இந்தியா பெண்களைத் தெய்வமாக மதிக்கும் நாடு, அதிலும் பிரதமர் மோடி யாராவது அம்மா என்று கொட்டாவி விட்டால் கூட கண்ணீர் விட்டு கதறி விடுவார். அவ்வளவு பாசம் அம்மா மீது. அதுவும் தன்முன்னால் ஒரு கேமரா இருக்கின்றது என்று தெரிந்துவிட்டால் அவருக்கு வரும் பாரு அழுவாச்சி ஐயோ! அதை பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜீக்கர்பெர்க்கை தான் கேட்க வேண்டும். அவர் அப்போதே சொல்லி இருக்கின்றார் தனது அலுவலகத்திலேயே சந்திப்பை வைத்துக்கொள்ளலாம் என்று. ஆனால் மோடி தான் மக்கள் மத்தியில் அனைவரும் பார்க்க சந்திக்க வேண்டும் என்று சொல்லி அவரை சந்திக்கு இழுத்திருக்கின்றார். பாவம் மார்க் ஜீக்கர்பெர்க் மோடியின் ஐடியா என்னவென்று தெரிந்துகொள்ளாமல் ஒத்துக் கொண்டிருக்கின்றார். ஒரே கேள்விதான் கேட்டிருக்கின்றார் அடுத்த நிமிடமே கண்ணீர் விட்டு கதறி அம்மா….. அம்மா….. என்று மாரடித்து அழுது ஹாலிவுட்டையே மிரட்டியிருக்கின்றார் மோடி அவர்கள்.

 modi 404அவர் என்ன கேட்டார் என்றால் “நாம் இருவரும் குடும்பத்திற்கு முன்னுரிமை அளிப்பவர்கள். அதனால் தான் எனது பெற்றோர்களை இந்நிகழ்சிக்கு அழைத்து வந்துள்ளேன். உங்களது தாய் குறித்த நினைவலைகளை எங்களோடு பகிர்ந்து கொள்வீர்களா?” என்றுதான் கேட்டிருக்கின்றார். முதலில் மோடியைப் பார்த்து இப்படி ஒரு கேள்வியை மார்க் ஜீக்கர்பெர்க் கேட்டதே தவறு. அவர் வேண்டும் என்றால் குடும்பத்துக்கு முன்னுரிமை அளிப்பவராக இருக்கலாம். ஆனால் தனக்குத் திருமணம் ஆனதையே மறைத்து, தன்னை ஒரு பிரம்மச்சாரியைப் போல் இந்திய மக்களை நம்ப வைத்த மோடியை, மாநிலம் விட்டு மாநிலம் விரட்டி விரட்டி ஒர் இளம் பெண்ணை வேவு பார்த்த மோடியைப் பார்த்து எப்படி அவர் அப்படி ஒரு கேள்வியைக் கேட்கலாம்?

 அவர் சிறுவனாக இருந்தபோது அவரைக் காப்பாற்ற அவரது தாய் அக்கம் பக்கத்து வீடுகளில் பாத்திரங்கள் கழுவுவது, தண்ணீர் கொண்டு வருவது போன்ற எடுபிடி வேலைகளைப் பார்த்தாராம். தனது பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க மிகவும் கஷ்டப்பட்டாராம். அப்படி கஷ்டமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் தான் அவர் ஏழைகளுக்காக ஆட்சி நடத்துகின்றார்!. பணக்காரர்களின், பெரும் கார்ப்ரேட் நிறுவனங்களின் நிலங்களைப் பறித்து ஏழை விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுக்கின்றார். மேலும் மக்கள் வரிப்பணத்தில் பத்து லட்சம் ரூபாய்க்கெல்லாம் கோட் போட்டு மினுக்காமல் எளிமையாக காந்தி சொன்னது போல கதர் ஆடைகளையே அணிகின்றார்.

 எதை வேண்டும் என்றாலும் பொறுத்துக் கொள்ளலாம் ஆனால் மோடி பேஸ்புக் அலுவலகத்தில் எழுதியதை மட்டும் நம்மால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை அகிம்சையே மாபெரும் மதம், வாய்மையே வெல்லும், வந்தே மாதரம் என்று அவரது தாய் மொழி குஜராத்தியில் (இந்தியில் அல்ல) எழுதி இருக்கின்றார். இதை எழுதிவிட்டு மோடியே உள்ளுக்குள் சிரித்திருப்பார் “அட அமெரிக்க முட்டாள் பசங்களா, நான் என்ன சொன்னாலும் கேக்கிறீங்களே, என்ன எழுதினாலும் படிக்கிறீங்களே” என்று நினைத்து.

