கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

குஜராத்தில் படேல் இனத்தினர் நடத்திய கலவரம் மீண்டும் இட ஒதுக்கீடு பற்றிய விவாதங்களைக் கிளப்பிவிட்டுள்ள இவ்வேளையில்… என நான் இந்தக் கட்டுரையைத் தொடங்கினால் அது பொய்யாகி விடும்!

 இட ஒதுக்கீடு பற்றிய விவாதங்கள் எப்பொழுதுமே இங்கு நடந்தபடிதான் இருக்கின்றன. இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டவர்களாகத் தங்களைக் கருதுபவர்களும் சரி, அந்தத் திட்டத்தினால் பலனடைபவர்களும் சரி, இட ஒதுக்கீட்டை இழிவான ஓர் ஏற்பாடாகத்தான் பார்க்கிறார்கள்.

caste system 500

இன்றுதான் என்றில்லை, இட ஒதுக்கீட்டுச் சட்டம் ஏற்படுத்தப்பட்டது முதலே அது இப்படிக் கொஞ்சம் கீழ்ப் பார்வையில்தான் அணுகப்படுகிறது என்பதை நம் தாத்தா-பாட்டிகள், அப்பா-அம்மாக்கள் போன்ற முந்தைய தலைமுறையினர் இது பற்றிப் பேசும்பொழுது அறியலாம்.

ஊடகம் என்பது அரசு – தனியார் நிறுவனங்களிடம் மட்டுமே இருந்த காலத்தில் பொதுமக்களிடம் இப்படி ஒரு கருத்து நிலவியது பெரிய பாதிப்பை சமூக அளவில் ஏற்படுத்தவில்லை (அல்லது அப்படி ஏற்பட்டது வெளியில் தெரியவில்லை). ஆனால், சமூக வலைத்தளங்கள் கோலோச்சும் இக்காலக்கட்டத்தில் ஊடகம் என்பது ஒவ்வொரு தனி ஆளுடைய கையிலும் இருக்கிறது. தனி ஒரு மனிதர் நினைத்தால் கூடத் தன் கருத்தை உலகமெங்கும் ஒரே நேரத்தில் பார்வைக்கு முடிகிற இற்றை நாளில், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வையே தீர்மானிக்கக்கூடிய இட ஒதுக்கீடு போன்ற விதயங்கள் பற்றிப் பொதுமக்களிடம் தவறான புரிதல் இருப்பது எவ்வளவு அபாயகரமானது என்பதன் கண்கூடான எடுத்துக்காட்டுதான் படேல் இனத்தினரின் கலவரம்.

சூலை மாதம் தொடங்கப்பட்ட ஓர் இயக்கம், இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துடையவர்களை ஒரே மாதத்தில் திரட்டி, நாடே திரும்பிப் பார்க்கக்கூடிய அளவுக்கு இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டத்தை அடுத்த ஆகஸ்டிலேயே நிகழ்த்த முடிந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் சமூக வலைத்தளங்கள்.

சமூக நீதியை நிலை நாட்டுவதற்காக எத்தனையோ போராளிகளும் அறிஞர்களும் அரும்பாடுபட்டு உருவாக்கிய இட ஒதுக்கீட்டுச் சட்டம் பற்றி மொத்த சமூகமும் தவறாகப் புரிந்து கொண்டிருப்பதை இனியும் வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது; இது பற்றி இன்றைய படித்த இளைஞர்கள் எழுப்பும் கிடுக்கிப்பிடிக் கேள்விகளுக்குப் பதிலளித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை இனியாவது சமூக ஆர்வலர்களும், தலைவர்களும், அறிஞர் பெருமக்களும், அரசும் உணர வேண்டிய தறுவாய் இது!

சமூகத்தின் மீது அக்கறை உள்ளவன் எனும் முறையில், இட ஒதுக்கீடு பற்றிக் காலங்காலமாக எழுப்பப்பட்டு வரும் கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்த விளக்கங்களை இங்கு முன்வைக்கிறேன்.

கேள்வி # ௧ (1): அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டிய அரசு, இட ஒதுக்கீடு எனும் பெயரில் ஒரு தரப்பினருக்கு மட்டும் சலுகைகளை வாரி வழங்குவது முறையா?

நான் பார்த்த வரையில், நம் சமூகத்தில் மிகப் பெரும்பாலானோர் இட ஒதுக்கீட்டை சலுகை என்றுதான் நினைக்கிறார்கள். அதுவே முதல்பெரும் தவறு! இட ஒதுக்கீடு என்பது சலுகையே இல்லை. அனைவருக்கும் சரிநிகராக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கான நுட்பமான ஓர் ஏற்பாடு அது, அவ்வளவுதான்.

ஓட்டப் போட்டி (running race) பார்த்திருக்கிறீர்களா? அதில் வீரர்களை எப்பொழுதும் நேர்க்கோட்டில் நிறுத்த மாட்டார்கள். ஒருவர் பின் ஒருவராகத்தான் நிறுத்துவார்கள். ஏன்? இப்படி நிறுத்தினால், முன்னால் நிற்பவர் முதலில் ஓடிப் போய் எல்லைக்கோட்டைத் தொட்டு விட மாட்டாரா? அப்படியானால், ஓட்டப் போட்டிகளில் முதலில் நிற்பவர்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது எனப் பொருளா?

