கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

ஐயா உளவுப்பிரிவு அதிகாரிங்களே! நான் ஊத்திக்கொடுத்த உத்தமின்னு கட்டுரைக்குப் பேரு வைச்சதுனாலா நீங்க டென்சன் ஆகிறாதீங்க... யாரு ஊத்திகொடுத்தா, எந்தக் கருமத்த ஊத்திக்கொடுத்தா, அவ பேரு என்ன, அவ ஊரு என்ன, அவளோட வண்டவாளம், தண்டவாளம் எல்லாம் என்ன என்று ஒன்றும் நான் சொல்லவில்லை. இந்தத் தலைப்புக்கு யாரும் காப்பிரைட் வாங்கியிருந்தா தயவு செய்து சொல்லிவிடுங்க... நான் கண்டிப்பா மாத்திக்கிறேன். மற்றபடி இந்த பூமியில வளர்ற எந்த ஒரு ஜந்துவையும் கேவலப்படுத்துனுமின்னோ... நீயெல்லாம் உயிர்வாழறது பூமிக்கு ஒரு கேடா என்றோ கேட்க எனக்கு எந்த உத்தேசமும் இல்லை.

எப்பப் பார்த்தாலும் போராட்டம், புரட்சி என்று சதா சர்வகாலமும் அதையே நினைத்துக்கொண்டு இருப்பதால் நமக்கு இந்த மரியாதை பற்றிய உணர்வே மறந்துபோய்விட்டது. ஏன் இதைச் சொல்கின்றேன் என்றால் நாம் வாழும் நாட்டை ஜனநாயக நாடு என்று சொல்கின்றார்கள். நான் கூட முதல்ல நம்பல... ஆனா நம்புனாதான் இட்லி, சாப்பாடு, சப்பாத்தி எல்லாம் கிடைக்கும் என்று சொல்லிவிட்டார்கள். அதனால் நானும் அப்படியே நம்பிவிட்டேன்.

எனவே இனிமேல் நாம் அனைவரையும் மரியாதையுடன்தான் அழைக்க வேண்டும். உதாரணமாக திருடனை திருடர் என்றும், கொலைகாரனை கொலைகாரர் என்றும், கொள்ளைக்காரனை கொள்ளைக்காரர் என்றும்தான் அழைக்க வேண்டும். உங்களுக்கு இன்னும் பரந்த மனது இருந்தால் முன்னால் மானே, தேனே எல்லாம் போட்டு அவர்களை வாழ்த்தி வணங்கலாம். முடிந்தால் அவர்களின் முன்னால் சாஸ்டாங்கமாக தரையில் விழுந்து உங்களது மானத்தை வானத்துக்குக் காட்டலாம்.

ஆனாலும் சில சந்தேகங்கள் உள்ளே குடைந்துகொண்டே இருக்கின்றது. அது என்னவென்றால் உலகத்தில் உள்ள ஏதோ ஒரு நாட்டில் ஒரு மாநிலம் உள்ளதாம். அந்த மாநிலத்தில் யாரோ ஒரு முதலைச்சர் இருக்கின்றாராம். அவர் பெயர்கூட ஏதோ சொன்னார்கள். அந்தக் கருமம்பிடித்த பெயர் சட்டென்று நினைவுக்கு வரமாட்டேன் என்று அடம்பிடிக்கின்றது. அவரது ஆட்சியில் அவரது மாநிலத்தில் யாராவது குசு விட்டால் கூட அங்கு இருக்கும் உளவுத்துறை மோப்பம் பிடித்து விடுமாம். அதை வைத்தே இந்த குசு ஆட்சிக்கு ஆதரவான குசுவா... இல்லை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்க்கும் சக்திவாய்ந்த சதிவேலைகள் நிறைந்த குசுவா என்று கண்டுபிடித்து விடுவார்களாம். அப்படி ஒரு தொழில்திறமை அவர்களிடம் உள்ளதாம். இப்படி கண்டுபிடித்துச் சொல்லும் அந்த உளவுத்துறை அதிகாரிகளுக்கு அந்த மாநிலத்தின் முதலமைச்சர் தன்னுடைய மலத்தை பரிசாகத் தருவாராம். கேட்பதற்கே கேவலமாக இருக்கின்றது என்று நினைத்து விடாதீர்கள். எனக்குக் கூட முதலில் வாந்திவரும் போலத்தான் இருந்தது. ஆனால் நானே நேரடியாகப் பார்த்தேன். அவர்கள் அந்த மலத்தை கையில் சுமந்தபடி அம்மானா சும்மா இல்லைடா… என்று அவர்களது மொழியில் பாடிக்கொண்டே போனார்கள். ஐயோ பாவம்!.

