ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தின் தீர்மானம்

சாதியை உலக மனித உரிமைச் சட்டகத்திற்குள் கொண்டுவரும் ஒரு தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றியம் நிறைவேற்றியுள்ளது. இது இங்கிலாந்தில் உள்ள உள்ள சாதி எதிர்ப்பு இயக்கவாதிகளுக்கு ஒரு பெரும் வெற்றியாகும். இது பற்றி பார்வதி மேனன் எழுதியுள்ள செய்திக்கட்டுரை ஒன்றை பிரன்ட்லைன் (டிசம்பர் 13, 2013) இதழ் வெளியிட்டுள்ளது. அதன் தமிழாக்கம் இங்கு தரப்படுகிறது.

மனித உரிமையை இழிவுபடுத்தும் சாதி அடிப்படையிலான பாகுபாட்டையும் தப்பெண்ணத்தையும் குற்றமாக்கி, சர்வதேச நிகழ்ச்சி நிரலில் உறுதியாகக் கொண்டுவரும் வகையில், கடுமையான சொற்கள் அடங்கிய ஒரு தீர்மானத்தை ஐரோப்பியப் பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. அதே அளவுக்கு முக்கியத்துவத்துடன், ஐரோப்பாவில் தெற்காசிய குடியேற்ற அனுபவத்தில் நீண்டகாலமாக மறைக்கப்பட்டும் சட்டபூர்வ, நிறுவன ஆய்வின் பொதுவெளிக்குள் வராமலும் இருக்கும் இந்தத் தீய சாதிப்பாகுப்பாட்டை வெளிச்சத்திற்குக் கொண்டுவர இந்தத் தீர்மானம் உதவியுள்ளது.

ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர்களின் அறுதிப் பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் பெற்றுள்ளது. அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக நடந்த விவாதத்தில், அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் இந்த சாதிப்பாகுபாட்டு நடைமுறையைக் கண்டித்ததோடு, அதை ஒழிப்பதற்கான குறிப்பான ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.
 
அந்தத் தீர்மானத்தின்படி, சாதியானது, “சமூகத்திலும், அல்லது சமூகம் மற்றும் மத அடிப்படையிலும் வேர்கொண்டுள்ள பாகுபாட்டின் ஒரு தனித்துவமான வடிவமாகும், பாகுபாட்டின் அனைத்து வடிவங்களுக்கும் எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் போராட்ட முயற்சிகளில், அது பாகுப்பாட்டுக்கான பிற காரணங்கள், அதாவது இனக்குழு, இனம், மரபுவழி, மதம், பாலினம் மற்றும் பாலியல், ஆகிவற்றுடன் சேர்த்து விவாதிக்கப்பட வேண்டும்.” சாதி பீடித்துள்ள நாடுகளின் அரசாங்கங்களுடன் “உயர்மட்ட அளவில்” இந்தப் பிரச்சனையை எழுப்பும் வேளையில், அதை சட்டத்திலும் மனித உரிமைக் கொள்கைகளிலும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அந்தத் தீர்மானம் ஐரோப்பிய ஒன்றியத்தைக் கேட்டுக்கொள்கிறது.

ஐக்கிய அரசியத்தில் (United Kingdom) உள்ள சாதி எதிர்ப்பு இயக்கத்தினரிடம் இந்தத் தீர்மானம் ஒரு உடன்பாடான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் வசிக்கும் ஆசிய மக்களிடையே சாதி வழக்கங்களும் சாதி அடிப்படையிலான பாகுபாடும் பரவலாக மேலோங்கியுள்ளன.

இதில் வியப்பொன்றுமில்லை. இப்போது, பிரிட்டிஷ் ஆசியர்கள் இங்கிலாந்தின் (ஐக்கிய அரசியத்தின்) மக்கள் தொகையில் 7.5 விழுக்காடாக உள்ளனர். 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி 6.323 கோடி மொத்த மக்கள் தொகையில் 30,7 லட்சம் பேர், இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், வங்காளதேசத்தினர் ஆகியோராவர். இவர்களிடையே சாதி நடைமுறை மிகவும் மேலோங்கியுள்ளது.

ஐக்கிய அரசியத்தில், சட்டத்தின் ஆட்சியும் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் எனபதும் நிறுவனமயமாகியுள்ள உரிமைகளாக இருக்கும் ஒரு பெரிய சமூகப் பொருளாதாரச் சூழலுக்குள், சாதி எந்த எதிர்ப்பும் இன்றிப் பாதுகாப்புடன் செயல்படுகிறது. அது வழக்கமாக நிறுவனக் கண்காணிப்பு எட்டாத, உள்ளார்ந்த கலாச்சார வெளிகளில் இயங்குகிறது. பன்மைக் கலாச்சார சமூகமாக ஆகியுள்ள ஐக்கிய அரசியத்தில் அடையாள அரசியலின் வளர்ச்சியானது, குடியேற்றக் குழுக்களிடையே பாரம்பரியப் பிணைப்புக்களின், பழக்கவழக்கங்களின் பிடியைப் பலப்படுத்தியுள்ளது. இவை சொந்த விடயங்கள் என்று கூறப்படும் – வீடு, கூட்டுக்குடும்பம், வழிபாட்டு இடங்கள் – எல்லாவகையான “தலையீட்டையும்” பயன்படுத்தி, சமூகத் தலைவர்களால் மிகவும் தீவிரமாகப் பாதுகாக்கப்படுகின்றன. இங்குதான் - சாதி உட்பட - மிகமோசமான பாகுபாடுள்ள பாரம்பரிய நடைமுறைகள் விரைவாக வளர்ச்சிபெறுகின்றன.

