சமச்சீர்க் கல்வி முறையை அறிமுகப்படுத்தும் பொழுது, உயர் சாதிக் கும்பலினர் அதைக் கடுமையாக எதிர்த்தார்கள். அறிவுத் திறன் குறைந்தவர்கள் படிப்பில் முன்னேற முடியாமல் தத்தளித்துக் கொண்டு இருப்பதாகவும், அவர்களுக்கு ஆதரவாக அறிவுத் திறன் மிகுந்தவர்களுக்கு முட்டுக் கட்டை இடுவதாகவும் கூக்குரலிட்டார்கள். இதைச் சமத் தாழ்வுக் கல்வி முறை என்று எள்ளவும் செய்தார்கள்.

students 360ஆனால் சமச்சீர்க் கல்வி முறை நடைமுறைக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆன பின், அம்முறையின் விளைவு பற்றி, கல்வி ஆராய்ச்சி, கல்விப் பயிற்சி மற்றும் அறிவுத் திறனுக்கான டான் பாஸ்கோ மையம் (Don Bosco Centre for Education Research and Training and Talent Ease) ஓர் ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை 20.6.2014 அன்று வெளியிட்டு உள்ளது.

சமச்சீர்க் கல்வி முறையினால் மாணவ மாணவிகளிடையே மன அழுத்தம் குறைந்து உள்ளது என்றும், அதை விட முக்கியமாக மாணவ மாணவிகளின் சிந்திக்கும் ஆற்றல் வளர்ந்து உள்ளது என்றும் இவ் ஆய்வில் தெரிய வந்து உள்ளது.

இவ் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்ட மறுநாள் 21.6.2014 அன்று பல பெற்றோர்கள் சமச்சீர்க் கல்வி முறையைத் தவிர்ப்பதற்காகவே, தங்கள் குழந்தைகளை மைய அரசுக் கல்வித் திட்டப் (CBSE) பள்ளிகளில் சேர்ப்பதாகக் கூறி இருக்கிறார்கள். சமச்சீர்க் கல்வி முறையில் பயின்றவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவது கடினம் என்றும், மைய அரசுக் கல்வித் திட்டத்தின் படி பயின்றவர்கள் தான் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முடியும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தார்கள்.

சமச்சீர்க் கல்வி முறை நடைமுறைக்கு வந்த பின் மாணவ மாணவிகளின் மன அழுத்தம் குறைந்தும், சிந்திக்கும் ஆற்றல் வளர்ந்தும் உள்ளது என்று தெரிய வரும் பொழுது, எந்த ஒரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை அம்முறையில் படிக்க வைக்க வேண்டும் என்று தான் முடிவு எடுப்பார்கள். ஆனால் அப்படிக் கூறாமல் சமச்சீர்க் கல்வியைத் தவிர்க்க விரும்புகிறார்கள் என்றால் என்ன பொருள்?

போட்டித் தேர்வுகள் சிந்திக்கும் திறன் உடையவர்களைத் தேர்ந்து எடுக்கும் வகையில் தான் இருக்க வேண்டும். ஆனால் சிந்திக்கும் திறன் வளர்வதால் போட்டித் தேர்வுகளில் வெல்ல முடியாது என்றும், மன அழுத்தம் மிகுந்து உள்ளவர்களால் தான், சிந்திக்கும் திறனில் வளர்ச்சி அடையாதவர்களால் தான், போட்டித் தேர்வுகளில் வெல்ல முடியும் என்றும் நிலைமை இருந்தால் அது எவ்வளவு ஆபத்தானது? அப்படித் தேர்ந்து எடுக்கப்படுபவர்கள் நிர்வகிக்கும் நாட்டின் நிலைமை பரிதாபத்திற்கு உரியது அல்லவா?

இந்நிலையை மாற்ற வேண்டாமா? சமச்சீர்க் கல்வி அறிமுகமாவதை அன்று எதிர்த்தவர்கள், அது நல்ல பயனைத் தருகிறது என்று தெரிந்த பிறகும், அது நடைமுறையில் வலுவிழக்க வேண்டும் என்ற முறையில் நடந்து கொண்டு இருக்கிறார்கள். ஏன்?

மன அழுத்தம் அதிகமானாலும் பரவாயில்லை; சிந்தனைத் திறன் வளராமல் இருந்தாலும் பரவாயில்லை; கல்வி மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் போட்டிக்கு வராமல் இருந்தால் தான் தங்களால் திறமைசாலிகள் என்று வெளிச்சம் போட முடியும் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். ஆகவே ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் எட்ட முடியாத, மைய அரசுக் கல்வித் திட்டத்தில் பயின்றவர்களால் மட்டுமே வெற்றி பெற முடியக் கூடிய வகையில் போட்டித் தேர்வுகளை வடிவமைக்கிறார்கள். நாட்டை நிர்வகிக்க வருபவர்களின் சிந்தனைத் திறன் வளர்ச்சியைப் பற்றி இம்மியும் கவலைப்படாமல் நடத்தப்படும் இந்த தேசத் துரோகச் செயலை அனுமதிக்கலாமா?

சிந்தனைத் திறன் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட கல்வித் திட்டத்தில் பயின்றவர்களால் தான் வெல்ல முடியும் படியும், மற்றவர்களால் வெல்ல முடியாத படியும் தான் போட்டித் தேர்வுகள் வடிவமைக்கப்பட வேண்டும் என்று தேச பக்தர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் போராடுவார்களா?

- இராமியா

Pin It