தமிழக சட்டமன்ற தேர்தல் ஊழல் புரிவோர்களுக்கு இடையிலான போட்டியாக மட்டும் நாம் சுருக்கிவிட முடியாது. அது பாசிச சக்திகளுக்கும், அவர்களை எதிர்கொள்வோருக்கும் இடையிலான மோதலாகவும் இருக்கிறது.
அடடா! பி.ஜெ.பி-யை சொல்கிறீர்களா? தமிழ்நாட்டில் அது எங்கே இருக்கிறது என்று தட்டிக்கழிக்க வேண்டாம்.
இந்தியா மதவாத பாசிச சக்திகளின் அதிகாரப்பிடியில் வீழ்ந்துள்ளது என்றால், தமிழ்நாடு சாதியாதிக்கவாத பயங்கரவாதிகளின் பிடியில் விழுந்து கிடக்கிறது.
இந்தியாவெங்கும் இசுலாமியர்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள். சிறுபான்மையினருக்கு ஆதரவாக, பாசிச சக்திகளுக்கு எதிராக - பேசுகிற, செயல்படுகிற - அறிவுத்துறையினர், மாணவர்கள், சனநாயக சக்திகள் தாக்கப்படுகிறார்கள். கொல்லப்படுகிறார்கள்.
இந்தியாவெங்கும் மதவாத பாசிச சக்திகள் செய்கிற அதே வேலையைத்தான் தமிழ்நாட்டில் சாதியாதிக்க சக்திகள் செய்கிறார்கள். ஆணவக்கொலைகள் அளவுமீறி போய்க்கொண்டிருக்கின்றன. தடுக்க முடியவில்லை.
சாதி அமைப்பின்மீது கேள்வி எழுப்பிய பெருமாள் முருகன், புலியூர் முருகேசன், துரை குணா போன்ற எழுத்தாளர்கள், கலைஞர்கள் தாக்குதல்களாலும், மிரட்டல்களாலும் பணிய வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இசுலாமிய சமூகம் அச்சத்தில் உறைய வைக்கப்பட்டுள்ளது. 49 பேரை 18 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைத்து வைத்திருப்பதன் மூலம் அச்சமூகம் நிரந்தர அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு அடக்கி வைக்கப்பட்டிருக்கிறது.
ஆக தமிழ்நாடும் பாசிச சக்திகளின் பிடியில்தான் இருக்கிறது.
சாதியாதிக்க அரசியலும், முதலாளிகளின் மூர்க்கமும்
சாதி ஆணவக்கொலைகளை நடத்தி, சாதி வெறியை வளர்த்து, கட்சிகளை உருவாக்கிக்கொண்டு, அதிகாரத்தில் பங்குபெறத் துடிப்பவர்கள் உணர்ச்சிவசப்பட்ட தனிநபர்களோ, சிறு கூட்டமோ அல்ல. அது முழுக்க, முழுக்க சாதிய முதலாளிகள் திட்டமிட்டு செய்யும் செயல்.
தமிழகத்திலும், இந்தியாவிலும் முதலாளிகள் சாதிய முதலாளிகளாகவே இருக்கின்றனர். அவர்களுக்கு நெருக்கடிகள் உருவாகும்போதெல்லாம் தங்கள் சாதி பலத்தை காட்டவே செய்கின்றனர். தங்களது சாதியப் பின்புலத்தோடு பல்வேறு கட்சிகளில் இருந்துகொண்டு லாபி செய்துவந்த முதலாளிகளுக்கிடையில் எப்போதும் போட்டியிருந்ததும், அதை சாதியின் செல்வாக்கால் சமாளித்து வந்ததும் எதார்த்தம்.
ஆனால் ஊழலில் கொழுத்த அரசியல்வாதிகள் தொழில்துறைகளில் இறங்கியதும், அவர்களே புதிய தொழில் வாய்ப்புகளிலும், கனிமவளக் கொள்ளைகளிலும், ரியல் எஸ்டேட் நடவடிக்கைகளிலும் செல்வாக்கு செலுத்துவதும் பழயவகை முதலாளிகளை புதிய நெருக்கடிக்குள் தள்ளியிருக்கிறது. அரசியல்வாதிகள் அரசியல் செல்வாக்கோடு தொழில்வாய்ப்புகளை கைப்பற்றி முதலாளிகளாகும்போது, முதலாளிகள் அரசியல்வாதிகளாகி பலம்காட்ட வேண்டியிருக்கிறது.
