மனிதன் தன்னுடைய அளப்பறிய உழைப்பால் இந்த உலகத்தை தன்னுடைய விரல் நுனிக்குக் கொண்டு வந்துவிட்டான். அவன் நினைத்ததை நினைத்த நிமிடத்தில் பார்க்கவும், கேட்கவும் முடிகின்றது. இயற்கையால் தோற்றுவிக்கப்படும் பல நோய்களுக்கு அவன் மருந்துகளைக் கண்டுபிடித்துத் தன்னுடைய வாழ்நாளை நீட்டித்துக்கொண்டு இருக்கின்றான். சில நூறு ஆண்டுகளுக்கு முன் சாத்தியப்படாத பல இப்போது சாத்தியப்பட்டிருக்கின்றது. அறிவியல் வளர வளர கடவுள் தன்னுடைய இடத்தை காலி செய்துவிட்டு மனித மூளையின் அடி ஆழத்தில் புதைந்து ஒரு பழம் கனவாக மறைந்துவிட்டான். அவனது மரணச்செய்தி என்றோ அறிவிக்கப்பட்டு விட்டாலும் அது பல சாத்தான்களால் தன்னுடைய இருத்தலைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மூடி மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

 மனித மனதின் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் பல கேள்விகளுக்கு அறிவியல் விடை கண்டுள்ளது. ஆனால் அந்த விடைகளை ஏன் அனைத்து மனித மனங்களும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன என்பது இன்னும் ஆழமாக ஆராயப்பட வேண்டி இருக்கின்றது. ஒரு மனிதன் தனக்கான வாழ்வியல் தேவைகள் அனைத்தும் நிறைவேறும்போது அவனது மனதில் இருந்து கடவுளின் தேவை பற்றிய சிந்தனை இல்லாமல் போய்விடும் என்று நாம் நினைத்துக் கொண்டு இருந்தோம் ஆனால் மனிதனது பேராசை அவனது தேவையை நீட்டித்துக்கொண்டே போகின்றது. அதை அடைவதற்கு அவன் தொடர்ச்சியாக கடவுளை அழைத்துக் கொண்டே இருக்கின்றான். ஒருவனது கல்வி அறிவு அவனது மதப்பற்றையும், கடவுள் பற்றையும் இல்லாமல் ஆக்கிவிடும் என்று எதிர்பார்த்தோம் ஆனால் அதுவும் நடக்கவில்லை. மருத்துவம், பொறியியல் படித்த பலபேர் தீவிர ஆன்மீகவாதிகளாய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தோம். அவனது கல்வி அறிவு அவனது பழைய மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்குப் பதிலாக அந்தக் காலாவதி ஆகிப்போன பழைய மூட நம்பிக்கைகளுக்குப் புதிய புதிய விளக்கங்கள் கொடுத்து அதை இந்தச் சமூகத்தில் நீட்டித்து இருக்கவே உதவியது.

 பொருளாதாரம், கல்வி என அனைத்தும் கிடைத்தும் சமூக தளத்தில் தன்னை மேம்பட்ட மனிதனாக காட்டிக்கொள்ளும் ஒரு நபர் தன்னை எப்போதும் அறிவியல் சிந்தனை கொண்ட ஒரு நபராக காட்டிக்கொள்ள மறுப்பது ஏன்? இந்தக் கேள்வி முற்போக்குவாதிகள் பலரையும் துன்புறுத்தும் கேள்வியாகும். சில நண்பர்களிடம் மிகக்கடுமையாக கூட விவாதம் நடத்தியதுண்டு. பார்ப்பன கோவில்களுக்குப் போகாதீர்கள்; அவனது கடவுள்களைக் கும்பிடாதீர்கள்; அவன் நம்மை எல்லாம் தேவிடியாபயல் என்று அவனது நூல்களில் எழுதி வைத்திருக்கின்றான் என்று சொல்லியதுண்டு. ஆனால் அடுத்த நாளே அந்த நண்பர்கள் கோவிலுக்குப் போவதை நான் பார்த்திருக்கின்றேன். தேவிடியாபயல் பட்டத்தைவிட அவனுக்கு அந்தக் கடவுள் முக்கியமாக தெரிகின்றான் என்றால் அவனது சுயமரியாதை எங்கே போனது?. அவனை உளவியல் ரீதியாக ஆன்மீகத்தின் பக்கம் இழுத்துச் செல்வது எது?

