கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இந்திய மற்போர் வீரர்களான சாக்சி மாலிக், வினேசு போகப், பஜ்ரங் புனியா உள்ளிட்ட வீரர்கள் இந்திய மற்போர் கூட்டமைப்பின் தலைவரும் பா.ச.க. வின் உத்தரப்பிரதேசம் கைசர் கஞ்ச் தொகுதியின் நாடாளு மன்ற உறுப்பினருமான பிரிச் பூசன் சரன்சிங் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை முன் வைத்து போராடி வருகின்றனர்.

காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என இரண்டிலும் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றவர் மற்போர் வீராங்கனை வினேசு போகப். இவர் பல ஆண்டுகளாக பெண் மற்போர் வீராங்கனைகளைப் பயிற்சியாளர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய தாக வெளிப்படையாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்திய மற்போர் கூட்டமைப்பின் தலைவரான பிரிஜ் பூசனால் மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியதாக 10 புகார்கள் வந்துள்ளன. இவர்களுக்கு ஆதரவாக 30-க்கும் மேற்பட்ட வீரர்கள் போராடத் தொடங்கினர்.

மற்போர் வீரர்களின் போராட்டத்தை கண்டுகொள் ளாத தில்லி காவல் துறை அவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று கூறியது. நீதிமன்றம் எழுப்பிய கடுமையான கேள்விகளுக்குப் பிறகு வழக்கு பதிந்தது காவல்துறை. குற்றம் சாட்டப்பட்ட வீரர்களில் ஒருவர் சிறுமி என்பதால் போக்சோ சட்டத்தின் கீழும் வழக்கு பதியப்பட்டது. ஆனால் அதற்கு மேல் நடவடிக்கை எடுக்கவில்லை.indian wrestlersபோக்சோ வழக்கில் பாதிக்கப்பட்டவர் குற்றவாளியின் பெயரை சொன்னாலே அவரைக் கைது செய்து விசாரிக்கலாம் என்கின்றன நீதிமன்றங்கள். ஆனால் பிரிஜ் பூசனுக்கு மட்டும் தில்லி காவல் துறையும் மோதியின் ஒன்றிய அரசும் கைது செய்யாமல் குற்றவாளிக்குத் துணை செல்கிறது. பிரிஜ் பூசனோ போக்சோ சட்டம் சரியில்லை; அதை மாற்றச் சொல்லி அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன் என்கிறார்.

குத்துச்சண்டை வீரர் மேரி கோம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாக இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது. இதனால் கோபமடைந்த வீரர்கள் மீண்டும் தில்லி ஜந்தர் மந்தரில் போராடத் தொடங்கினர்.

ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர்ந்து போராடி வரும் வீரர்களின் குற்றச்சாட்டை செவிகொடுக்க மறுக்கும் மோதியின் தலைமையிலான அரசு, வீரர்களின் போராட்டத்தை அடக்கி ஒடுக்குகிறது. இந்தியாவிற்காக விளையாடி பதக்கங்களை வென்று பெருமை சேர்த்த வீரர்களுக்கு எதிராகச் செயல்படும் இந்திய ஒன்றிய அரசின் கொடுஞ்செயலைப் பன்னாட்டு மற்போர் கூட்டமைப்பு கண்டித்துள்ளது.

எனது நாடாளுமன்றம் எனது பெருமை என்ற  வெற்று முழக்கத்தோடு இந்துத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படும் சாவர்க்கரின் பிறந்த நாளான மே 28 அன்று புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைத்தார் மோதி, விழாவில் பேசிய மோதி, அந்நிய ஆட்சியின் சின்னத்தி லிருந்து விடுபட்டு புதிய இந்தியாவில் அடியெடுத்து வைக்கின்றோம்; செங்கோல் நாடாளு மன்றத்தில் இன்று நிறுத்தி யுள்ளோம்; சோழர் ஆட்சியில் இந்த செங்கோல் நீதி, நேர்மை, நல்ல நிர்வாகம் ஆகியவற்றை அடையா ளப்படுத்துகின்ற ஒன்றாக விளங்கியுள்ளது. உலகில் வேறெங்கும் இல்லாத மக்கள் நாயகப் பண்பை இந்தியா கட்டிக்காக்கிறது என்று முழங்கினார்.

அதே நாளில்தான் மற்போர் வீரர்கள் புதிய நாடாளு மன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல திட்டமிட்டி ருந்தனர். இப்பேரணியில் பங்கேற்க விவசாய சங்கங் களும் ஆதரவு தெரிவித்திருந்தது. ஆனால் போராட்டக் களத்திலிருந்து வெளியேறும் அனைத்து வழிகளையும் அடைத்த தில்லி காவல்துறையின் தடையை மீறிச் செல்ல முயன்றவர்களை அடித்து, துன்புறுத்தி, கைது செய்த தில்லி காவல்துறையும் அதிவிரைவுப் படையும், போராட்டக் களத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டகைகளையும் உடைமைகளையும் அடித்து நொறுக்கியது. நேர்மை, நல்ல நிர்வாகம், மக்கள் நாயகம் என்று புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைத்து பிரதமர் மோதி முழக்கமிட்டுக் கொண்டிருந்த நேரத்தில்தான் அந்த இடத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் இந்தியாவின் தலைநகரில் இந்தியாவின் மகள்களான மற்போர் வீரர்களின் போராட்டத்தை ஒடுக்கியது.

