Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

தொடர்புடைய படைப்புகள்

தமிழகத்தைப் பொருத்தவரை அரசியல் என்றாலே சாக்கடை, அது தீண்டத்தகாதது என்ற எண்ணம்தான் முஸ்லிம் சமூகத்தில் பரவலாக உள்ளது. பல்வேறு கலவரங்களை சந்தித்த பின்பும் முஸ்லிம் சமூகத்தில் இன்னும் அரசியல் குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லை என்பதுதான் உண்மை. வெளி நாடுகளுக்கு சென்று, அதிகமாக சம்பாதித்து ஊரில் தன்னை ஒரு பணக்காரனாக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற பகட்டு வாழ்க்கையின் கதாபாத்திரங்களாகத்தான் பெருவாரியான மக்கள் இருந்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடார் சமூகத்தைச் சார்ந்த அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் முஸ்லிம்களின் மிக பெரிய அரசியல் ஆளுமையான காயிதேமில்லத் முகம்மது இஸ்மாயில் சாஹிபின் புகைப்படம் தேவைப்படுகிறது, உங்களிடம் இருக்கிறதா என்று கேட்டார். என்னிடம் அவருடைய புகைப்படம் இல்லாததால் நான் இல்லை என்று கூறினேன். அதற்கு அவர் கூறிய பதில் மிகவும் சிந்திக்க வைத்ததாக இருந்தது.

muslims 360"சார், தப்பா எடுத்திக்காதீங்க. நான் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவன் கிடையாது. என்றாலும் எங்கள் இனத்துக்காக வேண்டி போராடிய காமராஜர், நேசமணி போன்ற முக்கிய ஆளுமைகளின் புகைப்படங்கள் பெரும்பாலான நாடார் மக்களின் வீடுகளில் இருக்கும். உங்கள் சமுதாயத்தின் முக்கிய ஆளுமை சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் உங்கள் சமுதாயத்திற்காக குரல் கொடுத்தவர். அவரது புகைப்படம் உங்களது வீடுகளில் இல்லாதது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது" என்றார்.

அவர் கூறிய வார்த்தைகள் என்னை கூனி குறுகச் செய்தன. இதே போன்ற நிலைதான் பெரும்பான்மை முஸ்லிம் சமூகத்திலும் உள்ளது. இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சார்ந்த ஒரு பிரமுகரிடம் கேட்டபோது கூட அவரது புகைப்படம் கிடைக்கவில்லை. இதே போன்று முக்கிய இஸ்லாமிய சமூகத்தை சார்ந்த அரசியல் ஆளுமைகள் குறித்து இளைய சமுதாயத்திடம் மிகவும் பின் தங்கிய அறிவே உள்ளது. அவர்கள் தொடர்பான ஆவணங்கள், புகைப்படங்கள் இஸ்லாமியர்களின் வீடுகளில் போதிய இடத்தைப் பிடிக்காதது மிகவும் கொடூரமானதாகவே நான் நினைக்கிறேன். அவர்கள் குறித்த வரலாறுகளை இளைய தலைமுறையிடம் எடுத்துச் சொல்லும் முக்கிய கதை சொல்லிகளான தந்தைமார்கள் இஸ்லாமிய சமூகத்தைப் பொருத்தவரை எட்டாகனியாகத்தான் உள்ளனர். வெளிநாடு என்ற சாத்தான் இஸ்லாமிய சமூகத்திற்குள் நுழைந்தது முதற்கொண்டு தந்தைகளிடம் வளர வேண்டிய பிள்ளைகள் தாயின் அரவணைப்பில் மட்டுமே வளரவேண்டிய சூழ்நிலை. இதனால் எந்த ஒரு வரலாறும் தெரியாமல் இளம்பிள்ளைகள் வளர்ந்து வருகிறார்கள்.