 மற்ற ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனாவைப் போலவே கடவுள் மறுப்பு தத்துவம் என்பது இந்திய வரலாற்றில் பன்நெடுங்காலமாக இருந்துதான் வருகின்றது. ஆனால் அதை உளப்பூர்வமாக ஏற்று தன்னுடைய வாழ்வில் கடைபிடிப்பவர்கள் மிக சிலபேரே. நாத்திகர்கள் எவ்வளவுதான் பிரச்சாரம் செய்தாலும் அதை ஆராய்ந்து பார்த்து ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும், ஆராய்ச்சிக் கண்ணோட்டமும், சுயமரியாதை உணர்வும் பெரும்பான்மையான நபர்களிடம் இன்னும் வரவில்லை. கடவுள் சிந்தனையில் இருந்து ஒரு மனிதனை அப்புறப்படுத்துவது என்பது மிகக்கடினமான காரியமாகவே உள்ளது.

 மதவாதிகள் எப்போதும் தங்களுடைய பிடியை மிக இறுக்கமாகவே வைத்திருக்கின்றார்கள். அவர்கள் தங்களுடைய ஆட்டு மந்தைகளை அது குட்டியாக இருக்கும்போதே ஒரு கட்டுபாட்டுக்கு உட்பட்டு முன்வரிசையைப் பார்த்தே பின்வரிசையாக செல்ல பழக்கப்படுத்தி விடுகின்றார்கள். அந்த ஆடும் முன்வரிசை எங்கே செல்கின்றதோ அதுவே சரியான பாதை என்றெண்ணி யோசிக்காமல் பின்னாலேயே சென்றுவிடுகின்றது. அப்படிச் செல்வது அந்த ஆடுகளுக்கும் மிக எளிமையாக உள்ளது.

 கடந்த 24-ம் தேதி சவுதி அரேபியாவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொண்ட யாத்ரீகர்கள் அங்கு மெக்காவுக்கு அருகில் உள்ள மினா நகரத்தில் நடைபெற்ற சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றுள்ளனர். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏறக்குறைய 717 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 18 பேர் இந்தியர்கள் என கூறப்படுகின்றது. இது போன்ற சம்பவங்கள் அங்கு நடைபெறுவது புதிதல்ல. 1975 முதல் 2015 முடிய ஏற்பட்ட பல்வேறு விபத்துக்களில் சிக்கி ஏறக்குறைய 4000க்கும் அதிகமான மக்கள் உயிர் இழந்துள்ளனர்.

 இவர்களின் மரணத்திற்கு யார் பொறுப்பேற்பது. அல்லாவை பொறுப்பாக்கலாமா? அல்லது அல்லாவின் பெயரைச் சொல்லி ஆண்டாண்டு காலமாக இந்த மக்களை ஏய்த்துப் பிழைக்கும் இஸ்லாமிய பிற்போக்குவாதிகளை பொறுப்பாக்கலாமா? அல்லது தன்னுடைய மூட நம்பிக்கையால் இறந்துபோன இந்த மக்களையே பொறுப்பாக்கலாமா? இறந்து போனவர்கள் யாரையும் கல்வியறிவு அற்றவர்களாவோ அல்லது பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாவோ நாம் கருத வேண்டிய அவசியமில்லை. நிச்சயமாக லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து மெக்கா நகருக்குப் புனித பயணம் மேற்கொள்ளும் இவர்களை நாம் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக கருதவேண்டிய அவசியமில்லை. அதே போலத்தான் கல்வியிலும்.

 தன்னுடைய வாழ்க்கையில் அனைத்தும் கிடைக்கப் பெற்றும் இவர்கள் அங்கு செல்வதற்குக் காரணம் ஒரு முகமதியன் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது மெக்கா நகருக்குப் புனித பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற நபிகள் நாயகத்தின் கட்டளையே ஆகும். இஸ்லாமியர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய ஐந்து கட்டளைகளில் ஒன்றாக இந்தப் புனித பயணமும் கூறப்பட்டுள்ளதே, இவர்கள் அங்கு செல்வதற்கும் கொத்துக்கொத்தாய் மாண்டுபோவதற்கும் காரணமாகும். அப்படி, தான் புனித பயணம் மேற்கொள்ளமால் போனால் எங்கே அல்லா மறுமையில் தன்னை தண்டித்து விடுவாரோ என்ற பயமே அவர்களை அங்கு செல்லத் தூண்டுகின்றது.

 குரானில் இருந்து ஒரு வரியை நீக்கினால் கூட அல்லாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று கூச்சலிடும் மத அடிப்படைவாதிகள் இந்த மரணங்களுக்காக யாரை குற்றவாளிக்கூண்டில் ஏற்றப் போகின்றார்கள்? யார் மீது பட்வா விதிக்கப் போகின்றார்கள்?