சரி இந்த ஒரு நாட்டில் உள்ள ஒரு மாநிலத்தில் தான் இப்படி என்று நான் நினைத்தேன். ஆனால் பாருங்க இந்த மாதிரி நிறைய நாட்டில் நிறைய மாநிலங்கள் உள்ளதாம். எனக்குத் தெரிந்ததை உங்களுக்கும் சொல்கின்றேன்... நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

நாடு நெம்பர் ஒன்று: இந்த நாட்டில் உள்ள மாநிலத்தில் ஒரு முதலமைச்சர் இருக்கின்றார். அவர் எப்படிப்பட்டவர் என்றால் மக்கள் பணத்தைப் பூராவும் தன்னுடைய சொந்தப் பணமாக நினைக்கக் கூடியவராம். இந்த ஊரை அடித்து உலையில் போட்டவன் என்று சொல்வார்களே அந்த மாதிரியான பேர்வழியாம். அப்படிப்பட்ட அந்த ஊழல் பேர்வழிக்குப் பல பெயர்கள் உள்ளதாம். நமக்குத் தான் தெரியுமே திருடர்கள் ஊருக்கு ஒரு பெயர்வைத்துக் கொள்வார்கள் என்று. அட அதுகூட பரவாயில்லைங்க. இந்த திருட்டுப் பய புள்ளயப் பார்த்தா கூனு கும்முடு வேற போடனுமாம், இல்லைனா அவங்க பேர்ல கஞ்சா கேசை போட்டு உள்ளே தள்ளிருவாங்களாம். அப்படி ஒரு மோசமான நாடு அது. நாம எப்படியும் அந்த கேவலமான நாட்டுக்குப் போவப் போறதில்லை. அதனால் இப்போதைக்கு நிம்மதியா இருப்போம். அடுத்து...

நாடு நெம்பர் இரண்டு: நீங்களே நம்ப மாட்டீங்க. இப்படி ஒரு கேவலமான முதலமைச்சர் அந்த நாட்டோட ஒரு மாநிலத்தில் இருக்கின்றார் என்று. அவர் எப்படிப்பட்டவர் என்றால், தான் ஆளும் மாநிலத்தில் உள்ள மக்களுக்கு அவரே அவரோட சொந்த சாராய ஆலையில் சாராயம் காய்ச்சி, அவரே அதற்கு டார்கெட்டையும் வச்சி, அனைவரையும் குண்டி வெடிக்க குடிக்க வச்சிக் கொல்வாராம். அப்படி குடித்துக் குடித்துச் செத்துப்போன மக்களின் பிணங்களை அலுவலகத்தில் இருந்தவாறே கான்பரன்ஸ் மூலம் எரித்துப் புளகாங்கிதம் அடைவாராம். நல்லவேளை இப்படியோரு கேவலமான முதலமைச்சர் பற்றி நம் மக்கள் இத்தனை காலம் தெரிந்துகொள்ளாமல் இருந்தது. அடுத்து...

