kovai agitation 400

கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் தொடர்ந்து 5 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். டாஸ்மாக் கடையால் கடந்த ஐந்து வருடங்களாக 40க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் குடியால் இறந்துள்ளனர். நேற்று முன்தினம் 20 மாணவ, மாணவிகள் டாஸ்மாக் கடையை எதிர்த்துப் போராடி கைதாகினர். அவர்கள் நேற்று முன்தினம் மாலையே விடுதலை செய்யப்பட்டனர். நேற்று (06-8-2015) மாணவ, மாணவிகளுடன் அப்பகுதி மக்களும் போராட்டத்தில் இணைந்து, இரண்டாவது நாளாக டாஸ்மாக் கடை முற்றுகைப் போராட்டத்தில் வீரியத்துடன் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் மாணவ, மாணவிகள் உட்பட பொதுமக்களும் அதிலும் பெண்கள் தங்கள் கைக்குழந்தையுடன் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கைது செய்தால் போராட்டம் அடங்கி விடும் என காவல்துறை கருதி இருக்க நேற்று மீண்டும் வீரியத்துடன் போராட்டம் நடந்தது. போராட்டம் தொடராமல் இருக்க கைது செய்வோம் என் எச்சரிக்க, மக்கள் அதையும் சந்திப்போம் என மாணவ தோழர்களுடன் உறுதியாக இருந்தனர். வேறுவழியின்றி காவல்துறை போராட்டத்தில் இருந்த 60க்கும் மேற்பட்டோரை கைது செய்தது.

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராடிய மாணவப் பெண் தோழர்களை, நேற்று காவல் துறையினர் (?) குறிவைத்து, அவர்களை அடித்து, மிரட்டி அச்சுறுத்த வேண்டும் என கொலை வெறித்தாக்குதலுக்கு உள்ளாக்கினர்..!

மேலும், போராட்டத்தில் கைது செய்த தோழர்களை வாகனத்தில் ஏற்றிய பின்னும் வாகனத்தில் வைத்தே மாணவர்களின் மீது கொடூரத் தாக்குதலில் காவல்துறை ஈடுபட்டது.

போராட்டத்தின் போது கடையைப் பூட்டாவிட்டால் நாங்கள் நகரவேமாட்டோம் என்று உறுதியாக காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் வீரப் பெண்மணிகள் ஈடுபட, வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் தோழர்களை காவல்துறை தரக்குறைவாக பேசி, "அவளோட துணியை அவுத்தெறி அப்போதுதான் அவள் பேசாமல் பயந்து வண்டியில் ஏறுவாள்" என்று காவல்துறை அதிகாரி தனது அரசு விசுவாசத்தை அதிகமாக மாணவிகளிடம் காட்டியுள்ளார். ராஜாவான காவல்துறை அதிகாரி உத்திரவிட உடனே அடிமைகளான பெண்காவலர்கள், கல்லூரி மாணவி தோழர் கண்மணியின் துணியை அவிழ்க்க முயற்சித்து முடியாததால் அதைக் கிழித்தனர். மேலும் அவரது முடியைப் பிடித்து ஆட்டி மிகவும் கேவலமான கெட்ட வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தி, இழுத்துச் சென்று காவல்துறை வண்டியில் ஏற்றி மண்டபத்திற்கு செல்லும்வரை அவரை அடித்து உதைத்துள்ளனர்.

இதே போல போராட்டத்தில் இருந்த மற்ற மாணவர்களை காவல்துறை அடித்ததில் ஏராளமானோருக்கு கைகளில் காயங்கள், கீறல்கள் ஏற்பட்டது. பல மாணவருக்கு உள்காயங்கள் ஏற்படும்படி, பலமாக காவல்துறையினர் தனது கைகளால் குத்தியுள்ளனர்.

காவல்துறை அடித்ததில் கல்லூரி மாணவியான தோழர் தமிழினியின் கைகள் வீங்கி, வலியால் அவர் துடித்துள்ளார். அப்போது காவல்துறை இழுத்து தொந்தரவு செய்ததில் தோழர் கண்மணியும் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

kovai students 600

அப்போது போலிஸார் அவர்களைப் பார்த்து

"என்ன நடிக்கிறீங்களா? நீங்கள் செத்தாலும் சரி, உங்களுக்கு மருத்துவ உதவி செய்ய இங்கு யாரும் வரமாட்டார்கள் . அப்படியே வந்தாலும் தவறான ஊசி போட்டு உங்களை நாங்களே கொன்றுவிடுவோம்" என்று திமிராக மிரட்டியுள்ளனர்.