ஒன்றிய அரசின் இந்தக் கொடுஞ்செயலால் மனமு டைந்த வீரர்கள் தாங்கள் வென்ற பதக்கங்களை அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கங்கையில் வீசப்போவதாக அறிவித்தனர். அதன்படி உத்தரகண்டு மாநிலம் அரித்துவாருக்குச் சென்ற அவர்களைப் பாரதிய கிசான் யூனியன் தலைவர் நரேசு திகாயத் தடுத்து நிறுத்தினார். உங்களின் போராட்டத்திற்கு நாங்கள் துணையாக நிற்கிறோம். பதக்கத்தை கங்கையில் வீசும் முடிவைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டார். அதோடு 5 நாள்களில் இந்தச் சிக்கலுக்குத் தீர்வுகாண ஒன்றிய அரசுக்குக் கெடு விடுத்தனர். இதை ஏற்று வீரர்கள் தங்களின் முடிவை நிறுத்தி வைத்தனர். சூன் 15ஆம் தேதிக்குள் விசாரணை முடிக்கப்படும் என்று ஒன்றிய அரசு உறுதியளித்துள்ள நிலையில் தற்காலிக மாகப் போராட்டத்தை நிறுத்தி வைத்துள்ளனர். வீரர்களுக்கு ஆதரவாக காங்கிரசின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேரில் சென்று ஆதரவைத் தெரி வித்தார். பஞ்சாப் விவசாயிகள் சங்கம் நேரில் சென்று வீரர்களோடு போராடினார்கள். அனைத்து எதிர்க்கட்சி களும் வீரர்களுக்கு ஆதரவாக ஒன்றிய பா.ச.க. அரசைக் கண்டித்துள்ளனர். இவ்வளவு போராட்டம், எதிர்ப்பிற்குப் பிறகும் மோதி அரசு பிரிச்சு பூசனை கைது செய்யாமல் காப்பாற்றுகிறது.

2004ஆம் ஆண்டு பிரிஜ் பூசனின் மூத்த மகன் சக்தி சரண், தன் தந்தை உரிமம் பெற்று வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். சுட்டுக் கொள்வதற்கு முன் சக்தி சரண் எழுதியிருந்த கடிதத்தில், நீங்கள் நல்ல தந்தையாக நடந்துகொள்ள வில்லை; எங்களை நீங்கள் பொறுப்புடன் கவனிக்க வில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். பிரிஜ்பூசன் பல ஆண்டுகள் ஒரு ‘தாதா’ போல் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுதான் பிரிஜ் பூசனின் கடந்தகால வரலாறு. எனவே இவர் மற்போர் வீரர்களிடம் எவ்வாறு நடந்துகொண்டிருப்பார் என்பதை நாம் அறியமுடியும்.

செவிசாய்க்காத மோதி

இந்த நாட்டில் எது நடந்தாலும், எந்தக் குற்றச் சாட்டுக்கும் மக்கள் எவ்வளவு துன்பப்பட்டாலும் எதற்கும் பதில் சொல்வதில்லை என்ற ஆணவத்தில் பாசிசத்தின் முகமாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோதி, தன் தலைமையிலான அரசும் தன் கட்சிக்காரர்களும் செய்யும் எந்தத் தவறையும் உணர மறுப்பவராக இருப்பது தான். பிரிஜ் பூசன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு காரணம்.

இதுபோல், தனி மனித உரிமைகளுக்காகவும் கருத்துரிமைக்காகவும் சமூக நீதிக்காகவும் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயக உரிமைகளை நிலை நாட்டுவதற்காகவும் இந்தியா முழுவதும் நடத்தப்படும் எண்ணற்றப் போராட்டங்களை பாசிச மோதி ஆட்சி கொடுமையான முறையில் ஒடுக்கி வருகிறது.

பா.ச.க. அரசின் செயல்பாட்டையும் மோடியையும் எதிர்ப்பவர்கள் இந்த நாட்டிற்கு எதிரானவர்கள் என்றும் இந்து, இந்தி, சமற்கிருதம், தேசபக்தி என்று இந்துத்துவ மயமாக்கி சனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கும் பாசிச பா.ச.க. மோடி ஆட்சியை ஒழித்து, சமத்துவத்தையும் சமூக நீதியையும் சன நாயகத்தையும் கூட்டாட்சிக் கோட்பாட்டையும் நிலை பெறச் செய்ய வேண்டியது முற்போக்குச் சிந்தனை கொண்ட அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள், குடிமை அமைப்புகள் முதலானவற்றின் முதன்மையான கடமையாகும். இது காலத்தின் அவசரத் தேவை.

- நா.மதனகவி