தமிழ் நாடு இன்று மாபெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் எந்த மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை. மோடி வித்தை எடுபடாது என்பதை காலம் மிக விரைவில் புரிய வைக்கும். மக்கள் ஏமாற்றப்பட்டுப் பட்டுக்கொண்டே உள்ளனர்.

people 312தமிழ்த் தேசியம் இன்று முற்போக்கு ஆற்றல்களின் பேசு பொருளாக மாறியுள்ளது. ம.தி.மு.க. போன்ற நாடாளுமன்ற அரசியல் கட்சிகள் கூட இந்தியாவை நாடுகளின் கூட்டமைப்பு என்று மாற்றக் கோருகின்றனர்.

ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அ.கணேசமூர்த்தி அவர்கள் நாடாளுமன்றத்தில் 60வது ஆண்டு சிறப்புக்கூட்ட உரையில் "ஒரு தேசம் என்று இந்தியாவைச் சொல்லும் அதே வேளையில் அது இயற்கையானது அல்ல என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டும். பழமையும் நாகரிகத்தால் தொன்மையும் பெற்ற எங்கள் மண், ஒற்றுமை என்னும் மாய வலையில் உங்களோடு பின்னப்பட்டுச் சொந்த நாட்டிலேயே அன்னியப்பட்டுப் போயுள்ளோம். இது நான் மட்டும் கேட்கும் கேள்விகள் என்று எண்ணிவிடாதீர்கள். வரலாற்று அறிவோடும், தமிழ் இன உணர்வோடும் சிந்திக்கின்ற இலட்சக்கணக்கான தமிழ் இளைஞர்களின் உணர்வுமிக்க கேள்விகள் இவை. ஒற்றுமை என்னும் கவசத்திற்குள் புதைந்து கிடக்கும் வேற்றுமை என்ற விதைகளின் கேள்விகள்"

இந்த மாற்றங்களை நாம் அவதானிக்க வேண்டும்.

தமிழ்த் தேசிய வரலாற்றில் பெரியார், பாவேந்தர், பெருஞ்சித்திரனார் போன்றவர்கள் ஆற்றியுள்ள பெரும் பங்கு கவனங்கொள்ளத்தக்கது.

இந்திய வசந்தத்தின் இடி முழக்கமாக 1960 களில் வெடித்துக் கிளம்பிய நக்சல்பாரி புரட்சி இயக்கம், இந்தியப் பொது உடமைக் கட்சிகள் (CPI, CPM) கைவிட்டுவிட்ட தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை எனும் கோட்பாட்டை உயர்த்திப் பிடித்தது. இந்தியாவை தேசிய இனங்களின் சிறைக் கூடம் என்று சரியாக வரையறுத்த‌தும், நாடாளுமன்ற சமரச அரசியல் பாதையை தூக்கியெறிந்துவிட்டு புரட்சிகர அரசியல் பாதையை முன்வைத்த‌தும் முக்கியமானது.

இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் (திராவிட இயக்கம்) பார்ப்பனியத்திற்கு எதிராக தோன்றிய மாபெரும் சக்தியாக மாறி நாடாளுமன்ற அரசியல் பாதையில் சறுக்கியது. தமிழ்த் தேசிய இனத்தின் குரலை ஆவேசத்துடன் பேசி தமிழ்மக்கள் சக்தியை திரட்டியவுடன் டெல்லியிடம் பேரம் பேசி டெல்லியின் அதிகார மையத்தில் இடம் பிடித்தனர். டெல்லியின் அதிகாரத்தில் பங்க்குபெற்று திமுகவும் அதிமுகவும் இன்று தமிழக மக்கள் 4 கோடி பேருக்கும் ஒரே நாளில் 4000 கோடி (நாலாயிரம் கோடி) லஞ்சம் கொடுக்கும் பூதமாக வளர்ந்து விட்டனர். திமுக, அதிமுகவின் தோல்வியை திராவிட இயக்கத்தின் தோல்வியாகக் காட்டி பார்ப்பனிய இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ம் அதன் அரசியல் முகவரான பா.ஜ.க.வும் நரேந்திர மோடியை ரட்சகராகக் காட்டி தமிழகத்தில் காலூன்றத் தொடங்கிவிட்டனர்.

