சாதி இருப்பின், பண்பாட்டின், பாதுகாப்பின் உறைவிடமாய் விளங்குகின்றன. நம்முடைய ஊர் தெருக்கள், ஊர் ஊராய் இங்கே சாதிகள் மட்டுமே கோலோச்சுகின்றன. இந்த சாதி ஆட்சியின் காலடித் தடத்தில் நசுக்கப்பட்ட சாட்சியங்களாய் தாழ்த்தப்பட்ட மக்களின் சேரிகள்.

200க்கும் மேற்பட்ட வடிவங்களில் தற்போதைக்கு நடைமுறையில் இருந்து வரும் தீண்டாமை, காலந்தோறும் புதுப்புது வடிவெடுத்து ஆட்டம் போட்டு வருகிறது. இரண்டாயிரம் ஆண்டுகால சாதிமுறையை, சாதி ஆதிக்கத்தை எதிர்த்த போரில் கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களின் உயிர்கள், அழிக்கப்பட்ட, தீக்கிரையாக்கப்பட்ட, சூறையாடப் பெற்ற வீடுகள், கடைகள், பறிக்கப்பட்ட நிலங்களின் பட்டியல்கள் எந்தவிதமான கணித அளவுகளுக்குள்ளும் அடைக்க முடியாதவை. வழிந்த கண்ணீர் வெள்ளம், இந்திய இரத்தம், வியர்வையின் பரிமாணத்தை எந்தவித வார்த்தச் சொல்லடுக்குள்ளும் விவரித்து விட முடியாது.

ஆனால் வரலாறு காலந்தோறும் கொடுமைகளைக் கண்டு கொதித்தெழும் போராளிகளை தீர்க்கமான அறிவுசான்ற தலைவர்களை, இதே ஒடுக்கப்பட்ட சமூகத்துக்குள்ளும், பிற சமூகங்களிலும் பிரசவித்துக் கொண்டே தான் இருக்கிறது. அப்படிப் பிரசவித்தவர்கள் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், 20ஆம் நூற்றாண்டின் முழுவதிலும் பாடுபட்ட தலித் தலைவர்கள் பகுத்தறிவுப் பாட்டன் பண்டிதர் அயோத்திதாசர், தாத்தா ரெட்டைமலை சீனிவாசன், பெருந்தலைவர் எம்.சி.இராசா, சிவராசு, மீனாம்பாள், சான்ரெத்தினம், பாலசுந்தர்ராசு, ஜோதிராவ் புலே. நாராயணகுரு, அய்யன்காளி, புரட்சியாளர் அம்பேத்கர், வீரையன், இளையபெருமாள், ........ எண்ணற்ற தலைவர்களை ஒடுக்கப்பட்ட சமூகம், தான் பட்ட பாடுகளின் துயர அனுபங்களிலிருந்து தோற்றுவித்தது.

இவர்களின் போராட்டங்களும், எழுத்தும், பேச்சுக்கும் தரும நெறிக்கும் சாதிமுறைக்கும், சாதி ஆதிக்கத்திற்கு எதிராகவும் நினைவலைகளுக்குள் கொண்டு வரமுடியாத அளவுக்கு பாடாற்றியுள்ளனர்.

சுரண்டல் முறை இங்கே சாதியமைப்பு மூலம் தான் பாதுகாக்கப்பட்டு வந்தது. அடக்குமுறை ஆதிக்கம் என்பதும், அதனால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் அடிமைகளாக, வாழ்வியலின் கடைக்கோடிக்குத் தள்ளப்பட்டனர். இத்தகைய வர்ண சாதி முறைகளை எதிர்ப்பதே வர்க்கப் போராட்டமாக இம்மண்ணில் தாழ்த்தப்பட்ட மக்கள் தலைவர்களின் போராட்டம் நடைபோட்டது.

இத்தலைவர்களின் விதைப்பும், வியர்வையும் சிந்தனைத் தொகுப்பே 1914ஆம் ஆண்டுகளில் எழுந்த பார்ப்பனர் அல்லாதார் இயக்கம், தென்னிந்திய நலவுரிமை சங்கம், நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம். இந்த இரண்டாம்கட்ட சமூக மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைவர்கள் வரிசையில் பெருந்தலைவர் எம்.சி.இராசா தவிர இதர தலைவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்டோர் அல்லாத, பார்ப்பனர்கள் அல்லாத இடைநிலைச் சமூகத் தலைவர்கள் ஆவார்கள். இவர்களிடமும் சாதியப் படிவுகள் தேங்கியிருந்ததால் தான் திராவிட இயக்க வரலாற்றிலிருந்தே தமிழக மறுமலர்ச்சிக் கால வரலாறு தொடங்குவதாக இன்றுவரை எழுதப்பட்டும், பேசப்பட்டும், ஆய்வு செய்யப்பட்டும் வருகிறது. வர்ணசாதி முறைக்கு எதிரான போராட்ட வரலாறுகூட இங்கே சாதிவெறியின் உள்ளீட்டை உணர்ந்துள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் வரலாறுகள் தீண்டப்படாத வரலாறாகவே இருட்டடிப்புச் செய்யப்பட்டது. கடந்த காலங்களில் நேர்ந்த தவறைச் சரிப்படுத்த தாழ்த்தப்பட்ட சமூகம் பல புதிய வரலாற்றாளர்களை 21ஆம் நூற்றாண்டில் இனம் கண்டு வருகிறது.

