ulai incident1983ஆம் ஆண்டு யூலைத் திங்கள் 23ஆம் நாள் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் விடுதலைப் புலிகளின் வழிமறிப்புத் தாக்குதலில் பதின்மூன்று சிங்களப் படையினர் உயிரிழக்கின்றனர். அவர்களின் உடல்கள் கொழும்பு கொண்டுசெல்லப்படுகின்றன. அங்கே தலைநகரில் தமிழர்கள் சிங்களக் காடையர்களால் தாக்கப்படுகின்றனர். தமிழர்களுக்குச் சொந்தமான பல கோடி பெறுமானமுள்ள உடைமைகள் அழிக்கப்படுகின்றன. கடைகளுக்கும் வீடுகளுக்கும் தீவைக்கப்படுகிறது.

யூலை 23 தொடங்கி ஒரு கிழமை நீடித்த வன்கொடுமைகளில் தமிழ் மக்கள் 3,000 பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும். முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என்ற வேறுபாடின்றி அனைவரும் தாக்கப்பட்டனர்.

பத்தாயிரத்துக்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. அது ஓர் இனப்படுகொலை. தமிழர்களைக் காக்க அரசு முற்படவே இல்லை. இந்த நேரம் தமிழர்களைப் பற்றிக் கவலைப்படுவதற்கில்லை என்று அதிபர் ஜெயவர்த்தனா வெளிப்படையாகவே பேட்டியளித்தார். சில இடங்களில் சிங்களக் காடையர்களோடு அரசப் படையினரும் சேர்ந்து கொண்டு தமிழர்களைத் தாக்கினர். அடக்குமுறை அரசத் திகிலியமாக (அரசப் பயங்கரவாதமாக) உருக்கொண்டது. தமிழ் மக்கள் செய்வதறியாது தவித்தார்கள். ஏராளமானவர்கள் ஏதிலிகளாக தமிழர் தாயகப் பகுதிகளுக்குப் பயணமானார்கள்.

யூலைப் படுகொலை தற்செயலாக நடந்த ஒன்றன்று. அது சிங்களப் பேரினவாதத்தால் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். உயர் பாதுகாப்பு நிறைந்த .கொழும்பு வெளிக்கடைச் சிறையில் தமிழ்க் கைதிகள் மீது நடத்தபட்ட கொடிய தாக்குதலே இதற்குப் போதிய சான்று. சிங்களக் கைதிகளும் காவலர்களும் சேர்ந்து நடத்திய கொடுந்தாக்குதலில் 53 பேர் வரைக்குமான தமிழ் அரசியல் கைதிகள் கொடிய முறையில் துன்புறுத்திக் கொலை செய்யப்பட்டார்கள். குட்டிமணி, தங்கதுரை போன்ற விடுதலைப் போராளிகளின் விழிகளைத் தோண்டியெடுத்துக் கீழே போட்டு மிதித்து அவர்களைச் சொல்லொண்ணா வகையில் துன்புறுத்திக் கொன்றார்கள். காந்தியத்தில் நம்பிக்கை கொண்ட அகிம்சைப் போராளிகளையும் ஈவிரக்கமின்றிக் கொலை செய்தனர்.

இத்தனைக்கும் நடுவில் உளச்சான்றுக்கு உண்மையாகவும் மாந்தநேயத்தோடும் செயல்பட்டுத் தங்கள் வீடுகளில் தமிழர்களுக்குத் தஞ்சமளித்த சிங்களக் குடும்பங்கள் சிலவற்றின் உதவியினால்தான் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன..

யூலைப் படுகொலைகளுக்கு எதிராக இந்தியாவில் தமிழ்நாட்டு மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பின் தமிழ்நாட்டின் மிகப் பெரிய தேசிய எழுச்சியாக இது மாறியது. தமிழர் கொந்தளிப்பின் எதிரொலியாகத்தான் இந்திய நாடாளுமன்றத்திலேயே தலைமையமைச்சர் இந்திரா காந்தி யூலைக் கலவரத்தை இனப்படுகொலை என்று வண்ணித்து இலங்கையைக் கண்டனம் செய்தார். அயலுறவு அமைச்சர் நரசிம்ம ராவை கொழும்புக்கு நேரில் அனுப்பினார். அவர் அதிபர் ஜெயவர்த்தனாவைப் பார்த்து “கலவரத்தை நீங்கள் நிறுத்துகின்றீர்களா? நாங்கள் நிறுத்த வேண்டுமா?” என்று கேட்டாராம். அத்துடன் தமிழர்களுக்கு எதிரான வன்முறையும் முடிவுக்கு வந்தது.

யூலைப் படுகொலை பல வகையிலும் வரலாற்றில் ஒரு திருப்பமாக அமைந்தது. முதலாவதாக, ஒன்றுபட்ட இலங்கைக்குள் சிங்கள இனத்துடன் சேர்ந்து வாழும் நம்பிக்கையை அது அடியோடு அழித்து விட்டது. தமிழர்கள் 1976 வட்டுக்கோட்டையில் எடுத்த தீர்மானத்தையும் 1977 பொதுத் தேர்தலில் தந்த ஆணையையும் செயலாக்குவது தவிர வேறு வழியில்லை என்பதை அறுதியாகவும் உறுதியாகவும் நிறுவியது. 1948ஆம் ஆண்டு தொடங்கிய இன ஒடுக்குமுறை 50களின் பிற்பகுதியில் இனவதையாக முற்றி 1983 யூலையில் அரசத் திகிலியமாகத் தீவிரமடைந்த நிலையில் தமிழ் மக்களின் உயிரும் மானமும் காக்க ஆய்தப் போராட்டம் தவிர வேறு வழியில்லை என்ற நிலை தோன்றியது. எழுபதுகளின் தொடக்கத்தில் நிறுவப்பெற்ற விடுதலைப் புலிகள் உள்ளிட்ட போராளிக் குழுக்கள் அரசியல் பொருத்தப்பாடுடையவை ஆனது யூலைப் படுகொலையிலிருந்துதான்.

இறுதியாக ஒன்று: 1983 யூலைப் படுகொலைக்காக அன்றைய அதிபர் ஜெயவர்த்தனா உள்ளிட்ட எந்த்த் தலைவரும் தமிழ் மக்களிடம் வருத்தம் தெரிவிக்கவில்லை. கலவரத்தில் குற்றம் புரிந்தவர்கள் யார், என்ன இனம், என்ன அரசியல் சார்பு என்றெல்லாம் கருதாமல் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று ஐநா அமைப்புக்கு அளித்த உறுதியை ஜெயவர்த்தனா காப்பாற்றவே இல்லை. யூலைப் படுகொலைக்கான பொறுப்புக்கூறல், நீதி எதுவும் இன்று வரை மெய்ப்படவில்லை, அந்தக் கணக்கு இன்னும் முடியவில்லை. அதனால்தான் தமிழர்களுக்கு எதிராக என்ன குற்றம் செய்தாலும் தண்டனை பற்றி அஞ்சத் தேவையில்லாத குற்றவிலக்கு (impunity) சிறிலங்காவில் நிலைபெற்று கால் நூற்றாண்டு கழித்து முள்ளிவாய்க்காலில் முழுவடிவம் பெற்றது. முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு நாம் போராடிப் பெறும் நீதிதான் 83 யூலைப் படுகொலைக்கான நீதியாகவும் அமையப் போகிறது.

தோழர் தியாகு

Pin It