மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்ட அம்சங்களில் வேறுபாடுகளைக் கொண்ட இனக்குழுக்களின் ஒருங்கி ணைவுப் போன்றதொரு கூட்டுமனப்பான்மை ஊடாடுகிற இந்தியச் சமுதாயம், பன்னாட்டுச் சமுதாயங்களின் வாழ்வியல் கூறுக ளினின்று பண்பு ரீதியான மாறுபாடுகளைக் கொண்டுள்ளது எனலாம். இந்தியச் சமுதாயத்தின் ஒட்டுமொத்த வாழ்க்கை முறையும் உலக சமுதாயங்களின் வாழ்க்கை முறைகளில்லாத சடங்குகளாலும் சாங்கியங்களாலும் இறுக்கமாய்ப் பிணைக்கப்பட்டுள்ளது. தனிமனிதனின், சமூகத்தின் இடமும் இருப்பும் பிறப்பு முதல் இறப்பு வரைக்கும் பல்வகை ஐதிகங்களை அடிப்படையாகக்கொண்ட சடங்கு முறைகளால் நெய்யப்பட்டிருப்பதுடன் காலாதி காலமாக பின்பற்றப்படும் அவற்றைத் தொடர்ந்துக் கடைபிடிக்கவும் வற்புறுத்தப்படுகின்றன. இந்தியச் சமுதாயத்தின் அருவெறுக்கத்தக்கத் தனித்தன்மைகளில் ஒன்று எனில், அது, சமூகங்களைப் பிளவு படுத்துவதற்கேயான தனி ஏற்பாடாக விளங்கும் சாதிய முறையே ஆகும். இந்தச் சாதிய வேறுபாடுகளை மற்றும் சிற்சில விசயங்களில் மத வேறுபாடுகளைக் கடந்தும்கூட பொதுவாகிப்போன மரபார்ந்த கலாச்சார, பண்பாட்டு அடையாளங்கள் சிலவும் இந்தியச் சமுதாய அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. அப்படியான சிலவற்றுள் பிரதானமானதொரு பண்பாட்டுக் கூறுதான் தாலி என்னும் அடையாளம்.

ayothithasar 300ஆம், இந்தியச் சமுதாயத்தின் பெரும்பான்மைப் பிரிவாக விளங்கும் இந்துக்களின் திருமணங்களில் பெண்ணின் கழுத்தில் மங்கல நாண் என்னும் தாலிச் சரடு அணிவிக்கும் வழக்கம் இந்தியா முமுமைக்குமான பொதுப்பண்பாகவே நிலைப்பெற்றுள்ளது. இந்திய முஸ்லிம்களும் கூட தங்களின் திருமணச் சடங்குகளில் ஒன்றாக மணப்பெண்ணுக்கு கருமணியாலான தாலிச் சரடை அணிவிக்கும் வழக்கத்தைக் கைக்கொண்டுள்ளனர் என்பது தாலியின் செல்வாக்கு இந்து மதம் கடந்தும் கால்கொண்டுள்ளது என்பதை உணர்த்துகிறது.. அதேசமயம் இந்திய புவியியல் பகுதிககுள் நவீன காலத்தில் நுழைந்த கிறிஸ்துவத்தால் ஈர்க்கப்பட்ட மக்கள் மத்தியில் மட்டும் விதி விலக்காக தாலி அணியும் வழக்கம் இல்லை என்பதுடன் மோதிரம் மாற்றிக்கொள்ளும் மேற்குலகப் பண்பாட்டையே அவர்கள் பின்பற்றுகின்றனர் என்பதும் குறிப்பிடத் தகுந்தது.

இந்தத் தாலி, தமிழ் அரசியல் சூழலில் சிலசமயங்களில் விவாதப் பொருளாக அவதாரம் தரித்து சிறு சலசலப்பை உண்டுப் பண்ணுவதுமுண்டு. அவ்வமயம் தாலி என்பது இந்திய மக்களின்-தமிழர்களின் தொல் அடையாளம், புனிதம் சார்ந்த நம்பிக்கை, கலாச்சாரக் குறியீடு என்றெல்லாம் சொல்லிக்கொண்டு அதை மறுப்பதுவும் சிதைக்க நினைப்பதுவும் அறிவீனம் என்று பிற்போக் குத் தரப்பு கொந்தளிப்பதுண்டு. தாலி என்பது பெண்ணடிமைத் தனத்தின் இருத்தலுக்குச் சாட்சியாக விளங்கும் ஓர் அவமான சின்னம், மூடநம்பிக்கையுடன் சம்பந்தப்பட்ட அது கழற்றி தூக்கி எறியப்பட வேண்டிய ஒரு சாதாரண வில்லையே தவிர்த்து அதில் எந்தவித புனிதத் தன்மையும் இல்லையென்று முற்போக்குத் தரப்பு காரசாரமாக விவாதம் செய்வதுண்டு. இச்சூழலில் தமிழ் அறிஞர்கள் சிலர் கிளம்பி தங்கள் பங்குக்கு தாலி அணிந்து கொள்ளும் வழக்கம் தமிழர் பண்பாட்டுக்குள் நுழைந்தக் காலம் குறித்த ஆராய்ச்சி முடிவுகளை சங்க இலக்கியங்களின் துணையோடு வழங்குவர்.

