கலைஞன் ஒரு படைப்பாளி என்பது அடிப்படையான விடயம். கலைஞன் ஒன்றும் சுயம்புவாக முளைத்து விடவில்லை. எந்த ஒரு கலைப்படைப்பும் சமுதாயத்தின் தாக்கத்தினால் உருவாக்கபடுகிறது அல்லது சமுதாய பிரச்சினைகளின் பிரதிபலிப்பாக உள்ளது. சமுதாயத்தை பிரதிபலிக்கும் கலைஞன் அந்த சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய கடைமைகள் உள்ளன. சமுதாயம் நன்றாக வளமாக இருக்கும்போது அதைப்பற்றி பாடுகிற, எழுதுகிற கலைஞன் அந்த சமுதாயம் பிரச்சினைகளினால் அவதிப்படும்போது அதைப் பற்றி வெகுண்டெழுந்து பாடாவிட்டாலும், எழுதாவிட்டாலும், அதனைப் பற்றி, அதன் தீமைகளைப் பற்றி எடுத்துச் சொல்ல கடமைப்பட்டிருக்கிறான். இதனை நெடுங்காலமாகவே உலகம் கண்டு வந்துகொண்டிருக்கிறது.

kovanஇருபதாம் நூற்றாண்டில் இதற்கு உதாரணமாக பல நிகழ்வுகளைப் பட்டியலிடலாம். ஆப்ரிக்க கவிஞர் ஒலோ சொயிங்கா (Wole Soyinka), புதின எழுத்தாளர் சின்னூவா அச்சிபி (Chinua Achene), ஏன் நமது சுப்ரமணிய பாரதி போன்றவர்கள் அன்றைய ஆட்சியாளர்களின் செயல்களை கண்டித்தது மட்டுமின்றி அரசியல் போராட்டங்களிலும் பங்கேற்று சிறைவாசம் அனுபவித்தது உலகம் அறிந்த உண்மை. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் கூட கலைஞர்கள், எழுத்தாளர்கள் அச்சுறுத்தப்பட்டபோதும் பலர் சிறைவதையையும் கண்டு பயப்படாது அடக்குமுறைக்கு எதிரான தங்களது குரலை எழுப்பினார்கள்.

அவசர நிலை என்ற கொடுங்கோல் வாய்ப்பூட்டு-கைப்பூட்டு நமது வரலாற்றில் படிந்த நிரந்தரமான இழுக்கு என்று இன்றும் கண்டிக்கப்படுகிறது. சாப்டர் ஹஸ்மி (Saftar Hasmi) போன்ற கலைஞர்களுக்கு 1970 மற்றும் 80களில் இழைக்கப்பட்ட கொடுமைகளை நாம் மறக்க முடியாது. தெருவோர நாடகங்கள் மூலம் மக்கள் பிரச்சினைகளையும் ஆட்சியாளர்கள் செய்த அத்துமீறல்களையும் வெளிக்கொணர்ந்த சாப்டர் ஹஸ்மி 1989ம் ஆண்டு உத்திர பிரதேசத்திலுள்ள காஜியாபாத்தில் ஒரு தெரு நாடகம் நடத்திக் கொண்டிருந்த போது தாக்கப்பட்டு படுகாயமுற்று, அடுத்த இரண்டு நாட்களில் இறந்தது போனார். இரண்டு நாட்களுப் பிறகு அவரது மனைவி மொலய்சிரீ ஹஸ்மி (Moloyshree Hasmi) அவர் கொலைசெய்யப்பட்ட இடத்திலேயே அந்த தெரு நாடகத்தை நடத்திக் காட்டினார். இந்தியாவையே உலுக்கிய ஹஸ்மி கொலையும் அதன் பிறகு அவரது மனைவிக்கும் அந்த நாடகக் குழுவிற்கும் நாடு அளித்த மரியாதையையும் 25 ஆண்டுகளுக்குப் பின்பும் நாம் மறக்கவில்லை. இந்திய கலை உலகில் ஹஸ்மி ஒரு சகாப்தமாகவே பார்க்கப்படுகிறார். இதையெல்லாம் நாம் இன்று நினைவு கூற வேண்டியது அவசியமாகிறது.

