நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் சில தீர்மானகரமான படிப்பினைகளை நமக்குத் தந்திருக்கின்றது. இந்தியத் தேர்தலில் இனி பொருளாதாரக் காரணிகளைவிட பார்ப்பன பாசிச சித்தாந்தமே மேலாண்மை செலுத்தப் போகின்றது, சர்வாதிகாரத்தை மனமுவந்து ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு மக்கள் பயிற்றுவிக்கப்பட்டு விட்டார்கள், இந்தியா ஒரு கட்சி ஆட்சி முறையை நோக்கிச் செல்கின்றது என்பவைதான் அவை. காங்கிரசின் பத்தாண்டு கால மக்கள் விரோத ஆட்சி, மோடியை முதல்முறை மக்கள் தேர்ந்தெடுக்கக் காரணமாக இருந்தது என்றால், இந்த முறை மக்கள் மோடியைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணம் மோடியே ஆகும்.

தனக்குக் கிடைத்த ஐந்தாண்டு காலத்தை மோடி மிகச் சரியாகப் பயன்படுத்தி மக்களை தீவிரமாக பார்ப்பனமயப்படுத்தி இருக்கின்றார். கருத்து மக்களைப் பற்றிக் கொள்ளும் போது அது ஒரு பெளதிக சக்தியாக மாறிவிடும் என்பார் மார்க்ஸ். தற்போது இந்திய மக்களை பார்ப்பன பாசிசம் என்னும் கருத்து பற்றி இருக்கின்றது. அதனால்தான் பெரும்பான்மையான மக்களின் ஏகோபித்த விருப்பத்தின் பேரில் தற்போது பாசிசம் தனக்கு எதிரான அனைத்து சித்தாந்தங்களையும் புறம்தள்ளி ஆட்சி பீடத்தைப் பிடித்திருக்கின்றது.

Rahul and soniaஇதன் மூலம் சித்தாந்தங்களின் மோதல் அதன் உச்சகட்ட பரிணாமத்தை எட்டி இருக்கின்றது. பாட்டாளி வர்க்க விடுதலையின் சித்தாந்தமான கம்யூனிசத்திற்கும், முதலாளித்துவம் மற்றும் பார்ப்பனியத்திற்கும் இடையேயான மோதல்தான் இனி இந்திய அரசியல் போக்கை நிர்ணயிக்கப் போகின்றது. முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் யார் என்பதையும், சாமானிய மக்கள் மீதான மூலதனத்தின் தாக்குதலையும் பார்ப்பனியத்தின் தாக்குதலையும் ஒழித்துக் கட்டி, அவர்களை சுரண்டலின் பிடியில் இருந்தும் அடிமைச் சிந்தனையில் இருந்தும் விடுவிக்க நினைப்பவர்கள் யார் என்பதையும் சரியாக மக்கள் முன் அம்பலப்படுத்துவதன் மூலம்தான் இனி நாம் இந்த மோதலை எதிர்கொள்ள முடியும்.

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் பிஜேபி ஒரு இடம் கூட வரமுடியாமல் போனதற்காக சில முற்போக்குவாதிகள் மகிழ்ச்சி அடைகின்றார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் கேரளாவில் காங்கிரசு பெரும்பான்மையாக வெற்றி பெற்றதையும், கம்யூனிஸ்ட்கள் தோல்வி அடைந்ததையும் ஒரு சில முற்போக்குவதிகள் கொண்டாட்ட மனநிலையோடு அணுகுகின்றார்கள் என்பதை எப்படிப் புரிந்து கொள்வது? அவர்கள் கம்யூனிஸ்ட்களின் தோல்வியை கம்யூனிசத்தின் தோல்வியாகவே நினைத்து புளகாங்கிதம் அடைகின்றார்கள்.

இவர்களின் வர்க்கப் பார்வை ஒரு கேடுகெட்ட முதலாளித்துவ அடிவருடியின் வர்க்கப் பார்வைக்கு எந்த வகையிலும் குறைந்தது இல்லை என்பதை அவர்களே கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் வெளிக்காட்டிக் கொள்கின்றார்கள். காங்கிரசின் வெற்றியைப் பார்த்து மகிழ்ச்சியடையும் மனதின் அடியாழத்தில் எப்போதுமே முதலாளித்துவத்தின் பேய்கள் ஆட்டம் போடுவதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

பாட்டளி வர்க்க நலனில் அக்கறை உள்ள யாருமே நிச்சயம் கேரளாவில் காங்கிரசு அடைந்த வெற்றியைக் கொண்டாட மாட்டார்கள் என்பதுபோல மற்ற மாநிலங்களில் அது அடைந்த தோல்விக்காகவும் வருத்தப்பட மாட்டார்கள். முதலாளித்துவ கொடுங்கோன்மையை எந்தவித விமர்சனமும் இன்றி ஏற்றுக் கொள்பவர்கள்தான் பிஜேபி என்ற பாசிச கட்சிக்கு மாற்றாக, காங்கிரசு என்ற பாசிச கட்சியை முன்னிறுத்துபவர்கள். ஆந்திரா, அருணாச்சல், சண்டிகர், குஜராத், அரியானா, இமாச்சல், ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, டெல்லி, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகாண்ட் உள்ளிட்ட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்துள்ளதற்குக் காரணம், மக்கள் காங்கிரசை ஒரு மாற்று சக்தியாகக் கருதவில்லை என்பதுதான். இனியும் இந்தச் சூழ்நிலைதான் இந்தியாவில் தொடரப் போகின்றது என்பதை மதிப்பிடத் தெரியாதவர்கள் தான் காங்கிரசின் படுதோல்விக்காக வருத்தப்படுபவர்கள்.

