இந்த நாட்டை அந்நிய மூலதனத்துக்கு விற்பதுதான் வளர்ச்சியென்றும், மக்களின் அழிவில் முதலாளித்துவம் (கார்பரேட்) வளர்ச்சியடைவதற்கு மதவாத-சாதிவாத பாசிசம் அதிகாரத்தை அடைய வேண்டியது அவசியம் என்றும் ஆளும்வர்க்கம் வெளிப்படையாக களமிறங்கியுள்ளது.

அரசின் அழிவுப்பாதையை எதிர்கொள்ள முடியாமல் விவாசாயிகள், பணியிழப்பையும்-வேலை நிரந்தரமில்லா ஒப்பந்த முறையையும் கொண்ட தொழிலாளர்கள், வாழ்விடங்களைப் பறிகொடுக்கும் மீனவர்கள், பழங்குடிகள் என ஒட்டுமொத்த சமூகமே நிலைகுலைந்து கிடக்கிறது.

police beating 560

மக்களின் சிக்கலை திசைதிருப்ப சாதிவெறியும், மதவெறியும், இனவெறியும் (தொடக்க நிலையில் இருந்தாலும்) தூண்டப் படுகின்றன. இவையனைத்தும் அரசியல் அமைப்பு வடிவங்களில் நிறுவனமயமாக்கப் பட்டுள்ளன. இஸ்லாமியர்களும், தலித்துகளும் நொடிக்கு நொடி குறிவைத்து வேட்டையாடப் படுகிறார்கள். பிழைப்புக்காக ஆளும்வர்க்கத்தால் நாடோடிகளாக ஆக்கப்பட்டுள்ள மொழி சிறுபான்மையினரை பலியாடுகளாக்க ஆயுதங்கள் கூர்தீட்டப் படுகின்றன.

மக்கள் இடைவெளியில்லா கொடுமைகளுக்குப் பலியாகிக் கொண்டிருக்கும் போது இவையேதும் சமூகப் பிரச்சினைகளல்ல என்று அரசு துணிந்து நீடிக்க முடிகிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், பழங்குடியினங்கள் ஆகியோர் தங்கள் வாழ்வுரிமை குறித்துப் பேசுவதும், போராடுவதும் வளர்ச்சிக்கு எதிரானதென அரசு நிறுவியுள்ளது. உண்ணாவிரதப் போராட்டங்கள் கூட சட்டவிரோதமானதாக ஆக்கப்பட்டுள்ளன‌. மக்கள் நலன் சார்ந்த அறவழிப் போராட்டக்காரர்கள் அடக்குமுறையால் நசுக்கப் படுகிறார்கள்.

இவையெல்லாம் மக்களின் அரசியல் பாதை முடக்கப்பட்டுள்ளதையும், முதலாளிகளின் அரசியல் சர்வாதிகாராம் செல்வாக்கு செலுத்துவதையும் உணர்த்துகிறது. முதலாளிகளின் அரசியல் சர்வாதிகாரம் இரண்டு வழிகளில் நிலைநிறுத்தப் பட்டிருக்கிறது.

ஒன்று- மக்களுக்கான அரசியல் தலைவர்களும், இயக்கங்களும் கடுமையாக நசுக்கி அழிக்கப்பட்டதாகும். இந்த அரசு தோழர் பகத்சிங் முதல் தோழர் தமிழரசன் வரையிலான ஆயுதப் போராட்டத் தலைவர்களையும், அவர்களின் இயக்கங்களையும் மட்டும் அழிக்கவில்லை; சட்டீஸ்கரில் பழங்குடி மக்களிடையே தொழிற்சங்கப் பணியாற்றிய சங்கர்குகா நியோகி, உலகில் மிகப்பெரிய டெக்ஸ்டைல்ஸ் போராட்டம் என வர்ணிக்கப்படும் மும்பை டெக்ஸ்டைல்ஸ் தொழிலாளர் (2.50 இலட்சம் பேர், 20 மாதம்) போராட்டத்தை வழி நடத்திய டாக்டர்-தாத்தா சமந்த், டாடாவின் ஜாம்ஷெட்பூர் நிறுவனத்தில் மிகப்பெரிய தொழிற்சங்கத்தை உருவாக்கிய b.g கோபால் ஆகிய சீர்த்திருத்த தலைவர்களையும், அவர்களின் இயக்கங்களைம் கூட நசுக்கி அழித்துள்ளது. இன்றும் கூட நேர்மையான தகவல் அறியும் உரிமை சட்டப் போராளிகளை சதிசெயல்கள் மூலமாக அழித்து வருகிறது.