வீரன் திப்புசுல்தான், ஹைதர் அலி, பஹதூர் ஷா, அபுல்கலாம் ஆசாத் போன்ற தலைவர்களின் வரலாறுகளும் சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம் சமூகம் ஆற்றிய வீர தீர சம்பவங்கள் குறித்தும் எனது தாய்வழி உப்பா(தாத்தா) கதையாகக் கூறியது, நாட்டுப்புற பாடலாக பாடியது இப்போதும் எனது காதுகளில் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.இதைப்போன்ற கதை சொல்லிகள் தற்போது இளம்பிள்ளைகளுக்கு கிடைக்காதது அவர்களுக்கு பேரிழப்பு என்றுதான் கூறுவேன். இந்த வரலாற்று நீட்சிகளில் இருந்துதான் சமகால அரசியல் குறித்த ஆர்வம் இளம் தலைமுறையிடம் உருவாகும். ஆனால் அந்த இடம் வெற்றிடமாக இருப்பதால்தான் அரசியல் என்றாலே தீண்டத்தகாத ஒன்றாக முஸ்லிம் இளைஞர்களிடம் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் முஸ்லிம் சமூகத்திடம் அரசியல் குறித்த விழிப்புணர்வைக் கொண்டு சென்றதில் இஸ்லாமிய இயக்கங்களுக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. தொண்ணூறுகளின் ஆரம்பம் முதற்கொண்டு இப்பணிகளை சில இயக்கங்கள் செய்து வருகின்றன. ஆனால் அது முழுமையான வெற்றியடையவில்லை என்பது உண்மை. முதன் முதலில் என்பதுகளின் கடைசியில் பழனி பாபா இதற்கான துவக்கத்தைக் குறித்தார். அதன்பின்பு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், அதன் அரசியல் பிரிவு மனித நேய மக்கள் கட்சி, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் அரசியல் அமைப்பான எஸ்.டி.பி.ஐ போன்ற கட்சிகள் இந்தக் களத்தில் பாரிய பணிகளை செய்துள்ளன‌ என்பது உண்மை. ஆனால் அதுவும் போதுமானதாக இல்லை.

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அதன் அரசியல் பிரிவை ஆரம்பித்த போது முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்ட எதிர்ப்பலைகள் குறித்து அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. மிகவும் கடினமான சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்திடம் அரசியல் குறித்த கருத்தியலைக் கொண்டு செல்ல வேண்டி இருந்தது. தற்போது அதில் சிறிதளவு வெற்றி பெற்றதாக அந்த அமைப்பினர் கூறுகின்றனர். தற்போது இவர்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வு பிரச்சாரத்தால் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில் வாக்குப்பதிவின் சதவீதம் அதிகரித்திருப்பதாக கூறுகிறார்கள்.

இந்நிலையில் வாக்களிக்கச் செல்வது ஹராம்(தடுக்கப்பட்டது) என்று ஒரு சில மார்க்க அறிஞர்களால் பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. இவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றாலும் சேட்லைட் சேனல்கள் மூலம் இந்த கெடுதி வாய்ந்த பரப்புரையை அனைத்து இஸ்லாமியர்களின் இல்லத்திற்கும் கொண்டு செல்கிறார்கள். வாக்குப்பதிவின் முந்திய வாரத்தில் வெள்ளிக்கிழமை ஜும் ஆ உரையின் போது சென்னையில் உள்ள பிரபல மக்கா மஸ்ஜிதின் தலைமை இமாம் சம்சுத்தீன் காஷிமி வாக்களிக்க முஸ்லிம்கள் செல்ல வேண்டிய தேவை இல்லை என்றும் அப்படியே சென்றாலும் நோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் நீங்கள் ஓட்டுப்போடும் வேட்பாளர்கள் மோசமானவர்களாக இருந்தால் அதற்காக மறுமையில் இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும் என்று அவர் கூறியது மிகவும் வியப்பாக உள்ளது.

தலைமை இமாமின் கூற்றை இந்துத்துவவாதிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். அவர்களும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். முஸ்லிம்கள் வாக்களிக்க வாக்குச்சாவடி மையத்திற்கு வராவிட்டால் இந்துத்துவம் எளிதாக ஆட்சிக்கட்டிலில் ஏறமுடியும். அதுதான் அவர்களின் விருப்பமும் கூட. இந்துத்துவ கருத்தியலுக்கு விளக்கவுரை எழுதி முஸ்லிம் சமூகத்தை மிகவும் பிற்போக்கான சிந்தனையிலேயே வைத்துக்கொள்ள வேண்டும் என மரியாதைக்குரிய தலைமை இமாம் கருதுகிறாரோ என்னவோ?

