“சட்டத்தை கையில் வைத்திருக்கும் போலீஸார் மக்களை காக்க வேண்டியவர்களே தவிர, அவர்களைக் கொல்லும் கூலிப்படையல்ல” என்று நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் சி. கே. பிரசாத் அடங்கிய பெஞ்ச் ஒரு வழக்கில் கூறியது. இந்த வார்த்தைகள் இன்றைய காவல்துறையின் செயல்பாடுகளுக்குப் பொருந்தும்.

Modi and Amit Shahகாஜியாபாத்தைச் சேர்ந்த எம்.பி.ஏ. மாணவர் ரன்பீர் சிங். வயது 22. இவர் 2009ம் ஆண்டு உத்தரகாண்டில் வைத்து கடத்தல்காரன் என்று கைது செய்யப்பட்டு, போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். படித்து முடித்து பல்வேறு கனவுகளுடன் உத்தரகாண்ட் சென்ற ரன்பீர் சிங்கை போலீஸார் கைது செய்து, அழைத்துச் சென்று காவல்துறையின் கஸ்டடியில் வைத்து அடித்து சித்திரவதை செய்து, ஒரு திருட்டு வழக்கை ஒப்புக் கொள்ளச் சொல்லியுள்ளனர். அதை அவர் மறுக்கவே கஸ்டடியில் வைத்து சுடப்பட்டார். அவருடைய உடலில் மொத்தம் 29 குண்டுகள் பாய்ந்துள்ளன என்று பிரேத பரிசோதனை அறிக்கை கூறியது.

பொதுவாகவே என்கவுண்டர்கள் அனைத்துமே அரசியல் காரணங்களுக்காகவே நடத்தப்பட்டு வருகின்றன. இன்று, பொதுச் சமூகத்தில் என்கவுண்டர் சரி என்ற ரீதியில் மக்களை பழக்கி விட்டனர். இதனால் தான் போலி என்கவுண்டர் என்ற பதம் அதற்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. நாம் கூறுவது என்கவுண்டர் என்பதே குற்றம். இது விரிவாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். என்கௌண்டர் என்பதற்கு என்ன அவசியம் என்ற கேள்விகளை தொடுக்கும் சூழ்நிலையில் தான் நாம் இருக்கின்றோம்.

ஏனென்றால் காவல்துறைக்கு இந்த அதிகாரத்தை அளித்திருப்பதால், அவர்கள் அறியாமலோ என்னவோ என்கவுண்டர் என்பது, ஒருவரைப் பிடித்து அருகில் வைத்து இஷ்டத்திற்கு சுட்டுத் தள்ளுவது என்று புரிந்து கொண்டுள்ளார்களோ என்னவோ தெரியவில்லை.

ஒவ்வொரு என்கௌண்டரின் முடிவிலும் வெளிவரும் செய்திகள் இவைதான். இதுவரை நாட்டில் நடைபெற்ற அத்தனை என்கௌண்டர்களின் பின்னணியிலும் ஒரு அரசியல் காரணம் இருக்கின்றது என்பது நமக்கு நன்கு புலனாகிறது. அதனை நன்கு ஆராயும் பொழுது அது நமக்கு புலப்படும். இன்றைய காலக்கட்டங்களில் என்கவுண்டர்கள் என்பது, அரசியல்வாதிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு பிராயச்சித்தமாக செய்யக்கூடிய ஒன்றாக மாறி விட்டது.

தற்பொழுது, வெளிவந்துள்ள ரன்பீர் சிங் போலி என்கௌண்டர் தொடர்பான காவல்துறையின் சதிகள், அவர்களுக்கு நீதிமன்றம் விதித்திருக்கும் ஆயுள் தண்டனைகள் நமக்கு ஓரளவு ஆறுதல் அளித்தாலும், இதுபோன்று வெளிவராமல் புதைந்து கிடக்கும் இஷ்ரத் ஜஹான் என்கவுண்டர், சொஹ்ராபுதீன் ஷேக் என்கௌண்டர்கள், பட்லா ஹவுஸ் என்கௌண்டர் என்று இவைகளெல்லாம் நம்முன் வரும்பொழுது தண்டிக்கப்படாமல் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்கும் குற்றவாளிகளே நம் கண்முன் வருகின்றனர்.

இஷ்ரத் ஜஹான் என்கௌண்டருக்கு காரணமான மோடி, அமித் ஷா போன்றோர்கள் இன்று மக்களை ஆட்டுவிக்கும் அதிகார மையங்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் பொழுது, உண்மைகள் எவ்வாறு வெளிவரும் என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. அநீதிக்கு எதிரான நம்முடைய குரலை வலிமையாக பதிவு செய்வதே நமது இந்திய நாட்டின் ஜனநாயக கடமைகளில் முதன்மையாக இருக்கின்றது. அதையே நாம் தீவிரமாக செய்ய முனையாவிட்டால், இஷ்ரத் ஜஹான் போன்றோர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுவதற்கு முடிவில்லாமல் போய்விடும்.