அப்படி இல்லை! ஓட்டப்போட்டிகள் நடத்தப்படும் திடல்கள் (மைதானங்கள்) எப்பொழுதும் வட்ட அல்லது நீள்வட்ட வடிவில்தான் இருக்கும். ஒரு வட்டம், அதற்குள் இன்னொரு வட்டம் என வரையும்பொழுது ஒன்றை விட ஒன்று சிறிதாக இருப்பது இயல்பு. ஓட்டப்போட்டித் திடல்களும் இப்படித்தான். அவற்றில் ஓடுதடங்கள் (runways) வட்ட அல்லது நீள்வட்ட வடிவில் ஒன்றுக்குள் ஒன்றாக அமைந்துள்ளன. இந்நிலையில் எல்லோரையும் ஒரே நேர்க்கோட்டில் நிறுத்திப் போட்டியை நடத்தினால், ஓட வேண்டிய தொலைவு ஒவ்வொருவருக்கும் வேறுபடும். திடலின் உள்வட்ட ஓடுதடத்தின் சுற்றளவு குறைவாகவும், அதற்கு அடுத்தடுத்த ஓடுதடங்களின் சுற்றளவு கூடுதலாகவும் இருப்பதால், உள்வட்டத்தில் ஓடுபவரை விட வெளிவட்டத்தில் ஓடுபவர் கூடுதலான தொலைவைக் கடக்க வேண்டியிருக்கும். இதனால்தான் ஓட்டப்போட்டிகளில் எப்பொழுதும் ஒருவர் பின் ஒருவராக வீரர்கள் நிற்க வைக்கப்படுகிறார்கள்.

இட ஒதுக்கீடு என்பதும் இப்படித்தான் நண்பர்களே!

தலைமுறை தலைமுறையாகப் படித்த குடும்பத்திலிருந்து வரும் மாணவரையும், பற்பல தலைமுறைகளாகக் கல்வி உரிமையே மறுக்கப்பட்டு இந்தத் தலைமுறையில் முதல் ஆளாகப் படிக்க வரும் மாணவரையும் எப்படி ஒரே நேர்க்கோட்டில் நிறுத்தி இந்த சமூகப் போட்டியில் ஓட விட முடியும்? அது எப்படி முறையாகும்? அதனால்தான் இட ஒதுக்கீடு எனும் பெயரால் சிலர் சற்று முன்னே நிறுத்தப்படுகிறார்கள்.

நெஞ்சைத் தொட்டுச் சிந்தித்துப் பாருங்கள் தோழர்களே! முற்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் அன்றும் இன்றும் இடையிலும் தொடர்ந்து கல்வி கற்றவர்களாகத்தான் இருக்கிறார்கள். வெள்ளையர்கள் வருகைக்கு முன்பான தமிழ் அரசர்கள் காலத்தில் இருந்த குருகுலக் கல்வி முறையிலாகட்டும், பிரிட்டிஷ் இந்தியா காலத்தின் திண்ணைப் பள்ளிக்கூடக் காலத்திலாகட்டும், விடுதலை பெற்ற இந்தியாவிலாகட்டும், முற்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து கல்வி பயின்றுதான் வருகிறார்கள். அப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து படிக்க வருகிற மாணவர்களுக்கு மரபணு வாயிலாகவே கல்வியறிவு ஓரளவுக்கு உண்டு. படிப்பு என்பது அவர்கள் குருதியில் (blood) ஊறியது. தவிரவும், படிப்பில் ஏதாவது ஐயங்கள் எழுந்தால் கற்பிக்க அவர்களுக்கு வீட்டிலேயே ஆட்கள் உண்டு. படிக்கிற பிள்ளைக்கு எப்படிப்பட்ட சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என்கிற புரிதல் அவர்கள் குடும்பத்தினருக்கு உண்டு. கல்வி என்பது வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு இன்றியமையாதது என்பதை உணர்ந்த பெற்றோர்கள் அவர்களுக்கு உண்டு. வீட்டிலும் வெளியிலும் அவர்கள் பழகும் இடங்களில் படித்த சமூகச் சூழல் அவர்களுக்கு உண்டு. என்ன படிக்க வேண்டும், எப்படிப் படிக்க வேண்டும், எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவெல்லாம் வழிகாட்ட நிறைய பேர் அவர்களுக்கு உண்டு.

இதுவே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை எடுத்துக் கொண்டால், பெரும்பாலும் அவர்களின் பெற்றோர்கள் படித்தவர்களாக இல்லை. படிப்பில் ஏதாவது ஐயம் ஏற்பட்டால் தனியாகச் செலவு செய்து மாலை வகுப்புகளுக்குச் செல்ல வேண்டிய நிலை. சரியாகப் படிக்காவிட்டால், பெரியவர்களை மதித்து நடக்காவிட்டால் எந்நேரமும் படிப்பு நிறுத்தப்படுகிற சூழல்.