19, 20ஆம் நூற்றாண்டில் ஒடுக்கப்பட்ட மக்கள் தலைவர்களின் அறிவார்ந்த சீராய்ந்த போராட்டங்களால் உருவான ஒடுக்கப்பட்ட மக்களின் விழிப்புணர்வும் எழுச்சியும் பின்வந்த தலைவர்களின் தன்னலமற்ற போராட்டங்களால் வியத்தகு மாற்றங்களை தமிழ்ச் சமூகம் அடைந்தது. ஒப்பீட்டு அளவில் குறைந்த அளவிலேனும் நிலவிய சமூக நல்லிணக்கத்துக்கு தமிழகம் தன்னை தயார்படுத்திக் கொண்டது. அறிவுப் புரட்சி அரும்பியிருந்தது.

சமுதாயத்தில் சாதி அமைப்பின் அடிக்கட்டுமானத்தை அசைத்துப் பார்த்த பழங்குடி/பிற்பட்ட சமூகங்களின் தலைவர்களின் செல்வாக்கு ஒருபுறம் மாற்றத்தை ஏற்படுத்திய அதே காலகட்டத்தில், உலகையே புரட்டிப் போட்ட கம்யூனிச புரட்சியின தாக்கமும் தமிழகத்தில் செல்வாக்குச் செலுத்தியது. சிந்தனைச் சிற்பி மா.சிங்காரவேலர் தொடங்கி வைத்த கம்யூனிச அலையில், கீழ்த் தஞ்சை திசையில், தாழ்த்தப்பட்ட சமூக விவசாயக் கூலிகளும், இன்றைய மொழியில் சொன்னால் பண்ணையாள், படியாள்களுக்கு பண்ணை ஆதிக்கங்கள் அளித்த சாணிப்பால், சவுக்கடி போன்ற கொடூரக் கசையடி அடக்குமுறை தண்டனை முறைகளுக்கு, தோழர் பி.சீனிவாசராவ் அவர்களின் பேருழைப்பால் முடிவு கட்டப்பட்டது. நிலப்பிரபுத்துவ பொருளாதார அடிக்கட்டுமானத்தின் வேர்கள் அசைத்துப் பிடுங்கப்பட்ட காலமது. இத்தியாக வேள்வியில் வரலாறானவர்கள் பலர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் வாட்டாகுடி இரணியன், களப்பால் குப்பு, சிவராமன் போன்ற போராளிகள் தமிழக விவசாயத் தொழிலாளர்கள் இயக்கப் போராட்ட வரலாற்றின் மறக்கமுடியாத மாவீரர்கள்.

இவ்வளவு பெரிய மாற்றங்களுக்கான போராட்டங்கள் நடந்தாலும், இரண்டாயிரம் ஆண்டுகளாக படிப்படியாக ஆமையும் ஓடும் போல இணைந்தே வளர்ந்த சாதிய உடைமை வர்க்கப் பண்பாட்டுச் சமுதாயம், ஒரு சில நாட்களிலே முடிவுக்கு வந்துவிடவில்லை. பன்னெடுங்கால, வருணசாதி, உடைமை, உற்பத்தி முறையில் கெட்டித்தட்டிப்போன தமிழ்ச் சமூகம், நாட்டின் பல்வேறு வட்டாரங்களிலும் அப்பகுதிகளின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியின் செல்வாக்குக்கு ஏற்ப சாதிகளிடையே இணக்கமும், மோதலும், பிணக்கும், சமரசமுமாக சமுதாய இயக்கம் தொடர்ந்து நடைபோட்டு வருகிறது. இந்த நிலைமையைத் தான் மேதை அம்பேத்கர், “சாதி ஒரு வட்டாரச் சிக்கல் தன்மை கொண்டது” என்று வரையறுக்கிறார். இந்தியா முழுமையும் சாதி இருந்தாலும் எல்லா இடங்களிலும் ஒரே படித்தான சிக்கலைக் கொண்டதாக இல்லை என்பதே அவரது துணிபு.

தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான தீண்டாமை சாதிய வன்கொடுமைகளுக்கு தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர்கள், இயக்கங்கள் மட்டுமல்ல. பிற சமுதாயங்களில் பிறந்து, மார்க்சீய லெனினிய புரட்சிகர சிந்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டு, அக்கொள்கையின் கீழ் நின்று ஒரு புரட்சிகர சோசலிச சமுதாயத்தைப் படைக்க எழுந்த பெரும் போராளிகள் படை 1969களிலிருந்து உருவாகி வந்தது. ஒரு புரட்சிகர சமுதாயத்தைப் படைக்க சாதிமுறையும், சாதி ஏற்றத்தாழ்வுகளும் தடையாய் இருப்பதையும், தொடர்ந்து, தாழ்த்தப்பட்ட மக்களை அழுத்தும் ஆதிக்க நுகத்தடியும் உடைக்கப்பட்டாக வேண்டும் என்று நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் தன் சொந்தசாதி இரத்த உறவுகளையும், ஆதிக்க சக்திகளையும் எதிர்த்தும், தாழ்த்தப்பட்ட பிறப்பெடுத்த சமுதாய கிராமப்புற ஏழைமக்களை ஒன்றிணைத்தும் போராடினார்கள்.

குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவில் தோழர்கள் அப்பு, பாலன், கண்ணாமணி, மச்சக்காளை, சீராளன், தனபால், இராயப்பன், சந்திரசேகரன், சந்திரகுமார் மாடகோட்டை சுப்பு என்று பலரும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகங்களில் பிறந்து, தன் இன்னுயிரைத் தந்தவர்கள் தான். சாதிய நிலபிரபுத்துவ ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடி அரசுக் காவல் படைகளாலும், நிலபிரபுக்களாலும் கொல்லப்பட்டனர்.

புலவர் கலியபெருமாள் அவர்களும், அவரது இரண்டு மகன்கள் வள்ளுவன் சோழ நம்பியார், கொழுந்தியாள் அகிலா எனப் பலரும் தோழர்கள் லெனின், தியாகு, பாலு, குருகேத்தி, தமிழரசன் போன்ற எண்ணற்ற தோழர்கள் சிறைக் கொட்டடிகளையும், சித்ரவதைகளையும் அனுபவித்தனர். தலைமறைவு வாழ்க்கையில் தங்களது வாலிப பருவத்தை புரட்சிகர வாழ்க்கைக்கு ஒப்புக் கொடுத்து நலிந்து போன தோழர்கள் சிலர் இறந்தும் இன்றளவும் இலட்சித் துடிப்போடும், பிடிப்போடும் போராடும் நக்சல்பாரிப் புரட்சியாளர்களை நாம் சாதிஒழிப்புப் போராட்ட வரலாற்றில் எளிதில் புறந்தள்ளிவிட முடியாது.

44 சக விவசாயக் கூலிகளைத் தாழ்த்தப்பட்ட மக்களை 1968ல் ஒரே வீட்டில் வைத்து உயிரோடு கொளுத்திய கொடியவன் நிலப்பிரபு இரிஞ்சியூர் கோபாலகிருட்டிணன் 1980இல் அழித்தொழிக்கப்பட்ட வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் தோழர்கள் அமல்ராஜ், மருத செல்வராசு, சுப்பிரமணியன், கண்ணையன், சதாசிவம் ஆகியோர் நக்சல்பாரி அரசியலை வரித்துக் கொண்டவர்கள். இவர்களில் பலரும் இன்று திசைமாறிய பறவைகளாய் அரசியல் நிலை தடுமாறிப் போயிருப்பது வேறு விவகாரம்.
மீன்சுருட்டியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சகோதரி கலிங்கராணிய கற்பழித்துப் படுகொலை செய்த சாதிவெறி பிடித்த நிலப்பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்த (லிங்கையாத் தேவரின் மகன்) இளவலை அம்பலப்படுத்தியும், தண்டிக்கக் கோரியும் போராட்டங்கள் நடத்தியதோடு மட்டுமல்ல. அதற்காகவே மீன்சுருட்டியில் சாதிஒழிப்பு மாநாட்டை நடத்தி, சாதிஒழிப்புக்கான கொள்கை அறிக்கையையும் வெளியிட்டவர் தோழர் தமிழரசன். தான் ஏற்றுக்கொண்ட தமிழ்த் தேசிய விடுதலைக்கு சாதிமுறை பெரும் தடையென்பதையும், அதை ஒழிக்க தனித்திட்டமும் வேண்டுமென்று உணர்வுப்பூர்வமாக பாடுபட்டார். அவர் உயிரோடு இருந்தவரை அப்பகுதியில் வன்னியர் சங்கத்தை காலூன்ற விடவில்லை.

சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல்நிலையத்தில் தலித் சகோதரி பத்மினி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதை தட்டிக்கேட்ட அவரது கணவர் நந்தகோபாலன் காவலர்களாலேயே சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த நாகராசன் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தின் மீது வெடிகுண்டு வீசினார். இவரும் பிற்படுத்தப்பட்ட சமூகத் தோழரே!

பிரிட்டீசாரிடமிருந்து நாடு விடுதலை பெற்றது என்று சொல்லிக் கொள்ளும் 1947-க்குப் பிறகு 21 வயதை அடைந்த அனைவரும் வாக்குரிமை என்ற தேர்தல் அரசியல் மேலோட்டமாக சனநாயக வடிவத்தைக் கொண்டிருந்தாலும் உள்ளடக்கத்தில் அது சாதிமுறையே உயிர்ப்பாக்கவும், ஊக்குவிக்கவுமான தன்மையைக் கொண்டதாகவே இன்றுவரை நிலவி வருகிறது.

அதாவது இந்தியத் தமிழ்ச் சமுதாயத்தில் புரையோடிய கெட்டித் தட்டிப் போன வருணசாதி படிநிலை, நிலப்பிரபுத்துவ பண்பாட்டாலும், உற்பத்திகளாலும், உற்பத்தி உறவுகளாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் சொல்லவொண்ணாத கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்த நிலைமையில், நிலப்பிரபுத்துவத்தை தகர்த்தெறிந்த முதலாளித்துவப் புரட்சி ஏதும் நடக்காமலேயே பழைய மன்னர்கள், நிலப்பிரபுக்கள், சமீன்தார்கள், பெருமுதலாளிகள் தலைமையில் பிரிட்டீசாரிடமிருந்து ஆட்சி இந்தியர்களுக்கு கை மாறியது. இந்தியாவின் அடிமைத் தேசமாக தமிழ்நாடும் இந்தியாவுடனேயே இணைக்கப்பட்டிருந்ததால் தமிழ்நாட்டிலும், இந்தியத் தேர்தல் முறையே நீடித்து வருகிறது.

