சாகிர் சல்மான் அபு நமாசுக்கு நான்கு வயதாகிறது.

“அவனைப் பார்ப்பவர்கள் அனைவருக்கும் அவனைப் பிடித்துவிடும். கள்ளங் கபடமில்லா அவனது சிரிப்பும் துரு துருப்பும் அனைவரையும் ஈர்த்துவிடக்கூடியது” என்று சாகிரின் நினைவுகளில் மூழ்கிறார் அவனது சகோதரர்.

palastien child 360சாகிர் இப்போது உயிரோடு இல்லை. கடந்த வெள்ளியன்று, வடக்கு காசா பகுதியில், இஸ்ரேல் போர் விமானங்கள் நிகழ்த்திய கொடூரத் தாக்குதலில் அவன் கொல்லப்பட்டான்.

“சாகிர் அவனது தாயுடன் சிரித்துப் பேசி விளையாடிக்கொண்டிருந்தான். அச்சமயத்தில், இஸ்ரேலியர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அவனது மண்டை பிளக்கப்பட்டு துடி துடிக்க இறந்தான்” என நடந்த அப்பயங்கர நிகழ்வை பதற்ற‌த்துடன் சொல்கிறார் அவரது சகோதரர்.

“எழுந்திரு சாகிர், உனக்கு விளையாட பொம்மைகள் வாங்கி வந்துள்ளேன் எழுந்திரு” என்று அவனது தந்தை கதறுவதைப் பார்க்க மனதுக்கு சக்தியில்லை என்கிறார்.

“அவன் ஒரு குழந்தை. சிரித்து மகிழ்வுடன் விளையாடிக்கொண்டிருக்க வேண்டியவன், இறந்தவர்களின் பட்டியலில் அவனை ஒரு எண்ணிக்கையாக பாவிக்க முடியாது” என்று கண்ணீருடன் கூறி முடிக்கிறார் சாகிரின் சகோதரர் மொஹமத்.

கடந்த திங்கள் முதல் காசாவின் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள், மசூதிகள், மருத்துவமனைகள், சமூக விடுதிகளைக் குறிவைத்து 1300க்கும் மேற்பட்ட ஆகாய மார்க்க தாக்குதல்களையும் தரைமார்க்க தாக்குதல்களையும் இஸ்ரேல் ராணுவத்தினர் கொடூரமான முறையில் நிகழ்த்திவருகின்றனர். காசாவின் அடர்த்தியான மக்கள் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் வீசிவரும் குண்டுகளுக்கு இதுவரை 167 பொதுமக்கள் பலியாகியுள்ளதாக ஐநா அதிகாரி அறிவித்திருக்கிறார். இதில் 19 பெண்களும், 16 வயதுக்கு குறைவான இருபத்தியொன்பது குழந்தைகளும் பலியாகியுள்ளனர். கடந்த வெள்ளியன்று நிகழ்த்திய தாக்குதலில் கொல்லப்பட்ட இருபத்தியொரு குழந்தைகளில் சாகிரும் ஒருவன். இந்த இனப்படுகொலையில் இரு மாற்றுத் திறனாளி பெண்களும் கொல்லப்பட்டனர். ”இரு சக்கர நாற்காலியின் துணை கொண்டு வாழ்ந்தவர்கள், அவர்களின் வீட்டில் குண்டு விழும்போது தப்பித்து ஓடி பிழைத்துக்கொள்ள வாய்ப்பின்றி கொல்லப்பட்டனர்” என்கின்றனர் அருகில் வசிப்பவர்கள். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தாக்குதலில் காயம்பட்டு மருத்துவமனைகளில் சிக்கிச்சை பெற்றுவருகின்றனர். காசாவின் மருத்துவமனைகள் ரத்த வெள்ளமாக காட்சியளிக்கின்றன‌. தலையில் காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகளுடன் மருத்துவமனைகளுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக அல் ஷிபா மருத்துவமனை அதிகாரி தெரிவிக்கிறார்.

இத்தாக்குதலால் உணவு, குடிநீர், எரிபொருள், மருந்துப்பொருட்கள் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எகிப்து நாடும், எல்லைப்பகுதியிலுள்ள சுரங்க வழிகளை மூடிவிட உத்தரவிட்டுள்ளதால் காசா மக்களின் உயிர் பிழைப்பிற்கான வாய்ப்பு மோசமடைந்துள்ளது.

கொடூரமான இக்காட்டிமிராண்டித்தன தாக்குதலுக்கு இஸ்ரேல் கோருகிற வழமையான நியாயவாத கற்பிதம் முரணின் உச்சமாக உள்ளது. இஸ்ரேலின் மனிதநேயமற்ற இக்கொடூர இனப்படுகொலைக்கு முட்டுக்கொடுக்கும் மேற்குலக ஊடகங்களின் செயல்பாடுகள் அருவருக்கத்தக்கவை. ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்தே தாக்குதல் நடப்பதாகவும், துண்டறிக்கைகளை வீசி மக்களை வெளியேறச் சொன்ன பிறகே ஏவுகணைகள் வீசப்படுவதாகவும் ஊடகங்கள் இஸ்ரேலின் தாக்குதலுக்கு சர்வதேச சமூகத்திடம் ஒப்புதல் பெற்றுத்தர துடிக்கின்றன‌. மாறாக ஹமாஸ் போராளிகள் காசாவிலிருந்து குண்டு வீசியதற்கு ஆதாரங்கள் இல்லாதபோதும், ஹமாஸின் தாக்குதலில் ஒருவரும் கொல்லப்படாதபோதும் ஊடகங்கள் பாலஸ்தீன ஹமாஸ் போராளிகளை தீவிரவாதிகள் என்று திரித்துக்கூறி கேவலமான முறையில் கருத்துநிலை மேலாதிக்கத்தை செலுத்துகின்றன‌. ஹமாஸ் வீசிய வெடித்ததும், வெடிக்காத உயிரிழப்பே ஏற்படாத ஒற்றை ஏவுகணைத் தாக்குதலுக்கு பழிதீர்ப்பதாக கூறிக்கொண்டு அப்பாவி பாலஸ்தீனியர்களை கொத்து கொத்தாக கொன்று போடுகிறது இஸ்ரேல்.