சமீபமாக திராவிடர் கழகம் சென்னையில் தாலியைக் கழற்றி எறிவோம் என்றொரு நிகழ்ச்சியை நடத்திய போதும் அதையொட்டி மேற்படி அனைத்துவகை திருவிளையாடல்களும் நடந்தேறின. அவ்வகையில் தாலி அணியும் பழக்கம் தமிழர்கள் மத்தியில் இருந்ததா இல்லையா என்னும் விவாதத்தை கவிஞர் கண்ணதாசன் துவக்கி வைத்தார், தாலி என்பது தொல் தமிழர்களின் அடையாளந்தான் என்று ம.பொ.சி. வாதிட்டார் என்பது போன்ற கருத்துக்களைத் தாங்கியவாறு கட்டுரைகளும் வெளிவந்தன. ஆனால் தாலி கட்டும் வழக்கம் இந்திய மண்ணில் வலுவாகக் கால்கொண்ட வரலாற்றுப் பின்புலத்தை மையமாகக் கொண்ட கருத்துகள் உள்ளடங்கிய கட்டுரைகள் எதுவும் வராதுபோக, அதுசம்பந்தமாக க. அயோத்திதாசப் பண்டிதரின் சிந்தனைகளில் தேடத் துவங்கவே சில அரிய தகவல்கள் கிடைத்தன நமக்கு.

அயோத்திதாசப் பண்டிதர் தாலியை 'மாங்கல்ய சரடு' என்றழைக்கிறார். மேலும் அவர் இந்தியப் பகுதிகள் முகலாயர் பிடியின் கீழ் இருந்த சமயம் முகலாய இளைஞர்களால் இந்தியப் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகிய அசாதாரணமான சமு தாயச் சூழல்தான் 'தாலி' என்னும் அடையாளத்தை இந்தியா முழுமைக்கும் வழங்கி வலுப்பெற செய்தது என்கிறார்.

“மகம்மதியர்களது துரைத்தனம் இவ்விடம் பரவியபோது தங்களுக்குத் தாங்களே பிராமணர்களென்று சொல்லிக்கொண்டுள்ளக் கூட்டத்தோர்களிற் சிலர் மகமதிய அரசர்களிடம் மந்திரிகளாகச் சேர்ந்துகொண்டு காரியாதிகளை நடத்திக்கொண்டு வந்ததாகவும் அக்காலத்தில் வந்துள்ள மகமதிய பாலியர்கள் நீர்கரைகளுக்குப் போகும் பெண்களையும், துராக்கிரமமாக இழுத்துக்கொண்டு போய்விடுவதும் பலவந்தஞ் செய்வதுமாக இருந்த செய்கைகளைக் கண்டுவந்த மந்திரிகள் மகமதிய அரசர்களை அணுகி இத்தேசப் பெண்களுள் மஞ்சள் சரடுடன் மாங்கல்லியம் அணிந்துள்ளப் பெண்கள் யாவரும் ஒவ்வொரு புருஷர்களுக்கு நியமித்துள்ளவர்கள் அவர்களைப் போய் மகமதிய பாலியர்கள் கைப்பற்றுவதும் துராக்கிரமம் செய்வதும் நியாயமல்ல. மற்ற வெறுமனேயிருக்கும் பெண்களைக் கைப்பற்றிக்கொண்டாலும் குற்றமில்லை. ஒருவன் மனையாளைக் கெடுக்கலாகாது. ஆதலால் மாங்கல்யங் கழுத்திலுள்ளப் பெண்களைப் பிடிக்கலாகாதென்று மகமதியர்கள் யாவரும் அறிவிக்கச் செய்துவிட்டு தங்களைச் சார்ந்தவர்கள் யாவ ருக்கும் சிறுவயதிலேயே பெண்களுக்கு விவாகஞ்செய்து மஞ்சட் சரடைக் கழுத்திலணைந்துவிடுங்கோள் அப்போதுதான் மகமதிய பாலியர்கள் நமதுப் பெண்களை துராக்கிரமமாய் பிடிக்கமாட்டார்கள். மஞ்சள் சரடில்லாதோரைப் பிடித்துக்கொள்ளுவார்களென்று கூறியவுடன் அவர்களது மரபினர் சிறுவயதிலேயே விவாகஞ் செய்துவிட ஆரம்பித்துக்கொண்டதுடன் அவர்களது மதங்களைத் தழுவிய இத்தேசத்தோரும் சிறுவயதிலேயே பெண்களுக்கு விவாகஞ்செய்துவிட ஆரம்பித்துக்கொண்டார்களாம். இத்தகைய விதிவழிகளை அநுசரித்து வருங்கால் விதவைகளாவிட்டப் பெண்களுக்கு மஞ்சட் சரடை எடுத்துவிட வேண்டியதானபடியால் அவர் களுள் ரூபவதியானவர்களை மகமதியர்கள் பிடித்துக்கொள்ள் ஆரம்பித்து விட்டார்களாம்.

