Vyapam 600

2-ஜி ஊழலா? காமன்வெல்த் விளையாட்டு ஊழலா? மும்பை அடுக்குமாடிக் குடியிருப்பு ஊழலா? அம்பானி சகோதரர்கள் சம்பந்தப்பட்ட கே.ஜி. எரிவாயுத்திட்ட ஊழலா? விண்வெளி ஆய்வுமைய விஞ்ஞானிகள் சம்பந்தப்பட்ட ஆன்டிரிக்ஸ் - தேவஸ் ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் மருத்துவக் கல்லூரி அங்கீகார ஊழலா? விஜயராஜ் சிந்தியா, சுஸ்மா ஸ்வராஜ் சம்பந்தப்பட்டிருக்கும் லலித்மோடிக்கு உதவி செய்த ஊழலா? மாறன் சகோதரர்களின் ஏர்செல் - மாக்சிஸ் ஊழலா? சாட்டிஸ்கர் மாநில முதல்வர் ராமன்சிங்கின் 36000 கோடி ரேசன் கடை ஊழலா? ம.பி. மாநில 2 லட்சம் கோடி 'வியாபம்' ஊழலா? 'ஊழலில் பெரியது எது?' என்று முருகன் அவ்வையிடம் கேள்வி கேட்கும் திருவிளையாடல் புராண நாடகக் காட்சியை இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

முதலாளித்துவ ஆட்சி முறையின் முகத்திரையை கிழிக்கும் பரபரப்பான அரசியல் நாடகம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. மேற்கண்ட வழக்குகளில் கீழமை நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து, தப்பித்தவறி ஒரு சிலருக்கு தண்டனை கிடைத்து, அந்த தண்டனை உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வரும் நாளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளோ, இதை எழுதிய நானோ, படிக்கும் நீங்களோ உயிரோடிருந்தால் ஆச்சர்யந்தான். ஏனெனில் இந்த நாட்டில் நீதி வழங்கும்முறை அவ்வளவு விரைவானது!

டாக்டர் ஆனந்த் ராய், ம.பி மாநிலம் இந்தூரில் புகழ்பெற்ற அரசு மருத்துவர். உயர்நிலைப்பள்ளி மாணவனாக இருந்த காலத்திலிருந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முன்ணணி ஊழியர். ம.பி. மாநில பி.ஜே.பி. மருத்துவர் அணியின் முக்கியப் பொறுப்பாளர்.

'வியாபம்' நடத்திய மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதி 'வெற்றி' பெற்ற மாணவர்களின் விபரங்களை 2009ல் அம்பலப்படுத்தியவர். மனைவி கவுரியும் இந்தோர் நகரில் புகழ்பெற்ற அரசு மகப்பேறு மருத்துவர்.

சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாய் ஊழலில் சிக்கியிருக்கும் ம.பி. மாநில பி.ஜே.பி. முதல்வர், அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில அரசு ஐ.ஏ.எஸ். உயரதிகாரிகள், சங்பரிவார் தலைவர்கள் சம்பந்தப்பட்ட 'வியாபம்' ஊழலைப் பற்றி ஆர்.எஸ்.எஸ். தேசியத் தலைவர் மோகன் பகவத் மற்றும் மத்திய, மாநில பி.ஜே.பி. தலைவர்கள் வாய் திறக்காமல் மௌனம் சாதிப்பது ஏன்? என்று டாக்டர் ஆனந்த் ராய் பகிரங்கமாக கேள்வியெழுப்பிய அடுத்த நாள் - அவருக்குக் கிடைத்த பரிசு இந்தூர் நகரிலிருந்து 'தண்ணியில்லாக் காடு' தார் நகருக்கு பணியிட மாற்றம்!

'அரசு மருத்துவராக வேலை பார்க்கும் அவரது மனைவி டாக்டர் கௌரி, மூன்று நாட்கள் கூடுதலாக பிரசவ விடுப்பு எடுத்தார்' என்ற குற்றச்சாட்டின்பேரில், அவருக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு நிறுத்தி வைப்பு தண்டனை! இரண்டு வயது கைக் குழந்தையை பராமரிக்க வேண்டிய அவருக்கு 50 நாட்களில் இரண்டு முறை வெவ்வேறு ஊர்களுக்கு பணிஇடமாற்றம்!

மருத்துவக் கல்லூரி நுழைவுத்தேர்வு ஊழல் சம்பந்தமாக செய்தி ஊடகங்களுக்கு பேட்டியளிக்கக்கூடாது என்று டாக்டர் ஆன்ந்த் ராய்க்கு மேலதிகாரிகள் வாய்ப்பூட்டு போட்டுள்ளனர். 'ம.பி. மாநில அரசின் சிறந்த அரசு மருத்துவர்' என்ற விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட அவரது பெயரை ம.பி. மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது. “ஆர்.எஸ்.எஸ். எனக்கு போதித்த நேர்மை, ஒழுக்கம், தேசபக்தி, உபதேசங்களின் லட்சணம் இதுதானா?" என்று டாக்டர் ஆனந்த் ராய் புலம்பிக் கொண்டிருக்கிறார். (தகவல் ஆதாரம் தி ஹிந்து 19.7.2015 & 4.8.2015).

Vyapam 340'வியாபம்' ஊழலில் ஏற்கனவே மர்ம மரணத்தை சந்தித்திருக்கும் 46 பேர் பட்டியலில் டாக்டர் ஆனந்த்ராய் சேர்க்கப்படாமல் இவரை ஊழல் பேர்வழிகள் உயிரோடு விட்டுவைத்திருப்பதே இவரது மனைவி டாக்டர் கவுரியின் 'தாலி பாக்கியம்'!

