modi 405"காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், உங்களிடம் இரண்டு எருமை மாடுகள் இருந்தால், அவற்றுள் ஒன்றை எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள்", என்று 2024 ஆம் ஆண்டு தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில், குஜராத்தில், மாடுகள் வளர்க்கும் மக்கள் மிகுதியாக வாழும் பகுதியில் பேசியவர் யார் தெரியுமா?

இன்றைய பிரதமர் நரேந்திர மோடியேதான்! 2024 மே 1 ஆம் நாள் நடைபெற்ற கூட்டத்தில்தான் அவர் அவ்வாறு பேசினார்!

இப்படித் தரம் தாழ்ந்து ஒரு பிரதமர் வேட்பாளர் பேசலாமா என்று அன்று அனைவரும் குரல் எழுப்பினார்கள். ஊடகங்களில் சிலவும் கண்டனம் செய்தன.

ஆனால் அவர் மாறவே இல்லை. பிரதமர் ஆன பிறகும், இப்போதும், அவர் அப்படித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்.

அதற்கான எடுத்துக்காட்டு தான், அண்மையில் பீகார் தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் அவர் பேசியிருக்கும் ஒரு பேச்சு!

தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசு, பீகாரின் உழைக்கும் மக்களைத் துன்புறுத்துகிறதாம்!

இதற்கு எந்தச் சான்றையும் அவர் எடுத்துக்காட்ட வில்லை. எங்கே, எப்போது, பீகார் உள்ளிட்ட வடநாட்டு மக்களைத் திமுக அரசு துன்புறுத்தியது என்பதற்கு ஒரு நிகழ்ச்சியையும் அவர் கூறவில்லை. எந்த ஆதாரமும் இல்லாமல், பொத்தாம் பொதுவில் ஒரு குற்றச்சாட்டை அவர் முன் வைத்திருக்கிறார்.

அது சரி, பீகார் தேர்தலுக்கும் திமுகவிற்கும் என்ன தொடர்பு? திமுக இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கிறது. பீகாரில் இந்தியா கூட்டணியை வீழ்த்துவதற்கு, அதில் ஓர் அங்கமாக இருக்கிற திமுகவைக் குறை சொல்வதன் மூலம், தன் கட்சி பயன்பெறக்கூடும் என்று அவர் கருதி இருக்கலாம்!

பீகாரில் பாஜக தலைமையில் இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நம்பிக்கை குறைந்து கொண்டே போகிறது! அதன் விளைவுதான் இப்படிப்பட்ட உண்மையற்ற பேச்சுகள்!

இந்தக் கூற்றில் உண்மை இல்லை என்பது மட்டுமின்றி, இதற்கு எதிரான உண்மைகளே நடப்பில் இருக்கின்றன என்பதை நாம் அறிவோம்! கொரோனா காலத்தில், பீகார், உ.பி. போன்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஏழைத் தொழிலாளர்கள் பத்திரமாகத் தங்கள் ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல, தமிழ்நாடு அரசு பல உதவிகளைச் செய்தது என்பதை நாடு அறியும்!

ஒரு கட்சியின் மூன்றாம் தரப் பேச்சாளர் பேசுவது போல, இந்திய அளவிலான ஒரு பெரிய கட்சியின் தலைவர், அதிலும் இந்தியாவின் பிரதமர், இப்படித் தரம் தாழ்ந்து பேசுவது, அவருக்கும் நல்லதில்லை, அவர் கட்சிக்கும் நல்லதில்லை!

சுருக்கமாய்ச் சொன்னால், இப்படி ஒரு பிரதமரைப் பெற்றிருப்பது, இந்தியாவுக்கே நல்லதில்லை!

- சுப. வீரபாண்டியன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.