இப்படி மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடுகள் கொண்ட இருவேறு பின்னணிகளிலிருந்து வருகிற இந்த மாணவர்களில், கல்விக்கு உகந்த சூழல் இல்லாத இடத்திலிருந்து வரும் மாணவர் எடுக்கும் ஐம்பது மதிப்பெண்ணும், முழுக்க முழுக்கக் கல்வி சார்ந்த பின்னணியிலிருந்து வருகிற மாணவர் எடுக்கும் நூறு மதிப்பெண்ணும் ஒன்றா என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்! உண்மையில், உவப்பில்லாத (adverse) பின்னணியிலிருந்து வரும் மாணவர் எடுக்கும் அந்த ஐம்பது மதிப்பெண், நல்ல பின்னணியிலிருந்து வரும் மாணவர் எடுக்கிற நூறு மதிப்பெண்ணை விடப் பெரியது இல்லையா? அப்படிப்பட்ட மாணவர்களுக்கு மற்றவர்களை விட மதிப்பெண் தகுதியைக் (mark eligibility) குறைத்து வரையறுப்பது எப்படித் தவறாகும்?

அப்பாவோ அம்மாவோ படித்தவர்களாக இல்லாத நிலையில் ஆங்கிலம், கணிதம், இந்தி என ஒவ்வொரு பாடத்துக்கும் தனித் தனியே சிறப்பு வகுப்புகளுக்குச் செலவழித்துப் படிக்க வேண்டியிருக்கிற இட ஒதுக்கீட்டு வகுப்பினரிடம், முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களை விடக் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் கட்டணத்தைக் குறைத்து வாங்குவது எப்படி சலுகையாகும்?

சரியான சூழல் இல்லாததால் படிக்க முடியாமல் தேர்வுகளில் தோல்வியுறுவது, கல்வி இடைநிறுத்தப்படுவது போன்ற பல காரணங்களால் உரிய வயதுக்குள் படிப்பை முடிக்க முடியாத அவர்களுக்காக வயது வரம்பைத் (age limit) தளர்த்துவது எப்படிப் பாகுபாடு (discrimination) ஆகும்?

இப்பொழுது, இவற்றையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு சொல்லுங்கள்! இட ஒதுக்கீடு என்பது சலுகையா?

கேள்வி # ௨ (2): ஏழைகள் எல்லா சாதிகளிலும்தான் இருக்கிறார்கள். அப்படியிருக்க, குறிப்பிட்ட சாதிகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்குவது ஏன்?

இப்படிக் கேட்கும் நாம் முதலில் ஒரு விடயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்! இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் தற்பொழுது கடைப்பிடிக்கப்பட்டு வருவது சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக் கொள்கைதானே தவிர, பொருளாதார அடிப்படையிலானது இல்லை. காரணம், இன்னின்ன சாதிகளைச் சேர்ந்தவர்கள் படிக்கக்கூடாது, இன்னின்ன சாதிகளைச் சேர்ந்தவர்கள் இன்னின்ன தொழில்களை மட்டும்தான் செய்ய வேண்டும் என்று நூற்றாண்டுக் கணக்காக இருந்து வந்த, வருகிற அடக்குமுறைகள் அனைத்தும் சாதியை அடிப்படையாகக் கொண்டுதான் கட்டமைக்கப்பட்டனவே தவிர, பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு இல்லை. ஏழை என்கிற காரணத்தால் யாருக்கும் கல்வி மறுக்கப்படவில்லை, குறிப்பிட்ட சாதியில் பிறந்தவர் என்கிற காரணத்தைக் காட்டித்தான் மறுக்கப்பட்டது. எனவேதான், அதே சாதிய அடிப்படையில் இட ஒதுக்கீடும் வழங்கப்படுகிறது. இங்கு மட்டுமில்லை, தென் ஆப்பிரிக்கா, மலேசியா என நிறம், இனம், பாலினம் போன்ற பிறப்பு அடிப்படையிலான காரணங்களைக் காட்டி எங்கெல்லாம் உரிமைகள் மறுக்கப்படுகின்றனவோ அப்படிப்பட்ட நாடுகளிலெல்லாம் பாதிக்கப்பட்ட சமூகத்தினரை மேலே கொண்டு வர அவர்களுக்கெனத் தனியே ஒதுக்கீடு வழங்குவது வழக்கமான ஒன்றுதான்.

கேள்வி # ௩ (3): இட ஒதுக்கீடு பெறும் சாதிகளிலும் வசதி படைத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்; முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களிலும் ஏழைகள் பலர் இருக்கிறார்கள். அப்படியிருக்க, இட ஒதுக்கீட்டை சாதி அடிப்படையில் செயல்படுத்தி வசதி படைத்தவர்களும் அதன் பலனைப் பெறும்படியும், உண்மையாக அரசு உதவி தேவைப்படும் ஏழைகள் பலருக்கு அது கிடைக்காமல் போகும்படியும் செய்வது எப்படி முறையாகும்?

