தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருபுறமும் 500 மீட்டர் தொலைவுக்குள் உள்ள மதுபானக் கடைகளை மார்ச் 31 ஆம் தேதிக்குள் மூடுமாறு உச்சநீதி மன்றம் உத்திரவிட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தொலைவுக்குள் இருந்த 3316 மதுபானக் கடைகள் மூடப்பட்டன. இதனால் ஒருபக்கம் குடிமகன்களிடம் இருந்து அரசுக்கும், அரசை நடத்திக் கொண்டிருக்கும் சாராய வியாபாரிகளுக்கும் வந்து கொண்டிருந்த பெரும் தொகையில் கணிசமான அளவு வெட்டு ஏற்பட்டுள்ளது. இந்த வெட்டை சரிசெய்ய, மூடாமல் மீதி இருக்கும் மதுபானக் கடைகள் காவல் துறையின் ஆசியுடன் 24X7 செயல்பட்டு வருகின்றது. மதுபானக் கடைகள் மட்டும் அல்லாமல், உள்ளூர் ஆளும் கட்சி காலிகள் டாஸ்மாக்கில் இருந்து பெரிய அளவில் மது பாட்டில்களை வாங்கிவந்து ஊருக்குள் ஒரு குவாட்டருக்கு 20 முதல் 60 வரை கூடுதல் விலை வைத்து விற்று கல்லா கட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். தமிழகம் முழுவதும் குட்டி குட்டி சாராய வியாபாரிகள் தற்போது உருவாகி இருக்கின்றார்கள்.

tasmac 636ஒரு பக்கம் தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்து ஆடுகின்றது. மக்கள் தினம் தினம் சாலைகளில் குடத்தை வைத்து அரசுக்கு எதிராகப் போராடும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றது. இன்னொரு பக்கம் மதுபானக் கடைகளுக்கு எதிரான போராட்டம் தமிழகம் முழுவதும் பரந்த அளவில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. மூடப்பட்ட மதுபானக் கடைகளை 500 மீட்டருக்கு உள்ளே தள்ளி அமைக்க சாராய வியாபாரிகளின் அரசு தீவிரம் காட்டி வருகின்றது. இதனால் பல ஊர்களில் மக்கள் ஊரின் நுழைவுப் பகுதியிலேயே ‘எங்கள் ஊருக்கு டாஸ்மாக் கடை வேண்டாம்’ என்று பிளக்ஸ் பேனர்கள் வைத்து அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். பல ஊர்களில் மக்கள் தங்கள் எதிர்ப்பை மீறி வைக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கி இருக்கின்றார்கள். தமிழகத்தில் குடியால் இழவு விழாத வீடே இல்லை என்ற நிலையில் இருந்து பார்க்கும் போது, மக்களின் இந்தக் கோபத்தையும், ஆத்திரத்தையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் பச்சைத்தமிழர்களின் ஆட்சி மக்களின் இந்தக் கோபத்தைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. மக்கள் எவ்வளவுதான் கடுமையாக போராட்டம் நடத்தினாலும், திரும்ப மதுகடைகளைத் திறக்காமல் விடமாட்டோம் என கங்கணம் கட்டிக்கொண்டு அழைந்து கொண்டு இருக்கின்றார்கள்.

மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அலை மோதிக்கொண்டு இருக்கின்றது. பார்கள் இல்லாத சூழ்நிலையில் குடிமகன்கள் சாலையையே பாராக மாற்றி குடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். பொது மக்கள் பெரிய அளவில் போய்வரும் சாலைகளிலேயே குடிமகன்கள் குடித்துவிட்டு வருவோர் போவோரிடம் எல்லாம் பஞ்சாயத்து செய்து கொண்டு இருக்கின்றார்கள். குடிமகன்களின் இத்தனைக் கூத்துக்களும் காவல்துறையில் பாதுகாப்போடு அரங்கேறிக்கொண்டு இருக்கின்றது என்பதுதான் வெட்கக்கேடானது. குடிகாரர்களிடம் இருந்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பு தருவதற்குப் பதில், குடிகாரர்களின் அழிச்சாட்டியத்தால் கொலைவெறியோடு இருக்கும் பொதுமக்களிடம் இருந்து குடிகாரர்களைப் பாதுகாக்கும் வேலையைத்தான் தமிழக காவல்துறை செய்துகொண்டு இருக்கின்றது. இன்னும் குடிகாரர்களுக்கு ஊத்திக்கொடுக்கும் வேலையை மட்டும் தான் தமிழக காவல்துறை செய்யவில்லை.

