விலங்குகளில் மேம்பட்ட விலங்கு மனிதன். மனிதன் மட்டுமே ஆறாம் அறிவாம் பகுத்தறிவு பெற்று தனித்து நிற்கின்றான்.

நாத்திகவாதிகள் மட்டும் தங்களை பகுத்தறிவாதிகள் என்று அடையாளப்படுத்துவது ஏன்? மனிதர் அனைவருக்கும் உரித்தான பகுத்தறிவை நீங்கள் மட்டும் சொந்தம் கொண்டாடுகின்றீர்களே? பகுத்தறிவு நாத்திகவாதிகளின் சொத்தா? என்று வாதம் செய்வோர் உண்டு.

ஆமாம்... உண்மை தான்! பகுத்தறிவு என்பது நாத்திகவாதிகளின் சொத்து தான்... ஏனென்றால்

ஆன்மிகம் + பகுத்தறிவு = நாத்திகம்

பகுத்தறிவு மனிதன் அனைவருக்கும் பொதுவானது என்றாலும் ஆன்மீகவாதிகள், கடவுளை நம்புகின்றவர்கள், தங்கள் பகுத்தறிவை கடவுள், மதம் சார்ந்த விடயங்களில் செலுத்துவதே இல்லை. தான் பெற்ற பகுத்தறிவைப் பயன்படுத்த தடையாய் மதங்களையும் வளர்த்துள்ளான்.

periyar anna veeramani

கடவுளை, பகுத்து ஆராய்வது பாவம் என்று அவர்கள் பொது புத்தியில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எப்போது ஆன்மீகத்தோடு பகுத்தறிவை புகுத்தி பார்க் கின்றார்களோ, அப்போதே அங்கு ஆன்மிகம் ஒன்றும் இல்லை... என்றும் கடவுள் இல்லை என்ற முடிவிற்கும் வரவேண்டி ஆகிறது. அங்கு ஆன்மிகம் சுழி ஆகிறது.

எனவே, நாத்திகத்தில் இருந்து மட்டுமே பகுத்தறிவு பிறக்கிறது. பகுத்தறிவின் முதல் படியே நாத்திகம் தான்.

இன்னும் சிலர், பெரியார் அந்த காலக்கட்டத்தில் இருந்த பார்ப்பனிய ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கே ‘கடவுள் மறுப்பு' கொள்கையை கையில் எடுத்தார் என்று பெரியார் கொள்கையே திரிக்கப் பார்க்கின்றனர்.

பெரியார் கொள்கையின் “மையக் கருத்துரு” கடவுள் மறுப்பு என்ற நாத்திக வாதம் தான். அதன் சமூகக் களம் சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, [ஜாதியும், பெண்ணடிமை ஒழிப்பும்] சுயமரியாதைப் பெற்ற மக்களாக மனிதர்களை மாற்றுவதாக அமைகிறது.

அடிக்கட்டுமானத்தை தளர்த்தி அடுக்குமாடி அமைக்க முடியுமா? நாத்திகம் பிறக்காத பெரியார் கொள்கையில் நிச்சயம் தெளிவைப் பெற இயலாது. ஏனெனில், மனித அறிவிற்கும், மனிதப் பண்பிற்கும் தடையாக இருப்பதே இந்த மதங்கள் தானே?

நாத்திகாவாதம் * ஆன்மீகவாதம் என்பது
பொருள்முதல்வாதம் * கருத்துமுதல்வாதம்

பொருள்முதல்வாதம் கண் முதலிய ஐம்பூதங்களுக்கு புலன் ஆவதை மட்டும் ஏற்றுக் கொள்வேன் என்பது... யூகங்களுக்கு எதிரானது... ஏன்?, எதற்கு? எப்படி? என்ற கேள்விகளுக்கு இடம் அளிப்பது.

கருத்துமுதல்வாதம் அனுமானங்களை தன்னுடைய பிரமாணங்களாக [அளவைகளாக] ஏற்றுக்கொள்கிறது. அனுமானம் ஆகமம், வேதங்களுக்கு இடம் கொடுக்கிறது... அதனை உண்மை என்கிறது. இன்னும் மூத்தோர் கூறிய அனைத்தையும் உண்மையாக இருக்கலாம் என்ற யூகங்களின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளச் சொல்கிறது.

இப்படி இருக்கையில், அடிப்படையில் வேறுபடுகையில், ஆன்மீகத்தில் ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்வி பிறக்க வாய்ப்பே இல்லை. கடவுள் இல்லை என்று சொல்லிய விடயத்தில் மட்டுமே பெரியாரோடு முரண்படுகிறோம் என்று ஆத்திகவாதி சொல்வதையும் ஏற்றுக்கொள்ளவே இயலாது. பெரியார் கொள்கையின் அடிநாதம் ‘நாத்திகம் “தான்.

இன்னும் சிலர், கடவுள் இல்லை என்று சொல்லிக் கொள்கிற பகுத்தறிவாதியின் அறிவானது ஆபத்தானது. They all are FREE THINKERS. ஒரு நாத்திகவாதி தன்னுடைய மனோ இச்சையின் படி நல்லவனாகவோ, அல்லது கெட்டவனாகவோ இருக்கலாம். நாத்திகவாதியின் வாழ்க்கை “துடுப்பு இல்லாத படகு” போன்ற வாழ்க்கை என்று சாடுவர்.