இட ஒதுக்கீடு பெறும் சாதிகளைச் சேர்ந்தவர்களில் வசதியுள்ளவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். ஆனால், அவர்களில் எத்தனை பேர் படித்தவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் கேள்வி.

முதல் தலைமுறை மாணவர்கள், படிப்பதற்கு எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை மேலே பார்த்தோம். அவை அனைத்தும் கல்வி உரிமை மறுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பணக்கார வீட்டுப் பிள்ளைகளுக்கும் பொருந்தும்தானே? எனில், இதில் ஏழை – பணக்கார வேறுபாடு எங்கிருந்து வந்தது?

இட ஒதுக்கீடு என்பது ஏழைகளைக் கைதூக்கி விடுவதற்கானதாக இருந்தால், ‘பிற்படுத்தப்பட்டோர் (BC)’ எனும் ஒரு பிரிவை இட ஒதுக்கீட்டின் கீழ்க் கொண்டு வர வேண்டிய தேவையே இல்லையே. ஏனெனில், இந்தப் பிரிவில் வருகிற பெரும்பாலோர் நாடார், நாயக்கர், கவுண்டர், மணியக்காரர் என ஆண்ட சாதியைச் சேர்ந்தவர்கள்தான். தலைமுறை தலைமுறையாகப் பண்ணையார்களாகவும், சமீன்தார்களாகவும், ஊரை ஆளும் தலைவர்களாகவும் இருந்த, இருக்கிற இவர்கள் யாரும் வசதியில்லாதவர்கள் கிடையாது. அப்படியிருந்தும், இவர்களையும் இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் சேர்க்கக் காரணம், இவர்களும் படிக்காதவர்கள்தான் என்பதால்தான்.

ஆக, முன்பே கூறியபடி, இந்த இட ஒதுக்கீட்டுச் சட்டமே, குறிப்பிட்ட சாதியில் பிறந்து விட்ட ஒரே காரணத்துக்காகக் கல்வி உரிமை மறுக்கப்பட்ட, குறிப்பிட்ட தொழில் தவிர மற்றவற்றைச் செய்யக்கூடாது எனத் தடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வியும், விரும்பிய பணியைச் செய்யும் உரிமையும் கிடைப்பதற்காகத்தான். அப்படிப் பாதிக்கப்பட்ட மக்கள் ஏழைகளிலும் இருக்கிறார்கள், பணக்காரர்களிலும் இருக்கிறார்கள் எனும்பொழுது பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டுச் சட்டம் செயல்படவில்லை எனக் குறை சொல்வதும், அவ்வாறு மாற்றியமைக்கக் கோருவதும் எந்த விதத்தில் நியாயம் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

கேள்வி # ௪ (4): இப்படி வகுப்புவாரியாகக் கல்வி இடங்களையும் பணியிடங்களையும் வழங்குவதால் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த எத்தனையோ பேர் திறமையும், தகுதியும் இருந்தும் புறக்கணிக்கப்படுகிறார்களே?

உண்மைதான். ஆனால், அப்படிப் புறக்கணிக்கப்படுவதால் அவர்கள் யாருக்கும் மேற்கொண்டு படிப்போ, வேலைவாய்ப்போ கிடைக்காமல் போய்விடுவதில்லை. அரசுக் கல்வியோ, அரசுப் பணியோ கிடைக்காமல் போனாலும் தனியாரிடமிருந்து அவர்கள் தங்களுக்குண்டான வாய்ப்புக்களைப் பெற்றுக் கொண்டு விடுகிறார்கள். காரணம், மற்ற சாதிகளைச் சேர்ந்தவர்களை விட அவர்கள் பெறும் மதிப்பெண் கூடுதல். ஆனால், முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களை விடக் குறைந்த மதிப்பெண் பெறும் மற்ற சாதி மாணவர்களுக்கு அரசின் இட ஒதுக்கீடும் இல்லாவிட்டால் அவர்கள் நிலைமை என்னாகும்? எந்தத் தனியார் நிறுவனம் அவர்களை ஏற்றுக் கொள்ள முன்வரும்? இதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

இந்தியாவில் ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், அரசின் மிக உயர்ந்த பதவிகளிலும், சமூகத்தின் மதிப்பு மிகுந்த இடங்களிலும் முற்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் இன்றும் நிறைய பேர் இருக்கவே இருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டு முறை உண்மையிலேயே முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களைப் பாதிப்பதாக இருந்தால், அந்த சமூகத்தில் இருந்து இத்தனை பேர் இந்தப் பதவிகளுக்கு வந்திருக்க முடியுமா என்பதைச் சிந்தித்துப் பார்த்தல் வேண்டும்!