நாடு நெம்பர் மூன்று: நீங்கள் இதுவரை பார்த்த ஏதோ ஒரு நாட்டில் உள்ள ஏதோ ஒரு முதலமைச்சரை விட இப்போது நான் சொல்லப்போகும் நாட்டில் உள்ள மாநிலத்தின் முதலமைச்சர் மிக மட்டமான பேர்வழி. எப்படி என்று கேட்கிறீர்களா? சொல்றேன் கவனமா கேளுங்க.. அப்புறம் மறுபடியும் சொல்லமாட்டேன். அவங்க நாட்டுல இருக்கிற எல்லா போலீஸ்காரங்களுக்கும் லத்திக்குப் பதில் கையில் கூஜாவக் கொடுத்து இருக்கின்றாராம். அந்த கூஜாவை கையில் வைத்துக்கொண்டால் அவர்கள் யாரிடம் கைநீட்டினாலும் யாரோட கண்ணுக்கும் தெரியமாட்டார்களாம். அந்தக் கூஜாவை வைத்துக்கொண்டு கொஞ்ச நாளைக்கு முன்னால் ஒரு காவல்துறை உயர் அதிகாரியே கொலை செய்யப்பட்டாராம். ஆனால் கண்டே பிடிக்க முடியவில்லையாம். எல்லாம் அந்த கூஜாவின் மகத்துவம்!. மேலும் வீட்டில் நாய்களுக்குப் பதிலாக சில வழக்கறிஞர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கின்றாராம். அவர்களுக்கு மூன்று வேளையும் கரன்ஸி சாப்பாடுதானாம். அதைத் தின்று விட்டு அந்த நாய்கள் (நாய்களைப் போல உள்ள மனிதர்கள்) வாய்தா வாய்தா என்றுதான் குரைக்கின்றதாம். ஆனால் பாருங்கள் நாம் அப்படி ஒரு கேவலமான முதலமைச்சர், கேவலமான போலீஸ் அதிகாரிகள், கேவலமான வழக்கறிஞர்கள் இருக்கும் மாநிலத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாமலேயே இத்தனை நாட்கள் இருந்துவிட்டோம்.

பரவாயில்லை மக்களே, இது போன்ற கருமாந்திரம் பிடித்த நாடுகளையும், அந்த கருமாந்திரம் பிடித்த நாடுகளில் உள்ள மாநிலங்களைப் பற்றியும், அந்த கருமாந்திரம் பிடித்த மாநிலங்களை ஆட்சி செய்யும் மகா கேவலமான முதலமைச்சர்கள், ஆட்சியாளர்கள் போன்றவர்களையும் தெரிந்து கொள்ளாமால் இருந்ததால் தான் நாம் இன்னும் நாமாகவே இருக்கின்றோம். என்னிடம் இன்னும் நிறைய நாடுகளைப் பற்றியும், அந்த நிறைய நாடுகளில் உள்ள நிறைய மாநிலங்களைப் பற்றியும் அந்த மாநிலங்களை ஆட்சிசெய்யும் மானங்கேட்ட ஆட்சியாளர்களைப் பற்றியும் சொல்வதற்கு நிறைய தகவல்கள் உள்ளது. ஆனால் மேலே சொன்ன மூன்று நாடுகளில் இருந்த மூன்று முதலமைச்சர்களைப் போலத்தான் பெரும்பாலான நாடுகளில் உள்ள மாநிலத்தின் முதலமைச்சர்கள் இருப்பதால் அதை எல்லாம் சொல்லாமல் தவிர்த்துவிடுகின்றேன்.

மக்களே மேலே உள்ள அனைத்தையும் படித்துவிட்டு மறந்துவிடுங்கள். அதைப் பற்றி யாரிடமும் எந்தப் பிரச்சாரமும் செய்யாதீர்கள். ஏன் சொல்கின்றேன் என்றால் சில நாடுகளில் உள்ள மாநில முதலமைச்சர்களுக்கு அதிகாரப் பைத்தியம் பிடித்து உள்ளதாம். அவர்கள் தலையை கால் என்கின்றார்களாம், காலை தலை என்கின்றார்களாம். நீங்கள் ஒப்புக்கொள்ள மறுத்தால் உங்கள் மீது ஏதோ தேச குரோத… விரோத என்று ஏதோ வழக்கு உள்ளதாம். அதைப் போட்டு விடுவார்களாம். ஜாக்கிரதையாக இருங்கள்.

- செ.கார்கி