பகுத்தறிவுவாதிகள் என்பவர்கள் FREE THINKERS என்பது முற்றிலும் தவறானது. WE ALL ARE RIGHT THINKERS. நல்லது, கெட்டதைப் பகுத்து அறிய, அறிவைப் பயன்படுத்துபவர்கள் பகுத்தறிவாதிகள். மனித உணர்வுகளை அடித்துச் செல்லும் பெருக்கு ஓட்டமாக இந்த அறிவு அமையாது. மனித உணர்வுகளுக்கு [நல்ல] மதிப்பளிக்கக் கூடியது.

நாத்திகவாதியின் வாழ்க்கை என்ற படகிற்கு கடவுள் என்ற துடுப்பு தேவையில்லை. எங்களுக்கான REMOTE CONTROL எங்களின் மூளை. அந்த அறிவே எங்கள் வாழ்வை திறம்பட நடத்தப் போதுமானது.

மனிதனின் பயம், சகமனிதனிடம் அங்கீகாரம், மதக் குறிகளை அணிபவன் ஒழுக்கமானவன் என்ற சமூகத்தின் பார்வை, மதத்தால் கிடைக்கும் பாவ மன்னிப்புகள் இவையே மதம் சார்ந்த மனிதனின் தேடல்.

மனித அறிவிற்குள், மனித கற்பனைக்குள் அடங்கி விடுகின்ற மாதிரி தான் கடவுள் உருவங்கள் அனைத்தும் படைக்கப்பட்டுள்ளன. எந்த மதத்தில் பகுத்தறிவு உள்ளது அன்று ஆராய்ந்ததால் அதில் ஏமாற்றம் தான் மிஞ்சும்.

பேய் [சாத்தான்], பில்லி, சூன்யம், வசியம், ஜோதிடம், என்று எல்லா அறிவிற்கான முட்டுக்கட்டையும் தன்னகத்தே ஒருங்கே கொண்டது இந்து மதம். அனைத்து மூட நம்பிக்கைகளின் தோற்றுவாய். இந்தியாவில் தொற்று நோயாக எல்லா மதங்களையும் ஆக்கிரமித்து உள்ளது இந்த மூடங்கள்.

இந்து மதத்தில் பகுத்தறிவிற்கு மட்டுமல்ல... சுயமரியாதை உணர்ச்சிக்கும் இடம் இல்லை. பிறப்பால் உயர்வு, தாழ்வு போதிக்கும் மதம். படி நிலை ஜாதி அமைப்பு முறையால் மக்களை பிரிப்பது. இன்னமும் “நால்வகை ஜாதியும் நானே படைத்தேன். அதைப் படைத்த என்னால் கூட மாற்ற முடியாது” என்று சொல்லும் அந்த கடவுளின் யோக்கியதை என்னவாக இருக்க முடியும்? இதில் பகுத்தறிவிற்கும், சுயமரியாதைக்கும் இடம் எது?

கிருத்தவ மதம், அதிலுள்ள மதக் குழுக்கள் மக்களை மூளை சலவை செய்து ‘பைபிள்’ தவிர மற்ற நூல்களை அறியாவண்ணம் பெரும்பாலும் தடுக்கிறது. பரந்துப்பட்ட அறிவைப் பெற விடாமல் ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடக்கி, தனி மனித ஆசாபாசங்கள் அனைத்தும் தவறானவை என்ற பிம்பத்தை உண்டாக்கி, குற்ற உணர்ச்சியில் தள்ளி மீண்டும் பாவமன்னிப்பு கிடைக்கும் இடமாக தேவாலயங்களை பரிந்துரை செய்கிறது.

பாவம், அதன் தொடர்ச்சியாக பாவ மன்னிப்பு, மீண்டும் பாவம் என்ற வளையத்தை உண்டாக்கி மனிதனை ‘மன நோயாளி’ ஆக மாற்றுகிறது. தொலைக்காட்சி பார்ப்பது கூட பாவம் என்றால் அறிவு பிறக்கவோ, தெளிவைப் பெறவோ வழி எது?

இஸ்லாம் தாம் வாழும் இந்த வாழ்க்கை மறுமை வாழ்வின் ஒரு முன்னோட்டம் என்கிறது. அடிமைத் தனங்களையே போதிக்கிறது. இங்கும் பகுத்தறிவு எது?

பாம்பும், கயிறும் பாகுப்படுத்தி தெளியும் அறிவு சில இடங்களில் கல்லை மட்டும் கடவுள் தான் என்கிறது. இதை எப்படி பகுத்தறிவாக ஏற்க இயலும்?

பகுத்தறிவை அனைத்து இடங்களிலும் முழுமையாகப் பயன்படுத்துபவர்கள் நாத்திகவாதிகளே. ஆகையால், நாத்திகத்தின் சொத்தே பகுத்தறிவு. மனிதர்கள் அனைவரும் தங்களின் பகுத்தறிவை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதே பகுத்தறிவுவாதிகளின் ஆவலாக உள்ளது.

- கவுதமி தமிழரசன், மேல மெய்ஞானபுரம்

Pin It