சீனமொழியில் இப்படி ஒரு கூற்று இருப்பதாகப் படித்திருக்கிறேன்.

“ஒரு ஆண்டிற்குள் பலனை அறுவடை செய்ய தானியம் விதை;
பத்து ஆண்டுக்குள் பலனை அனுபவிக்க மரக்கன்றை நடு;
நூற்றாண்டுகளுக்குப் பலனை அனுபவிக்க மக்களுக்குக் கல்வியறிவு ஊட்டு;
விதைப்பவன் ஒரு முறையே அறுவடை செய்வான்.
மரக்கன்றை நடுபவன் பத்துமுறை அறுவடை செய்வான்.
ஆனால், மக்களுக்குக் கல்வியறிவு ஊட்டுபவன் நூறுமடங்கு பலனை அனுபவிப்பான்.”

school 229தமிழர்களும் இந்தக் கல்வியின் அருமையைப் பழங்காலம் தொட்டே வலியுறுத்தி வந்துள்ளனர். வள்ளுவர் அதில் குறிப்பிடத் தக்கவர். கல்வி கற்காதவர்கள் விலங்குதான் என்றார். அவர்கள் கண்கள் கூடக் கண்கள் அல்ல; புண்கள்தான் என்று கடுமையாகப் பேசினார். இப்படித் தொடங்கிய தமிழ்மரபு, இடைக்காலத்தில் ஏற்பட்ட சமஸ்கிருத ஆதிக்கத்தால், ‘வேதக்கல்வியே’ முதன்மையானதாகக் கொண்ட சமூகத்தின் அதிகாரத்தட்டில் உச்சத்தில் இருந்த பார்ப்பனர்களுக்கே உரிமையுடையதாக மாற்றப்பட்டது; மனு ஸ்மிருதியைச் சோழப் பேரரசு உட்படப் பிற்கால அரசுகள் பின்பற்றத் தொடங்கியதால் கல்வியில் வர்ணப் பாகுபாடு நிலைநிறுத்தப்பட்டது. சமய நிறுவனங்களின் ஆளுகைக்கு உட்படுத்தப்பட்டது. சங்க காலத்தில் நிலவிய அனைவருக்கும் கல்வி, ஆண் - பெண் இருபாலருக்கும் கல்வி (சங்க காலப் புலவர்களில் ஏறத்தாழ 40 பேர் பெண்பாற் புலவர்கள்) என்ற நிலை, இடைக்காலத்தில் மறைந்து உயர்சாதியினர் மற்றும் ஆண்களுக்கான ஒன்றாகக் கல்வி கற்கும் உரிமை மாற்றப்பட்டது. ஒடுக்குமுறைக்குப் பயன்படும் ஒரு கருவியாகக் கல்வி உரிமை பறிக்கப்பட்டது. இதைத்தான் பின்னால் பாரதிதாசன் இவ்வாறு பதிவு பண்ணினார்:

‘கல்வியின் வாடை வரவிடவில்லை
குருக்களின் மேடை நறுக்கத் தொலைந்தது
அந்தப் பீடை நாடெல்லாம் பாய்ந்தது
கல்வி நீரோடை’

ஐரோப்பியர் ஆட்சிக் காலத்தில் கல்வி வேறொரு பரிணாமத்தை நோக்கி நகர்ந்ததைத்தான் பாரதிதாசன் இப்படிக் கொண்டாடுகிறார். அஃதாவது கல்வி, அரசாங்கத்தின் ஒரு துறையாக மாறியது. பொதுமக்களுக்குக் கல்வி வழங்குவது அரசாங்கத்தின் ஒரு கடமை என்ற பார்வை பரவியது.

