கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இதை ஒரு 'வெற்று சவடால்' என்றோ அல்லது 'ஆகச் சிறந்த அரசியல் தந்திரம்' என்றோ சொல்லலாம். ஆனால் மறுக்க முடியாத உண்மை என்னவென்றால், அவசர கதியில் நிறைவேற்றப்பட்ட 10% EWS இட ஒதுக்கீட்டு சட்டம் இந்தியாவின் சமூக நீதிக் கொள்கையின் அடிப்படைக்கே முற்றிலும் எதிரானது.

உயர் சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் EWS சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் பெரும் ஆராவாரத்தோடு அறிமுகப்படுத்திய ஒன்றிய அமைச்சர் அருண் ஜேட்லி, 10% EWS இட ஒதுக்கீட்டிற்கான அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் நீதித்துறையின் மறு ஆய்வுக்கு சென்றால் உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ளக்கூடிய பல நுணுக்கங்கள் குறித்து அவர் அமைதியாகவே இருந்தார்.

நரசிம்மராவ் அரசு தான் இந்த உயர்சாதி இட ஒதுக்கீட்டின் முன்னோடி. 1991 ஆம் ஆண்டில், நரசிம்மராவ் அரசு, அரசு நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து துறைகளிலும் 10% காலியிடங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு ஒதுக்கப்படும் என்று அரசாணை வெளியிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் அதை உடனடியாகத் தடை செய்துவிட்டது. இட ஒதுக்கீடு என்பது சாதியை மட்டும் அடிப்படையாக கொண்டதாக இருக்க முடியாது, அது போலவே பொருளாதாரத்தை மட்டும் அடிப்படையாக கொண்டதாகவும் இருக்க முடியாது என்றும் கூறியது. இதன் மூலம் வறுமை மட்டுமே பின்தங்கிய நிலைக்கான அளவுகோலாக இருக்க முடியாது என்று தெளிவு படுத்தியுள்ளது.

இதற்கு முன்பும் பொருளாதாரப் பின்தங்கிய நிலையை கண்டறிய நில உரிமையும் வருமானமும் அளவுகோல்களாக இருந்தன. உதாரணமாக, 2014 இல் ஜாட்களுக்கு UPA-II அரசு இட ஒதுக்கீடு வழங்கியதை எடுத்துக் கொள்வோம். 2014 பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முந்தைய நாள், UPA அரசாங்கம் ஒன்பது மாநிலங்களைச் சேர்ந்த ஜாட்களை ஒன்றிய OBC இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் சேர்த்தது.ews reservationஇந்திரா சஹானி வழக்கின் தீர்ப்பு, மண்டல் கமிஷன் அறிக்கை ஆகியவற்றின் பின்னணியில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் (NCBC) உருவாக்கியுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு முற்றிலும் முரணாக ஜாட்களுக்கு இட ஒதுக்கீடு தரப்பட்டது. இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகள்தான் இன்று OBC இட ஒதுக்கீடுகளைப் வழங்குவதற்கான அளவுருக்களை (indicators) உருவாக்குகின்றன.

இவற்றின்படி, தன்னளவில் தனித்தனி குறியீடுகளைக் கொண்ட "சமூகப் பின்தங்கிய நிலை", "கல்வியின் நிலை" "பொருளாதார நிலை" ஆகிய மூன்றும் 3:2:1 என்ற ஒப்பீட்டு மதிப்பின் அளவில் OBC இட ஒதுக்கீட்டின் ஆதார மையமாக விளங்குகின்றன.

