2015 ஆகஸ்ட் 25ம் தேதி குஜராத்தில் தொடங்கிய உயர்சாதி பட்டேல் மக்கள் தங்களையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து மத்திய மாநில அரசுகளின் இட ஒதுக்கீடு சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மீதான போராட்டங்களால் குஜராத் மாநிலம் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. குஜராத் மாநிலத்தில் 146 சாதியினர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டு உயர் கல்வி நிறுவனங்களிலும் அரசு வேலை வாய்ப்புகளிலும் மண்டல் கமிசன் பரிந்துரைகளின் அடிப்படையில் 27% இடஒதுக்கீடு சலுகையை அனுபவித்து வருகிறார்கள்.

hardik patel agitationகுஜராத் மக்களிடையே பட்டேல், பார்ப்பனர் மற்றும் பனியா சாதிகளைச் சேர்ந்தோர் உயர்சாதி இந்துக்களாக வரையறுக்கப்பட்டு அவர்களுக்கு மண்டல் கமிசன் இடஒதுக்கீடு சலுகை வழங்கப்படவில்லை.

குஜராத் மாநிலத்தில் வைர வியாபாரம், சுரங்கத் தொழில், தொழிற்சாலைகள், உணவு தானியங்கள் மொத்த வியாபாரம், ஒட்டல் தொழில், பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் அனைத்தும் மேற்படி மூன்று உயர் சாதியினரைச் சேர்ந்த பிரமுகர்கள் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

இந்த மூன்று உயர்சாதி இந்துக்களில் பட்டேல் சாதியை சேர்ந்தவர்கள் மட்டும் குஜராத் மக்கள் தொகையில் 13% உள்ளனர் என்று 2011ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பட்டேல் சாதியைச் சேர்ந்த மக்களில் பெரும்பான்மையோர், குறிப்பாக இளைஞர்கள் ஹர்திக் பட்டேல் என்ற 22 வயது இளைஞன் தலைமையில் தீவிரமான போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். குஜராத் தலைநகரான அகமதாபாத், சூரத், வகோதரா, மேஸ்னா, உட்பட 12 மாவட்டங்களில் பட்டேல்களை திரட்டி பேரணிகளை நடத்தியிருக்கிறார்கள்;. ஆகஸ்ட் 25ம் தேதி தலைநகர் அகமதாபாத்தில் நடைபெற்ற பேரணியில் சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொண்டார்கள்.

எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், திடீரென ஹர்திக் பட்டேல் மற்றும் சில இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்த காரணத்தால் ஆகஸ்ட் 25ம் தேதி மாலை கைது செய்யப்பட்டார்கள். இதனால் பெரிய கலவரம் ஏற்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டார்கள். செய்திக்பட்டேல் என்ற ஒரு இளைஞர் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பொழுது மர்மமான முறையில் மரணமடைந்தார்.

இடஒதுக்கீடு போராட்டத்தை வடமாநிலங்கள் முழுவதும் விரிவாக கொண்டு செல்ல, ஏற்கனவே இடஒதுக்கீடு கேட்டு போராடி வரும் ஜாட் மற்றும் குஜ்ஜார் உயர்சாதி சங்கங்களின் தலைவர்களை ஹர்திக் பட்டேல் சந்தித்துப் பேசியிருக்கிறார். அவர்களையும் இணைத்துக் கொண்டு போராட்டக் களத்தை விரிவுபடுத்தும் திட்டம் தொடங்கியிருக்கிறது. குஜராத் மாநிலத்தில் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லும் காய்கறிகள் மற்றும் பால் விநியோகத்தை பட்டேல் சாதி மக்கள் தடுத்திருக்கிறார்கள். மேலும் தங்களது இடஒதுக்கீடு கோரிக்கையை மத்திய மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ளாததால் 1.17 கோடி பட்டேல் சாதி மக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் வைத்திருக்கும் அனைத்து தொகைகளையும் திரும்ப பெற்றுக் கொள்ளப் போவதாகவும், அதனால் குஜராத் மாநிலத்தில் நிதி நிலை மற்றும் வியாபார நடவடிக்கைகளை ஸ்தம்பிக்கச் செய்யப் போவதாகவும் மிரட்டியிருக்கிறார்கள்.