இந்துத்துவத்தின் வாக்குவங்கியை குறைப்பதற்காக முஸ்லிம்களின் வாக்குசதவீதத்தை அதிகரிக்க இஸ்லாமிய இயக்கங்கள் கடுமையான களப்பணியாற்றி வரும் சூழ்நிலையில் இதே போன்ற பிற்போக்கான கருத்துக்கள் இன்னும் கடினமான களத்தை உருவாக்கி கொண்டேதான் இருக்கும். தற்போதுதான் 1980ற்குப் பிறகு முஸ்லிம் சமூகத்தில் அரசியல் குறித்த விழிப்புணர்வு துளிர்விட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இதே போன்ற கருத்தியல்கள் இந்துத்துவ கோட்பாடுகளுக்கு ஒத்துப் போவதாகவே பார்க்கப்படுகிறது.

- ஷாகுல் ஹமீது (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 ந. அப்துல் ரஹ்மான், ஹாங்காங் 2014-04-28 19:03
சம்சுதீன் காசிமி தமிழக முஸ்லிம்களின் பிரதிநிதி அல்லர். மவ்லவி பி.ஜெ. அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் சம்சுதீன் காசிமி பி.ஜெவை விமர்சிக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தது இமாலயத் தவறு. அதன் விளைவு தான் சம்சுதீன் காசிமி தனக்கு தானே முடிசூட்டிக் கொண்டு தமிழக முஸ்லிம்களுக்கு கட்டளையிடுகிறார ். இறைவா! எங்களை ஆணவம் பிடித்த மார்க்க அறிஞர்களிடம் இருந்து பாதுகாப்பாயாக! என்று வேண்டுவோம்.
Report to administrator
0 #2 ரிழா 2014-04-28 23:22
தோழல் சாகுல் ஹமீது முஸ்லிம் சமூக அரசியல் குறித்த தனது கட்டுரையில் 3 பிரதான கருத்துக்களை முன்வைப்பதாக நான் கருதுகிறேன்.

1) முஸ்லிம் சமூக ஆளுமைகளை நினைவுகூர்தல்
2) முஸ்லிம் அரசியலை முன்வைக்கும் அமைப்புகளைப் பற்றி...
3) முஸ்லிம் சமூக பிரதிநிதிகளாக தங்களைக் காட்டிக் கொள்ளும் வைதீக இமாம்களை...

நீங்கள் குறிப்பிடுவது போல் வெளிநாட்டில் வேலை பார்க்கும் அனைத்து முஸ்லிம்களும் பகட்டுக்காக வேலை பார்க்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுமாறு அன்புடன் அறிவுறுத்துகிறே ன். இது வேறு மாதிரியான தோற்றத்தைத் தருகிறது.

அடுத்து, வரலாற்றை மீட்டும் கதை சொல்லிகள் தந்தையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. தாயின் பிரதான கடமையாகக் கூட அதைக் கொள்ளலாம்...

ஆஃப்ரிக்கர்களிடம் ஒரு பழக்கம் உள்ளது. வரலாறை அடுத்தடுத்த தலைமுறைக்கு தொடர்ந்து அவர்கள் சொல்லிக் கொண்டே வருவார்கள். இதனால்தான், அமெரிக்காவில் வசித்த எழுத்தாளர் அலெக்ஸ் ஹேலி என்பவருக்கு தனது பூர்வீகம் ஆஃப்ரிக்கா என்பதை கண்டுபிடிக்க முடிந்தது. தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களுக்கு இந்த பிரக்ஞையே இல்லை.

தவிர, வரலாற்றுப் பாட நூல்களிலும் முஸ்லிம் சமூகம் குறித்து போதிய அளவு இல்லாததும், வளர்ந்து இளைஞர்களாகிய பிறகும் சுயமாக தெரிந்து கொள்ள முடிவதில்லை.

அனைத்து கீற்று வாசகர்களுக்காகவ ும் ஒரு தகவலைப் பதிய ஆசைப்படுகிறேன். தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்ட, டாக்டர் எஸ்.எம். கமால் அவர்களால் எழுதப்பட்ட, 'முஸ்லிம்களும் தமிழகமும்' என்ற நூலை பதிவிறக்கம் செய்து வாசிக்கும்படி தயவு செய்து கேட்டுக் கொள்கிறேன்.

http://tamilvu.org/library/libindex.htm இந்த தளத்திற்குள் சென்றால், நாட்டுடைமையாக்க ப்பட்ட எழுத்தாளர்களின் பட்டியலில் கமால் அவர்களின் நூல் கிடைக்கிறது.