இதுவரையிலும் பொதுவான கட்சிகளுக்குள் இருந்துகொண்டு காரியம் சாதித்துவந்த முதலாளிகள் நேரடியாகவும், பின்னால் இருந்தும் தங்களுக்கான சொந்த சாதி கட்சிகளை உருவாக்கிக்கொண்டு போட்டியிடத் தொடங்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு தொழிலிலும் நுழைந்துள்ள உலக மூலதன கூட்டாலும், கனிமவளம், ரியல் எஸ்டேட் முதலான கொள்ளையாலும் கிடைக்கும் அபரிதமான லாபத்தில் பங்கு வேண்டி அவர்கள் மூர்க்கமாக களமிறங்கியிருக்கிறார்கள்.
இப்படி சாதிய முதலாளிகளின் லாபவெறியால் உருவாக்குகிற சாதிய கட்சிகளுக்கு சாதி உணர்வாளர்களாக இருக்கும் உயர் அதிகாரிகள் தங்களது வாரிசுகளின் எதிர்கால நலனிலிருந்து இயல்பான கூட்டாளியாகி துணை செய்கிறார்கள்.
இவர்களோடு அரசுகளிடம் கைக்கூலிப்பெற்று மக்களைப் பிளவுபடுத்துகிற, அடையாள அரசியலை கோட்பாடாக்கி செயல்படுகிற குழுக்கள் திட்டமிட்டு கைகோர்க்கின்றன. இந்த குழுக்கள்தான் சாதிய அமைப்புகளுக்கு அரசியல் பயிற்சி அளிக்கின்றன. ஈழம், அணு உலை எதிர்ப்பு, தமிழ்வழிக் கல்வி போன்ற நடவடிக்கைகளில் மற்றவர்களோடு இணைந்து செயல்பட வழிகாட்டி முற்போக்கு பட்டம் வாங்கி கொடுக்கின்றன.
சாதிய கட்சிகள் தத்துவார்த்தப் படையை உருவாக்குவதுபோல் இன்னொருபுறம் கொலைகாரப் படையையும் உருவாக்குகிறார்கள்; வாடகை கொலையாளிகளை அமர்த்துகிறார்கள். வழக்கு நடத்துகிறார்கள். சம்பந்தபட்டவர்களின் குடும்பத்திற்கு உதவுகிறார்கள். இவ்வாறான வழியில் பெருமளவு பணம் செலவளிக்கிறார்கள்.
இப்படி மதவாத பாசிச கட்சிகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாத சாதிவாத கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. அவைகளில் பல தங்களின் இயல்பான கூட்டாளியான பி.ஜெ.பி-யோடு அணிசேர்ந்திருக்கின்றன என்பது கூடுதல் முக்கியத்துவமுடையதாகும்.
தோற்றத்திற்கு சின்ன சின்ன கட்சிகளாக காட்சியளிக்கும் இவைகள்தான் உண்மையிலேயே பெரிய கட்சி. ஏனென்றால் இக்கட்சிகளின் மறைமுக மேலாளர்களான முதலாளிகளும், அவர்களது பிரதிநிதிகளும் ஆளும்வர்க்க கட்சிகள் அனைத்திலும் நிரம்பியிருக்கிறார்கள். அந்தவகையில் அவர்கள் எப்போதும் அதிகாரத்தில் இருக்கிறார்கள். அதனால்தான் சாதியாதிக்க கட்சிகள் ஆட்சியில் இல்லாதபோதும், ஆணவக்கொலைகளும், வன்கொடுமைகளும் இவ்வளவு தீவிரத்தோடு நடக்கின்றன.
இப்போது சாதியாதிக்கவாத பாசிச சக்திகளும், மதவாத பாசிச சக்திகளும் அவர்களின் சொந்த அடையாள அமைப்பின் கீழ் போட்டியிடுவதோடு, தி.மு.க - அ.இ.அ.தி.மு.க போன்ற காட்சிகள் மூலமும் போட்டியிடுகிறார்கள். சாதி இதை பலரும் வெளிப்படையாக பேசத் தயங்கினாலும் நாம் இந்த ஆபத்தை மறக்கலாகாது.