அதே போல, இத்தனை ஆண்டுகளாக இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டும் இன்னும் அவர்களில் பெரும்பாலோர் கல்வி பெறாதவர்களாகவும், பல விதங்களிலும் பின்தங்கியவர்களாகவும்தான் இருக்கிறார்கள். சமூகத்தில் ஒரு சாரார் இப்படி அடிப்படை நல்வாழ்வைக் கூட எட்டிப் பிடிக்க முடியாத நிலைமையில் இருக்கும்பொழுது, சாதிய அமைப்பு முறையை உருவாக்கி அவர்களின் இந்த நிலைமைக்குக் காரணமாக இருந்த முற்பட்ட வகுப்பினர், அவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களுக்கு மட்டும் தங்கள் தகுதிக்கும் திறமைக்கும் உரிய இடம் தொடர்ந்து எல்லாக் காலக்கட்டங்களிலும் கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது மனிதத்தன்மையா?

கேள்வி # ௫ (5): வகுப்புவாரி இட ஒதுக்கீடு எனும் பெயரில் இப்படித் திறமையான மாணவர்கள் எல்லாரையும் ஒதுக்கிவிட்டுத் திறமையில்லாதவர்களைப் பணியில் அமர்த்தினால் நாடு எப்படி முன்னேறும்?

குறைவான மதிப்பெண் பெறுபவர்கள் எல்லாரும் முட்டாள்களோ, கூடுதலான மதிப்பெண் பெறுபவர்கள் எல்லாரும் மேதாவிகளோ கிடையாது. அப்படியே இருந்தாலும், திறமை உள்ளவர்கள் எல்லாரும் தங்கள் பணியில் முழுத்திறனையும் வெளிப்படுத்துவார்கள் என்பதற்கு எந்த உறுதிப்பாடும் (guarantee) இல்லை.

என்னதான் வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு முறையாக இருப்பினும் குறைந்தளவு (minimum) தேர்ச்சியாவது பெற்றவர்களுக்குத்தான் இடங்கள் வழங்கப்படுகின்றனவே தவிர, எல்லாருக்கும் தூக்கிக் கொடுத்து விடப்படுவதில்லை. குறிப்பிட்ட ஒரு பணியைத் திறம்படச் செய்ய என்னென்ன தகுதிகளெல்லாம் தேவைப்படுமோ அவைதான் அந்தப் பணிக்கான குறைந்தளவுத் தகுதியாக வரையறுக்கப்பட்டிருக்கும் என்பது தெளிவு. ஆகவே, போதுமான தகுதியைப் பெற்ற பிறகுதான் எல்லோரும் அவரவர் இருக்கைகளை அடைந்திருக்கிறார்கள், அடைகிறார்கள்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இட ஒதுக்கீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே கூறப்பட்டு வரும் இந்தக் குற்றச்சாட்டைத் தவிடுபொடியாக்கும் விதத்தில் ஆய்வு முடிவு ஒன்றும் வெளிவந்திருக்கிறது.

மிச்சிகன் பல்கலைக்கழகம், தில்லிப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பொருளாதாரப் பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில், இட ஒதுக்கீட்டால் திறமையோ உற்பத்தித் திறனோ பாதிக்கப்படுவதில்லை என்பது உறுதியாகி உள்ளது. சொல்லப் போனால், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் உயர் பதவிகளில் அமர்த்தப்படும்பொழுது தங்கள் திறமையை வெளிக்காட்டுவதற்காக மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்படுவதாகவும் ஆய்வுக் குழுவினர் கூறுகின்றனர். (மேலும் விவரங்களுக்கு: http://goo.gl/yMZrp3).

தன்னிடம் இருக்கும் மனித ஆற்றல் முழுவதையும் பயன்படுத்துவதன் மூலம்தான் ஒரு சமூகம் முழு வேகத்தோடு முன்னேற முடியுமே ஒழிய, மேல் மட்டத்தில் இருக்கும் மிகச் சிலருக்கு மட்டும் வாய்ப்புக் கொடுத்து, மற்றவர்கள் எப்படியோ போகட்டும் என விட்டுவிட்டால் அது நடக்காது. சலுகையோ, முன்னுரிமையோ, நெறித் தளர்வோ (relaxation) எந்தப் பெயரில் வேண்டுமானாலும் குறிப்பிட்டுக் கொள்ளுங்கள். ஆனால், அப்படி ஏதாவது ஒன்றை வழங்கியாவது அனைவரையும் படித்தவர்களாகவும், துறைசார் திறமையுள்ளவர்களாகவும் மாற்றுவதுதான் மனித ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தும் ஒரே வழி. ஆக, இட ஒதுக்கீடு என்பது நாட்டின் முன்னேற்றத்தை விட்டுக் கொடுத்து மக்களை வளர்ச்சி அடையச் செய்வது இல்லை. நாட்டை முன்னேற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் மற்ற எல்லாத் திட்டங்களையும் போலத்தான் அதுவும். எனவே, இட ஒதுக்கீட்டின் மூலம் நாடு முன்னேறாமல் போகிறது என்பது எந்த வகையிலும் ஏற்க முடியாதது.