இத் தேர்தல் முறையில் சட்டப் பேரவை, நாடாளுமன்றத் தொகுதிகள் ஒவ்வொன்றும் தொடர்புடைய வட்டாரத்தில் உள்ள பெரும்பான்மைச் சாதிகளின் வாக்காளர்களால் மட்டுமே தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் வகையில் தொகுதிகள் வரையறுக்கப்பட்டது. இதனால் ஒவ்வொரு தேர்தலிலும் தொடர்புடைய தொகுதியின் பெரும்பான்மைச் சாதியினரைச் சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுத்து நிறுத்தும் தேர்தல் கலையை தமிழக அரசியல் கட்சிகள் கடைபிடிக்கத் தொடங்கின. தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களது சாதியினர் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதும் தொடுக்கும் வன்கொடுமைகளுக்கு ஆதரவாக தங்களது சாதிக்காரர்களுக்கு ஆதரவாகக் காவல்துறையையும், இதர அதிகார அமைப்புக்களையும் கையாண்டனர். எனவே, சனநாயகத்தின் பேரிலான தேர்தல் முறையும், சாதிமுறைக்கும் சாதி ஒடுக்குமுறைகளுக்கும் மேலும் வலுச் சேர்ப்பதாகவே இருந்து வருகிறது.

தாழ்த்தப்பட்டவர்களின் உயிர் பறிக்கப்பட்ட போதும், உடைமைகள் கொளுத்தப்பட்ட போதும் பெரும்பான்மைச் சாதிகளின் வாக்குகளுக்காகவும், ஆதரவுக்காகவும், திராவிட பேராயக் கட்சிகள் மவுனம் காத்தன. சேரிகள் எரிந்தன. முதுகுளத்தூர், வெண்மணி முதல் மரக்காணம் வரை எரிந்து கொண்டே இருக்கின்றன.

காங்கிரசின் சனநாயக சோசலிசம் கசங்கிக் கிழிந்து போனது. “வெள்ளையனே வெளியேறு” என்று முழங்கியவர்கள் என்று பெருமைக் கொண்ட காங்கிரசு தான் உலகிலுள்ள அனைத்து வெள்ளைக்கார கொள்ளையர்களையும் அழைத்து வந்து பட்டுக்கம்பளம் விரிக்கிறது.

பாரதீய சனதா கட்சியின் இந்துதேசியம், இந்தியாவெங்கும் சேரிகள் கொளுந்துவிட்டு எரிவதற்கான வருணசாதி இந்துத்துவா அடிப்படையாக கொண்டுள்ளது. “சேரிகள் எரியும் தீச்சுவாலைத் தான் இவர்கள் இந்தியா ஒளிர்கிறது” என்று வாஜ்பாய் ஆட்சியின் கடைசி ஆண்டில் முழங்கினார்களோ! சுதேசி இந்தியா என்று முழங்கிய பா.ஜ.கட்சியின் ஆட்சியில் தான் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதற்கென்றே அருண்சோரியை அமைச்சராக நியமித்திருந்தார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு உரிமைகளை கொல்லைப்புறமாக ஒழித்துக் கட்டியவர்கள் இந்தக் கட்சியினரே!

தி.மு.க. - அ.இ.அ.தி.மு.க. என்ற திராவிட (நஞ்சு) கட்சிகள் ஆட்சிகள் அரவணைத்த பாசக்கயிறு தான் பாட்டாளி மக்கள் கட்சியும், மனநோயாளி மருத்துவர் இராமதாசும்.

தி.மு.க. - அ.இ.அ.தி.மு.க.வுக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் உள்ள வேறுபாடுகள் மிகவும் அக்கம்பக்கமானது தான். திமுக, அ.தி.மு.க. கட்சிகள் தமிழ்ச் சமூகத்தின் சமூக நீதிக் குரல் எழுந்த காலப் பின்னணியில் உள்ள அரசியலோடு தொடர்பு கொண்ட முற்போக்குப் பாத்திரம் வகித்தாலும், சாரம்சத்தில் இவை இரண்டுமே முதலாளித்துவ ஆளும் வர்க்க கட்சிகளே! இவர்கள் நேரடியாக சாதிக் கலவரத்தில் ஈடுபட மாட்டார்கள். ஆனால் நடைபெறும் சாதிக் கலவரங்களில் தலையிடாக் கொள்கை என்று மவுனமாக வேடிக்கைப் பார்த்து வருகின்றனர்.

சில நேரங்களில் சாதிக் கலவரங்களில் ஈடுபடும் ஆதிக்கசாதிகளுக்கு நேர்முக அல்லது மறைமுக உதவிகள் செய்து சாதியவாக்கு வங்கியை தக்கவைத்துக் கொள்வார்கள். சாதிகளிடையே நிலவும் முரண்பாடுகளை விசிறிவிட்டும், பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டும் சாதிமுறைமைக்கு வலுச் சேர்ப்பதில் சாதியமைப்பின் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்.

தாழ்த்தப்பட்ட மக்களை கொன்றழித்து, எரித்து கொலை செய்த சாதிகளுக்கு எதிராக ஒரு வார்த்தையைக் கூட உச்சரிக்காமலேயே, பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச வேட்டி, சேலை, அரிசி, பருப்பு, சிலஆயிரம் பணம் கொடுத்து தாழ்த்தப்பட்டவர்களின் இரட்சகர்கள் போல் ஊடகங்களில் காட்சி கொடுப்பார்கள்.