அங்கு உடன் இருந்த தோழர்கள் 108 ஆம்புலன்சுக்கு அழைத்து மருத்துவ உதவி கேட்டுள்ளனர். அவர்களோ, காவல்துறை விவகாரம் என்றவுடன் பதில் ஏதும் பேசாமல் தொலைபேசித் தொடர்பை துண்டித்துவிட்டனர்.

மாணவ, மாணவிகள் மீது காவல்துறையை வைத்து அடக்குமுறையையும், அராஜகத்தையும் கட்டவிழ்த்துவிட்டு தமிழக அரசு இப்போது கைகட்டி வேடிக்கை பார்த்து ரசிக்கிறது. இந்த அரசு என்றும் மக்களுக்கானது அல்ல என்பது ஒவ்வொரு முறையும் மீண்டும், மீண்டும் நிரூபணம் ஆகிறது.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை..!!
மாணவர்களுக்கு தரமான கல்வி இல்லை..!!
இளைஞர்களுக்கு வேலை இல்லை..!!

விவசாயிக்கு விளைச்சலுக்கு தண்ணீர் இல்லை,
கிடைக்கும் விலையும் கட்டுபடியானதாக இல்லை..!

அரசுப் பள்ளிக்கூடங்களும், நூலகங்களும் தொடர்ச்சியாக அரசால் மூடப்படுவதும், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் அனைத்து துறைகளையும் தனியாருக்கு தாரைவார்க்கும் அவல நிலையுமே இப்போது நிலவுகிறது.

நேற்று இரவு பொதுமக்களையும், தாய்மார்களையும் மட்டும் விடுதலை செய்த காவல்துறை தோழர் தமிழினி, தோழர் கண்மணி உட்பட இரு மாணவிகளையும், 5 மாணவர்களையும் பிணையில் வர முடியாத 147,341,188,353, 506(i) ஆகிய பிரிவுகளில் கைது செய்து கோவை சிறையில் அடைத்து அக்கிரமம் செய்துள்ளது. இவர்கள் வெளியே இருந்தால் போராட்டத்தை தூண்டி விட்டுட்டுக் கொண்டே இருப்பார்களாம்..

அடக்குமுறையையைக் கண்டு போராட்டம் அடங்கி நின்றதாக வரலாறு இல்லை... மாணவர், மக்கள் நடத்தும் நீதிக்கான போராட்டம் வென்றே தீரும் !!

பாசிச 'ஜெ' அரசே உனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள் ..!!
இல்லையேல் நிலவும் அரசையே மாற்றும் நிலை நிச்சயம் வரும்..!!

தமிழக அரசே ...

* கைது செய்து சிறையில் அடைத்துள்ள மாணவ மாணவிகளை உடனே விடுதலை செய் !

* கொலைகார குடி கெடுக்கும் டாஸ்மாக் கடை எதிர்ப்புப் போராட்டத்தில், தமிழகம் முழுக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ள, மாணவ மாணவிகள், சமூக முன்னணியினர், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் அனைவரையும் உடனே விடுதலை செய் !!

* கோவையில் மாணவிகளை, மாணவர்களைத் தாக்கிய காவல்துறை அதிகாரிகளை கைது செய்!!!

* மக்களின் போராட்டத்திற்கு, மாணவர்களின் போராட்டத்திற்கு மதிப்பளிக்காத தமிழக அரசை தூக்கி எறிவோம்!!!!!

* அய்யா .சசிபெருமாள் இறந்து ஐந்து நாளாகியும், நாடு முழுக்க மக்கள் போராட்டம் வெடித்த நிலையிலும் கூட டாஸ்மாக் பற்றி எந்த முடிவும் எடுக்காத பாசிச "ஜெ" அரசுக்கு தமிழகமே, தக்க பாடம் புகட்டுவோம் !!!!

* மது இல்லா தமிழகம் படைப்போம் !!!! அதை நோக்கி தொடர்ந்து போராடி நிலைமையை மாற்றுவோம்!!!!!

தகவல் உதவி : புரட்சிகர மாணவர் முன்னணி, கோவை

- முகிலன்

Pin It