ஐரோப்பாவிலும் 18ஆம் நூற்றாண்டு வரை கல்வி பெறுதல் அல்லது கல்வி வழங்குதல் என்பது தனிப்பட்டவர்களின் அல்லது பெற்றோர்களின் கடமையாகத்தான் கருதப்பட்டது. சில நாடுகளில் மத ஆலயங்கள் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சுதந்திரப் புரட்சி (1776), பிரெஞ்சுப் புரட்சி (1789) ஆகிய இரண்டு புரட்சிகளுக்குப் பிறகுதான் ஐரோப்பிய அரசுகள் பலவும் கல்வி அளிப்பதைத் தங்களின் கடமையாகக் கருதின. அதன் விளைவாகப் பள்ளி வருகையைக் கட்டாயப்படுத்திச் சட்டங்கள் இயற்றின. சட்டங்கள் இயற்றிக் குழந்தைத் தொழிலாளர்களின் வேலை நேரத்தைக் குறைத்தன. தொடர்ந்து 19ஆம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் வீசிய சமத்துவப் புயலின் வீச்சு கல்வியிலும் பரவியது; இச்சமத்துவக் கொள்கை, மத ஆலயங்களிடமிருந்து கல்வி விடுபட வேண்டிய தேவையை வலியுறுத்தியது. சுதந்திரமான கல்வி, மக்கள் அனைவருக்கும் உறுதி செய்யப்பட வேண்டும் என்ற நோக்கில், வரலாற்றில் முதன் முதலில் சோவியத் அரசுதான் 1936இல் தனது அரசமைப்புச் சட்டத்திலேயே கல்விபெறும் உரிமையைச் சட்டமாக்கியது. இதேபோல் அமெரிக்காவில் 1944இல் எப்.டி ரூஸ்வெல்ட், சட்டத்தின்மூலம் கல்விபெறும் உரிமையை நிலைநாட்டினர்.

சென்னை மாகாண அரசு 1924இலேயே சுதந்திரமான கட்டாயக் கல்வியைச் சில பகுதிகளில் மட்டும் அறிமுகப்படுத்தியது. ஆனாலும் அடிப்படை உரிமையாக முன்னிறுத்தவில்லை. விடுதலை பெற்ற பிறகு, மொழிவழி மாநிலம் அமைந்த பிறகு, தமிழ்நாட்டில் ‘கல்வியை’ முன்னெடுத்துச் செல்லப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முதன்முதலாகப் பார்ப்பனிய மற்றும் வைதீக மரபிற்கு முற்றிலும் வேறான வெளியில் இருந்து ஒருவர் முதலமைச்சராக (காமராசர்) வந்ததால், அதுவும் 9 ஆண்டுகள் ஆண்டதால் தொடக்கக் கல்வியில் பெரும் முயற்சி தொடர்ந்து எடுக்கப்பட்டது. 1954இல் முதலமைச்சரான காமராசர் 1957க்கு 15,800 பள்ளிகளைத் திறந்தார். 19 லட்சம் ‘மாணவர்களை’ உருவாக்கினார். ஐந்து ஆண்டிற்குள் 1962இல் அது 29,000 பள்ளிகளாகவும், 40 லட்சம் மாணவர்களாகவும் உயர்ந்தது என்றால் எந்த அளவிற்கு வேகமான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்துகொள்ளலாம். அதுவும் சாதிப் பிரிவுகளால் மூடுண்டு கிடந்த தமிழ்க் கிராமங்களில் அரசுப் பள்ளிகளைத் திறப்பதற்கான இடத்தைத் தேர்ந்தெடுப்பதில் இருந்து ஒவ்வொன்றிலும் பல்வேறு பிரச்சனைகள்.

ஆடு, மாடு என்று காட்டு வெளிகளுக்குள் அலைந்துகொண்டிருந்த பிள்ளைகளைப் பள்ளிகளுக்குள் இழுப்பதற்கு 1956இலேயே மதிய உணவுத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. 1960இல் இலவச சீருடை வழங்குவதன் மூலம் வருகையை உயர்த்தலாமென்று முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 1964இல் உயர்நிலைப் பள்ளிவரை ‘அனைவருக்கும் இலவசக் கல்வி’ என்ற திட்டம் மேற்கொள்ளப்பட்டது. 1982 முதல் சத்துணவுத் திட்டம் அறிமுகப்­படுத்தப்பட்டது. 1985இல் இருந்து எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவசப் பாடப் புத்தகங்களும், சீருடையும் வழங்கும் திட்டம் வந்தது. இன்னும் மிதிவண்டி, இலவச பஸ் வசதி, செருப்பு, இப்பொழுது ‘நாப்கின்’ வரை இலவசத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன; இவ்வளவு செய்தும் அரசுப் பள்ளிகளின் வருகைப் பதிவு குறையக் காரணமென்ன? இதைக் காரணம் காட்டி இன்று 1200 அரசுப் பள்ளிக்கூடங்களை மூட முயலுவதற்கான காரணமென்ன? தனியார் பள்ளிகள் கொழுத்து வளர்வதற்குத்தானே!

