அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சியைப் பிடித்திருக்கிறார் அதிமுக தலைவி ஜெயலலிதா, கடந்த 13ந் தேதி வெற்றி முகத்தோடும், பெருமிதப் புன்னகையோடும் காட்சி தந்த ஜெயலலிதா அன்றைய தினம் மாலையே செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அவரது ஜெயா தொலைக்காட்சிக்கும் சிறப்பு பேட்டியளித்திருந்தார்.

தனது அபரிதமான வெற்றியைக் குறித்து பகிர்ந்து கொண்ட தோடு, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்து, அவர் தொடர்ந்து பேசிய பேச்சுக்கள் தமிழக மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை தோற்றுவித்திருக்கிறது.

ஜெயலலிதாவின் பேச்சில் கடந்த காலங்களைப் போலல்லாமல் நிதானம் தென்பட்டது. பக்குவம் வெளிப்பட்டது. அவரது ஆணவத்தனம் அந்தப் பேச்சில் மறைந்து போயிருந்தது. நாட்டு மக்கள் மீதான அக்கறையை வெளிப்படுத்துவதாய் அமைந்திருந்தது அவரது பேச்சு.

தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்றிருக்கும் நீங்கள் எந்ததெந்தப் பணிகளை உடனடியாக செய்ய எண்ணியிருக்கிறீர்கள்? என்பது போன்ற செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பொறுப்பான பதில்களை அளித்திருந்தார் ஜெயலலிதா.

"நான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சீர்கெட்டுப் போயிருக்கும் சட்டம் ஒழுங்கை பலப்படுத்துவேன். அடுத்ததாக, மக்களுக்கு கொடுத்திருக்கும் தேர்தல் வாக்கு றுதிகளை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை அளித்து செயல்படுவேன். தமிழ்நாட்டில் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளது. தமிழ்நாட்டு மக்களின் இத்தீர்ப்பை நான் சுமையாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன். நிம்மதியான வாழ்க்கைக்காக தமிழக மக்கள் ஏங்குகின்றனர். தமிழக மக்களின் ஒளிமயமான வாழ்விற்கு நான் உத்திரவாதமளிக்கிறேன்...'' இப்படியெல்லாம் அசத்தலாக பேசியிருந்தார் ஜெயலலிதா.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெற்ற தோல்வியும், அதனால் ஜெ 5 ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்டதும் அவரை நிதானப்படுத்தியிருக்கிறது; பக்குவப்பட வைத்திருக்கிறது என்பதை அவரது பேச்சிலிருந்து விளங்கிக் கொள்ள முடிகிறது.

ஜெயலலிதா முதல்வராக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார். தனது பேட்டியில் தமிழக மக்களுக்கு தெரிவித்திருக்கும் செய்திகளை அவர் முழுமைப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

சட்டத்தின் ஆட்சியைத்தான் தமிழக மக்கள் விரும்புகிறார்கள். கொலை, கொள்ளை, கடத்தல் இல்லாத தமிழகத்தைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். நிம்மதியான வாழ்வைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். இதில் ஜெயலலிதா கவனம் செலுத்த வேண்டும். தேர்தல் பிரச்சாரங்களின்போது கொடுத்த வாக்குறுதிகளில் பயனுள்ளவற்றை நிச்சயமாக நிறைவேற்றிக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர் என்ற நம்பிக்கையை ஜெயலலிதா உருவாக்க வேண்டும்.

சட்டம் ஒழுங்கு, மின் வெட்டு, நெசவாளர், விவசாயிகள் பிரச்சினை, விலைவாசி உயர்வு, தமிழக மீனவர்கள் மீதான சிங்கள இராணுவத்தின் தாக்குதல்கள் போன்றவை ஜெயலலிதாவால் மிகுந்த கவனத்துடன் கவனிக்கப் பட வேண்டிய பிரச்சினைகளாக உள்ளன. இவற்றுக்கு தீர்வு காண்பதாக தேர்தல் பிரச்சாரங்களில் உத்திரவாதமும் அளித்திருக்கிறார் ஜெயலலிதா.

இத்தகைய பிரச்சினைகள்தான் மக்களின் கோபத்திற்கும் திமுகவின் வீழ்ச்சிக்கும் காரணம் என்பதை ஜெயலலிதா கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

சிறுபான்மை முஸ்லிம் மக்கள் இந்தத் தேர்தலில் அதிமுகவிற்கு பெரும்பான்மையாக வாக்களித்திருக்கிறார்கள். முஸ்லிம் கட்சிக ளும், இயக்கங்களும் அதிமுகவின் வெற்றிக்கு உழைத்திருக்கின்றன. திமுக அரசிடம் முஸ்லிம் சமுதாயம் அடைந்த ஏமாற்றங்கள் அதிமுகவிடத்தில் நம்பிக்கைகளாக துளிர்த்திருக்கின்றன.

முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கிடைத்தும் அதில் நிலவும் குளறுபடிகள் சரி செய்யப்படாமல் அதன் பலன்கள் முஸ்லிம் சமுதாயத்திற்கு கிடைக் கவில்லை. இதனை ஜெயலலிதா சரி செய்வதாக வாக்களித்துள்ளார். கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு முஸ்லிம்களின் ஜமா அத்திருமணப் பதிவுகளை ஏற்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் நிறைவேற்றுவதாக வாக்குறுதி வழங்கியுள்ளார்.

இதுபோன்ற முஸ்லிம்களின் இதர கோரிக்கைகளையும் பரிசீலித்து தீர்வு காணப்படும் என்கிற ஜெயலலிதாவின் உத்திரவாதத்தை முஸ்லிம்கள் நம்புகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புகளை அவர் நிறைவேற்ற வேண்டும்.

ஒன்றரை வருடங்களுக்குள் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று மிகுந்த நம்பிக்கையோடு தெரிவித்திருக்கிறார் ஜெயலலிதா. கால அவகாசத்தை சற்றே கூடுதலாக எடுத்துக் கொண்டாலும் அவர் கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற முனைப்பு காட்டினால் அடுத்த முறையும் ஜெ.வை ஆட்சியில் அமர வைப்பார்கள் தமிழக மக்கள். அப்போது மக்கள் தீர்ப்பு கோபமாக வெளிப்படாது.

- ஃபைஸல்

Pin It