கேள்வி # ௬ (6): அந்தக் காலத்தில் சாதிய ஒடுக்குமுறைகள் தீவிரமாக இருந்தன என்பதற்காக இன்றும் இட ஒதுக்கீட்டு முறையைக் கடைப்பிடிக்க வேண்டுமா?

இந்தக் காலத்தில் மட்டும் என்ன வாழ்கிறது? இன்றைக்கும் நம் சமூகத்தில் இரட்டைச் சுடுகாட்டு முறை இருக்கத்தான் செய்கிறது. இன்றும் ஊர்ப்புறங்களில் இரட்டைக் குவளை முறை கடைப்பிடிக்கத்தான்படுகிறது. தாழ்த்தப்பட்டோர் வளர்க்கும் நாய் தங்கள் எல்லைக்குள் நுழையக்கூடாது எனப் பட்டப் பகலில் வெட்ட வெளிப்படையாகப் பலகை மாட்டியிருக்கும் கிராமங்கள் இன்றும்தான் இருக்கின்றன. தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் எவ்வளவுதான் முன்னேறி விட்டாலும் படிப்பு, பணம், செல்வாக்கு எனப் பன்மடங்கு உயர்ந்து விட்டாலும் அதனால் அவர் முற்பட்ட சாதியினரின் வீட்டுக்குப் போய்க் கதவு தட்டிப் பெண் கேட்டு விட முடியாது.

'நாட்டாமை' படம் பார்த்திருப்பீர்கள். அதில், பெரிய வணிகராகவும், ஆளுநர் முதலானோர் மதிக்கும் அதிகாரமும் செல்வாக்கும் உடையவராகவும் உள்ள ஜெய்கணேஷ் தன் ஊரின் நாட்டாமையான சரத்குமாரிடம் கைகட்டிக் குனிந்து பணிந்து பேசும் காட்சி ஒன்று வரும். அதுதான் இன்றும் இந்திய கிராமங்களின் நிலைமை.

சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த அளவுக்கு சாதி வேறுபாடு இல்லாவிட்டாலும், இங்கும் பொதுமக்கள் வாழும் பகுதியும் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதியான சேரிகளும் தனித் தனியாகப் பிரித்துத்தான் வைக்கப்பட்டுள்ளன என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று!

பன்னாட்டு நிறுவனங்களிலும், தகவல்தொழில்நுட்பப் பெருநிறுவனங்களிலும் கூட உள்ளுக்குள் சாதிப் பாகுபாடு மிக நாசுக்காகக் கடைப்பிடிக்கப்படத்தான் செய்கிறது; தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் அதனால் மனம் குமுறத்தான் செய்கிறார்கள்.

ஆக, இன்னும் எதுவும் அவ்வளவு மாறிவிடவில்லை நண்பர்களே! பார்க்கப் போனால், முன்பை விட நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகியிருக்கிறது.

‘கௌரவக் கொலை’ என்கிற பெயரில் அண்மைக்காலமாக அரங்கேறி வரும் கொடுமை இதற்கு முன் தமிழ்நாடு காணாத பேரிழிவு! தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை மணந்து கொண்டதற்காகப் பெற்ற தாயே மகளைக் கதறக் கதற நஞ்சு கொடுத்துக் கொல்வது, இதற்கென ஓர் அமைப்பே நடத்திக் கொண்டு, முற்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணிடம் தாழ்த்தப்பட்ட சமூகத்து இளைஞர் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் கூடத் தூக்கிக் கொண்டு போய்த் தலையை வெட்டிவிட்டுத் தண்டவாளத்தில் வீசுவது போன்றவையெல்லாம் அம்பேத்கர் - பெரியார் காலத்தில் கூட நடந்ததில்லை.

இவை ஒருபுறம் இருக்க, கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய மட்டங்களில் பார்க்கும்பொழுது, இத்தனை நீண்ட காலமாக இட ஒதுக்கீட்டு முறையைச் செயல்படுத்தியும் அந்தப் பிரிவைச் சேர்ந்த மக்கள் பெரும்பாலோர் இன்றும் அடிமட்டத் தொழில்களைச் செய்பவர்களாகவும், மிகவும் கடைமட்ட வாழ்க்கை முறையில் உழல்பவர்களாகவும், சேரி - குப்பம் போன்ற மிக மிக ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வாழ்பவர்களாகவுமே இருக்கிறார்கள். இந்த சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களிலும் பெரும்பான்மையானோர் முதல் தலைமுறை மாணவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

ஆக, எப்படிப் பார்த்தாலும் இட ஒதுக்கீட்டுக்குத் தேவை இன்றும் இருக்கிறது என்பதே உண்மை!

கேள்வி # ௭ (7): இத்தனை ஆண்டுகளாக இட ஒதுக்கீடு வழங்கியும் பெரும்பான்மையினர் இன்றும் படிக்காதவர்களாகவும், பின்தங்கியவர்களாகவும்தான் இருக்கிறார்கள் எனில், அந்தத் திட்டம் தோல்வியடைந்து விட்டதாகத்தானே பொருள்? அப்புறம் ஏன் அதைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்?