இன்றும் 44 விழுக்காட்டு மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்ந்து தீர்க்குமாறு வைத்துக்கொண்டு இலவசமாகக் கல்வி கற்பதற்கான ஒரே வாய்ப்பாக இருக்கும் இந்த அரசுப் பள்ளிகளையும் மூடிக்கொண்டே போனால், மீண்டும் கல்வியின் வாடை வராமல் பெருவாரி மக்களை ‘இருட்டிலேயே’ இருத்தி வைக்க அரசு முயலுகிறது என்றுதானே அர்த்தம்! ஏற்கெனவே ‘டாஸ்மார்க்’ மூலம் பெருவாரி மக்களின் உடலையும் பொருளையும் அழித்துச் சீரழித்துக் கொண்டிருக்கும் ஓர் அரசு, ‘பள்ளிகளை மூடுவோம், டாஸ்மார்க் கடைகளைத் திறப்போம்’ என்று இயங்கினால் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கலாமா?

உண்மையான மக்கள் நல அரசு என்றால், அது செய்ய வேண்டியதெல்லாம், 2009இல் சட்டமாக இயற்றப்பட்டு 2010, ஏப்ரல் 1இல் இருந்து அமலுக்கு வந்துவிட்ட அனைவருக்கும் சுதந்திரமான கட்டாயக் கல்வியைப் பெறுவதற்கான அடிப்படை உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதுதான். இந்தியாவிலுள்ள 6 வயதிலிருந்து 14 வயது வரையிலான சிறுவர்கள் அனைவரும் நூறு விழுக்காடு பள்ளிக்குச் செல்பவர்களாக மாற்றப்பட வேண்டும் என்கிறது அடிப்படை உரிமைச் சட்டம்; ஆனால் அரசோ 1200 பள்ளிகளை மூடி, ஏழை, எளிய சிறுவர்களை மீண்டும் பள்ளிப்படிக்கு வெளியே தள்ள முயலுகிறது.

கல்வி அடிப்படை உரிமைச் சட்டம் பல்வேறு உரிமைகளை வழங்குகிறது:

* சுதந்திரமான, இலவசக் கல்வி
* கட்டாயக் கல்வி
* பள்ளியில் சேர்க்காது விடுபட்ட சிறுவர்களையும், அவர்கள் வயதுக்கேற்ற வகுப்பில் சேர்த்துக்கொள்ளல்.
* மாநில மைய அரசுகளும், அதிகாரிகளும் பெற்றோர்களும், உள்ளூர் வாசிகளும், பொறுப்புணர்வோடு செயல்படல்.
* மாணவர்&ஆசிரியர் விகிதாச்சாரம், பள்ளியின் மேற்கட்டுமான வசதிகள், முதலான அனைத்தும் உறுதிசெய்யப்பட வேண்டும்.
* கிராமம், நகரம் என்ற பேதமில்லாமல் ஆசிரியர்களை எல்லா இடத்திலும் நிரப்ப வேண்டும்.
* மக்கள் கணக்கெடுப்பு, தேர்தல் இயற்கைப் பேரழிவிலிருந்து பாதுகாத்தல் & இவை தவிர, வேறு கல்வி சாராத பணிகளில் ஆசிரியர்களைப் பயன்படுத்துவதை இச்சட்டம் தடைசெய்துள்ளது.
* தகுதியான ஆசிரியர்களை நியமிக்க உறுதிசெய்கிறது.

கல்வி அடிப்படை உரிமைச் சட்டம் கீழ்க்கண்டவற்றைத் தடைசெய்கிறது:

அ) மாணவர்களை அடித்தல், மனத்துன்புறுத்தல்
ஆ) வடிகட்டும் முறைமை
இ) முதலீட்டில் பணம் (Capitation)
ஈ) ஆசிரியர்களின் தனிப் பயிற்சி (Private tution)

உ) அங்கீகாரம் இல்லாத பள்ளிகள்

காலமாற்றத்திற்கு ஏற்ப வழிகாட்டுகிறது.