அதனால் கைம்பெண்களின் அழகைக் குறைத்துவிட வேண்டி அவர்களுக்கு நல்ல ஆடைகளும் ஆபரணங்களும் அணியாது சீரைக் கெடுத்ததுடன் தலைமயிரையுங்கழித்து மொட்டையடித்து விடும் வழக்கத்தில் கொண்டுவந்து விட்டார்கள். இச்சிறு பெண் களை விவாகஞ் செய்துவிடுவதும் குமரபருவ விதவைகளை மொட்டையடித்துவிடுவதும் சில மகமதிய பாலியர்களின் பயமே காரணமாகக்கொண்டு செய்து வந்ததாக விளங்குகின்றதேயன்றி வேறோர் சீர்திருத்தவாதாரங்களுங்கிடையாது சீர்கேட்டிற்கே மூல மாகிவிட்டது” (தமிழன்,டிசம்பர், 1912)

கி.பி. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர் (788-820) எழுதிய வழிபாட்டு சடங்கு முறைகளையும் ஸ்லோகங்களையும் விளக்கும் சௌந்தர்ய லஹரி என்னும் நூலில் தாலியை 'மங்கல சூத்ரா' என்றழைக்கப்படுகிறது என்று சொல்லப்படுவதன் மூலம் தாலி கட்டும் பழக்கம் முகலாயர்களின் வருகைக்கு முன்னரே இங்கு வழக்கத்தில் இருந்துள்ளது என்னும் குறிப்பு கிடைக்கிறது தான். என்றாலும், பண்டிதரின் மேற்படி பதிவு, தாலி அணியும் வழக்கம் இந்திய மண்ணில் ஆழமாக வேரூன்றிய காலத்தையும் பின்புலத்தையும் ஒருசேர கோடிட்டுக் காட்டுவதுடன் இதன் தொடர்ச்சியாகவே பார்ப்பனர்கள் மத்தியில் பால்ய விவாகம் மற்றும் விதவைப் பெண்களுக்கு மொட்டைப் போட்டு வெள்ளை ஆடையை அணிவித்தல் போன்ற பழக்கங்களும் வழக்கத்திற்கு வந்தன என்னும் வரலாற்றையும் பேசுகிறது. ஆகவே முகலாய மன்னர்களிடம் மந்திரிகளாக இருந்த பார்ப்பனர்கள் அரசு அதிகாரத்தில் தங்களுக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி தாலி அணிந்து கொண்டிருக்கும் பெண்களைப் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கக் கூடாது என்ற நிலையையும் உருவாக்கி தம் பெண்களை முகலாய இளைஞர்களிடமிருந்துக் காத்துக்கொண்டனர் என்னும் அரிய வரலாற்றுச் செய்தியை பண்டிதரிடம் காண முடிகிறது. முகமதிய இளைஞர்களின் பாலியல் வன்கொடுமைகள் பார்ப்பனப் பெண்களைத் தாண்டி பிற சமூக பெண்கள் மீதும் குறியிலக்குக் கொண்டிருக்கக்கூடும் என்பதால் அவர்களும் தங்கள் பெண்களைத் தற்காத்துக்கொள்வதற்கு பார்ப்பனர்கள் பின்பற்றிய மேற்படியான நடைமுறைகளையே கையாண்டிருக்கும் பட்சத்தில் திருமணத்தின்போது 'தாலி' அணிவித்தல் என்னும் சடங்கானது முகலாயர் காலத்தில்தான் வலுவடைந்து விரிவடைந்துள்ளது எனலாம் அல்லவா!

