இது வரலாற்றில் ஒரு திருப்புமுனை! புதிதாக வந்துள்ள வேளாண் சட்டங்களைப் பற்றி நரேந்திர மோதி இப்படிச் சொல்லும் போதுதான் நமக்கு ’ஐயோ’ என்று நடுக்கமெடுக்கிறது. இதற்கு முன்பு அவர் சொன்ன வரலாற்றுத் திருப்புமுனைகள் நம் நினைவுக்கு வந்து மிரட்டுகின்றன.
சரக்கு சேவை வரியைக் கொண்டுவந்த போது அவர் பேசிய வசனம் இது. பிறகு திடுதிப்பென்று பணமதிப்பிழப்பை அறிவித்த போதும் இதையே சொன்னார். இன்னொரு வசனம் இருக்கிறது, கொஞ்ச நாள் கழித்துப் பேசினாலும் பேசுவார்: “இதனால் உங்களுக்கு நன்மை கிட்ட வில்லையெனில் என்னை நடுத்தெருவில் தூக்கிலிடுங்கள்!”
கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவை இல்லை! சரக்கு சேவை வரியால் நாடு அடைந்த துன்பத்துக்குச் சான்று பகர இந்திய அரசின் கைவிரிப்புகளே போதும்! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் தெரிவித்த ஆன்றவிந்த அறிவுரை மாநில அரசுகளுக்கு: உங்களுக்கு இந்திய அரசு தர வேண்டிய பங்கைத் தர எங்களிடம் பணமில்லை. நீங்கள் இந்திய சேம வங்கியிலோ திறந்த அங்காடியிலோ கடன் வாங்கிக் கொள்ளலாம். இது எந்த ஊர் நியாயம், மாமி? என்று கேட்க ஆளில்லை.
பண மதிப்பிழப்பினால் எத்தனைச் சாவுகள்! எத்துணைத் துயரங்கள்! இதெல்லாம் மக்களுக்கு! ஆளும் பாசக பண மதிப்பிழப்பினால் தன் கருவூலத்தை வழிய வழிய நிறைத்துக் கொண்டது! மோதி-அமித் சாக்களைக் கக்கத்தில் வைத்திருக்கும் அம்பானி அதானி கும்பல்கள் உலக அளவில் மேலே மேலே என்று பறந்தன.
அந்த வரிசையில் இப்போது வரலாற்றில் திருப்பம் உண்டாக்க வந்திருப்பவை திரிசூலம் போல் வந்திருக்கும் மூன்று வேளாண் சட்டங்கள்:
- The Farmers’ Produce Trade and Commerce (Promotion and Facilitation) Bill, 2020;
- The Farmers’ (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Bill, 2020; and
- The Essential Commodities (Amendment) Bill, 2020.
பேரு பெத்த பேருதான்! எளிமையாகச் சொன்னால்,
(1) வேளாண் விளைபொருள் வணிக ஊக்கச் சட்டம்;
(2) வேளாண் சேவைகள் உறுதிக் காப்புச் சட்டம்;
(3) இன்றியமையாப் பண்டங்கள் (திருத்தச்) சட்டம்,
முதலில் அவசரச் சட்டங்களாகப் பிறப்பிக்கப்பட்டு அண்மையில் நாடாளுமன்றத்தில் ஏற்புப்பெற்ற இந்த முச்சட்டங்களின் நோக்கம், விளைவு பற்றிப் பேசுமுன் இவற்றுக்குப் பரவலாகப் பெரும் எதிர்ப்பு மூண்டிருப்பதைச் சொல்ல வேண்டும்.
ஆளும் பாரதிய சனதா கட்சியின் நெடுநாளைய கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலி தளக் கட்சியைச் சேர்ந்தவரும் நடுவண் அரசின் வேளாண் துறையில் உணவுப் பதனீட்டுத் தொழில்துறை அமைச்சருமான ஹர்சிம்ரத் கௌர் பாதல் அம்மையார் இந்தச் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பதவி விலகியுள்ளார்.
மோதி தலைமையமைச்சரான பின் ஏற்பட்டுள்ள முதல் உடைப்பு இதுதான்! கொள்கையைச் சொல்லி அவர் பதவி விலகியதுதான் இந்தச் சட்டங்கள் பற்றிய கவனத்தைப் பரவலாக்கிற்று எனலாம்.
பஞ்சாபிலும் அரியானாவிலும், அடுத்தபடி உத்தரப் பிரதேசத்திலும் இராஜஸ்தானத்திலும் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன. தமிழ்நாட்டில் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் இச்சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளனர்.