அ) குழந்தைகளின் பன்முகப்பட்ட வளர்ச்சி
ஆ) குழந்தைகளை மையப்படுத்தும் கற்றல் முறைமை

இப்படியான அடிப்படை உரிமைச் சட்டத்தைப் பற்றி ஒரு சிறிதும் கவலைப்­படாமல் ஓர் அரசு, இவ்வளவு கேவலமாக, அரசுப் பள்ளிகளை மூடுவதற்கு நினைக்கிறது என்றால், அது எந்த அளவிற்கு அடிப்படையில் மக்கள் விரோத அரசாகத் தனக்குள் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது.

மூடுவதற்கு அரசு சொல்லும் முதன்மைக் காரணம், போதுமான மாணவர்கள் சேர்க்கை அரசுப் பள்ளிகளில் இல்லை. எல்லோரும் தனியார் பள்ளிகளுக்குப் போய்விடுகிறார்கள் என்பதுதான். தனியார் பள்ளிக்கூடங்கள் சேவை மனப்பான்மையில் இயங்க வேண்டும். நாட்டின் மனிதவள உற்பத்திற்குத் தனியார் நிறுவனங்கள் உதவிசெய்யத் தொண்டு மனப்பான்மையோடு முன்வர வேண்டும் என்ற வேண்டுகோளைத் தொடர்ந்துதான் தனியார் பள்ளிகளுக்கு அனுமதிகொடுப்பது, தொடங்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு நிலைமை என்ன? கல்வித்துறையின ஊழல் காரணமாக, அரசியல்வாதிகளின் சொத்தாசை காரணமாகக் கல்வி இன்று தனியார் பள்ளிகளில் மிக உயர்ந்த ஒரு விற்பனைப் பண்டமாக மாற்றப்பட்டுவிட்டது. கல்வி, ஒரு சமூகத்தின் பயன் மதிப்பீடு என்பது போய், காசு பரிவர்த்தனை மதிப்பீடாக இழிந்துபோய்விட்டது. இந்நிலையில் அரசுப் பள்ளிக்கூடங்களை மூடினால், அந்த ஏழை, எளியவர்கள் படிப்பது என்பது எட்டாத கனவாகிவிடாதா? அப்படி எட்டாமல் ஆக்கிவிடுவது என்பதுதான் இன்றை மக்கள் விரோத அரசுகளின் மறைமுக நிகழ்ச்சி நிரலாக அமைந்துள்ளது. இந்த அநியாயத்தைத்தான் நாம் மக்கள் முன் விரித்துப் பேசி, மக்கள் விழிப்புணர்வுபெறத் தூண்டவேண்டிய கடமைப்பாட்டில் இருக்கிறோம்.

ஓர் அரசுப் பள்ளி இருக்கிற இடத்தில், தனியார் பள்ளிக்கு அனுமதி கொடுக்க வேண்டிய தேவை மக்கள் நோக்கில் என்ன இருக்கிறது? அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தனியார் நிறுவனமும் கொள்ளை அடித்துக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்குவது என்பதைத் தவிர, அங்கே மக்களுக்குப் புதிதாக என்ன பயன் வந்துவிடப்போகிறது? தனியார் பள்ளிகளை வளர்க்கும் நோக்கில், அரசுப் பள்ளிகளை எந்த வகையில் எல்லாம் முடக்க வேண்டுமோ, அத்தனை வகைகளிலும் முடக்குகிற வேலை­களை எல்லாம் ஒன்றுவிடாமல் செய்துவிட்டு, இன்று மாணவர்கள் இல்லை; மூடுகிறோம் என்பது ஒற்றை வாதத்தைத் தூக்கிப்போடுவது எவ்வளவு பெரிய கொடூரம்? வரலாறு இவர்களை மன்னிக்குமா?

