தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளிவந்த செய்தி ஒன்று கவனத்தை ஈர்த்தது. செய்தி இதுதான்...
காஞ்சிபுரத்தில் இருந்து திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் காரில் செங்கற்பட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார். அந்த வழியில் ஒரு லாரி செல்கிறது. அதில் 20 எருமை மாடுகள். 20 எருமை மாடுகளும் அந்த ஒரே லாரியில் மிகமிக நெருக்கியடித்து, கயிறால் பலமாகக் கட்டப்பட்டிருந்த நிலையில், அவைகள் மூச்சு விடக்கூட முடியாமல் பெரும் அவதிப்படுதை அவர் பார்த்தார் - நெஞ்சம் பதறிப்போனார்.
லாரியை நிறுத்தினார். காவல்துறை மாவட்டக் கண்காணிப்பாளரைக் கைபேசியில் தொடர்பு கொண்டார். விலங்கு வதை தடுப்புப் பிரிவு அதிகாரிகளைத் தொடர்பு கொள்கிறார். சற்று நேரத்தில் காவல்துறையினர் அங்கு வந்து விடுகிறார்கள். வந்தவர்கள் சமாதானம் பேசி லாரியை அனுப்ப முயல்கிறார்கள். ஆனால், சட்டமன்ற உறுப்பினரோ விடுவதாக இல்லை. எருமை மாடுகள் சித்திரவதைப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை. உடனே வழக்குப் பதிவுசெய்து, அந்த எருமை மாடுகளை இரண்டு லாரிகளில் பிரித்து அனுப்ப வேண்டும் என்று உறுதியாய்ச் சொல்கிறார்.
வேறுவழியின்றி மாடுகளை இரண்டு லாரிகளில் பிரித்து ஏற்றி அனுப்புகிறார்கள் காவலர்கள். நாளை அடிமாட்டு இறைச்சிக்காகச் சாகப்போகும் அந்த எருமைகள் இப்பொழுது நிம்மதியாக மூச்சுவிட்டுக் கொண்டு போவதைப் பார்த்து மனம் இளகிய நிலையில் அங்கிருந்து புறப்படுகிறார், திருப்பபோரூர் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி!
ஒரு மனிதனுக்குள் எப்படி இருக்க வேண்டும் மனிதநேயம் என்பதற்கு இது சான்று. உலக அளவில் மனித நேயத்தைக் குழிதோண்டிப் புதைத்த முதல் மனிதன் இட்லர். அந்த இட்லரையும் தூக்கி சாப்பிட்டு விட்டனர் மூவர் கூட்டணி - மகிந்த ராஜபக்சே, சரத் பொன்சேகா, கோத்தபய ராஜபக்சே.
இந்த மூவருக்கும் ஈழத்தமிழர்களைக் குவியல் குவியல்களாகக் கொன்று குவித்ததில் சம பங்கு இருக்கிறது என்றாலும், இராணுவத் தளபதி என்ற முறையில், நேரடி இராணுவ நடவடிக்கையை எடுத்துப் பச்சைக் குழந்தைகளின் காப்பகங்களில் குண்டுகளைப் போட்டு படுகொலை செய்தவன் பொன்சேகா. குழந்தைகளை மட்டுமல்ல, வயது முதிர்ந்தவர்கள், ஆண்கள், பெண்கள் என போர் மரபை மீறி, தடை செய்யப்பட்ட கொடிய நச்சு இராசாயன குண்டுகளை வீசி, மனித நேயத்தை அல்ல, மனிதத்தையே சமாதிகட்டிய கொடியவன் சரத் பொன்சேகா.
சாத்தான் வேதம் ஓதும் கதையைப் போல் சகோதரக் குடிமக்களான தமிழர்கள் என்றும், சிறுபான்மைச் சமூகமானத் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கூட இலங்கை அரசு நிçவேற்றவில்லை என்றும் முதலைக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார் சரத் பொன்சேகா. செய்தது படுகொலை. ஓதுவது வேதம். ஏன் இந்த மாற்றம். வேறொன்று மில்லை - இலங்கையின் அதிபர் ஆக ஆசைப்பட்டு விட்டார் அவர்.
ஈழமக்களைக் கொன்று குவித்த வெறிச்செயலுக்குச் சிங்கள மக்களிடையே எழுந்த மனிதாபிமானமற்றப் பேராதரவை மகிந்த ராஜபக்சேவும், சரத் பொன்சேகாவும் தனக்கு மட்டுமே உரியதாக ஆக்கும் முயற்சியில் முட்டிக் கொண்டார்கள், பிரிந்தும் போனார்கள். இந்த நிலமையைப் பயன்படுத்தி அடுத்துவரும் இலங்கை அதிபருக்கான தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் பிற எதிர்க்கட்சிகளை கூட்டணியாக இணைத்து, ராஜபக்சேவுக்கு எதிராகப் பொது வேட்டபாளராக சரத் பொக்சேகாவை நிறுத்தத் திட்டமிட்டார் ரணில் விக்ரமசிங்க.