2% மாதிரி கணக்கெடுப்பு மூலம் ஜாட்களின் சமூக-பொருளாதார நிலையை ஆய்வு செய்ய ஒரு நிபுணர் அமைப்பாக இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலை NCBC ஈடுபடுத்தியது. அதன்படி இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வின் மூலம் ‘ஜாட்’ கள் சமூகத்தில் பின்தங்கியவர்கள் இல்லை என்பது கண்டறியப்பட்டது. அவர்கள் கல்வியில் பின்தங்கியவர்கள் அல்ல என்றும், பொது வேலை வாய்ப்பு, இராணுவம், அரசு சேவைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் போதுமான பிரதிநிதித்துவம் உள்ளவர்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாழ்வாதாரத்திற்காக கூலி உழைப்பைச் சார்ந்திருத்தல், குழந்தை இறப்பு விகிதம், பிரசவத்தில் தாய் இறப்பு விகிதம், வீட்டிலேயே பிரசவம் போன்ற முக்கிய அளவுருக்களைக் கொண்டுள்ள சமூகப் பின்தங்கிய நிலையின் அளவுகோலில் ஜாட்கள் மிகவும் நல்ல நிலையில் இருப்பதாக கண்டறியப்பட்டது. இந்தக் காரணங்களைக் கூறி, ஜாட் இட ஒதுக்கீட்டை 2015-ல் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்திரா சஹானி வழக்குத் தீர்ப்பின் மையப் புள்ளியே பின் தங்கிய நிலையை ஆய்ந்து அறிய கட்டமைக்கப்பட்ட நிபுணர் குழு தான். தற்போதைய நிலையில் 10% அரிய வகை ஏழைகளின் உண்மையான பின் தங்கிய நிலையை கண்டறிவது இன்றியமையாததாகும்.

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 15(4) இவ்வாறு கூறுகிறது: 

இந்தப் பிரிவோஅல்லது பிரிவு 29ன் உட்பிரிவு (2) ல் உள்ள எதுவும் சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய குடிமக்கள் அல்லது பட்டியலின, பழங்குடியினரின் முன்னேற்றத்திற்காக அரசு மேற்கொள்ளும் எந்தவொரு சிறப்பு ஏற்பாடுகளையும் தடுக்காது.

மேற்குறிப்பிட்ட பிரிவு சமூக நிலையையும், கல்வி நிலையையும் அளவுகோல்களாகத் தெளிவாகக் குறிப்பிட்டாலும், பொருளாதார நிலையை ஒரு அளவுகோலாகக் குறிப்பிடவில்லை. இந்த இடைவெளியைத் தான் பாஜக அரசு நிரப்ப முயல்கிறது. சமூக நிலை, கல்வி, பொருளாதாரம் ஆகிய மூன்றும் பின்தங்கிய நிலையைத் தீர்மானிப்பதற்கான அடிப்படை அளவுகோல்கள். இவற்றில் ஒன்றைவிட்டு மற்றொன்றின் வழியாக மட்டும் பின் தங்கிய நிலையை தீர்மானிக்க முடியுமென்று இந்தத் திருத்தம் அர்த்தப்படுத்தாது.

அரசியலமைப்பின் பிரிவு 16(4) கூறுகிறது:

அரசின் கருத்துப்படி, அரசின் கீழ் உள்ள சேவைகளில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லாத பிற்படுத்தப்பட்ட குடிமக்களுக்கு ஆதரவாக நியமனங்கள் அல்லது பதவிகளில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான எந்த ஏற்பாடுகளையும் இந்தப் பிரிவில் உள்ள எதுவும் தடுக்காது.

மண்டல் கமிஷன் அறிக்கை, இந்திரா சஹானி தீர்ப்பு ஆகியவை இணைந்து OBC வகுப்பினரின் பிற்படுத்தப்பட்ட நிலையை கண்டறியும் அளவுகோலை வரையறுத்தது போன்று, இன்று உயர் சாதியினரின் பின்தங்கிய நிலையை வரையறுக்காமல் EWS சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. ஆண்டுக்கு ரூ. 8 லட்சத்திற்கும் குறைவாகவும், 1000 சதுர அடிக்குக் குறைவான வீடும், ஐந்து ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் எண்ணிக்கை பொதுப் பிரிவினரில் 90 விழுக்காடாக இருப்பதற்கு அதிக பட்ச சாத்தியங்கள் உள்ளன.

அரசுப் பணிகளில், கல்வி நிறுவனங்களில், இராணுவத்தில் இந்த 10% EWS இட ஒதுக்கீடு பெறும் மக்களின் பிரதிநிதித்துவம் என்னவாக இருக்கிறது என்பதை ஆய்ந்து அறிவது அவசியம். அப்படியான ஆய்வுகள் நடத்தப்படாததனாலேயே 8 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ள அனைத்து குடும்பங்களையும் ஒரே மாதிரியான வகுப்பாகக் கருத முடியாது.