தாழ்த்தப்பட்ட மக்களை கொடூர கொலை செய்தவர்களை, கற்பழித்தவர்களை, தீயிட்டுக் கொளுத்திய கொடியவர்களை, இவர்களின் எல்லாவிதமான தடைகளையும் தாண்டியும் நயன்மை மன்றங்கள் சில நேர்வுகளில் தண்டித்தால், சிறையில் இருக்கும் அத்தகைய குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்புக் கொடுத்து விடுதலை செய்வார்கள். விசாரணை சிறைவாசிகளாய் இருந்தால் எளிதில் பிணையில் விடுவதிலிருந்து, குற்ற வழக்குகளை நீர்த்துப் போகச் செய்கிற அனைத்தையும் செய்து சாதியவாதிகளும் ஊக்கமும் உற்சாகமும் அளிப்பார்கள்.

இன்று பாட்டாளி மக்கள் கட்சி அனைத்துச் சாதி கூட்டியக்கத்தையும், தமிழர் அல்லாதோர் பேரவைகளையும் உருவாக்கும் துணிவுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர்கள் திராவிடர் கட்சிகளே! கடந்த காலங்களில் ஒவ்வொரு தேர்தலிலும் சாதியக் கட்சிகளோடும், இயக்கங்களோடும், சங்கங்களோடும் , சாதிய முரண்பாடுகளைப் பயன்படுத்தி கூட்டணி சேராத ஆளும்வர்க்க முதலாளித்துவக் கட்சி என்று எவற்றையேனும் சுட்டிக்காட்டிட முடியுமா? இத்தகைய சாதிக் கட்சிகளோடு திமுக, அஇஅதிமுக கட்சிகள் நடத்தும் பேரங்கள், தேர்தல்கள் நேரங்களில் நாடே நாறுமளவுக்கு வெளிப்படையானது.

தன்மானத்திற்காகவும், தற்காப்புக்காகவும் திரண்ட தாழ்த்தப்பட்டோர் மக்கள் இயக்கங்கள் சிலவற்றையும், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் போன்ற தாழ்த்தப்பட்டோர் தலைமையிலான கட்சிகளையும் தங்களது ஆளும்வர்க்க நல அரசியலுக்கு அணைத்து (கபளீகரம்) விழுங்கினார்கள். பாட்டாளி மக்கள் கட்சி, தேதிமுக, ம.ம.க., ம.தி.மு.க.வை, ச.ம.க., இதர சில கட்சிகளையும் இரண்டு திராவிட கட்சிகளும், காங்கிரசு பா.ச.க.வும் விளையாட்டின் முதன்மை வீரர்கள் களைப்படைந்தாலோ தோற்றாலோ இடையில் அணியில் பங்கேற்க தயாராய் வைத்துள்ள பதிலிகளைப் போலவே பயன்படுத்திக் கொள்வார்கள். தாங்கள் வசதிக்கேற்ப அணியில் சேர்க்கவும், நீக்கவும் செய்து வருகின்றனர்.

2011 சட்டமன்றத் தேர்தல் வரை நடமாடும் தமிழ்க்குடிதாங்கியாகவும், அம்பேத்கர் சுடராகவும் ஒப்பனையில் ஒளிந்திருந்த, மனநோயாளி மருத்துவர் இராமதாசு, 27 இடங்களில் போட்டியிட்டு 24 இடங்களில் மண்ணைக் கவ்வியதால் பா.ம.க. எவராலும் சீண்டப்படாத கட்சியாகி விட்டது. தன் முரண்பாட்டில் அக்கட்சியின் மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் வேல்முருகன், பா.ம.க.விலிருந்து வெளியேறி, பா.ம.க. கூடாரத்தை கலகலக்க வைத்து விட்டார்.

1985-87 களில் வன்னியர் சங்கத்தின் சார்பில், வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீட்டிற்காகப் போராடியபோது இராமதாசின் வேண்டுகோளை மீறி தி.மு.க. கருணாநிதி அண்ணா அறிவாலயக் கட்டிட திறப்புவிழா நடத்தினார். அவ்விழாவுக்குச் சென்று திரும்பிய திமுககார்கள், பேருந்துகளை தடுத்து சாலையில் மரத்தை வெட்டிப் போட்டு 17 நாள் போராட்டம் நடத்திய இராமதாசின் அழிச்சாட்டியம் சூடு பிடித்தது. திமுகவினர் வழியில் தாகமெடுத்து தாழ்த்தப்பட்டவர்களின் வீடுகளில் தண்ணீர் வாங்கி குடித்தார்கள். தண்ணீர் கொடுத்த தாழ்த்தப்பட்டோர் குடிசைகள் ஆயிரக் கணக்கில் வன்னியர்களால் எரிக்கப்பட்டன.

நம் வீட்டில் சாணிவாரிக் கொட்டும் கீழ்ச்சாதிக்காரன் மருத்துவர், பொறியாளராகி விட்டான் நீ ஏன் ஆக முடியவில்லை? என்று வன்னியர்களை உசுப்பேற்றி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களையும் பரப்புரை செய்து வடமாவட்டச் சேரிகள் எரியக் காரணமாக இருந்தார். அதன் பிறகு தான், தி.மு.க. (1989-90) அரசு இறங்கி வந்து, வன்னியர் உள்ளிட்ட 105 சாதிகளுக்கு 20% இடஒதுக்கீடு அளித்தது. இடஒதுக்கீட்டு போராட்டம் நடந்தது அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில். 20% இடஒதுக்கீடு அளித்தது தி.மு.க. கருணாநிதி ஆட்சியில்!