தனியார் பள்ளிகள் பெருகுவது, அதிகாரத்தை எளிதாகத் தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு வழிமுறையாக ஆளும் அமைப்புகளால் உணரப்படுகிறது. கல்வியின் ஆதாரம், ‘இருக்கின்ற அமைப்பை’ விமர்சிக்கக் கற்றுக்­கொடுப்பதில் உயிர்கொண்டிருக்கிறது; அவ்வாறு விமர்சிக்கிற அறிவை வளர்ப்பதன் மூலமாக, “அமைப்புகளின்” போதாமையை உணர்ந்து, மனித சமூகத்தை இன்னும் மேலும் மேலும் என்று அடுத்த கட்டங்களை நோக்கி நகர்த்திச் செல்வதற்கான வாய்ப்புக்கள் வந்து அமைகின்றன. இருக்கின்ற அமைப்பில் ‘சொகுசு’ கண்டுவிட்ட அதிகாரம், ‘அமைப்பை’ விமர்சிப்பதை விரும்புவதில்லை; எனவே விமர்சன அறிவே இல்லாத, மொன்னையான மனிதர்களை அதாவது ‘அடிமைகளை’ வடிவமைத்து வெளியே அனுப்புவதைத் தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் மிகச் செம்மையாகச் செய்து முடிக்கின்றன. அரசுப் பள்ளிகளில் உள்ள சுதந்திரம், விமர்சனபூர்வமான மாணவர்களை, அரசியல் பிரக்ஞை உள்ள மாணவர்களை உருவாக்கும். கடந்த 20 ஆண்டுகளில் தனியார் கல்வி நிறுவனங்களில் இத்தகைய மாணவர்களே உருவாகாமல் பார்த்துக்கொண்டது அரசு. அதிகாரத்தின் நுண்ணரசியல் ‘வலி’ தரக்கூடியது.

தனியார் கல்வி நிறுவனங்கள் விமர்சனப் பார்வையை மட்டுமல்ல, சுய சிந்தனைகளை, படைப்பாற்றலை எல்லாம் அறவே அழித்துவிடுகின்றன. சூழலைக் குறித்த அறிவையும் அழித்துவிடுகின்றன. விதிக்கப் பட்ட எல்லைகளுக்கு வெளியே எட்டிப் பார்க்கவே தோனாத ஒரு மன நிலையை உருவாக்கிவிடுகின்றன. தன் வாழ்விற்காக உழைக்கும் கோடான கோடி உடல் உழைப்பாளர்களைக் குறித்துக் ‘கீழான’ பார்வையை வடிவமைத்துவிடுகின்றன. சமூகக் கொடுமைகளை உறைவிடமாய்ச் செய்வதோடு, எந்தவிதமான அழுத்தமான எதிர்வினையும் ஆற்றவிடாமல் முடக்கிவிடுகின்றன. இந்நிலையில் ஆளும் அதிகாரம், தான் நினைத்தபடியெல்லாம் மக்கள் விரோத நடவடிக்கைகளை எந்தவித தயக்கமுமின்றிச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்தப் போக்கின் ஒரு பகுதிதான், இன்றைக்கு 1,200 அரசுப் பள்ளிகளை மூட முயல்வதும்!

இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கையின் உள்ளே இயங்கும் நுண்ணரசியலைப் புரிந்துகொண்டால், அதை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று விழிப்புணர்வை ஊட்ட வேண்டும் என்றால், ‘எல்லாத் தனியார் பள்ளிகளையும் அரசுடைமை ஆக்கு’ என்ற முழக்கத்தை முன்னெடுத்துச் செல்வதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும் எனச் சொல்லத் தோன்றுகிறது. இன்னும் எத்தனை நாளைக்குத் தனியார் பள்ளிகளில் நடக்கும் அக்கிரமங்களையும் கொள்ளைகளையும், மனிதாபிமனமற்ற செயல்களையும் சும்மா பட்டியல் போட்டுப் பேசிக்கொண்டிருக்க முடியும்? அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தாக வேண்டும். இல்லையென்றால் வருந்தலைமுறை முழுக்க முழுக்க ‘கறிக்கோழிகளாக’ மட்டுமே ஆவார்கள். அவர்கள் உண்ணத்தான் பயன்படுவார்கள், எதையும் உருவாக்க ஒரு சிறிதும் பயன்படமாட்டார்கள்.

- க.பஞ்சாங்கம்

Pin It