1) நமக்குக் கிடைக்கும் தொல்லிலக்கியச் சான்றுகளிலிருந்து (சங்க இலக்கியம், சிலப்பதிகாரம்) அக்காலத்தில் தாலிகட்டும் பழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது, 2) கி.பி..10 ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தாலிப் பேச்சே கிடையாது என் கிறார் கா.அப்பாதுரையார். பெரும்புலவர் மதுரை முதலியாரும் ஆய்வறிஞர் மா.இராசமாணிக்கனாரும் பழந்தமிழர்களிடத்தில் மங்கலத்தாலி வழக்கு இல்லை என உறுதியுடன் எடுத்துக் கூறினார் 3) கி.பி. 7ஆம் நூற்றாண்டில் திருமணச் சடங்குகளை ஒவ் வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பற்றிய பேச்சே கிடையாது 4) தமிழ் நாட்டில் ஆதிச்சநல்லூர் உட்பட பல் வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருள்களில் இதுவரை தாலி எதுவும் கிடைக்கவில்லை 5) கி.பி. 10 ஆம் நூற்றாண்டு முதலே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாகக் கொள்ளலாம். அதன் பின்னரே கோவில்களிலும் பெண் தெய்வங்களுக்குத் தாலி அணிவிக்கப்பட்டது. திருக்கல்யாண விழாக்களும் நடத்தப்பட்டன. 6) சங்க இலக்கியங்களில் தாலி மட்டுமல்ல; பெண்ணுக்குரிய மங்கலப் பொருள்களாக இன்று கருதப்படும் மஞ்சள், குங்குமம் ஆகியவையும்கூட பேசப்படவே இல்லை (பண்பாட்டு அசைவுகள், தொ.பரமசிவன், பக்: 51,52) என்று பேரா.தொ.ப. வழங்கும் குறிப்புகள் முகலாயர்கள் உள்ளிட்ட அந்நியர் படையெடுப்புகள் நிகழாத வரைக்கும் இந்திய மண்ணிலும் தமிழகப் பகுதிகளிலும் தாலி மீது புனிதமானது, மங்கலகரமானது என்னும் மதிப்பீடுகள் படிந்திருந்ததற்கான சான்றுகளும் இல்லை என்பதையே உறுதி செய்கிறது. தொ.ப.வின் கருத்துக்களை அயோத்திதாசரின் மேற்கண்ட வாதத்துடன் பொருத்தி இவ்விருவரது கூற்றுகளையும் அளவுகோலாகக் கொண்டு பார்க்கும்போது கிட்டத்தட்ட முகலாயர் காலத்துக்கு முன்பு வரைக்கும் தாலி அதிகப்படியான முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை என்பதும் தெளிவாகிறது. இது கி.பி.10 ஆம் நூற்றாண்டுக்குப் பின்பு பார்ப்பனர்களால் ஒரு தற்காப்பு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட ஒன்றேயாகும் ; நாளடைவில்தான் அதன்மீது மங்கலகரம், புனிதத்துவம் என்பது போன்ற மதிப்பீடுகள் ஏற்றப் பட்டுள்ளன என்பதுவும் உறுதியாகிறது.

இன்று இஸ்லாமிய சமூகம் உள்ளிட்ட பெரும்பான்மை இந்தியச் சமுதாயங்களின் கலாச்சாரம், பண்பாடுகளுடன் இரத்தமும் சதையுமாக கலந்துவிட்டிருக்கும் 'தாலி' அறிமுகமான வரலாற்றை எடுத்துரைக்கும் தாசர் "அத்தகைய பயம் (முகலாய இளைஞர்களிடம் இந்தியப் பெண்களுக்கிருந்த பயம்- க.ஆர்) நீதியும் நெறியும் கருணையும் அமைந்த இப்பிரிட்டிஷ் அரசாங்கத்தில் இல்லாதபடியால் இக்காலத்திலும் அவற்றை அநுசரிப்பது வீண்செயலேயாதலின் சீர்திருத்தக்காரர்கள் அவற்றைக் கண்ணுற்று சிறுவயது விவாகத்தை அகற்றி விதவா விவாகத்தை வழிக்குக் கொண்டு வருவார்களென்று நம்புகிறோம். "பழையன கழிதலும் புதிய புகுதலும், வழுவலகாலவ கையினானே" என்னும் சமண முநிவர்கள் விதிப்படி காலத்தை அநுசரித்து தேச சீர்திருத்தத்தைச் செய்யவேண்டியதே அழகாம்" என்று தாலி சரடு உருவானதற்கான வரலாற்றுக் காரணம் முடிவடைந்துபோன காரணத்தால் அதனைத் தொடர்ந்துப் பின்பற்றுவதும் கொண்டாடுவதும் தேவையற்றதொரு பிற்போக்கான நடைமுறையாகும் என்ற தொனியில் தமது கருத்தை முன்வைத்தார். இப்படியான புரட்சிகரமான கருத்துக்களைக் கொண்டிருந்தவர் என்கிற முறையில், முற்பட்ட தாலி மறுப்பு சிந்தனையாளராகவும் விதவை மறுமணத்துக்கு ஆதரவாளராகவும் பால்ய விவாகத்துக்கு எதிர்ப்பாளாராகவும் மொத்தத்தில் தமிழகத்தின் முன்னோடி பகுத்தறிவுவாதியாகவும் நம்முன் எழுந்து நிற்கிறார் அயோத்திதாசர்.

Pin It