முதலாளிகளின் இரண்டாவது வழிமுறை என்பது போலியாக சமூக விடுதலை பேசுகிற கைக்கூலி அமைப்புகளை உருவாக்குவதிலும், மக்களின் பிரச்சினைகளுக்கு இவர்களை உடனடியாக களம் இறக்குவதிலும் உள்ளது. இதன் மூலம் போராட்டம் கைமீறிப் போகாமல் கட்டுப் படுத்தப்படுகிறது.

பயங்கரவாத அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கும் புரட்சியாளர்கள்

இந்த சூழ்நிலையிலும் புரட்சியாளர்களில் சிலர் இன்னும் முழுமையாகப் பறிக்கப்படாமல் இருக்கும் துண்டறிக்கை-சுவரொட்டிப் பரப்புரைகளையும், ஆர்ப்பாட்டம்- பொதுக் கூட்டங்களையும் மிகப்பெரிய சனநாயக வழிமுறையாகப் பார்க்கின்றனர். நீதிமன்றங்களில் கெஞ்சித்தான் கூட்டம் நடத்த வேண்டிய நிலை வந்த பின்னும், காவல்துறை அனுமதித்தால்தான் சுவரொட்டி ஒட்ட முடிகிற நிலை வந்த பின்னும் வேறு எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்து கொண்டே ஒப்பில்லா அரசியல் போராட்டத்தை நடத்துவதாக நம்பிக் கொள்கிறார்கள்.

இப்படி வேறு எதுவும் செய்ய முடியாதவர்கள் என்பதாலேயே அரசும் நம்மை விட்டு வைத்திருக்கிறது என்பதை இவர்கள் உணர மறுக்கிறார்கள். மாறாக தம்மை நம்பியுள்ள தோழர்களிடம் நாம் அரசியல் போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பதாக நம்பிக்கையை வளர்க்கிறார்கள்.

இந்த நம்பிக்கை என்பது மறைமுகமாக அரசின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. சனநாயகக் கடமையை செய்ய இந்த அரசு அனுமதிக்கிறதென நம்பிக்கையூட்டுகிறது. பிரச்சினை அரசல்ல; மக்கள்தான் என்ற நிலைக்குத் தள்ளுகிறது. எனவே மக்களுக்கு போதிக்க மட்டுமே செய்கிற சட்டவாத வழிமுறைகளையே நாடச் செய்கிறது. அரசுக்கு எதிராக செய்ய வேண்டிய சட்டவிரோத நடவடிக்கைகளை (புரட்சிகர நடைமுறையை) கைகழுவி விடுகிறது; அரசு பாதுகாக்கப் படுகிறது.

புரட்சிகர அரசியல் போராட்டம் என்பது சட்டவாதமல்ல

அரசு மக்களை ஒடுக்குவதில் மேலும், மேலும் தேர்ச்சி அடைவதோடு முன்னேறிக் கொண்டேயிருக்கிறது. தங்குதடையற்ற அதன் போக்குக்கு காரணம் ஒன்றுதான். அதை தடுப்பதற்கு யாருமே இல்லையென்பதுதான். தடுப்பதென்பது வாதங்களை முன்வைப்பது மட்டுமேயல்ல. புரட்சிகர நடவடிக்கையின் மூலம் அதை நிலைகுலையச் செய்வதுமாகும்.

அப்படி அரசை நிலைகுலையச் செய்யா விட்டால் அரசின் ஒடுக்குமுறை அதிகரிக்குமேயன்றி குறையாது. அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வழக்கமான சட்டவாதப் பரப்புரைப் பணிகள் கூட நீடிக்க முடியாது.

இதில் அபாயகரமானது என்னவென்றால், நாம் சட்டவாதப் பரப்புரைகளை மட்டுமே செய்வதை ஆளும்வர்க்கம் ஏற்கனவே மதிப்பிழக்கச் செய்துவிட்டது. அரசால் சிறைச்சாலைகளுக்குள்ளேயும், வெளியிலும் தயாரிக்கப்படுகிற இனமான, சாதிமான போலித் தலைமைகள் அரசின் அனுமதியோடு நம்மை விடத் தீவிரமாகப் பேசுகிறார்கள். பேசுவது மட்டுமே மக்கள் பணியென்றான பிறகு நம்மை விட ஆளும்வர்க்க கைகூலிகளே சிறந்த தலைவர்களாகி விடுகிறார்கள்.

எனவே புரட்சிகர அரசியல் போராட்டம் என்பது சட்டவாதம் மட்டுமேயல்ல என்பதை தலைமைகளுக்கு உணர்த்துவோம்! புரட்சிகர நடைமுறைகளில் அனுபவம் பெறுவோம்! செயலூக்கமுள்ள கட்சியைக் கட்ட உறுதியேற்போம்!

- திருப்பூர் குணா

Pin It