 முழுவதும் மதவாத நடைமுறை

“1950 களிலும் 1960 களிலும் துணைக்கண்டத்திலிருந்து வந்த முதன்மையான குடியேற்றக் குழுக்களிடையே பாகுபாட்டு நடைமுறைகள் மிகவும் மேலோங்கியிருக்கின்றன். பாரம்பரிய இந்துக்கள்தாம் சாதியத்தையும் குலத்தையும் கொண்டுவந்தார்கள்” என்று நாட்டிங்காமின் பாரிஸ்டர் உஷா சூத் பிரன்ட்லைன் இதழிடம் தெரிவித்துள்ளார். சாதி நடைமுறை இந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் ஆகியோரிடம் நிலவுவதாக அவர் கூறுகிறார். “சீக்கிய சமூகத்திற்குள் பிற சாதியினர் மற்றும் குலத்தினரால் பத்ராக்கள் “கீழ் சாதியாக” பார்க்கப்படுகிறார்கள்; முஸ்லிம்களிடையே பாகிஸ்தானிலிருந்து வந்த மிர்புரிகள் அவ்வாறு பார்ர்ககப்படுகிறார்கள்” என்று மனித உரிமைகள் மீறல் வழக்குகளில் சிறப்புக்கவனம் செலுத்தும் உஷா கூறுகிறார்.

“ஏதிலிகளின் பல வழக்குகளை நான் நடத்தியிருக்கிறேன். எடுத்துக்காட்டாக, பாகிஸ்தானின் முஸ்லிம் இணையர்களின் வழக்கு ஒன்றில் நான் போராடிக் கொண்டிருக்கிறேன். அவர்கள் இங்கு சந்தித்துக் காதலில் இணைந்தார்கள், திரும்பிச் செல்ல விரும்பவில்லை, ஏனென்றால் சாதி மாறித் திருமணம் செய்துகொண்டால் அங்கு கொல்லப்படுவார்கள்” என்று கூறும் உஷா அவர்கள் குடியேற்ற அந்தஸ்து கோரி மனுச் செய்ய உதவியுள்ளார். இன்னும் ஒரு வழக்கில் தென்னிந்தியாவிலிருந்து ஒரு “மேல் – சாதிப் பெண்ணும் தலித் பையனும், எப்படியோ ஒன்றாகச் சேர்ந்து, பணம் சேர்த்துகொண்டு, குடும்பத்தின் கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு, ஐக்கிய அரசியம் வந்துவிட்டார்கள். ஐக்கிய அரசியத்தின் எல்லைப் பாதுகாப்பு முகாமையால் “திரும்ப அனுப்பிப் பாதுகாப்பாக வாழச்செய்ய இயலாது” என்ற பிரிவைப் பயன்படுத்தி அவர்களுக்கு அடைக்கலம் பெற்றுத் தந்தோம். இந்த வழக்கில் அந்த இணையர்கள் இந்தியாவின் எந்தப்பகுதிக்கும் சென்று பாதுகாப்பாக வாழ முடியாது என்ற நிலையைக் கருதி அவர்களுக்கு அடைக்கலம கொடுக்க முடிவுசெய்யப்பட்டது.

“இந்தப் பிரச்சனையில் கவனம் செலுத்துவதால் ஐரோப்பியத் தீர்மானம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வட்டார இதழ்களில் சாதி அடிப்படையிலான மணமக்கள் தேவை விளம்பரங்களைப் பாருங்கள். ஏராளமான மக்கள் அதைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது” என்று கூறினார் உஷா.

இந்து அமைப்புக்களிடமிருந்து எதிர்ப்பு

சமத்துவ சட்டம் 2010 இன் கீழ் சாதிப் பாகுபாட்டைக் கொண்டுவர ஐக்கிய அரசியத்தில் சாதி எதிர்ப்பு இயக்கத்தினர் போராட்டம் நடத்துகிறார்கள். அதைத் தடுப்பதற்கு, இந்து அமைப்புக்களின் கூட்டணி அமைப்பின் கீழ் இணைந்துள்ள இந்துக் குழுக்கள் இதை எதிர்க்கின்றன.