ஆனால் 1987ல் தங்கள் வீடுகளைக் கொளுத்திய வன்னியர்களுக்கு எதிராகப் போராடிய தாழ்த்தப்பட்டோர் மீதும் சில நூறு வழக்குகள் அதிமுக ஆட்சியில் போடப்பட்டது. ஆனால் கருணாநிதி இராமதாசுக்கு 20% இடஒதுக்கீடு, வன்னியர் மீது அதிமுக ஆட்சி போட்ட வழக்குகளையும் இரத்து, போராட்டத்தில் உயிரிழப்போர்களின் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதிய நிவாரணம், அரசுப்பணி வழங்கினார். அதே காலத்தில் அதிமுக ஆட்சி தாழ்த்தப்பட்டோர் மீது போடப்பட்ட வழக்குகளுக்காக, திமுக ஆட்சியிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் பல ஆண்டுகள் நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருந்தார்கள். தன் கட்சிக்காரனுக்கு தாகம் தீர தண்ணீர் கொடுத்த தாழ்த்தப்பட்டவன் நீதிமன்றத்திற்கு அலைய, திமுக காரனுக்கு ஏன் தண்ணீர் கொடுத்தாய் என்று தீ வைத்த இராமதாசுக்கு சகல சலுகைகளும் செய்து கொடுத்தவர் கருணாநிதி.

என்ன இருந்தாலும் இருவரும் பிற்படுத்தப்பட்ட சூத்திரர்கள் இல்லையா? இன வரலாற்றை ஏன் இங்கே சுட்டிக் காட்டுகிறேன் என்றால், மருத்துவர் இராமதாசரின் பூர்வீகமே தாழ்த்தப்பட்டோர் வீடுகளைக் கொளுத்தி தான் தனது அரசியலுக்கு முகவரி தேடிக் கொண்டார் என்பது இன்றைய தலைமுறைக்குத் தெரிய வாய்ப்பில்லை என்பதால் தான். இதுமட்டுமா, வடக்கே 12000 பறையர்களின் குடிசைகளைக் கொளுத்திய இராமதாசு தெற்கே பள்ளர்களோடு சேர்ந்து ஒரு தாய் மக்கள் மாநாடு நடத்தினார். “பள்ளியும் (வன்னியர்) பள்ளும் ஒன்று பறையர்கள் வாயில் மண்ணு” என்று பேரணியில் முழங்கினார்கள். இராமதாசின் மகுடிக்கு மயங்கியவர்கள் முதலில் ஜான்பாண்டியன். பின்னர் முருகவேல், இராசன், பசுபதி பாண்டியன் போன்றோர்கள். தற்போது மயங்கி அல்ல இராமதாசின் அடிமையாகவே கிடப்போர் தேவேந்திர குலக்கொழுந்து வடிவேல் இராவணனும், வியனரசுவும். மண்டியிடாத தன்மான உணர்ச்சி மிக்கவர்கள் தேவேந்திரர்கள் என்போர் தான் வடிவேல் இராவணன், வியனரசு நிலைமைக்குப் பதில் சொல்ல வேண்டும்.

விரைவாக மாறிக் கொண்டிருக்கும் அறிவியல் தொழில்நுட்பமும், உலகமயமாதலும் கேடுகள் செய்யுமளவுக்கு சிற்சில முற்நோக்கு அம்சங்களையும் கொண்டுள்ளதை அவ்வளவு எளிதாக மறுத்துவிட முடியாது. கிராமப்புற, நகர்ப்புற இடைவெளி குறைந்து, நகர்ப்புறம் நோக்கி மக்கள் நகர்வதும், நகரமயமாக்கச் சூழல், கிராமப்புறத்தில் நிலவும் இறுக்கமான சாதிமுறைகளை, சாதிய உறவுகளை அசைக்கத்தான் செய்கிறது. இதனால் இன்றைய இளைஞர்கள் ஒன்றாகப் படிப்பதும் ஓரிடத்தில் பணியாற்றுவதும், மாலை நேர அங்காடிகளுக்கு செல்வதும், தொலைக்காட்சி, கணினி, கைப்பேசி, முகநூல் அறிமுகமும், அவர்களிடையே ஏற்படும் நெருக்கம் காரணமாக அது காதலாக கனிகிறது. அக்காதல் சாதி, மதம், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் கடந்ததாகவும், உட்பட்டதாகவும் மலருகிறது. காதல் எப்படி மலரும் என்பது தனிப்பட்ட இருநபர்களின் சூழலும், புரிதலும் உரிமையும் தொடர்புடையது. இதனை நாம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வரையறுத்து விட முடியாது. தமிழ்ச் சமூக வரலாற்றில் முன்னெப்போதைக் காட்டிலும் கூடுதலாக சாதி கடந்து இளைஞர் காதலிப்பதும், திருமணம் செய்து கொள்வதும் அதிகரித்தவாறே உள்ளது.