குறிப்பாக நன்செய்ப் பகுதிகளில் உழவுத் தொழில் சரக்காக்கமாக விரிவடைந்து, பெருமளவில் விளைபொருள் அங்காடிக்கு (சந்தைக்கு) வரும் பகுதிகளில் இந்தச் சட்டங்களுக்குக் கடும் எதிர்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. நாட்டின் உணவுக் களஞ்சியமாக விளங்கும் இந்தப் பகுதிகளுக்கு ஏற்படும் தாக்கினால் நாடே தாக்குறும் என்பதை எளிதில் விளங்கிக் கொள்ளலாம்.
முதல் சட்டமாகிய வேளாண் விளைபொருள் வணிக ஊக்கச் சட்டமும் இரண்டாம் சட்டமாகிய வேளாண் சேவைகள் உறுதிக்காப்புச் சட்டமும் ஏதேதோ சொல்லி வேளாண் விளைபொருட்களுக்கான அங்காடியை அகலத் திறந்து விடுகின்றன. யாருக்குத் திறந்து விடுகின்றன என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? வேளாண் விளைபொருளை வாரிக் கொண்டுபோகப் பெருங்குழுமங்களுக்கு (கார்ப்பரேட்டுகளுக்கு) இருந்த தடைகள் அனைத்தும் விலகுவதற்கே இச்சட்டங்கள் வழிகோலுகின்றன.
இச்சட்டம் அப்படியா சொல்கிறது? என்று கேட்கலாம். உழவர்கள் ‘தாங்கள் விரும்பும் வணிகர்களிடமும், வணிக நிறுவனங்களிடமும் தங்கள் விளைபொருளைப் பேரம் பேசி, ஆதாய விலைக்கு விற்றுக்கொள்ளலாம்’ என்றுதான் சட்டம் கூறுகிறது. ஆடு தன் விருப்பம் போல் ஓர் அரிமாவைத் தேர்ந்தெடுத்து அந்த அரிமாவின் வாய்க்குள் தலையை விட்டுக் கொள்ளலாம்!
உழவர்களின் நிலை தெரியாதா இந்தச் சட்ட வரைஞர்களுக்கு? உழவுத் தொழில் விதையிலிருந்து தொடங்குகிறது என்றால் அந்த விதையும் கடனிலிருந்து தொடங்குவதுதான் உண்மை நிலை! பிறகு அறுவடை வரை ஒவ்வொரு கட்டத்திலும் கடன் வாங்கித்தான் பயிர் செய்ய வேண்டிய நிலை! அறுத்துப் போரடித்து விளைபொருளைப் பாதுகாப்பாகச் சேமித்து வைத்து, நல்ல விலை கிடைக்கும் போது விற்றுக்கொடுக்கும் வரை கடன்காரர் காத்திருப்பாரா? அவரே காத்திருந்தாலும் சேதமில்லாமல் சேமித்து வைக்கக் களஞ்சியம் உண்டா?
ஓரளவு விலை கிடைக்கவே அரசுக் கொள்முதல் நிலையங்களைத்தான் உழவர்கள் நம்பியுள்ளார்கள். அரசுக் கொள்முதல் இனி மெல்லச் சாகும்! மீதமிருப்பது தனியார் வணிகர்கள்தாம்! சிறு வணிகர்களும் பெருவணிகர்களும்! பெருவணிகர்களுக்கும் பெருவணிகர்களான பெருங்குழும வணிகர்கள்! நம்மூர் குப்பனும் சுப்பனும் ரிலையன்ஸ் அம்பானியிடம் பேரம் பேசி நல்ல விலை பெற்றுக் கொண்டு விளைபொருளை விற்றுக் காசாக்கி ஓகோ என்று வாழலமாம்!
மூன்றாம் சட்டத்தின் படி இன்றியமையாப் பண்டங்கள் பட்டியலிலிருந்து உணவு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், சமையல் எண்ணெய் வகைகள், வெங்காயம், உருளைக் கிழங்கு உட்பட இன்னும் பல விளைபொருள்கள் நீக்கப்பட்டிருக்கின்றன.
இதனால், இனிவரும் காலத்தில் விவசாயிகளின் விளைபொருட்களைக் கொள்முதல் செய்வதில் அரசுக்கு ஈடுபாடு இருக்காது. தனியார் வணிகர்கள் சொல்லும் விலைக்கு அவற்றை உழவர்கள் விற்க வேண்டிய கட்டாயம் தோன்றும்.
இன்றியமையாப் பண்டங்கள் அல்லவென்றால் இந்தப் பண்டங்களைச் சேர்த்து வைத்து விலை உயரும் போது விற்றுக் கொள்ளலாம். இதுவரை அப்படிச் செய்வது பதுக்கல் குற்றம். இனி குற்றமில்லை. யாரால் இப்படிச் சேர்த்து வைத்து விற்க முடியும்? பெரும்பாலும் உடனே விற்றாக வேண்டும் என்ற தேவை இல்லாதவர்களால் முடியும்.