 இந்து மதவெறியர்களால் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டபோது முற்போக்குவாதிகளும் நாத்திகர்களும், கம்யூனிஸ்ட்டுகளும் அந்த மக்களை வாரியணைத்து ஆதரவு தெரிவித்தார்கள்; இன்றும் தெரிவித்துக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் தன் சொந்த மத பிற்போக்குதனத்தால் இத்தனை ஆயிரம் மக்கள் இறந்துள்ளார்களே இதற்கு அவர்கள் என்ன சொல்லப் போகின்றர்கள்? இந்துமத்தில் உள்ள மூடநம்பிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கும் இஸ்லாமிய சகோதரர்கள், தன் சொந்த மதத்தின் பிற்போக்குத்தனங்களை ஏன் கண்டிக்க முன்வருவதில்லை? நாத்திகர்களும், கம்யூனிஸ்ட்டுகளும் இந்துமதத்தை மட்டுமே கண்டிக்க வேண்டும்; இஸ்லாத்தை அல்ல என்று அவர்கள் நினைத்துக்கொண்டு இருக்கின்றார்களா?

 மத வெறியர்களும், மத பிற்போக்குவாதிகளும் அனைத்து மதங்களிலும் இருக்கின்றார்கள். அவர்கள் தங்களைத் தாங்கள் சார்ந்த மதத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதிகளாக எப்போதும் அறிவித்துக் கொள்கின்றார்கள். தங்கள் மதத்தை சேர்ந்தவர்கள் எப்படி வாழவேண்டும், என்ன சிந்திக்க வேண்டும் என அனைத்தையும் முடிவு செய்கின்றார்கள். அதை கடைபிடிக்காதபோது தங்கள் சொந்த மதத்தைச் சார்ந்தவர்களையே தண்டிக்க முற்படுகின்றார்கள். அவர்களின் கொடும்கரங்களில் மாட்டி இந்த மண்ணோடு மண்ணாக மக்கிப்போனவர்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காது.

 கடவுள் நம்பிக்கையைத் தகர்த்தெறியும் வெளிப்படையான அறிவியல் கல்விமுறையும், எந்த வகையான சுரண்டலையும் அனுமதிக்காத பொருளாதாரக் கொள்கையும் எப்போது இந்த உலகத்தில் சாத்தியமாகின்றதோ அப்போதுதான் அனைத்து முட்டாள்தனங்களுக்கும், பிற்போக்குத் தனங்களுக்கும் முடிவுகட்டப்படும். அனைத்து முட்டாள் தனங்களையும், பிற்போக்கு குணங்களையும் தன்னுள்ளே வைத்திருக்கும் ஆட்சி அதிகாரத்தை இந்தச் சாமானிய மக்கள் கைப்பற்ற அவர்களை வர்க்க அடிப்படையில் ஒன்று திரட்டியே ஆக வேண்டும். தங்களை முற்போக்கு வாதிகளாக அறிவித்துக் கொள்ளும் நாத்திகர்கள், கம்யூனிஸ்ட்டுகள் என அனைவரும் ஒரணியில் திரளவேண்டும். தங்களை முற்போக்குவாதிகள் போல் வேடமிட்டிருக்கும் பிற்போக்குச் சக்திகளுக்கு எதிராகவும் அப்பட்டமாகவே தங்களை பிற்போக்குச்சக்திகள் என அடையாளப்படுத்திக் கொள்ளும் வலதுசாரி சக்திகளுக்கு எதிராகவும் நாம் தொடர்ச்சியாக போராடவேண்டி உள்ளது.

 இது ஒரே நாளில் தீர்க்கப்படக்கூடிய பிரச்சினை அல்ல. மக்களது மனங்களில் இருந்து ஆன்மீகத்தை அப்படி ஒரே நாளில் அறுத்தெறியவும் முடியாது. அதற்கு நீண்ட கால சித்தாந்தப் போராட்டம் தேவைப்படுகின்றது. அனைத்து மதங்களிலும் உள்ள மூட நம்பிக்கைகளையும் அதை அழியாமல் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் பிற்போக்குவாதிகளையும் அம்பலப்படுத்த வேண்டும். வெறும் அப்பட்டமான நாத்திகவாதம் மட்டுமே மக்களை முட்டாள்தனத்தில் இருந்து விடுவிக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. அதனுடன் சமூக பொருளாதார பிரச்சினைகளையும் நாம் இணைக்க வேண்டும். இப்படி மூட நம்பிக்கையால் இறந்து போனவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதைவிட மூட நம்பிக்கையால் இறக்காமல் இருக்க ஆழ்ந்து சிந்திக்கக் கற்றுத்தர வேண்டும்.

- செ.கார்கி

Pin It