இன்றைக்கு சமுதாயத்தில் அச்சுறுத்தும் அரசியல் போக்காக இருப்பது இந்த சாதிய மற்றும் மதவாத பாசிச போக்குகள்தான்,
தேர்தலும் - பாசிச அரசியல் நெருக்கடியை எதிர்கொள்வதும்
பாசிச அரசியல் நெருக்கடியை நமக்கிருக்கும் எல்லா வாய்ப்புகளின் வழியிலும்தான் எதிகொள்ள வேண்டும். மக்கள் இக்கொடுமைகளையெல்லாம் சகித்துக்கொள்ள முடியாமல், இதற்கு காரணமான சாதிய – மதவாத முதலாளிகளையும், அவர்களின் சமூக அமைப்பையும் உடைத்து நொறுக்குவதற்கு தயாராக இருந்தால் கேள்வியே இல்லை. ஒரே தீர்வு அடிப்படை மாற்றத்திற்கான புரட்சிதான்.
நிலைமை அப்படியில்லை. எனவே தற்போது சட்டப்பூர்வமான வழிமுறைகள் அனைத்தையும் பயன்படுத்திக்கொண்டுதான் பயணிக்க வேண்டியிருக்கிறது. அப்படியான சட்டபூர்வமான வழிமுறைகளில் தேர்தல் மிக முக்கியமானது.
தேர்தலில் வெற்றி பெறுகிறவர்கள் சட்டம், நீதி, காவல் போன்ற அதிகார நிறுவனங்களை ஓரளவுக்கு தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்த முடியும். அதன் மூலம் சில மாற்றங்களை உருவாக்க முடியும். இதன் அடிப்படையில்தான் முற்போக்கு இயக்கங்களும், மக்களும் அரசியல் கட்சிகளிடம் மது ஒழிப்பிற்கான வாக்குறுதியை கோருகிறார்கள்.
தேர்தல் அதிகாரத்தின் மூலம் மது ஒழிப்பை நிறைவேற்ற முடியும் என்பது எவ்வளவு உண்மையோ அதுபோலவே ஆணவக்கொலைகளையும் கட்டுப்படுத்த முடியும், பாசிச சக்திகளுக்கு கடிவாளமிடவும் முடியும்.
இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு சனநாயக இயக்கங்கள் தங்களின் செயற்பாட்டிற்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள முடியும், மக்களை மாற்றத்திற்கான வழியில் அணிதிரட்ட முடியும்.
தேர்தல் மூலமான அதிகாரத்தில் குறைந்தபட்சம் தமக்கு சாதகமானவர்கள் இருக்க வேண்டும் என்பதால்தான் ஆந்திராவில் ஆயுதப்போராட்டத்தை மேற்கொண்டிருந்த நிலையில்கூட அப்புரட்சிகர கட்சி தெலுங்கு தேச கட்சியை எதிர்கொள்ள தெலுங்கானா ராஷ்ட்ரீய சமீதி கட்சியையும், காங்கிரைசையும் அவ்வப்போது ஆதரித்து தேர்தல் களத்தில் செயல்பட்டது.
இந்தவகையில் தமிழகத்தில் பாசிச சக்திகளுக்கு எதிரான, சனநாயக சக்திகளுக்கு ஆதரவான கட்சி அல்லது கட்சிகள் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதும், அதற்கு நாம் கடமையாற்ற வேண்டும் என்பதும் முக்கியமானதாகும்.
நமது இந்த எதிர்பார்ப்பிற்கு சி.பி.ஐ - சி.பி.ஐ (எம்) தவிர வேறு யார் நம்பிக்கைக்கு உரிய கட்சிகளாக இருக்க முடியும்?