இந்தச் சூழலில் மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்கள் தம்முன் ஒரு விரிவான மீளாய்வு செய்து தமிழக அரசியலில் ஒரு புதிய பரிமாணத்தை உருவக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட தேசிய இனமான தமிழ் இனத்தின் உழைப்பாளி மக்கள் அனைவரும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களே ஆவர்.

தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலையிலும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களின் விடுதலையிலும் அக்கறை கொண்டுள்ள யாரும் தமிழகச் சூழலில் பொதுமைய இயக்கம், பெரியாரிய இயக்கம், அம்பேத்காரிய இயக்கம் எடுத்த சரியானவற்றையும் எடுக்கத் தவறிய சரியானவற்றையும் மீளாய்வு செய்தே ஆகவேண்டும். மூன்று கோட்பாடுக்களும் உள்ள காலத் தேவையை மீளாய்வு செய்து புதிய பரிமாணத்தில் இளைய தலைமுறைக்கு நாம் புரியவைக்கத் தவறியுள்ளோம். அதனால்தான் நரேந்திர மோடியை கார்பரேட்கள் தூக்கி, படம் காட்டியவுடன் இளைய தலைமுறை அதற்கு பலியாகியுள்ளது. மோடி தமிழகத்தில் காலூன்றுவது, பாரதிய ஜனதாக் கட்சி சில நாடாளுமன்ற, சட்டமன்ற இடங்களைப் பிடிக்கும் நிகழ்வல்ல. மாறாக தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிப் போக்கை கார்பரேட்களுக்கும், பார்ப்பனிய சக்திகளுக்கும் தங்கத் தட்டில் வைத்துத் தாரை வார்த்துக் கொடுப்பதாகும்.

தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சியின் தேக்கமும் பெரியார் இயக்கத்தின், அம்பேத்கரிய இயக்கத்தின் தேக்கமும் ஒரு சில அமைப்புகளின் பிரச்சனை அல்ல. இந்த அமைப்புகளின் தத்துவ, அரசியல் அமைப்பு, வரலாறு இவைகளிலுள்ள சிக்கல். எனவே அது தமிழகத்தின் சிக்கலாகும். எனவே த.நா.மா.லெ.க.வின் மீது ஆய்வைத் தொடங்கியுள்ள தோழர்கள் சில தனி மனித விருப்பு, வெறுப்புகளிலிருந்து சிக்கலை அணுகத் தொடங்க வேண்டாம். த.நா.மா.லெ.க.வின் தேக்கத்தின் மீது எனக்கும் பல கேள்விகள் உள்ளது. அதே வேலை த.நா.மா.லெ.க. முன்வைத்துள்ள மார்க்சிய, லெனினிய, மாவோயியக் கோட்பாட்டைப் பற்றி நின்று பெரியார், அம்பேத்கர் ஆற்றிய மாபெரும் வரலாற்றுப் பணியை வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாக உள்வாங்கி முன்வைத்துள்ள சரியான அரசியல் பாதையைப் பற்றி முதலில் புரிந்து கொள்ள வேண்டும். த.நா.மா.லெ.க.வை விமர்சனம் செய்வது சரியானது. அதே நேரத்தில் த.நா.மா.லெ.க.வின் அரசியல் பாதையைப் பற்றி தெளிவான விமர்சனத்தை முன் வைத்து விவாதிப்பது தமிழக அரசியல் சூழலில் சரியானதாக இருக்கும்.

குறிப்பு:

திருப்பூர் குணா இந்தியப்பொது உடமை இயக்கம் பற்றிய வரலாற்று அறிவோ, தமிழ்ச் சமூக சிக்கல்களைப் புரட்சிகர முறையில் தீர்த்து மனிதகுல விடுதலையை நோக்கி முன்னேற வேண்டும் என்ற மார்க்சியப் பற்று உறுதியோ அற்ற அல்லரசிய போக்கினராக செயல்படுவதை மாற்றிக்கொள்ள வேண்டும் எனத் தோழமையோடு வேண்டுகிறேன்.

- கி.வே.பொன்னையன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It