அடுத்து நான் குறிப்பிட்ட முதல் விஷயம் குறித்து...முஸ் லிம் சமூகத்தில் கனவு நாயகர்களை பின் தொடரும் பழக்கம் கிடையாது. அதனாலேயே எவ்வளவு பெரிய சமுக சீர்திருத்தவாதி யாக இருந்தாலும், அவருடைய புகைப்படத்தை வீட்டில் வைத்திருக்கும் வழமையைக் காண முடியவில்லை. இது அவர்களின் மதக் கொள்கையோடு சம்பந்தப்பட்டது . ஆனால், காயிதேமில்லத் போன்றோரின் வரலாற்றை புத்தகவடிவில் கொண்டு வருவதும சமூக அமைப்புகளின் பாரிய பொறுப்பு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வரலாறு தெரியாதவன் வரலாறு படைக்க முடியாது.

இரண்டாவதாக, அரசியல் எழுச்சியை முன்னெடுக்கும் அமைப்புகளுக்கு இரு பெரும் தலைவலி உள்ளது. ஒன்று, முஸ்லிம் சமூகத்தில் உள்ள 'அறிவாளிகள்'. இந்த வகை இளம் படித்த அறிவாளிகள், முஸ்லிம் அமைப்புகளைத் தொடர்ந்து குறைகூறி வருவதிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளனர். முஸ்லிம் அமைப்புகள் அரசியல் பேசினால், அது வலதுசாரி இயக்கங்களின் வளர்ச்சிக்குத் துணைபுரியும் என்பது இந்த 'படித்த மேதாவிகளின்' கண்டுபிடிப்பாக உள்ளது. இவர்கள் சமூக முன்னேற்றத்திற் கும், எழுச்சிக்கும் ஒரு சிறு துரும்பையும் எடுத்துப் போட்டிருக்க மாட்டார்கள். பிளாக், இணையம், புத்தகம் என்று எழுதி பெயர் சம்பாதித்ததை தவிர..இது தனியே விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய கருத்து...

இரண்டாவதாக இஸ்லாத்தை, இந்த மண்ணில் வைத்து புரிந்து அதற்கேற்ப நடைமுறைப்படுத்த வழிகாண இயலாத இஸ்லாமிய அறிவுஜீவிகள். ரஷ்யாவிலிருந்து , சீனாவிலிருந்து புரட்சியை இறக்குமதி செய்யும், கச்சாவான இடதுசாரிகளுடன் இவர்களை ஒப்பிடலாம்...இவ ர்கள் தான் 'ஓட்டுப் போடுவது இஸ்லாமிய சட்டத்திற்கு விரோதமானது' போன்ற வினோதமான தீர்ப்புகளை வழங்கி வருகிறார்கள்.

அடுத்து, இமாம்கள் குறித்து...முஸ் லிம் சமூகத்தின் உயிர்நாடிகளான இமாம்கள்தான், ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரப் போரை 'ஜிஹாத்' என அறிவித்து, நாட்டை அடிமைத்தளையிலிர ுந்து விடுவித்தார்கள் ...இந்தப் பின்னணியில் தான், முஸ்லிம் சமூகத்தின் தற்போதைய முன்னேற்றத்திற் கும் அவர்கள் வழிகாட்ட வேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறத ு. ஆனால், அந்த எதிர்பார்ப்பில் மண்ணை அள்ளிப் போடுபவர்கள் தான், சாகுல் குறிப்பிட்ட சம்சுதீனும், அப்துல் ரஹ்மான் குறிப்பிட்ட பி.ஜே.யும், இன்னிபிற இமாம்களும்... (பி.ஜே.யிடம் ஒரு தந்திரம் உள்ளது. தேர்தலுக்கு முன்பு வரை ஒரு தரப்பை ஆதரித்து விட்டு, தேர்தலுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு வேறொரு தரப்பை ஆதரிப்பது. இந்த தேர்தலிலும் இது நடந்தது. 98 கோவை கலவரத்துக்குப் பின்பு நடைபெற்ற தேர்தல்களிலும், அவரது நிலைப்பாடு இப்படித்தான் சில நாட்டிகளில் மாறிப் போனது. இது தொடர்பாக அவருக்கு எதிரான கருத்து கொண்ட முஸ்லிம் தோழர்கள் துல்லியமாக பதிவிட்டால் நன்றாக இருக்கும்). முஸ்லிம் சமூகம் இந்த முல்லாக்களிடமிர ுந்து விடுபட வேண்டும். மேலும் மதம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சுயசிந்தனை கொண்ட ஓர் இளைஞர் பட்டாளம் தான் அந்த சமூகத்துக்கு இப்போதைய தேவை...

ரிழா
Report to administrator

Add comment


Security code
Refresh