ஒரு நாட்டில் குறிப்பிட்ட சமூகத்தினர் தாங்கள் மதரீதியாகவும், இனரீதியாகவும் கொன்றொழிக்கபடுவதில் இருந்து தப்பிக்க அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தால் அவர்களுக்கு அடைக்கலமும், குடியுரிமையும் வழங்கப்படல் வேண்டும் என்ற சர்வதேச விதிகளை சற்றும் பொருட்படுத்தாமல் நேற்று (09-டிசம்பர்-2019) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யபட்டிருக்கின்றது குடிமக்கள் சட்டத் திருத்த மசோதா!
பாஜக தான் ஆட்சியதிகாரத்தில் அமர்ந்த நொடிப் பொழுதிலிருந்தே சிறுபான்மை - ஒடுக்கப்படும் சமூகங்ளுக்கெதிராக ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களை அமுல்படுத்திடும் வேலையினை முன்னெடுத்துச் செயல்படுகின்றது. இந்தியா என்னும் பன்மை சமூகத்தினை ஒற்றைக் கலாச்சாரத்தின் வடிவமாக உருவகப்படுத்திட ஆர்.எஸ்.எஸ்.சின் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்திடும் முயற்சியின் ஒரு பகுதியாக அண்டை நாடுகளில் (பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம்) வசிக்கும் இசுலாமியர்கள் அல்லாத நபர்களை மட்டும் இந்தியாவிற்குரியவராக குடியமர்த்திடும் பணியினை இச்சட்டத்தின் வாயிலாக அமல்படுத்திட முயல்கின்றது. ஆர்.எஸ்.எஸ் நிறுவனர்களில் ஒருவரான கோல்வாக்கர் தான் கனவு கண்ட அகண்ட பாரதத்தில் இசுலாமியர்களுக்கு இடமில்லை என்ற சிந்தனையினை, மதச்சார்பற்ற நிலையினை என்றென்றும் கடைபிடிப்போம் என்ற உறுதிமொழியினை ஏற்ற அமித்ஷாவும் - மோடியும் கடைப்பிடிப்பது வெட்கக் கேடானது.
இதுவரை 1920 ஆம் ஆண்டின் குடிமக்கள் மசோதாவில் பாஸ்போர்ட் இல்லாத, விசா இல்லாத, காலங்கடந்த நிலையில் இங்கே தங்கிய மக்களுக்கெதிராக கொண்டு வரப்பட்ட சட்டத்தினை, 2016 ஆம் ஆண்டில் வங்காளம்,. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்றவற்றிலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறிய மக்கள் 11 ஆண்டுகள் இந்தியாவில் இருந்தாலே அவர்களை இந்தியர்களாகக் கருதும் சட்டத் திருத்தமாக்கியது. தற்போது 2019 ஆண்டில் மேலும் திருத்தமாக மேற்கூறிய நாடுகளில் இருந்து வந்த இந்து, கிறித்தவர், பார்சி, புத்தர், ஜெயினர் போன்றவர்கள் 2014 டிசம்பர் 31 ஆண்டுக்கு முன் 5 வருடங்களாக இருந்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்ற சட்டத்தினை தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். ஆனால் இலங்கையிலிருந்து உள்நாட்டுப் போரினாலும், பவுத்தப் பேரினவாதத்தினாலும் நாட்டைவிட்டு வந்த இலங்கை தமிழ் இந்துக்களுக்கும், தமிழ் முஸ்லிம்களுக்கும், பர்மாவில் அதே பவுத்தப் பேரினவாதத்தினால் கொன்று குவிக்கப்படும் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கும் குடியுரிமை மறுத்திருப்பது என்பது சர்வதேச சட்ட விதியான மதத்தின் அடிப்படையிலோ, இனத்தின் அடிப்படியிலோ ஒருவருக்கு குடியுரிமையினை மறுக்கக் கூடாது என்ற அடிப்படையினை மீறுகின்ற செயல் ஆகும்..
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 14-ஆவது விதியின் படி இந்தியா மதரீதியாக பிளவோ, பாகுபாடுகளோ செய்யக்கூடாது என்ற அடிப்படையினைத் தகர்த்திருக்கின்றனர் மோடியும் - அமித்ஷாவும்.
மதத்தின் அடிப்படையிலும், இனத்தின் அடிப்படையிலும் பாகுபாடுகளைக் கற்பிக்கும் இத்தகைய போக்கினை அரசு மாற்றிக் கொள்ள மக்களாகிய நாம் தான் உரிய அழுத்தத்தினைக் கொடுத்திட வேண்டும். ஏனென்றால் அரசு என்பது மக்கள் நலனுக்குத்தானே ஓழிய தனிமனித விருப்பு, வெறுப்புக்காக அல்ல...!!
- நவாஸ்