சி.பி.ஐ - சி.பி.ஐ (எம்)-மும், மக்கள் நலக் கூட்டணியும்
பாசிசத்தை எதிர்கொள்வதில் சி.பி.ஐ - சி.பி.ஐ (எம்) எப்போதும் சோடை போனதில்லை. அவைகள் இப்போதும் கல்புர்கிகள் மற்றும் கன்னய குமார்களின் கட்சிகளாகவே இருக்கின்றன. ஆதலால் சாதிய – மதவாத பாசிச போக்குகளை எதிர்கொள்ளும் நாம் இந்த தேர்தலில் கண்டிப்பாக சி.பி.ஐ - சி.பி.ஐ (எம்) கட்சிகளை ஆதரிக்க வேண்டும். சி.பி.ஐ - சி.பி.ஐ (எம்) ஆகிய இடதுசாரி கட்சிகளை ஆதரிப்பதென்பது கட்டாயமாக மக்கள் நலக் கூட்டணியையும், தே.மு.தி.க-வையும் ஆதரிப்பதேயாகும்.
இதுகுறித்து எழுந்துள்ள சில கேள்விகளைப் பார்ப்போம்.
1. கூட்டணிக்கு தலைமை தாங்காத சி.பி.ஐ, சி.பி.ஐ (எம்) கட்சிகளை ஆதரித்து என்ன பயன்?
தமிழகத்தில் பலவீனமாக இருக்கும் இக்கட்சிகள் தலைமையை கோராமல் இருப்பதே சரி.
ஹிட்லரின் ஜெர்மன் பாசிசத்தை எதிர்கொள்ள ஸ்டாலின் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி முதலாளித்துவ நாடுகளோடு அணிசேர்ந்ததையும், முதலாளித்துவ நாடுகளின் தலைமையில் ஒருங்கிணைந்ததையும் நாம் மறுக்க முடியுமா? சீன கம்யூனிஸ்ட் கட்சி நெருக்கடியையொட்டி சீன தேசிய கட்சியான கோமிண்டாங் கட்சியில் இணைந்து செயல்படவில்லையா? கம்யூனிஸ்ட் அல்லாத சன்யாட்சன்-தானே அதற்கு தலைவர்!
இந்தியாவிலும்கூட நல்ல முன்மாதிரிகள் உண்டு. இந்திரா காந்தி காலத்தில் நெருக்கடி நிலைமை உருவானபோது பெரும்பான்மை இடதுசாரிகள் ஒரே களத்தில் ஒருங்கிணைந்தனர். ஜெயபிரகாசு நாராயணன் மாதிரியான முதலாளித்துவ சனநாயக சக்திகள்தான் தலைமை தாங்கினர்.
2. கூட்டணி கட்சிகள் தேர்தலுக்குப்பின் மாற மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
மாறுவதும், மாறாததும் அவர்கள் நலன் அதாவது வர்க்க நலன் சார்ந்தது. அதனால் மக்களின் நம்பிக்கையை இழப்பதும், பலவீனமடைவதும் அவர்கள் பிரச்சினை.
அதற்கு இடதுசாரிகள் பொறுப்பேற்க வேண்டியதில்லை, உத்தரவாதம் அளிக்க வேண்டியதில்லை.
3. அப்படி மாறி விடுவதற்கான வாய்ப்புகள் இருக்குமேயானால் நாம் என் ஆதரிக்க வேண்டும்?
ஒரேயொரு விசயம்தான். ஏற்கனவே மாறிமாறி ஆட்சி செய்கிற, எங்களை எதுவும் செய்ய முடியாது என்கிற மமதை கொண்ட, தங்களது சொந்த நலன் மற்றும் குடும்ப நலனிலிருந்து கொள்ளையை மட்டுமே குறிக்கோளாகக்கொண்ட, சாதி – மத பாசிஸ்டுகளோடு சமரசம் செய்து வளர்த்துவிடுகிற, தமது கட்சிகளுக்குள்ளேயே அத்தகைய சக்திகளை அனுமதிக்கிற மக்கள் விரோத தி.மு.க - அ.இ.அ.தி.மு.க கட்சிகளை தோற்கடிக்க வேண்டும். மக்களுக்கு அவர்களில்லாமல் வேறு வாய்ப்புகள் இருப்பதையும், இன்னும் தெளிவானதை உருவாக்க முடியும் என்பதையும் உணர்த்தி நம்பிக்கையளிக்க வேண்டும்.