ஒரு காலத்தில் திரைப்படங்களிலும், நாடகங்களிலும் அரசு ஊழியர், ஆசிரியர் வேடம் என்றாலே பஞ்சகச்ச வேட்டியோ, நாமமோதான் ஒப்பனை (make-up). எண்பதுகள் வரைக்கும் அப்படித்தான்.

ஆனால், இன்றைக்கு அரசு அலுவலகங்களில் சென்று பார்த்தால் தெரியும், எத்தனை விதமான சாதி - சமயங்களைச் சேர்ந்தவர்கள் அங்கு கலந்து பணிபுரிகிறார்கள் என்பது. அந்த அளவுக்குப் பல்லாயிரக்கணக்கானோர் இட ஒதுக்கீட்டின் மூலம் முன்னுக்கு வந்திருக்கிறார்கள். ஆனால், குறிப்பிட்ட சாதிகளின் மக்கள்தொகைப்படி பார்க்கும்பொழுது முன்னுக்கு வந்தவர்களின் எண்ணிக்கையை விட வராதவர்களின் எண்ணிக்கை கூடுதல், அவ்வளவுதான். அதற்காக, இட ஒதுக்கீட்டால் பலன் இல்லை என்பதில்லை.

கேள்வி # ௮ (8): எவ்வளவுதான் படித்தாலும், உயர்ந்தாலும் அதனால் ஒருவரின் சாதி மாறிவிடுவதில்லை, குறிப்பிட்ட சாதி சார்ந்த அடக்குமுறைகளுக்கு அவரும் ஆளாகத்தான் வேண்டியிருக்கிறது எனும்பொழுது இட ஒதுக்கீடு எதற்காக?

பொதுமக்கள் மட்டுமில்லை அரசு, இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் தலைவர்கள் போன்றோர் கூடத் தவறு செய்யும் இடம் இதுதான்.

இட ஒதுக்கீடு என்பது சாதியத்தையும், அதன் பாகுபாடுகளையும் ஒழிப்பதற்காக என்பதுதான் பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால், அது பிழை! சாதி காரணமாக மறுக்கப்பட்ட கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய இரண்டே இரண்டு உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காக உருவாக்கப்பட்டதுதான் இட ஒதுக்கீடு. அந்த வகையில் அது சரியாகத்தான் பலனளித்து வருகிறது. தொடர்ந்து அதற்கான தேவையும் இருந்தே வருகிறது. ஆனால், இட ஒதுக்கீடு எனும் ஒன்றை மட்டுமே வைத்து சாதி அடிப்படையிலான எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்து விட முடியும் என நினைத்தால் அது மிகப் பெரிய மூடநம்பிக்கை!

கேள்வி # ௯ (9): மற்ற சாதிகளுக்கெல்லாம் இட ஒதுக்கீடு வழங்குவது போல முற்பட்ட சாதிகளுக்கும் குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீடு வழங்கி விட்டால் இப்படி எந்தச் சர்ச்சைக்குமே இடமில்லாமல் போகும் இல்லையா?

மற்ற சாதியினரின் இன்றைய கீழ் நிலைக்குக் காரணமே முற்பட்ட சாதியினர்தான். அப்படியிருக்க, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் முன்னுரிமையை அவர்களுடைய பாதிப்புக்குக் காரணமானவர்களுக்கும் எப்படி வழங்க முடியும்?

மேலும், பல தலைமுறைகளாகக் கல்வியே கற்காதவர்கள் என்பதால்தான் குறிப்பிட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு மதிப்பெண், வயது, கட்டணம் என எல்லாவற்றிலும் தளர்வு (relaxation) வழங்கப்படுகிறது எனும்பொழுது தலைமுறை தலைமுறையாகப் படித்த சாதிகளிலிருந்து வருகிற முற்பட்டோருக்கு எந்தக் காரணத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அளிக்க முடியும்?

கேள்வி # ௧௦ (10): பின்தங்கிய மக்கள் முன்னுக்கு வர வேண்டும்தான். ஆனால், அதற்காக முற்பட்ட சாதியினர் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்?

இன்று இருக்கும் இட ஒதுக்கீட்டு முறை அமலுக்கு வரும் முன், சாதியைக் காரணம் காட்டிப் பெரும்பாலான மக்களைக் கல்விப் போட்டியிலிருந்து அறவே ஒதுக்கிவிட்டு, கல்வியைத் தங்களுக்கு மட்டுமே உரிய தனிச் சொத்தாகவே பல நூற்றாண்டுகளாகத் துய்த்து (அனுபவித்து) வந்தனர் முற்பட்ட பிரிவினர். அப்படியோர் அட்டூழியமான இட ஒதுக்கீட்டின் பலனை அத்தனை காலமாகப் பெற்று வந்தவர்கள், அதைச் சரி செய்வதற்கான இந்த இட ஒதுக்கீட்டுக்கு விட்டுக் கொடுக்க வேண்டியது கடமை இல்லையா?