ஆர்.எஸ்.எஸ்.சின் இன்றைய தேசியத் தலைவர் மோகன் பகவத்துக்கு முன்னர் கே.எஸ். சுதர்ஸன் பல வருடங்கள் தலைவராக இருந்தார். அண்மையில் காலமானார். அவருடைய வீடடு வேலைக்காரன் மிகிர் குமார். அவனுக்கு திடீரென ஒரு நாள் ம.பி. 'மாநில அரசு உணவு ஆய்வாளர்' வேலைக்குச் சேர ஆசை வந்துவிட்டது. நாடு முழுவதும் சுற்றி 'இளைஞர்களுக்கு ஒழுக்கம், நேர்மை, தேசபக்தியை' உபதேசம் செய்து கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்ஸனிடம் தனது ஆசையைத் தெரிவித்தான். அவ்வளவு தான்!

கே.எஸ். சுதர்ஸன் ம.பி. மாநில அன்றைய கல்வி அமைச்சர் லட்சுமிகாந்த் சர்மாவிடம் தனது வீட்டு வேலையாளின் உணவு ஆய்வாளர் வேலை ஆசையைச் சொன்னார். அடுத்த நாள் உணவு ஆய்வாளர் அரசு வேலைக்கான அரசுத் தேர்வு விடைத்தாள் சுதர்ஸன் வீட்டுக்கே கொண்டுவரப்பட்டது. அதில் வேலைக்காரன் மிகிர்குமார் தன் கைப்பட ஒரு சில கேள்விகளுக்கு மட்டும் விடையெழுதி கையொப்பமிட்டு கொடுத்தான். கணிதம், இயற்பியல் மற்றும் பொது அறிவு சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ் திரிவேதி வேறு ஆளை வைத்து பதில்களை பூர்த்தி செய்து கொண்டார். அந்த சுதர்ஸன் வீட்டு வேலைக்காரன் மிகிர் குமார் 2009ம் வருடம் ம.பி. மாநில அரசின் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று 'ஏழாவது ரேங்க்கில்' தேர்வு செய்யப்பட்டு FOOD INSPECTOR ஆனான். ( தேர்வு எண். 702785)

இப்படியாகத்தானே தகுதியே இல்லாத, அரசியல் செல்வாக்கும், பணவசதியும் அதிகார பலமும் படைத்த

1. ராஜ்குமார் தகாத் ( தேர்வு எண். 703897)
2. நரேஷ்சந்த் சாகர் ( தேர்வு எண். 707032)
3. சுனில்குமார் சாகர் ( தேர்வு எண். 711230)
4. அவதேஷ் பார்கவா ( தேர்வு எண். 705133) ஆகிய நான்குபேர் கள்ளத்தனமாக ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் பரிந்துரையால் அந்த ஆண்டு உணவு ஆய்வாளர் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழல், சிறப்பு புலனாய்வுப் படை விசாரணையில் அம்பலப்பட்டது. (ஆதாரம் - நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் - நாள் 28.6.2014.)

வெளியே தெரிந்திருக்கும் இந்த வியாபம் ஊழல் கடலுக்கடியில் மறைந்து நிற்கும் பனிப்பாறையின் ஒரு சிறுமுனை மட்டுமே! இந்த ஊழலை அம்பலப்படுத்தி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த சுனில்குமார் சாகர் 2012ல் மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை வழக்கும் உச்சநீதிமன்ற உத்தரவால் இன்று CBI விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து தகுதியிருந்தும் இலட்சக்கணக்கான படித்த இளைஞர்களின் வேலை வாய்ப்பு இவ்வாறு சட்டவிரோதமாக பறிக்கப்பட்டு, தெருப்பொறுக்கிகளுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மெகா ஊழலைச் செய்திருக்கும் அனைவருமே 15 வயதிலிருந்து காக்கி அரை டரவுசரும், வெள்ளைச் சட்டையும், கருப்புக் குல்லாய் சீருடை அணிந்து- ஒரு கையில் கத்தியும், இன்னொரு கையில் தடியுடனும் பாஸிச ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பயிற்சிபெற்ற முன்னணி ஊழியர்கள் என்பது நினைவிருக்கட்டும்.

நேர்மை, நாணயம், தெய்வபக்தி, தேசபக்தி, ஊழலற்ற ஆட்சி, கொள்கையும் லட்சியமும் கொண்ட கல்வி, பாரதக் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு பெருமை பற்றியெல்லாம் மற்றவர்களுக்கு உபதேசம் செய்ய ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. ஆசாமிகளுக்கு அருகதை இல்லை, இல்லவே இல்லை!

இந்த நாட்டில் ஆட்சியதிகாரத்தையும், பதவியையும் தங்கள் சுயநலத்திற்குp பயன்படுத்தி, பத்து தலைமுறைக்கு வேண்டிய சொத்தை சேர்த்துக் கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு கிடைக்கும் ஊக்கப்பரிசு – அமைச்சர் பதவி! அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

ஊழலை அம்பலப்படுத்தும் சமூக ஆர்வலர்களுக்கு மற்றும் மனித உரிமைப் போராளிகளுக்கு கிடைக்கும் ஊக்கப்பரிசு – படுகொலை மரணம், தற்கொலை மரணம், பதவி இறக்கம் அல்லது பணியிட மாறுதல் அச்சுறுத்தல், 'பிழைக்கத் தெரியாதவன்' என்ற கெட்டபெயர் வேறு. 'பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்' என்று பாரதி பாடியது இந்த அவலத்தைத்தான்!

- கே.சுப்ரமணியன், இந்திய வழக்கறிஞர் சங்க தேசிய செயற்குழு உறுப்பினர்

Pin It