விடுதலை பெற்ற இந்தியாவில் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கு ஆட்சியிலிருப்பவர்கள் நிறைவேற்ற வேண்டிய மக்கள் நலத் திட்டங்களை இந்திய அரசியல் சட்டம் வரையறுத்து வழிகாட்டியிருக்கிறது. சமவேலைக்கு சம ஊதியம், 6 வயது முதல் 14 வயது குழந்தைகளை வேலைக்கு அனுப்பாமல் கட்டாயக் கல்வியளித்தல், இலவச சட்ட உதவி, பெண்களுக்கு பேறுகால உதவி ஆகியனவற்றுடன் மக்களின் பொதுவான உடல்நலத்தை உத்தரவாதப்படுத்தும் நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

drug 226மக்கள் உடல்நலத்தையும், உயிரையும் பாதுகாக்க 1940ம் ஆண்டிலேயே, அதுவும் அன்னியர் ஆட்சிக் காலத்திலேயே மருந்துகள் மற்றும் வாசனைத் திரவியங்கள் உற்பத்தி, விநியோகம், விற்பனை ஆகியவற்றை முறைப்படுத்தவும், கலப்படம் மற்றும் போலி மருந்துகள் தயாரிப்பவர்களை தண்டிக்கவும் மிக முக்கியமான மருந்துகள் மற்றும் வாசனை திரவியங்கள் சட்டம் கொண்டு வரப்பட்டது.

ஆங்கில முறை சிகிச்சைக்குத் தேவைப்படும் மருந்துகள், ஆயுர்வேதம், யூனானி மற்றும் சித்தவைத்திய மருந்துகள் உட்பட உள்நாட்டில் உற்பத்தி செய்பவர்கள், மருந்துகளை இறக்குமதி செய்பவர்கள், அந்த மருந்துகளை மத்திய அரசின் தேசிய மருந்துக் கட்டுப்பாடு அதிகாரி அலுவலகத்தில் (DRUG CONTROLER OF INDIA) பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் அவற்றின் தரத்தைப் பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கிய பின்னர்தான் மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றும் மேற்படி மருத்துகள் மற்றும் வாசனை திரவியங்கள் சட்டம் சொல்கிறது.

மாநில அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்துகள் நிர்வாகத் துறை அதிகாரிகள், மருந்துக்கடைகளில் விற்கப்படும் மருந்துகளின் மாதிரிகளை சேகரித்து, அரசு மருந்து பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பி, தரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், கலப்பட மருந்துகள் அல்லது போலி மருந்துகளைக் கண்டுபிடித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவழக்குகள் தொடுத்து தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்றும் இந்த சட்டம் வலியுறுத்துகிறது.

சென்னையில் செயல்படும் ஒரேயொரு மருந்துப் பரிசோதனைக் கூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட புள்ளிவிவரத்தைப் பார்ப்போம். 2012 – 2013ல் பரிசோதிக்கப்பட்ட மருந்துகளின் எண்ணிக்கை 4446. தரமற்றவையென்று கண்டுபிடிக்கப்பட்டவை – 38. 2013 – 2014ல் 6163 மருந்துகள் பரிசோதனை. தரமற்றவை 26 மட்டும். 2014 – 2015ல் 8756 மருந்துகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு 45 மருந்துகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டன. மேற்படி ஆண்டுகளில் விற்பனை செய்யப்பட்ட மருந்துகளின் எண்ணிக்கை சுமார் 280000 மட்டுமே அதாவது 3% சித்தா, ஆயுர்வேதா, யூனானி மருந்துகள் உட்பட.

அப்படியென்றால் தமிழக மக்கள் ஒவ்வொரு ஆண்டும் விற்பனை செய்யப்படும் 2 லட்சத்து 80 ஆயிரம் வகை மருந்துகளில் 97% மருந்துகளை எந்தவிதமான தரக்கட்டுப்பாடு பரிசோதனையும் இல்லாமல் பல தரமற்ற போலியான கலப்பட மருந்துகளை வாங்கிப் பயன்படுத்தி, உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்.

தமிழகத்தில் 6873 டாஸ்மாக் கடைகளில் 2014 – 2015ம் ஆண்டில் 42 லட்சம் பெட்டி விஸ்கி, பிராந்தி, ரம் வகைகளும், 29 லட்சம் பெட்டி பீர் வகைகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆண்டொன்றுக்கு சராசரியாக 30 ஆயிரம் கோடிக்கு விற்பனையாகி வந்த டாஸ்மாக் சரக்குகளில் கடந்த 6 மாதங்களில் மொத்த விற்பனையில் 6% சரிவு ஏற்பட்டது. இதற்கான காரணங்களைக் கண்டறிந்து, விற்பனையை அதிகரிக்க போர்க்கால அடிப்படையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

பெரிய பெரிய நகரங்களில் மால்களில், சூப்பர் ஸ்பெசாலிட்டி சிறப்பு மதுபான விற்பனைக்கடைகளை திறக்கவும், புதிதாக உருவாகும் குடியிருப்புப் பகுதிகளில் புதிய டாஸ்மாக் விற்பனைக் கூடங்களை திறந்து மது விற்பனையைப் பெருக்கவும் நிபுணர் குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

குடிபோதையிலிருந்து 6% மக்கள்கூட திருந்திவிடக் கூடாது என்பதில் அக்கறையோடு செயல்படும் மாநில அரசு, மக்களின் உயிர்காக்கும் மருந்துகளைப் பரிசோதனை செய்ய ஏற்கனவே அறிவித்தபடி கோவையிலும், நெல்லையிலும், மதுரையிலும், சேலத்திலும், திருச்சியிலும் கூடுதல் பரிசோதனைக் கூடங்களைத் திறக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதது – ஏன் ?

அமைச்சர் பதவிகளை தக்கவைத்துக் கொள்ள அல்லது பதவியிழந்த அமைச்சர்கள் மீண்டும் அமைச்சர் பதவியைக் கைப்பற்ற அல்லது புதிதாக அமைச்சர் பதவி வாயப்பு கிடைக்க, நாளும் கிழமையும் பால்குடம், பன்னீர் குடம் சுமந்தும், காவடியெடுத்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும், யாகங்கள் வளர்த்தும், தங்கத்தேர் இழுத்தும், மண் சோறு சாப்பிட்டும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கியும், மொட்டை போட்டும் 'அம்மாவின்' கடைக்கண் பார்வைக்காக தவமிருக்கும் அமைச்சர் பெருமக்களுக்கு கூடுதல் மருந்து பரிசோதனைக் கூடங்கள் திறப்பது பற்றி சிந்திக்க நேரமில்லை.

பரிசோதனை இல்லாமல் தரக்குறைவான கலப்பட போலி மருந்துகளை சாப்பிட்டு நோயாளிகள் உயிர்துறந்தால், 'அது அவர்களின் தலைவிதி' என்று கூட அமைச்சர் பெருமக்கள் சொல்லக்கூடும்.

 - கே.சுப்ரமணியன், இந்திய வழக்கறிஞர் சங்க தேசிய செயற்குழு உறுப்பினர்

Pin It