழ்த் தேசிய விடுதலை வேண்டும்! அது அனைத்து வகையான ஒடுக்குமுறை சுரண்டல்களிலிருந்தும் விடுபட்ட தேசிய இனவிடுதலையாக மட்டுமே இருக்க வேண்டும்!

- அரங்க.குணசேகரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It