இரண்டாவதாக சேமிப்புக் கிடங்குகள் வைத்திருப்பவர்களால் முடியும். ஆக இதுவும் உழவர்களுக்கோ சிறு வணிகர்களுக்கோ அல்ல, பெருங்குழும வணிகர்களுக்குத்தான் பயன்படும்.
நெல், கோதுமை போன்றவற்றுக்கு அரசு சிறும அடிவிலை (குறைந்தபட்ச ஆதார விலை எனப்படும் MSP = Minimum Support Price) குறித்துரைக்கும் இப்போதுள்ள நடைமுறையின்படி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் அடிவிலைக்குக் குறைவாகக் கேட்க முடியாது. இந்த விற்பனைக் கூடங்கள் இப்போதும் நடைமுறையிலுள்ள சில மாநிலங்களில் அவை மண்டிகள் எனப்படுகின்றன.
இந்தச் சட்டங்களின் படி இனி மண்டியில்தான் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதில்லை. சிறும அடிவிலையாவது பெற்றுத்தரக் கூடிய மண்டி அல்லது ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் இனி மெல்லச் சாகும். அரசுக் கொள்முதலும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடமும் இல்லாது போனால் உழவருக்கு உயிர்த் தண்ணீர் ஊற்றவும் வழியிருக்காது.
எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையிலான `தேசிய உழவர் ஆணையம்' பரிந்துரைத்தபடி, வேளாண் விளைபொருட்களின் ஆக்கச்செலவுக்கு மேல் குறைந்தது 50 விழுக்காடு ஈட்டம் வருமாறு கொள்முதல் விலை குறிக்க வேண்டும். இந்தச் சட்டங்களின் விளைவாக முதலுக்கே மோசம் என்ற நிலைதான் ஏற்படும்.
மண்டிகளிலும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் இடைத் தரகர்களும் ஊழல் அரசியலும் ஆட்சி செய்வதை நாம் மறுக்கவில்லை. உழவர்கள் அமைப்பாகத் திரண்டு தமது கூட்டு வலிமையைக் கொண்டு இந்தத் தீமைகளை எதிர்த்துப் போராட வேண்டிய தேவை உள்ளது.
ஆனால் இந்தச் சட்டங்கள் இடைத்தரகர்களின் இடத்தில் பெருவணிகர்களின் தரகர்களையும் பெருங்குழுமங்களின் ஊழியர்களையும் கொண்டுவந்து நிறுத்தும். இதனால் உழவர்களின் கூட்டுபேர வலிமை நலிவுறவே செய்யும். மூட்டைப் பூச்சிக்கு அஞ்சி வீட்டைக் கொளுத்திய கதையாகி விடும்!
எளிய உழவர்களை அங்காடியாற்றல்களின் அலைக்கழிப்பில் தூக்கி வீசி விட்டு அதுவும் அவர்களின் நன்மைக்காகவே என்று விளக்கம் சொல்வது… ஒரு பச்சைக் குழந்தையைக் கொடுங்குளிரில் கோரப்புயலில் வீசி விட்டு முடிந்தால் பிழைத்து வரட்டும் என்று சொல்வதைப் போன்றதுதான்! தக்கது பிழைக்கும் என்ற இயற்கைப் படிமலர்ச்சி நெறியைக் குமுக வாழ்வில் செயலாக்கி உழவரின் உயிரோடும் வாழ்வோடும் விளையாடி வேடிக்கை பார்க்க ஆட்சியும் அரசும் எதற்கு?
வேளாண் விளைபொருட்களை எடுத்துச் செல்வதற்கான கட்டுப்பாடுகள் அனைத்தும் இந்தச் சட்டங்களால் நீக்கப்படுகின்றன. மாநிலங்களுக்கிடையே மட்டுமல்ல, அந்தந்த மாநிலத்துக்குள்ளேயும் நீக்கப்படுகின்றன. இது உழவர்களுக்குக் கிடைத்துள்ள விடுமை (சுதந்திரம்) என்று பாசக பள்ளுப் பாடுகிறது! உண்மைதானா? உழவர் எங்கு வேண்டுமானலும் தன் விளைபொருளைக் கொண்டுபோய் விற்கும் விடுமை என்பதைத் திருப்பிப் போடுங்கள்.
வணிகர் எங்கு வேண்டுமானாலும் சென்று அல்லது செல்லாமலே கொள்முதல் செய்யும் விடுமைதான் இது என்பது தெரியவரும். இத்துடன் இணைய வழி வணிகமும் சேர்ந்து கொண்டால் என்னாகும்? பெருங்குழுமத் திமிங்கலங்களின் கொழுத்த ஈட்ட வேட்டைக்குச் சரியான தீனியாகிப் போகும். இது உள்நாட்டு அங்காடியோடு நில்லாது, உலக அங்காடி வரை நீளும். ஏனென்றால் இந்தப் பெருங்குழுமங்களுக்கு உலகமே ஆடுகளம். குளம் குட்டையிலே கிடந்த உன்னைக் கடலிலே தூக்கி வீசுகிறோம் பார் என்று உழவரிடமும் சொல்லிக் கொள்ளலாம்.