 21-ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு என அமெரிக்காவில் போய் ஆரூடம் சொல்கின்றார் மோடி. அதற்குக் காரணம் இந்திய மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் 35 வயதுக்குள் இருக்கின்றார்களாம். ஆம் இருக்கின்றார்கள் ஆனால் என்னவாக இருக்கின்றார்கள் வேலை இல்லாமல்; அப்படியே வேலை இருந்தாலும் போதிய வருமானம் இல்லாமல், கிடைத்த வேலைக்குப் போகும் அத்துக்கூலிகளாய் இருக்கின்றார்கள்.

 நாட்டு மக்களின் மீது அன்பும் அக்கறையும் கொண்ட பிரதமர் நம்ம நரேந்திர மோடி அவர்கள். அதனால் தான் பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிதியில் 15 சதவீதத்தைக் குறைத்தார். இந்திய இளைஞர்கள் கல்வியில் சிறந்து 21-ம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்ற வேண்டும் என்ற அக்கறையில் ஏற்கெனவே கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 16 சதவீதத்தைக் குறைத்தார். மோடியின் தாய் ஹீராபென்னை போல ஏழை தாய்மார்கள் இந்தியாவில் இல்லாமல் ஆக்க பெரும் நிறுவனங்களுக்கான வரியை 30 சதவிதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைத்தார். மோடியின் இப்படிப்பட்ட நல்ல செயல்களால் இந்தியாவில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 55 குழந்தைகள் தன்னுடைய ஐந்தாவது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்குள் இறந்து விடுகின்றார்கள். கர்ப்பகால மரண எண்ணிக்கையில் இந்தியா உலகில் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது. ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு கர்ப்பிணிப் பெண் இறக்கின்றார்.

 நாட்டுக்காக சேவையாற்றுவதற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணிப்பேன் என்றும் நாட்டுக்காக வாழ்வதும் நாட்டுக்காக உயிரை விடுவதும் தான் தனது நோக்கம் என்று ஃபைனல் டச் கொடுத்திருக்கின்றார். ஆஸ்திரேலியாவுக்கு அதானியை நேரடியாக தன்னுடன் அழைத்துச் சென்று பேரத்தை முடித்துக் கொடுத்த மோடி, அம்பானியையும், டாட்டாவையும் அண்டிப் பிழைக்கும் மோடி, ஏழை விவசாயிகளின் நிலங்களைப் பிடுங்கி பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கொடுக்க கொலைவெறியுடன் சுற்றும் மோடி, கோடிக்கணக்கான இந்தியத் தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதி தொகையைப் பங்குச்சந்தையில் போட்டுச் சூறையாட அனுமதித்த மோடி நாட்டுக்காக எப்படி சேவையாற்றுகின்றார் என்பதையும் தன் வாழ்நாளை எப்படி அந்த அதி உன்னத சேவைக்காக அர்ப்பணித்திருக்கின்றார் என்பதையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

 மோடி அமெரிக்காவுக்கு அடிக்கடி பறப்பதும் ஒபமாவுடன் ஹாட்லைனில் கதைப்பதும் தன்மீதான இனப்படுகொலையாளன் என்ற கறையைத் துடைப்பதற்காகவும், அதற்குக் கைமாறாக இந்தியாவில் இருந்து என்ன வேண்டுமோ அதை சட்டப்பூர்வமாக சுரண்டிக் கொள்வதற்கான அனுமதியைத் தரவும்தான். இதை அறியாத அம்பிகள் தங்களுடைய கோவணத்தை மோடி ஒபாமாவுக்கு விற்றுவிட்டதைக் கவனிக்காமல் மோடிஜீ, மோடிஜீ என்று ஆலாபனை செய்துகொண்டு கிங்கினி மங்கினி என்று ஆடிக்கொண்டு இருக்கின்றார்கள்.

- செ.கார்கி

Pin It