palastien child2012 ஆம் ஆண்டிலும் இதே காரணத்தைக் காட்டி 150க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை இஸ்ரேல் கொன்று போட்டது. அதற்கு முன்னதாக 2008 ஆம் ஆண்டில் இஸ்ரேல் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 1600க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இப்போது நடைபெற்று வருகிற தாக்குதலை தூக்கிப்பிடிக்கிற ஊடகங்கள் மற்றும் இஸ்ரேல் முன்வைக்கிற நியாயவாதம் முரணின் உச்சம். அதாவது (ஹமாஸ் போராளிகளைக் கொள்வதாக கூறிக்கொண்டு) மக்கள் அடர்த்தி மிக்க பகுதிகளில் குண்டு வீசுவதற்கு முன்பாக துண்டறிக்கைகளை வீசி மக்களை வெளியேறச் சொல்லிவிட்டுத்தான் தாக்குதல் நடத்துவதாக தெரிவிக்கிறது. மாறாக ஏவுகணைகள் வீசப்படுவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்பாக துண்டறிக்கை வீசினால், அவ்வளவு மக்களும் ஒரு நிமிடத்தில் எவ்வாறு வெளியேற முடியும்? இஸ்ரேல் ராணுவத்தினர் வழங்கும் ஒரு நிமிட கால அவகாசத்தை விதந்தோம்பும் ஊடகங்களுக்கு தாக்குதலில் கொத்து கொத்தாக செத்து மடிந்த பச்சிளம் குழந்தைகளின் முகம் நினைவுக்கு வர மறுக்கிறது.

பாலஸ்தீனத்தை அழிக்கும் இறுதித் தாக்குதலாகவே இஸ்ரேல் இப்பயங்கரத் தாக்குதலை நிகழ்த்துகிறது. ஹமாசை அழிப்போம் அல்லது ஒட்டுமொத்த பாலஸ்தீனத்தை அழிப்போம் என்ற கொலைவெறி முழக்கத்தோடு இஸ்ரேல் தனது பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துள்ளது. மேலும் இஸ்ரேல் அரசின் மீதான அந்நாட்டு மக்களின் அவநம்பிக்கை அதிகரித்துவரும் சூழலில் தேசிய இனவாத உணர்வைத் தூண்டி ஒரு பெரும் இன அழிப்பின் மூலமாக தன் மீது இறுக்கமடைந்துவரும் அவநம்பிக்கையை துடைத்தெரிய முற்படும் இஸ்ரேல் அரசின் தந்திரமாகவே இக்கொடூரத் தாக்குதலை நாம் பார்க்க வேண்டியுள்ளது. மேலும் மத்திய கிழக்கு நாடுகளில் பலம் குன்றி வரும் அமெரிக்காவின் வல்லாதிக்கப்போக்கு, ஈராக்கின் அரசியல் மாற்றம், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் செல்வாக்கு செலுத்துகிற ஈரான் போன்ற அரசியல் மாற்ற இயக்கப்போக்குகளை கணக்கில் கொண்டும் இஸ்ரேலின் இவ்வின அழிப்பு தாக்குதலை நாம் பார்க்கவேண்டியுள்ளது.

காசா மீண்டுமொரு முள்ளிவாய்க்காலாகிறது. ஈழத்தில் புலிகளை பயங்கரவாதிகள் என்று சித்தரித்து சிங்களப் பேரினவாதத்தின் இனப்படுகொலைக்கு முட்டுக்கொடுத்த தமிழக (பார்ப்பனிய), இந்திய, மேற்குலக ஊடகங்கள் யூதர்களின் இன அழிப்புத் தாக்குதலையும் நியாயப்படுத்துகின்றன. இன விடுதலைக்குப் போராடிய, போராடி வருகிற ஹமாஸையும் விடுதலைப்புலிகளையும் பயங்கரவாதிகள் என்று திரித்துக் கூறுகிற ஊடகங்களையும் உலகெங்கிலும் இன அழிப்பை மேற்கொண்டுவரும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற முதலாளிய நாடுகளையும்தான் நாம் பயங்கரவாதிகள்/பயங்கரவாத அரசுகள் என்று கூறவேண்டும். இலங்கையின் ராஜபக்ஷேவும் இஸ்ரேலின் நெதான்யாகுவும் மனித குலத்தின் முதன்மையான எதிரிகள்; அபாயகரமான பயங்கரவாதிகள். இதில் இந்திய அரசின் பயங்கரவாதத்தை சொல்லத் தேவையில்லை. காஷ்மீர், ஈழம், கிழக்கு மாநிலங்களில் இந்திய அரசு கட்டவிழ்த்த பயங்கரவாதங்கள் அம்மண‌த்தனமானவை. ஈழத்திற்கு இந்தியா செய்த துரோகமும் பாலஸ்தீனத்திற்கு அரபு நாடுகள் செய்த துரோகமும் அவ்வளவு எளிதில் துடைத்தெறிய முடியாதவை.

தரவுகள்:

http://www.countercurrents.org/abunimah130714.htm


http://www.marxist.com/israels-criminal-shelling-of-gaza-and-imperialist-hypocrisy.htm

- அருண் நெடுஞ்செழியன்

Pin It