இந்த முச்சட்டங்களுக்குச் சப்பை கட்டுவோர் எப்படியெல்லாம் காற்றுக் கோட்டைகள் கட்டிக் காட்டுகின்றார்கள், பாருங்கள். சிறு குறு உழவர் ஒவ்வொருவரும் தன் விளைபொருளுக்குத் தானே விலை தீர்மானிக்கும் உரிமை இந்தச் சட்டங்களால் வரப் போகிறதாம்! கோட்டும் சூட்டுமாய் வரும் பன்னாட்டுப் பெருங்குழுமங்கள் கோவணம் கட்டிய உழவரின் முன்னே கைகட்டி நிற்கப் போவதாக ஒரு சித்திரிப்பு! கற்பனைக்கு ஏது எல்லை?
விளைபொருளுக்கு விலை தீர்மானிப்பது இருக்கட்டும், விளைபொருளையே உழவர் தீர்மானிக்க முடியாத நிலைக்கும் இந்தச் சட்டங்கள் வழிகோலுகின்றன. ஒப்பந்த வேளாண்மை என்பது உழவரைப் பெருவணிகரின் கையில் ஒப்படைப்பதாகும்.
உணவுக்காகவும் மக்களின் பிற தேவைகளுக்காகவும் வேளாண்மை என்ற நிலை போய்ப் பெருங்குழுமங்களின் ஈட்டத்துக்காகவே வேளாண்மை என்ற நிலை தோன்றும். ஆலைவாய்ப்பட்ட கரும்பின் நிலைக்குத்தான் உழவர் ஆளாவார்.
திருப்பூரில் ஏற்றுமதிக்காகப் பின்னலாடை தைக்கிறவர் எதைச் செய்ய வேண்டும், அதற்கு என்ன விலை வைக்க வேண்டும் என்பதையெல்லாம் தாமே தீர்மானிப்பது போன்ற மயக்கம்தான்… உழவர் தன் விளைபொருளுக்குத் தானே விலை தீர்மானிப்பது என்ற மாயையும்.
கல்விக் கொள்கை ஆனாலும், வேளாண் கொள்கை ஆனாலும் மக்களின் உரிமைகளை வெட்டிக் குறுக்கும் ஒவ்வொரு முயற்சியும் மாநில உரிமைகள் என்று அடக்க ஒடுக்கமாகக் குறிக்கபடும் தேசிய இன உரிமைகளை வெட்டிக் குறுக்கக் காண்கிறோம்.
வயலுக்கு வேலி! வயலடங்கிய ஊருக்கு வேலி! ஊரடங்கிய தேசத்துக்கு வேலி! உழவரின் உரிமையைக் காக்க தேசிய இறைமையின் தேவையையே இந்த முச்சட்டங்களின் தாக்குதல் எதிர்மறையாக உணர்த்தும்.
சுருங்கச் சொல்லின் வேலியில்லாத வேளாண்மையாகப் போகிறது உழவர் வாழ்வும் அவரைத் தொழுதுண்டு பின்செல்லும் நமது வாழ்வும்! இருக்கிற கொஞ்சநஞ்ச வேலிகளையும் உடைப்பதுதான் இந்த முச்சட்டங்களின் விளைவாக இருக்கப் போகிறது.
உழவரின் துயரம் தேசத்தின் துயரம் என்பது வெறும் சொல்வீச்சன்று. சேற்றில் கால் வைப்பவரின் வாழ்வில் ஒரு கேடென்றால் சோற்றில் கைவைக்கிற ஒவ்வொருரின் வாழ்விலும் அது கேடுதான் என்பதை உணரப் பெரிய பொருளியல் அறிவு ஏதும் தேவையில்லை.
உழவர்க்கு வேலியாக இருக்க வேண்டிய தமிழ்நாட்டரசு இந்த முச்சட்டங்களுக்கு முட்டுக் கொடுத்திருப்பது போதாதென்று, தானும் இதே வழியில் ஒப்பந்தப் பண்ணையச் சட்டம், தமிழ்நாடு வேளாண் விளைபொருள்கள் விற்பனை ஒழுங்குபடுத்தல் திருத்தச் சட்டம் எனப் புதிது புதிதாகச் சட்டமியற்றித் தமிழ்நாட்டு உழவர்களுக்கு இரண்டகம் செய்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம்.
வேலியுடைக்கும் வேளாண் சட்டங்களைத் தடுத்து முறிடிப்பதன் மூலம் உழவு காப்போம்! உழவர் காப்போம்! நம்மை நாமே காத்துக் கொள்வோம்!
- தியாகு