இந்த இட ஒதுக்கீடு போராட்டத் தளபதி ஹர்திக் பட்டேல் ஆகஸ்ட் 30ந் தேதி டெல்லியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் தனக்கு எந்த அரசியலும் இல்லை என்றும், ஆனால் தங்களுடைய போராட்டத்திற்கு சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் சிவசேனாவில் பால்தாக்கரே ஆகியோர்தான் வழிகாட்டிகள் என்றும் சொல்லியிருக்கிறார்.

“பட்டேல் சாதியையும் 27% இட ஒதுக்கீடு பெற்றிருக்கும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளவேண்டும் அல்லது சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் நடைமுறையை மத்திய மாநில அரசுகள் வாபஸ் பெற்றுக் கொள்ளவேண்டும் என்பது தான் தங்களது போராட்டத்தின் நோக்கம்” என்றும் சொல்லியிருக்கிறார் ( 31.8.2105 – தி இந்து ஆங்கில நாளேடு)

ஹர்திக் பட்டேலின் இந்த கருத்துக்கள், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு முழு உடன்பாடு என்று ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்களில் ஒருவரும், தத்துவ வழி காட்டிகளில் ஒருவருமான எம்.ஜி.வைத்தியா கருத்து தெரிவித்திருக்கிறார். சாதிகள் அடிப்படையில் இட ஒதுக்கீடு சலுகை வழங்குவதற்குப் பதிலாக ஒவ்வொரு சாதியினருக்கும் பொருளாதாரத்திற்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்குவதுதான் சிறந்தது என்றும், அவ்வாறு செய்தால் இந்துகள், முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் உட்பட அனைத்துப் பிரிவுகளிலும் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்போருக்கு இடஒதுக்கீடு சலுகை கிடைக்கும் என்றும் எம்.ஜி.வைத்தியா தெரிவித்திருக்கிறார்.

இன்று நடைமுறையில் இருக்கும் இடஒதுக்கீடு சலுகைளை, சாதியின் அடிப்படையில் வழங்குவதன் காரணமாக ஒரு முதலமைச்சரின் மகனுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர் மகனுக்கும் இடஒதுக்கீடு சலுகை வழங்க வேண்டியிருக்கிறது. சாதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதால் இந்த சமுகத்தில் சாதிகள் ஒழியாது என்றும் மக்களிடையே பிளவும், விரோதமும் நீடிக்கும் என்றும் சில கருத்துக்கள் சொல்லியிருக்கிறார்கள். ( 31.8.2015 – தி இந்து ஆங்கில நாளேடு)

பட்டேல் சாதியினர் போராட்ட தளபதி 22 வயது ஹர்திக் பட்டேலும் மற்றும் 80 வயது மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் எம்.ஜி.வைத்தியாவும், பிற்படுத்தப்பட்ட சாதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் இடஒதுக்கீடு சலுகை கிடைக்க வேண்டும் என்றும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதுபோல் சிலர் நினைக்கக் கூடும். ஆனால் அவர்களது உள்நோக்கம் வேறு.

பட்டேல் சாதியினரின் இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்தி 1950ம் வருடத்தில் அரசியல் சட்டம் அமுலுக்கு வந்த காலத்திலேயே பட்டியல் சாதி மக்களுக்கு கிடைத்து வந்த 15%, மலைவாழ் மக்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டையும், பின்னர் மண்டல் கமிசன் மூலம் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு கிடைத்துவரும் 27% இடஓதுக்கீடு சலுகையையும் முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவதுதான் இவர்களது உள்நோக்கம்.