இந்த குறியீடுகள் வரையறுக்கப்பட வேண்டாமா? ஆம் எனில், அவற்றை வரையறுக்க பொருத்தமான நிறுவனம் எது? இந்த அரிய வகை ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு மட்டுமே தீர்வா? கல்விக் கட்டணங்கள் தள்ளுபடி, உதவித்தொகைகள் அல்லது பிற நலத்திட்டங்களைத் செய்வது ஒரு சட்டப்பூர்வமான மாற்றுத் தீர்வாக இருக்க முடியாதா?

EWS இட ஒதுக்கீட்டு சட்டத் திருத்தத்தை அறிமுகப்படுத்தி, அது குறித்து நாடாளுமன்றத்தில் வாதிட்ட ஒன்றிய அமைச்சர் ஜெட்லி 50% இட ஒதுக்கீடு உச்ச வரம்பு ‘பொதுப் பிரிவுக்கு’ பொருந்தாது என்றார். வேடிக்கை என்னவென்றால், இட ஒதுக்கீட்டில் வராத பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு பரிந்துரைத்த குஜராத் மாநில அரசின் வாதம்தான் இது.

50% இட ஒதுக்கீட்டு உச்ச வரம்பு விதி SC, ST, OBC வகுப்பினருக்கு இட ஒதுக்கீடுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்ற குஜராத் அரசின் வாதத்தை குஜராத் உயர் நீதிமன்றம் நிராகரித்தது. மைய நீரோட்டத்திலிருந்து விலகி பார தூர தொலைவின் விளிம்பில் வாழும் மக்களுக்கு வேண்டுமானால் அசாதாரண வழக்காக கருதி 50% விதிகளை தளர்த்த முடியும். ஆனால் இந்த வழக்கு அப்படியானது ஒன்றுமில்லை என்று சொல்லி குஜராத் அரசின் அவசர சட்டத்தை தள்ளுபடி செய்தது. மேலும் இந்த 10% மக்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளை அறிவியல் பூர்வமாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும் நிபுணர் குழு ஏதும் ஆய்வு நடத்தி எழுத்துப் பூர்வ தரவுகளை தந்துள்ளதா என்ற கேள்வி கேட்டுள்ளது. ஆனால் பதில்தான் இல்லை.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையின் அடிப்படையில் ஒரு வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது மாநில அரசின் அதிகார வரம்புக்குட்பட்டது என்று இந்திரா சஹானி வழக்கில் கூறிய உச்ச நீதிமன்றம், ஆனால் அத்தகைய வகுப்பினரின் பிரதிநிதித்துவமின்மையை கண்டறியக் கூடிய சரியான வழிமுறைகள் அரசிடம் இருந்தால் மட்டுமே அது சாத்தியம் என்றும் கூறியுள்ளது. நம் முன்னால் இருக்கும் கேள்வி என்னவென்றால், பொருளாதாரத்தில் பின்தங்கிய 10% உயர் சாதியினர் என்று அழைக்கப்படுபவர்களின் பிரதிநிதித்துவப் பற்றாக்குறையை எந்த நிறுவனம் கண்டறிந்தது? இதற்கும் பதில் இல்லை.

அரசியலில், சாதி முக்கியப் பங்கு வகிக்கலாம் அல்லது இல்லாமலிருக்கலாம், ஆனால் அரசியலும் அரசியலமைப்புச் சட்டத்தை அமல்படுத்தலும் ஒரே மாதிரியானவை அல்ல என்பதை மிகச் சரியாக மண்டல் கமிஷன் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இன்று, பிஜேபி அரசாங்கம் அரசியலமைப்புச் சட்டத்தை புறக்கணிக்கும் போது இந்த ஆதார விதியை அவர்களுக்கு நினைவூட்டுவது முக்கியம்.

பராக்ரம் கக்கர்

நன்றி: thewire.in இணையதளம் (2019, ஜனவரி 10 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: கீற்று பாஸ்கர்