கலைஞன் உயிரையும் பணயம் வைத்துத்தான் மக்கள் பிரச்சினைகளை கலைகள் மூலம் வெளிப்படுத்த முடிகிறது; உலகிற்கு, ஆட்சியாளர்களுக்கு எடுத்துரைக்க, இடித்துரைக்க முடிகிறது. இதுதான் சமுதாயத்திற்கு ஒரு கலைஞன் செய்ய வேண்டிய கடமையாகும். இதனைத்தான் கோவன் செய்தார், செய்கிறார்.

சமுதாயம் கலைஞனுக்கு சில கடமைகளை ஆற்ற வேண்டியுள்ளது. மக்களின் உணர்வுகளை, உந்துதல்களை, தேவைகளை, வேதனைகளை, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை, அடக்குமுறைகளை மட்டுமல்லாது சமுதாயத்தில் நடக்கின்ற கொடுமைகளையும், புரையோடிப் போன மூடப்பழக்கங்களையும் எடுத்துரைக்கின்ற கலைஞனை இந்த சமுதாயம் ஒரு பொக்கிசமாகத்தான் பார்க்க வேண்டும். கலைஞன் சமுதாயத்தின் உளி. அவன் சுட்டிக் காட்டுகின்ற கொடுமைகள் சமுதாயம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டியவைகள். எங்கே எல்லாம் கொடுமைகள் தலை விரித்தாடுகிறதோ அங்கு கலைஞன் தலை நிமிர்ந்து அடித்துச் சொல்கிறான். உண்மையில் இந்தச் சமுதாயம் அவனைக் காப்பாற்றி பாதுகாக்க வேண்டும்.

கலைஞனுக்கு சமுதாயத்தின் கடமை (Duty of the society to the Artist) என்கிற தனது கட்டுரையில் இ.எம்.பாஸ்டர் (E.M. Forster) என்கிற ஆங்கில எழுத்தாளர் ஏன் கலைஞன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை விளக்குகிறார். கலைஞன் ஒரு நோக்கத்திற்காக வாழ்கிறான். அதனை அனைவருக்கும் கொண்டு சேர்க்க எந்த விதமான விளைவுகளையும் எதிர்நோக்கத் தயங்குவதில்லை. அப்படிப்பட்ட கலைஞனை இந்த சமுதாயம் மதிக்க வேண்டியது அவசியம். எந்த சமுதாயம் கலைஞனை அவமதிக்கிறதோ அந்த சமுதாயத்தில் கருத்து சுதந்திரம் இல்லை என்பது மிகப் பொதுவான விடயம். அங்கே நல்ல சிந்தனை இல்லை, அறிவுஜீவிகளுக்கு மரியாதை இல்லை, மக்கள் பிரச்சினைகள் எல்லாம் வெறும் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகளாகவே பார்க்கப் படுகிறது. மக்கள் ஒரு இனமாக, நாகரிகத்தின் வளர்ச்சியடைந்த, வளர்ச்சி அடைகின்ற ஒரு அடையாளமாக பார்க்கப்படவில்லை என்பதுதான் உண்மை.

கோவன் கைதுக்கு பல வகையான கண்டனங்கள். அரசியல்வாதிகளிலிருந்து சமூக ஆர்வலர்கள் வரை அனைவரும் கண்டித்தாலும் இவைகள் கருத்துரிமையின் அடிப்படையிலே பார்க்கப்படுகிறது. ஒரு சமுதாயத்தில் கலைஞனின் அங்கம் அவனது இடம் பற்றி விவாதத்திற்குகூட எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரிய விடயம்தான். கோவன் வருவார், வந்து இதற்கும் பறையடித்து பாட்டு பாடுவர்.

- இராமானுஜம் மேகநாதன், பேராசிரியர் (இணை) - மொழிக்கல்வி, தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம், புது தில்லி

Pin It