இங்கேதான் விபரீதம் ஏற்படுகிறது சிங்களர்களின் இலங்கைக்கும், ஈழத் தமிழர்களுக்கும் - மலையகத் தமிழர் உள்பட. தான் சீனாவின் தீவிர ஆதரவாளன் எனச் சொல்பவர் ராஜபக்சே. புத்தளத்தில் அனல்மின் நிலையம் அமைக்கவும், அம்பாந்தோட்டையில் சீனா துறைமுகம் அமைக்கவும் துணைநின்றார் அவர். ஆறு ஆண்டுகளாகப் புதுப்பிக்கப் படாமல் இருந்த ஆயுதக் கிடங்கு ஒப் பந்தத்தை ராஜபக்சே அதிபர் ஆனவுடன் புதுப்பிக்கச் செய்தார். அதுமட்டுமல்ல, அமெரிக்காவுக்கு எதிரியாக விளங்கும் ஈரானுக்கு கொழும்பில் பெட்ரோல் சுத்திகரிப்பு மையமும், உமஓயா ஆற்றின் அணையில் நீர்மின் நிலையமும் அமைக்க அனுமதி அளித்துள்ளார் ராஜபக்சே.
ஏறத்தாழ முழு இலங்கையும் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் போகும் நிலைமையில் இன்றைய இலங்கை உள்ளது. இதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்த அமெரிக்கா அதன் குடியுரிமை (கிரீன் கார்டு) பெற்றிருக்கும் பொன்சேகாவை வளைத்தது. அதுவும் ஈழப்படுகொலை நடந்த பின்னால். பொன்சேகா ஈழப் படுகொலை பற்றிய உண்மைகளை, ராஜபக்சே மேல் வைத்துச் சாட்சிக் கூண்டு ஏறினால், ராஜபக்சே சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளியாக நிற்க நேரிடும்.
ராஜபக்சேவுக்கும் அச்சம், பொன்சேகா வுக்கும் அச்சம். ஒருவர் சீனாவின் பிடியில், மற்றவர் அமெரிக்காவின் கைப்பாவை. இரண்டு வல்லரசுகளின் கைப்பிடியில் சிங்கள இலங்கையின் எதிர்காலம் சின்னா பின்னப்படப் போகிறது.
சீனாவின் பின்னணியில் சிங்களர்களின் கணிசமான இனவெறிஆதரவுடன் இருக்கும் ராஜபக்சேவை எதிர்த்து, அதே சிங்கள இனவெறி கணிசமான ஆதரவுடைய பொன்சேகா அமெரிக்கா தயவுடன் தேர்தல் களத்தில் இறங்கப் போகிறார். அதனால்தான் ஈழத்தமிழர்களைச் சகோதரர் என்று நீலிக் கண்ணீர் விடுகிறார் அவர். காரணம் தமிழர்களின் வாக்கு!
இது ஒருபுறம் இருக்க, நடந்து முடிந்த ஈழப்போருக்குப் பின், சிங்கள அரசு மலையகத் தமிழர்களுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளது. இலங்கையின் மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் மலையகத் தமிழர்கள். இவர்கள் ஆங்கிலேயர்கள் காலத்தில் தென் தமிழகத்தில் இருந்து கண்டி, நுவரெலியா, பதுளை, ரத்னகிரி, பண்டாரவெல, புசல்லாவ போன்ற 10 அல்லது 11 மாவட்டப் பகுதிகளுக்குச் சென்ற இந்திய வம்சாவழித் தமிழர்கள்.
இந்தத் தமிழர்களைக் கண்காணிக்க சிங்கள அரசு, சிங்களர்களைக் கொண்ட ‘ கிராமக் கமிட்டிகள் ’ அமைத்துள்ளது. இதன்மூலம் சிங்களர்களின் கட்டுப் பாட்டுக்குள் மலையகத் தமிழர்கள் வாழவேண்டிய சூழ்நிலையை சிங்கள அரசு உருவாக்கி நெருக்கடி கொடுக்கிறது. இந்த மலையகத் தமிழர்களையும் ஒழித்து விடவோ அல்லது அங்கிருந்து வெறியேற்றிவிடவோ திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதன்பின் முழு இலங்கையும் சிங்கள நாடாக மாற்றவேண்டும் என்று சிங்கள அரசு ஆதரவு புத்த பிக்குகள் திட்டமிட்டுச் செயல்படுவதாகவும் தெரியவருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் பொன்சேகா தமிழர்கள் மீது இரக்கம் காட்டும் கபட நாடகத்தில் இறங்கி இருக்கிறார். இலங்கையில் பொன்சேகா - ராஜபக்சே, யார் ஆட்சிக்கு வந்தாலும் ஒன்றுதான் - தமிழர்களுக்கு.
தலைமுறை கடந்தாவது ஈழம் மலரும்! விடுதலைப் போராட்டம் வீழ்ந்ததாக வரலாறு இல்லை. தொய்வுக்குப் பெயர் தோல்வி அல்ல! மனிதப் படுகொலைக்குப் பெயர் வெற்றியும் அல்ல! ஈழத்தமிழர்களை ஏமாற்ற நினைக்கும் பொன்சேகாவைப் பற்றி அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும் - பொன்சேகா எமன் ஏறிவரும் எருமைமாடு என்று!
- தேரவாதன்