அதுமட்டுமல்லாமல் வரக்கூடிய காலங்களில் என்கௌண்டர்களில் ஈடுபடும் அனைத்து அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு, சம்பள உயர்வு, பதக்கங்கள் வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றினாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை.

2014ல் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் செயல்திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடனேயே அவர்கள் எடுத்த முக்கிய விஷயங்களே, சிறுபான்மை சமூகமான முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக உள்ள பொதுசிவில் சட்டம், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கக்கூடிய 370 சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பதே. இன்னும் அவர்கள் கையில் எடுக்கக்கூடிய விஷயங்களில் ராமர் கோவில் பிரச்சனை, கல்விக் கொள்கை, வெளியுறவுக் கொள்கைகள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அதனால், இவர்களுடைய ஆட்சியில் இஷ்ரத் ஜஹான் போலி என்கௌண்டர் வழக்கு சரிதான் என்ற நீதிமன்ற தீர்ப்பு கூட வரலாம். ஏனென்றால் இந்த என்கௌண்டரில் அப்போதைய குஜராத் முதல்வரும், இப்போதைய பிரதமருமான நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா, காவல்துறை அதிகாரிகள் என்று அனைவருடைய தொடர்பும் இதில் இருக்கின்றது.

குஜராத்தில் இஷ்ரத் ஜஹான் என்கௌண்டர், மோடியின் அரசியல் ஸ்திரத்தன்மையை நிலை நிறுத்தவே நடத்தப்பட்டது. 2004 நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவிற்கு ஏற்பட்ட படுதோல்விக்கு காரணம் மோடி; அவர்தான் இந்தத் தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சிக்குள்ளேயே பல்வேறு புகைச்சல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. குஜராத் சட்டமன்ற உறுப்பினர்களில் 82க்கும் மேற்பட்டவர்கள் மோடிக்கு எதிரான மனநிலையில் இருந்தனர். அதிலிருந்து மீண்டு வரவே மோடியின் குஜராத் அரசு திட்டமிட்டு இந்த என்கௌண்டரை செய்தது.

அதற்கு மோடியை கொல்ல வந்ததாக காரணம் கூறியது. அப்பொழுது பத்திரிகைகளும், ஊடகங்களும் காவல்துறை மற்றும் உளவுத்துறையின் தகவல்களை அப்படியே பிரதிபலித்தன. ஆனால், அதன் பிறகு சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கையில் இது போலி என்கௌண்டர் என்று ஊர்ஜிதமானது. இதுவரை குஜராத்தில் மட்டும் 52க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் போலி என்கௌண்டர் வழக்குகளில் சிறையில் இருக்கின்றனர். இதுவும் குஜராத் வளர்ச்சியில் ஒன்றாகும்.

இஷ்ரத் ஜஹான் என்கௌண்டர் நடைபெற்று 10 வருடங்கள் கழிந்து விட்டநிலையில், வழக்கின் நிலை என்னவோ அப்படியே தான் இருக்கின்றது. கடந்த காலங்களில் ஆட்சியில் தங்களின் தேவைகளுக்கேற்ப காங்கிரஸ் ஆட்சியில் தங்களின் தேவைகளுக்கேற்ப வழக்கின் போக்கை மாற்றி வந்தனர். அவர்களின் தேவை ஏற்படும் பொழுது, வழக்கை பற்றிய தகவல்களை வெளியே கசிய விடுவர். தற்பொழுது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, வழக்கில் தண்டிக்கப்பட வேண்டும் என்று இப்பொழுது சமூகம் ஏங்கிக் கொண்டிருந்ததோ, அவர்களே தற்பொழுது ஆட்சிக் கட்டிலில் அமர வைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த வழக்குகள் அனைத்துமே ஓரங்கட்டப்படும். இந்த வழக்கில் துணிவுடன் போராடிக் கொண்டிருப்பவர்கள் முடக்கப்படுவார்கள். இதோடு மட்டுமல்லாமல், இதுபோன்று என்கௌண்டர் வழக்குகளில் தொடர்புடையவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள். இது ஒரு புறம் இருக்க, இந்த வழக்கில் இஷ்ரத் தரப்பில் ஆஜராகி வந்த சமூகப் போராளி முகுல் சின்ஹா காலமாகிவிட்டார். இதுவும் ஒரு பெரிய இழப்பாகும். இஷ்ரத் ஜஹானின் போலி என்கௌண்டர் வழக்கில் ஆரம்பம் தொட்டே வழக்கை நடத்தி வந்தவர் முகுல் சின்ஹா என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத்தில் மோடி அரசின் உண்மை நிலையை வெளியுலகிற்கு கொண்டு வர வேண்டும் என்று ஒரு இணையதளத்தையும் தொடர்ந்து நடத்தி வந்தார் முகுல் சின்ஹா. இவருடைய போராட்டம் ஃபாசிஸ்டுகளுக்கு பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது. இப்படி ஆட்சி மாற்றம், முகுல் சின்ஹா இறப்பு என்று தத்தளிக்கும் இந்த வழக்கில், உண்மை குற்றவாளிகள் எப்பொழுது தண்டிக்கப்படுவார்கள் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

- நெல்லை சலீம்

Pin It