அதேபோல சி.பி.ஐ, சி.பி.ஐ (எம்) ஆகிய கட்சிகளும் வி.சி.க மற்றும் ம.தி.மு.க கட்சிகளும் ஆட்சியில் பங்கேற்குமேயானால் தொழிலாளர், தலித் மற்றும் பழங்குடி மக்கள், பெண்கள் ஆகியோருக்கான உரிமைக்குரல் மேலெழும்பும். தமிழ்வழிக் கல்வி உள்ளிட்ட தேசிய கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். இதனடிப்படையில் போராடுகிற முற்போக்கு இயக்கங்களுக்கு செயல்படவும், மக்களை அணிதிரட்டவும் வாய்ப்புகள் உருவாகும்.
ஆகவே, நாட்டில் சனநாயக வாய்ப்பை உருவாக்கவும், மக்களையும், சனநாயக சக்திகளையும் பாதுகாக்கவும், பாசிச சக்திகளை கட்டுப்படுத்தி அவர்களுக்கு எதிரான வீரியமிக்கப் போராட்டங்களை முன்னெடுக்கும் சூழலை உருவாக்கவும் சி.பி.ஐ - சி.பி.ஐ (எம்) ஆகிய இடதுசாரி கட்சிகளையும், தே.மு.தி.க உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணியையும் ஆதரிப்பதுதான் நமக்கு முன் இருக்கிற ஒரே நல்ல வாய்ப்பாகும்.
அனைத்து முற்போக்கு, சனநாயக, புரட்சிகர சக்திகளும் ஆதரிக்க வேண்டும்
தமிழக வரலாற்றில் முற்போக்கு, சனநாயக, புரட்சிகர சக்திகள் ஒருங்கிணைந்து நின்று ஆளும்வர்க்கத்தைப் பயன்படுத்தி சாதித்த பொன்னான வரலாறுகள் உண்டு.
இராஜிவ் கொலையை காரணம்காட்டி 26பேரை தூக்கிலிட இருந்ததை தடுத்து ஒரு உயிரையும் விட்டுக்கொடுக்காமல், இழக்காமல் அனைவரையும் காப்பாற்றியுள்ளோமென்றால் அதற்கு காரணம் சனநாயக சக்திகளும், புரட்சிகர அமைப்புகளும், இடதுசாரி சிந்தனையாளர்களும் இணைந்து நின்றதேயாகும்.
மிசா, தடா, பொடா போன்ற மக்கள்விரோத சட்டங்களையெல்லாம் தூள்தூளாக்கியதும் எல்லோரும் இணைந்துதான்.
சி.பி.ஐ காலம் தொட்டு நக்சல்பாரிகள் இயக்கம் வரைக்கும் பல தோழர்கள் உயிரைப் பாதுகாத்ததில் ஆளும்வர்க்கத்திற்குள் இருந்த சனநாயக சக்திகளை சரியாகப் பயன்படுத்தியவர்கள் சனநாயக சக்திகளும், புரட்சிகர அமைப்புகளும், இடதுசாரி சிந்தனையாளர்களும்.
ஆக நமக்காதரவான கட்சிகள் ஆட்சியில் இல்லாத நிலையில்கூட சனநாயக சக்திகளும், புரட்சிகர அமைப்புகளும், இடதுசாரி சிந்தனையாளர்களும் ஒன்றிணைந்து பல விஷயங்களை சாதிக்க முடிந்திருக்கிறது. இப்போது சாதிய – மதவாத பாசிச எதிர்ப்பு, தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆதரவு, பழங்குடிகள் உரிமைகள் பாதுகாப்பு, மத சிறுபான்மையினர் நலனில் அக்கறை, சனநாயக உரிமை பாதுகாப்பு போன்ற பல விஷயங்களில் நம்மோடு ஒத்து வருகிற சி.பி.ஐ மற்றும் சி.பி.ஐ (எம்) ஆகிய கட்சிகள் அதிகாரத்தில் பங்கெடுக்க வாய்ப்பளித்தால் நாம் அவசியமில்லாத இழப்புகளைத் தவிர்க்கலாம் என்பதே முக்கியமாகும்.