எனக்குத் தெரிந்து இட ஒதுக்கீட்டுக்கு எதிராக எழுப்பப்படும் கேள்விகள் இவ்வளவுதான்.

சுருக்கமாகச் சொன்னால், பிறப்பைக் காரணம் காட்டிப் பல தலைமுறைகளாக உரிமை மறுக்கப்பட்டவர்களுக்குத் திடீரென அந்த உரிமைகளைத் திருப்பி வழங்கும்பொழுது, அவற்றைப் பெற்றுக் கொண்டு மற்றவர்களோடு சரிநிகராகப் போட்டியிட அவர்களால் முடியாது என்பதால் அவர்களுக்காக நெறிமுறைகளையும், வரம்புகளையும் ஓரளவு தளர்த்திக் கொண்டு முன்னுரிமை அளிப்பதற்குப் பெயர்தான் இட ஒதுக்கீடு. சிலருக்கு முன்னுரிமை தருவது என ஆகி விட்டாலே அதனால் சிலருக்குப் பாதிப்பும் ஏற்படத்தான் செய்யும். அது தவிர்க்க முடியாதது. ஆனால், அதனால் ஒரேயடியாக அவர்களின் வாழ்க்கைத்தரமே பாதிக்கப்பட்டு விடுவதில்லை எனும்பொழுது தங்களோடு சேர்ந்து வாழ்கிற சக மனிதர்களான தாழ்த்தப்பட்டோருக்காக முற்பட்டோர் விட்டுக் கொடுப்பதே மனிதத்தன்மை.

இவ்வளவுக்குப் பிறகும், இட ஒதுக்கீடு தவறானது என யாருக்காவது தோன்றினால், அவர்களைப் பார்த்து ஒரே ஒரு கேள்வி!

இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் நீங்கள் அப்படியொரு சட்டம் கொண்டு வருவதற்குக் காரணமான சாதி அமைப்பைத் தவறு என ஏற்றுக்கொண்டு அதிலிருந்து வெளியே வர முன்வருவீர்களா?

ஏன் இப்படிக் கேட்கிறேன் என்றால், சாதி காரணமாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்களை முன்னுக்குக் கொண்டு வரத்தான் இட ஒதுக்கீடே. ஆக, சாதி ஒழிந்து விட்டாலே இட ஒதுக்கீட்டுக்கான தேவையும் இல்லாமல் போகும். எனவே, முற்பட்ட வகுப்பினர் தங்களுக்கு சாதி தேவையில்லை எனப் புறக்கணித்து, சாதிய அமைப்பிலிருந்து வெளியே வந்தால் அவர்களைப் பின்பற்றி மற்றவர்களும் வெளியேறுவார்கள். அதன் தொடர்ச்சியாக, சில தலைமுறைகளில் சாதி என்பதே முற்றிலும் ஒழிந்து போகும். அதற்குள் இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி எல்லா சாதியினரும் முன்னேறியும் விடுவார்கள் என்பதால், இட ஒதுக்கீட்டையும் எடுத்து விடலாம்.

ஆனால், இட ஒதுக்கீட்டைத் தவறு எனக் கூறும் முற்பட்டவர்கள் அதற்கான தேவையை ஏற்படுத்தும் சாதிய அமைப்பிலிருந்து மட்டும் வெளியே வருவதில்லை. சாதி தவறுதான், அதனால் ஏற்றத்தாழ்வு ஏற்படுவது உண்மைதான் என்பவற்றைக் கூட ஏற்றுக் கொள்ளத் தயங்காத அவர்கள் அப்படிப்பட்ட சாதி அமைப்பிலிருந்து வெளிவருவதற்கு மட்டும் விரும்புவதில்லை. இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்படுவதாகக் கருதுபவர்களே தங்கள் சாதிய அடையாளத்தை உதற முன்வராதபொழுது இட ஒதுக்கீட்டால் பலன் பெறுபவர்கள் எப்படி அதை விட்டு வெளிவருவார்கள்?

இப்படி எல்லோரும் சாதி முத்திரையைத் தங்கள் நெற்றியில் சுமந்தபடியே திரிந்து கொண்டிருந்தால் சாதி உயிர் வாழ்ந்து கொண்டேதான் இருக்கும். சாதி உயிரோடு இருக்கும் வரை அதன் காரணமாக விளையும் ஏற்றத்தாழ்வுகளும் இருந்து கொண்டேதான் இருக்கும். சாதிய ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் வரை இட ஒதுக்கீடும் இருக்கத்தான் செய்யும்.

ஆகவே, முற்பட்ட சாதியினரே புரிந்து கொள்ளுங்கள்! இட ஒதுக்கீட்டை அப்புறப்படுத்துவது அரசின் கையிலோ, அதனால் பலனடைபவர்களின் கையிலோ, வேறு யார் கையிலுமோ இல்லை. உங்கள் கையில்தான் இருக்கிறது! அதன் பின் உங்கள் விருப்பம்! 

-    இ.பு.ஞானப்பிரகாசன்

இப்படி மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடுகள் கொண்ட இருவேறு பின்னணிகளிலிருந்து