“பிற்படுத்தப்பட்ட சாதியினர் யார் என்று கண்டறிவதற்கு ஒவ்வொரு சாதியிலும் படித்தவர்கள் எண்ணிக்கை, சமூகத்தில் அவர்கள் பின்தங்கியுள்ள சூழ்நிலை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். பொருளாதார அந்தஸ்தை மட்டும் அடிப்படையாக வைத்து கொள்ளக் கூடாது” எனும் மண்டல் கமிசன் பரிந்துரையை உச்ச நீதிமன்ற 11 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் ஏற்கனவே உறுதிபடுத்தியிருக்கிறது. இந்த இடஒதுக்கீடு சலுகைகள் காரணமாகத் தான் பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளிலிருந்து வந்த ஒருசில இளைஞர்களுக்கு ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

ஒரு சிலர் மாவட்ட ஆட்சித் தலைவரர்களாககவும், காவல் துறையில் உயர் அதிகாரிகளாகவும் வர முடிந்தது. 1985 மற்றும் 1990 களில் இதே பட்டேல், பார்ப்பனர், பனிபா, ஜாட் மற்றும் குஜ்ஜார் சாதிகளைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இடஒதுக்கீடுக்கு எதிராக வட மாநிலங்களில் பெரும் போராட்டங்களை கட்டவிழ்த்துவிட்டனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. எஸ்.சி. , எஸ்.டி மற்றும் பி. சி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு சலுகைகள் காரணமாக ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு கிடைத்ததை கண்டித்து டெல்லி, மும்பை, கான்பூர், கொல்கத்தா மற்றும் சில வட மாநில நகரங்களில், தெருக்களில் இறங்கி மிகக் கேவலமாக போராட்டங்களை நடத்தினர்.

ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட்டு அணிந்த உயர்சாதி மாணவர்கள் மற்றும் மாணவிகள் தள்ளுவண்டியில் காய்கறிகள் விற்பதைப் போலவும், தெருவோரத்தில் அமர்ந்து ஷீவுக்கு பாலிஸ் போடுவது போலவும், பெரிய பெரிய விளக்குமாறுகளால் தெருக்களை சுத்தம் செய்வது போலவும் நடித்துக்காட்டி தொலைகாட்சியில் பேட்டி அளித்ததை நாம் மறந்துவிட முடியாது. இந்த உயர்சாதி மாணவர்களின் அவமானப்படுத்தும் நடவடிக்கைகளால் ஒரு எஸ்.சி. மற்றும் எஸ்.டி. மாணவர்கள், விடுதிகளில் தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவங்களை நாம் மறந்துவிடக் கூடாது.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் நீதிக்கட்சி ஆட்சியிலிருந்த 1920ம் ஆண்டிலிருந்து குறைந்தபட்ச இடஒதுக்கீடு சலுகை கிடைத்து வந்தது. இந்த சலுகை 1950ல் சென்னை உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளால் சட்ட விரோதமானது என்று ரத்து செய்யப்பட்டபோது, கொதித்து எழுந்த தந்தை பெரியார் அறிவித்த போராட்டத்தின் மூலம்தான் அரசியல் சட்டத்தில் முதலாவது திருத்தமே நிறைவேற்றப்பட்டது என்பது வரலாறு.

இந்திய சமூகத்தில் மனுநீதி மற்றும் கீதையின் அடிப்படையில், பிறப்பால் உயர்தாழ்வு கற்பிக்கும் படிநிலை சாதிகள் அமைப்பு முறை நீடிக்கும் வரை இடஒதுக்கீடு சலுகை நீடிக்க வேண்டும். இதற்கான போராட்டம் தீவிரமாக தொடங்க வேண்டிய இடம் தமிழகம்தான். அத்தகைய போராட்டத்திற்கு தலைமை தாங்க வேண்டிய வரலாற்றுக் கடமை தாழ்த்தப்பட்டவர்கள், மலைசாதி மக்கள், பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள் அடங்கிய புதியதோர் கூட்டணிக்கு இருக்கிறது என்று நம்முடைய இளைஞர்களுக்கு நாம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய நேரமிது.

- கே.சுப்ரமணியன்

Pin It