நாம் இந்தச் சமூகத்தை எப்படி மாற்றியமைக்க விரும்புகின்றோம் என்பதில் இருந்துதான் நம்முடைய சித்தாந்தங்களை வரித்துக் கொள்கின்றோம். தற்போது பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்திருக்கும் பாசிச பிஜேபிக்கு எந்த வகையிலும் காங்கிரசு மாற்றே கிடையாது. காங்கிரசை மதச் சார்பற்ற கட்சி என்றோ, முதலாளித்துவத்திற்கு எதிரான கட்சி என்றோ யாராவது சொல்வார்களே ஆனால், அவர்கள் ஒன்று முட்டாள்களாக இருக்க வேண்டும்; இல்லை மக்களை நம்ப வைத்து முட்டாளாக்குபவர்களாக இருக்க வேண்டும். தங்களது வாழ்க்கையை சொகுசாக கட்டமைத்துக் கொண்டவர்களும், ஏசி அறைகளைவிட்டு தெருவுக்கு வந்து சாமானிய மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக எப்போதுமே போராடாத, குரல் கொடுக்காத ஆனால் முற்போக்குவாதி என்ற அடையாளத்தை மட்டும் விரும்பும் கும்பல்கள்தான் தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மாற்றாக கார்ப்ரேட் கட்சிகளை முன்நிலைப்படுத்துபவர்கள்.

பார்ப்பன பாசிசமும், முதலாளித்துவ பாசிசமும் ஒன்றோடு ஒன்று பிரிக்க முடியாத பிணைப்புடன் களத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது அதைச் சித்தாந்த ரீதியாக எதிர்த்து நின்று போராடி வீழ்த்தும் வலிமை கம்யூனிசத்திற்கு மட்டுமே உள்ளது. இந்திய பாட்டாளி வர்க்கத்தின் விடுதலையை உளப்பூர்வமாக விரும்பும் யாருமே இந்த இரண்டையுமே ஏற்றுக் கொள்ளாத கட்சிகளையோ, இல்லை இதில் ஏதாவது ஒன்றை மட்டுமே ஏற்று மற்றொரு பாசிசத்துக்கு துணை செய்யும் கட்சிகளையோ இயக்கங்களையோ ஒரு நாளும் ஆதரிக்க மாட்டார்கள். 

எப்படி பிஜேபி அழித்தொழிக்கப்பட வேண்டிய கட்சியோ, அதே போல காங்கிரசும் இந்த மண்ணில் இருந்து துடைத்து அழிக்கப்பட வேண்டிய பாசிச கட்சியாகும். அதன் அழிவு என்பது ஏற்கெனவே ஆரம்பமாகிவிட்டது. இந்திய ஒன்றும் நேரு குடும்பத்தின் சொத்து கிடையாது. ராகுல் காந்தி ஒன்றும் இந்தியாவின் இளவரசனும் கிடையாது. வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசி எறியப்பட வேண்டிய ஒரு கழிவாக காங்கிரசு இன்னும் எஞ்சி இருக்கின்றது. அது இந்திய மக்களுக்கும் குறிப்பாக தமிழக மக்களுக்கும் செய்த துரோகங்களை மறந்துவிட்டு இன்று காங்கிரசு கட்சியை ஆதரிக்கும் அனைவரும் இனத் துரோகிகளே ஆவர்கள். முதலாளித்துவத்தின் காலை நக்கிப் பயனடைபவர்களுக்கு ராகுல் காந்தியும், காங்கிரசும் கடவுளாகத் தெரிவதில் ஒன்றும் வியப்பில்லைதான்.

கம்யூனிஸ்ட்களை ஒழிக்க வேண்டும், கம்யூனிசத்தை ஒழிக்க வேண்டும், முதலாளித்துவத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சியை மடைமாற்றி முதலாளித்துவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று மனதார விரும்புவர்கள்தான் காங்கிரசை ஆதரிப்பவர்கள். அதன் தோல்விக்காக முதலைக் கண்ணீர் வடிப்பவர்கள். இவர்களின் வருத்தமெல்லாம் காங்கிரசு தோற்றுவிட்டதே என்பதல்ல, உண்மையில் பொறுக்கித் தின்பதற்கான வாய்ப்பு கைநழுவி போய்விட்டதே என்பதுதான். உண்மையான கம்யூனிஸ்ட்கள் காங்கிரசின் தோல்விக்காக ஒருபோதும் வருத்தப்பட மட்டார்கள். முற்போக்குவாதிகள் என்ற பெயரில் இருக்கும் பிற்போக்குவாதிகள் மட்டுமே அதற்காக வருத்தப்படுவார்கள். உண்மையான கம்யூனிஸ்ட்கள் பாசிச பிஜேபி மற்றும் காங்கிரசின் இடத்தைக் காலி செய்துவிட்டு ஒரு தனிப் பெரும் சக்தியாக கம்யூனிஸ்ட்களை எப்படி நிலை நிறுத்துவது என்பதைப் பற்றி மட்டுமே சிந்திப்பார்கள்.

- செ.கார்கி

Pin It