தேர்தல் அரசியல் சூதாட்டத்தில் தோற்றுப் போன இராமதாசை யாரும் சீண்டவில்லை என்பதால் பெண்ணாகரம் இடைத்தேர்தலில் தனித்து நின்று 40000 வன்னியர் வாக்குகளைப் பெற்று தோல்வியை ருசித்தார். அதுமுதல், தேர்தல் வெற்றிக்கு தன் சாதி வாக்குகளைத் திரட்டவும், வேல்முருகனிடம் சென்ற இளைஞர்களைத் தன்பக்கம் திருப்பவும் ‘நாடகக் காதல்’ எனும் இழிவான அரசியல் நாடகமாடி வருகிறார்.

குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்ப்பது போல, காடுவெட்டி குருவை விட்டு, 2012 மாமல்லபுரம் சித்திரைத் திருவிழா மாநாட்டில் வன்னியர் பெண்ணைத் திருமணம் செய்யும் வேற்று சாதிக்காரன் கையை வெட்டுங்கள், தலையை வெட்டுங்கள் என்று முழங்கச் சொல்லி ரசித்தார். தமிழக அரசிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை.

தருமபுரி மாவட்டம் செல்லங்கொட்டாய் வன்னியசாதி திவ்யாவும், நாயக்கன் கொட்டாய் நத்தம் காலனி இளவரசனும் காதலித்து 2012 அக்டோபர் 4ல் திருமணம் செய்து கொண்டனர். தன் படை பரிவாரங்களைத் தூண்டிவிட்ட இராமதாசு வன்னியக் கட்டப்பஞ்சாயத்தில் திவ்யாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வன்னியர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கெடு விதிக்கிறார்கள். கெடுப்படி திவ்யா ஒப்படைக்கப்படவில்லை. திவ்யாவின் தந்தை நாகராசனுக்கு விசம் கொடுத்து கொன்று விட்டு, வன்னிய சாதிவெறியைத் தூண்டி மூன்று தலித் கிராமங்களில் 368 வீடுகறை கொள்ளையிட்டு நெருப்பு வைத்தார் இராமதாசு. தொடர்புடைய நாயக்கன்கொட்டாய் பகுதிகள் நக்சல்பாரிகள் வளர்ந்து செல்வாக்குச் செலுத்திய பகுதி. அங்கு மீண்டும் அதே இயக்கம் துளிர் விடுவதை தடுக்க எண்ணிய தமிழக அரசும், க்யு பிரிவு காவல்துறையும், இம்முறை தலித் கிராமங்கள் எரிக்கப்படுவதை தங்களது ஆளும் வர்க்க அரசியல் லாபநோக்கத்தோடு வேடிக்கை பார்த்தது. முன்னதாக 2011 செப்டம்பர் 11இல் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவேந்தல் நிகழ்வின்போது 6 தலித்துகளை, தனது காவல் படையைக் கொண்டு சுட்டுக் கொன்ற செயலலிதா அரசு அவர்களை வன்முறையாளர்கள் என்று சித்தரித்தது.

செப்.11, 2011 பரமக்குடி நவம்பர் 7, 2012 நத்தம் காலனி இருசம்பவங்களிலும் செயலலிதாவின் பாராமுகமும், தலித் விரோதப் போக்கும் இராமதாசுக்குத் துணிவைக் கொடுத்தது. காடுவெட்டிக் குருவைப் பேசவிட்டு ஆழம் பார்த்தவர் தானே களத்தில் இறங்கி மாவட்டந்தோறும் தலித் அல்லாத இதர சாதிச் சங்கத் தலைவர்களைக் கூட்டிவைத்து, அனைத்துச் சாதிக் கூட்டமைப்பு கூட்டங்களையும், செய்தியாளர் சந்திப்பையும் நிகழ்த்தி தலித்துகளுக்கு எதிராக நஞ்சைக் கக்கினார்.

காதல் திருமணங்களோ, பெற்றோர் ஏற்பாட்டுத் திருமணங்களோ, அகமணமுறைத் திருமணங்களோ, சாதி மறுப்பு திருமணங்களோ அவை வெற்றி பெறுவதும், தோல்வியடைவதும் தொடர்புடைய இருவரின் உள்ள உறுதிப்பாட்டு மட்டுமல்ல, அதையும் தாண்டி பல்வேறு புறச்சூழல்களும், சமூக அரசியல் காரணிகளும் செல்வாக்கும் செலுத்துகின்றன. பெற்றோர் ஏற்பாட்டுத் திருமணங்கள் பலவும் கூட இங்கே தோல்வியில் முடிவதை அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் விவாகரத்து நீதிமன்றங்களிலும் உள்ள வழக்குகளே சாட்சியமளித்துக் கொண்டிருக்கின்றன.

இவையனைத்தையும் அறிந்த இராமதாசு, அதையெல்லாம் தாண்டி சரிந்து போன தன் அரசியல், சமூக செல்வாக்கை மீட்கவும், உயர்ந்து வரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு, தமிழ்த் தேசிய விடுதலை அரசியலை முனை மழுங்கச் செய்ய விரும்பும் கார்ப்பரேட் முதலாளிகளும், அவர்களது எடுபிடிகளான நடுவண் அரசின் உளவுத்துறையும் விரித்த சதிவலையில் ஒரு கைக்கூலிப் பாத்திரமேற்று நடிக்கத் தயாராகி விட்ட அவருக்கு கையில் கிடைத்த துருப்புச்சீட்டு ஆயுதம்தான் ‘நாடகக்காதல்’ மேடை வசனம்.
கடந்த ஓராண்டாய் தலித்துகளை அளவுகடந்து இழித்தும், பழித்தும், அச்சுறுத்தியும், பொதுமேடையில் நின்று பேசியதில் இராமதாசுக்கு நிகராக வேறு எவரையும் சுட்டிக் காட்ட முடியாது.