கோயிலில் கடவுளை வழிபட வரிசையில் காத்திருக்கும் பக்தனைப் போல நீண்ட வரிசையில் எந்தவித அவமான உணர்ச்சியும் இன்றி தமிழக ஆண்கள் டாஸ்மாக் கடைகளின் வாசலில் காத்துக் கிடக்கின்றார்கள். தமிழ்நாட்டை ஒரு அக்மார்க் தமிழன் ஆளாமல் போனதால்தான் இன்று தமிழ்நாடு இந்த இழி நிலையை எய்தியிருக்கின்றது என்ற அரிய கண்டுபிடிப்பைச் செய்த பல தமிழ்தேசிய இயக்கங்கள் நேரம் கிடைத்தால் டாஸ்மாக் கடைகளைச் சென்று பார்வையிட்டு வரவும். கருணாநிதி ஆட்சியிலும், ஜெயலலிதா ஆட்சியிலும் தமிழ்நாட்டில் பார்கள் இருந்தன என்றால், பச்சைத் தமிழனின் ஆட்சியில் தமிழ்நாடே பாராய் இருக்கின்றது. ஒரு பக்கம் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள் அம்மணமாய் டெல்லியில் போராடுகின்றார்கள். இன்னொரு பக்கம் தமிழக ஆண்கள் குடிபோதையில் கட்டிய வேட்டி கழன்று போனதுகூட தெரியாமல், அம்மணமாய் டாஸ்மாக் வாசலில் குப்புறப் படுத்து மண்ணோடு போராடிக்கொண்டு இருக்கின்றார்கள். இன்னும் கொஞ்சம் நாள் இந்தப் பச்சைத் தமிழனின் ஆட்சி நீடித்தால் ஒட்டுமொத்த தமிழகமும் அம்மணமாவதைத்தவிர வேறு வழியேயில்லை.

குறுக்கு வழியில் மக்களின் விருப்பத்துக்கு எதிராக ஆட்சியைப் பிடித்த இந்த அரசு அப்படியும் கூட தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் திராணியற்று தோற்றுப்போய் கிடக்கின்றது. பதவிசண்டையில் யார் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்ற போட்டியில் ஒட்டுமொத்த தமிழக மக்களின் நலனும் கண்டுகொள்ளாமல் விடப்பட்டு இருக்கின்றது. தமிழக மக்கள் தங்களுடைய ஒவ்வொரு அத்தியாவசிய தேவைக்காகவும் போராட வேண்டிய நிலைக்கு இந்த அரசு அவர்களைத் தள்ளியிருக்கின்றது. நியாயவிலைக் கடையில் போடப்பட்டு வந்த அரசி, துவரம்பருப்பு, உளுந்து, பாமாயில் போன்றவை முறையாக வழங்கப்படுவதில்லை. ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் மட்டுமே பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதனால் நியாய விலைக் கடைகளை மட்டுமே நம்பி இருக்கும் பல லட்சம் குடும்பங்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியிருக்கின்றார்கள். தமிழக முழுவதும் பெரும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகின்றது. மக்கள் குண்டி கழுவுவதற்குக் கூட தண்ணீர் இல்லாமல் தங்கள் வருமானத்தின் பெரும் பகுதியைத் தண்ணீருக்காக செலவுசெய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். நிலத்தடி நீரை மட்டுமே நம்பியிருந்த கிராமப்புற மக்கள் இன்று கடும் வறட்சியில் அதுவும் கிடைக்காமல் ஆடு மாடுகளுக்குக் கூட தண்ணீர் இன்றி அவற்றை விற்றுக்கொண்டு இருக்கின்றார்கள்.

குற்றவாளிகளின் வழிகாட்டுதல் படி நடக்கும் ஒரு அரசு எவ்வளவு கேவலமாக செயல்படும் என்பதற்கு இந்த அரசே ஒரு நல்ல உதாரணம். ஆற்றுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை என எதுவுமே நின்றபாடில்லை. மன்னார்குடி மாஃபியா கும்பல் எதில் எல்லாம் கொள்ளையடித்துக் கோடிகளைக் குவித்துக்கொண்டு இருந்ததோ, அது எல்லாம் அந்த மாஃபிய கும்பலின் தலைவி ஜெயிலுக்குப் போன பின்னாலும் எந்தவித தடங்கலும் இன்றி சீரும் சிறப்புமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றது. உலகமே பார்த்துக் காறித்துப்பும் அளவிற்கு ஊழல் முறைகேடுகளில் இந்த அரசு திளைத்துக்கொண்டு இருக்கின்றது. அடிக்கும் வெய்யிலின் கடுமையைவிட இவர்கள் அடிக்கும் கொட்டத்தின் கடுமைதான் கூடுதலாக இருக்கின்றது. ஒரு நிமிடம் கூட நீடிப்பதற்கு எந்தவித தார்மீகத் தகுதியும் இன்றி இந்த அரசு இருக்கின்றது. மக்கள் நலனில் கொஞ்சம் கூட அக்கறையற்றுக் கொள்ளையடிப்பதையும் அதிகாரத்தைக் காப்பாற்ற நாய் சண்டை போடுவதையும் மட்டுமே செய்துகொண்டு இருக்கும் இந்த அரசுக்கு எதிராகத்தான் தமிழக மக்களின் போராட்டம் தற்போது நடைபெற வேண்டி இருக்கின்றது.

- செ.கார்கி

Pin It