எனவே, முற்போக்காளர்கள், சனநாயக சக்திகள், புரட்சிகர சக்திகள் அனவைரும் சி.பி.ஐ - சி.பி.ஐ (எம்) ஆகிய இடதுசாரி கட்சிகளையும், தே.மு.தி.க உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணியையும் ஆதரிக்க வேண்டும்.
புரட்சிகர இயக்கங்களுக்கு...
மதவாத சக்திகளும், சாதியாதிக்க சக்திகளும் தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதுமுள்ள மக்கள் மற்றும் சநாயக சக்திகளின் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக மாறியிருப்பதை புரட்சிகர இயக்கங்களுக்கு நாம் உணர்த்த வேண்டியதில்லை. அவர்கள் தூண்டறிக்கைகள், வெளியீடுகள், நிகழ்ச்சிகள் என்று பல்வேறு வடிவங்களில் இதுகுறித்து பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆனால், புரட்சிகர இயக்கங்கள் பேசிக்கொண்டிருப்பவர்கள் மட்டுமில்லையே! எந்த ஒரு புரட்சிகர அமைப்பும் மக்கள்விரோத சக்திகளை ஒருசில துப்பாக்கிகளால் துடைத்தெறிந்து விடுவோம் என வீராப்பு பேசுவதில்லை.
மக்கள்விரோதிகளை சிறு குழுக்கள் மூலம் அழித்தொழித்து விட்டால் மக்களை எளிதாகத் திரட்டி புரட்சியை விரைவுப்படுத்தலாம் என்கிற “தனிநபர் அழித்தொழிப்பு” தவறென ஏற்கனவே நிரூபிக்கப்பட்டாயிற்று. அப்புறம் இன்றைக்கு நிலவுகிற சாதிய – மதவாத பாசிசப் போக்குகள் என்பது தனிநபர் சிக்கலுமல்ல. அது அமைப்பாக்கப்பட்ட அரசியல் பயங்கரம்.
இதை எதிர்கொள்வதற்கு சாதிய – மதவாத பாசிசப் போக்குகளுக்கு எதிரான அனைத்து சக்திகளிடமும், மக்களிடமும் பிரச்சாரம் செய்து அணிதிரட்டும் பணிகள் இதற்கு முன்பே புரட்சிகர இயக்கங்கள் தொடங்கி தொடர்ந்திருக்க வேண்டுமே! பாசிச சக்திகள் வளர்ந்து, மத்தியில் ஆட்சியைப்பிடித்து, அதிகாரத்தோடு சிறுபான்மையினர், தலித், பெண்கள் மற்றும் அறிவுத்துறையினர் மீது தாக்குதல் நடத்திவரும் சூழலில், ‘நாட்டு மக்களே பாசிசத்திற்கு எதிராக ஒன்றுபட்டு அணிதிரளுங்கள்!’ என்று போராட்டங்களைத் தொடர்ந்திருக்க வேண்டுமே! எதிரிக்கு எதிராக ஒன்றுபட்டு நின்று மக்களைப் பாதுகாக்கும் நடைமுறையை முதன்மையாகவும், சித்தாந்தப் போராட்டத்தை அதற்கு உட்பட்டதாகவும் முன்னெடுத்திருக்க வேண்டுமே!.
இப்படியான நடைமுறைகள் இருந்திருந்தால் நமக்கிந்த சிக்கலே எழுந்திருக்காது. “நாட்டு மக்களே ஒன்றுபடுங்கள்” என சொல்லிவிட்டு இயக்கங்கள் தனித்திருக்காது. பிரதான எதிரிக்கு எதிராக நண்பர்களை உருவாக்கிக்கொள்ளும் அணுகுமுறையை இந்த தேர்தலிலும் இயக்கங்கள் கையாண்டிருக்கும். பாசிச சக்திகளுக்கு எதிரானவர்களை நிபந்தனையோடு ஆதரித்திருக்கும்.
ஆக மக்கள் நலக் கூட்டணியை நிபந்தனையோடு ஆதரிப்பது நடந்திருக்கும். தேர்தலில் பங்கெடுக்காவிட்டாலும் மகளுக்கு பயனுள்ள வாய்ப்புகள் கூடியிருக்கும்.
- திருப்பூர் குணா