பருவமைடைந்த ஒரு ஆணும் பெண்ணும் காதலிப்பதும், திருமணம் செய்து கொள்வதும் தொடர்புடைய இருவரின் தனிப்பட்ட இல்லறத் தேர்வுரிமையை இரு குடும்பத்தாரின் குறுகிய காலச் சிக்கலை, இருசாதிகளின் சிக்கலாக்கி, அரசியலாக்கி, அரசியல் நாடகமாடும் இராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சியின் நடவடிக்கையில் தான் நம் கண்முன்னே இதோ இளவரசன் பிணமாகக் கிடக்கிறான்.

கௌரவக் கொலைகள் என்ற பேரில் சாதிவெறித் திமிரில் கொலை செய்யப்படும் தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இத்துணை கொலைகளையும் தி.மு.க. அ.இ.அ.தி.மு.க. ஆட்சிகள் சட்டம் ஒழுங்குச் சிக்கலாக மட்டுமே அணுகிறார்களே தவிர தொடரும் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திசைநோக்கி சிந்திப்பதில்லை.

இதோ பாருங்கள்.

பண்ருட்டி அடுத்த சிறுதொண்டமாதேவி கிராமத்தில் ஆதித்தமிழினப் பெண்கள் மீது இன்றும் தொடரும் வன்னிய காமவெறி மிருகங்களின் பாலியல் வன்முறை, விருத்தாசலம் கண்ணகி முருகேசன், அரித்துவாரமங்கலம் சிவாஜி, சுவரககோட்டை மாரிமுத்து, சோமனூர் சிற்றரசு, சென்னிநத்தம் கோபாலகிருட்டிணன், காந்தலவாடி பிரியா, பெரம்பலூர் பார்த்திபன், 2008 பரமக்குடி திருச்செல்வி, 2009 பழனி, ஸ்ரீபிரியா, 2010ல் ஈரோடு இளங்கோ, 2011ல் தருமபுரி சுகன்யா, இப்போது 2013ல் தருமபுரி இளவரசன்!! இளவரசன் கொலைக்குக் காரணம் யார்?

பாட்டாளி மக்கள் கட்சியின் சாதிவெறி
சட்டப்பூர்வ திருமணத்தை வழக்கு வாய்தா மூலம் இழுத்தடித்த நீதிமன்றம்
இளவரசனுக்குப் பாதுகாப்புக் கொடுக்கத் தவறிய காவல்துறை
சாதி ஆதிக்கத்தால் நசுக்கப்படும் தாழ்த்தப்பட்டோர் சிக்கல்களை வருணசாதி ஒடுக்குமுறையாகக் காணத் தவறிய, வெறுமனே சட்டம் ஒழுங்குச் சிமிழுக்குள் முடக்கும் தமிழக அரசு.

இப்படியாகத் தொடரும் சாதிவெறித் திமிர் கொலைகளையும், சாதிய அடக்குமுறைகளையும், ஆதிக்கத்தையும் நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?

மீண்டும் மீண்டும் உழைக்கும் ஏழைத் தொழிலாளர்களின் உயிரார்ந்த உரிமைப் போராட்டங்களினூடாகவே, புதிய பண்பாட்டுப் புரட்சியையும் இணைத்தே நடத்தாமல், சாதிப் படுகொலைகளுக்கு தீர்வுகாண முடியாது.

வர்க்கப் போராட்டம் என்பது நம் மண்ணில் சாதி ஒழிப்புப் போராட்டமே. தேசிய இன விடுதலைப் போராட்டம் என்பதும் சாதி ஒழிப்புப் போராட்டமே. தாழ்த்தப்பட்டோர் விடுதலைப் போராட்டம் என்பதும் இங்கே சாதி ஒழிப்புப் போராட்டமே.

இத்திசை நோக்கி அனைத்துச் சாதிகளிலும் பிறந்துள்ள சமூக சமத்துவ சிந்தனையாளர்கள், முற்போக்கு தலித் இயக்கங்கள், கம்யூனிசுடுகள், தமிழ்த் தேசிய ஆற்றல்கள், பெரியார், அம்பேத்கர் வழியில் ஊன்றி நிற்கும் மக்கள் இயக்கங்கள், பெண்ணுரிமை இயக்கங்கள், இந்துத்துவ பெருமதவெறி அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் சிறுபான்மை சமயமக்கள் அனைவரும் இணைந்து இராமதாசின் தலைமையிலான அனைத்துச் சாதிக் கூட்டமைப்பை எதிர் கொள்வோம், முறியடிப்போம்!

சாதி மறுப்பு திருமணம் நமது பிறப்புரிமை
சாதி மறுப்புத் திருமணத்தைப் பாதுகாப்பது நமது சிறப்புரிமை
சாதி ஒழிப்பு போரின் பண்பாட்டுப் புரட்சியில் தலைமைப் பாத்திரம் வகிப்பது சாதி மறுப்புத் திருமணம் மட்டுமே.
சாதிமுறையைப் பாதுகாக்கும் ஊர்த் தெரு, தேர்தல் தொகுதி வரையறையை மாற்றி வர்க்க அடிப்படையினை தேர்தல் தொகுதி வரையறைகளாக்கப் போராடுவோம்!

Pin It