சமத்துவ சட்டத்தைத் திருத்தும் ஒட்டுமொத்த செயல்முறையையும் அரசாங்கம் ஒத்திவைக்கும் அளவுக்கு இந்த கூட்டமைப்பின் செல்வாக்கு பலமாக இருக்கிறது. இந்த ஆண்டு ஏப்ரலில் பாராளுமன்றம் சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்த அதேநேரத்தில், இந்தத் திருத்தத்திற்கான ஆலோசனைச் செயல்முறைக்கு குறைந்தது 2015 கோடைக்காலம் வரை ஆகும் என்று, ஜூலை 29 அன்று, அரசாங்கம் திடீரென்று அறிவித்துள்ளது.

இப்போது, பாலியல், வயது, இனம், பாலின மாற்றம், பாலியல் ஒருங்கிணை, மதம் அல்லது நம்பிக்கை போன்ற சில “பாதுகாக்கப்பட்ட பண்பியல்புகளை” சமத்துவச் சட்டம் அங்கீகரிக்கிறது. சாதி எதிர்ப்பு இயக்கத்தினர் சாதியை இன அடிப்படையிலான ஓர் அம்சமாகக் கொண்டுவர விரும்புகின்றனர். உடனடியாக ஒட்டுமொத்த முயற்சிக்கும் முட்டுக்கட்டையிட இந்து கூட்டமைப்பினர் இதைப் பிடித்துக்கொண்டுள்ளனர். தேசிய பொருளாதார மற்றும் சமூக ஆய்வு நிறுவனம் 2010 இல் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் சமத்துவச் சட்டத திருத்தம் கொண்டுவரப்படுகிறது, அந்த ஆய்வில் குறைபாடுள்ளது என்று அவர்கள் வாதிட்டனர்.

மே மாதத்திலேயே, பெண்கள் மற்றும் சமத்துவத்திற்கான அமைச்சர் ஹெலன் கிரான்ட்டிடம் இந்து அமைப்புக்களின் கூட்டணி வாக்குறுதி பெற்றுள்ளது. “எங்கள் சந்திப்பு ஏமாற்றமளித்தது என்பதை நான் மறைக்கவில்லை – இப்போதும் மறைக்கவில்லை – பிரபுக்கள் சபையில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 2010 சமத்துவச் சட்டத்தில் சாதியை இனப்பாகுபாட்டின் ஒரு அம்சமாக சேர்த்துக் கொள்ள முன்வரச செய்வதற்கு அரசாங்கம் ஒப்புகொள்ளவேண்டியது அவசியமாக இருந்தது” என்று ஒரு கடிதத்தில் அவர் கவுரி தாசு என்பவருக்கு எழுதினர்.

ஜூலையில், தொடர்புடையவர்களிடம் “ஆலோசனை” கேட்டுப்பெறுவதற்கான ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகுதான் சட்டத்திருத்தம் கருத்தில் கொள்ளப்படும், அது 2015 கோடைக் காலம் வரை நீடிக்கும் என்று ஐக்கிய அரசிய அரசாங்கம் அறிவித்தது. செல்வாக்குமிக்க இந்து சமூகத் தலைவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக மேற்கொள்ளபட்ட இந்த நீண்டகால ஒத்திவைப்பு ஒரு பெரிய பின்னடைவு என்று முக்கியமான தலித் மற்றும் சாதி எதிர்ப்பு இயக்கங்கள் கருதுகின்றன. இது சாதிப்பாகுபாட்டால் தற்போதும் எதிர்காலத்திலும் பாதிக்கப்படுபவர்களுக்கு நீதியை மறுப்பதாகும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

சாதி என்பது இனமல்ல என்பதால், சமத்துவ சட்டத்தில் கொண்டுவரப்பட இருக்கும் திருத்தத்தில் இனத்தின் வரையறைக்குள் சாதியைக் கொண்டுவர முடியாது என்று இந்து அமைப்புக்கள் கூட்டணி வாதிட்டது. வேலைவாய்ப்பு, கல்வி, பொருட்கள் மற்றும் சேவை வழங்குதல் ஆகியவற்றில் பாகுபாடுகளுக்கு மட்டுமே சமத்துவ சட்டம் பொருந்தும், வேறுசொற்களில் சொல்வதானால், சாதி எதிர் இனம் விவாதம் பொருத்தமற்றது, ஏனென்றால் சாதியின் சமூக அம்சம் சமத்துவ சட்டத்தின் வரம்புக்குள் வராது என்று அது வாதிட்டது.

ஐக்கிய நாடுகள் அவையின் நிலை

சாதி ஒரு பாகுபாட்டு வடிவமாக சட்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற வாதத்திற்கு கணிசமான நியாய வலுவைச் சேர்க்கும் வகையில், இம்மாதம் பிரபுக்கள் சபையில் சாதி பாகுபாட்டு எதிர்ப்புப் கூட்டணி ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்தில், சாதி அடிப்படையிலான பாகுபாடு உடபட, பாகுபாடுகளை விசாரிக்கும் சட்டபூர்வக் கடப்பாடு உறுப்பினர்களுக்கு உள்ளது என்று சர்வதேச மனித உரிமைகள் உடன்படிக்கைகளில் விதிக்கபட்டுள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அவை உயர் ஆணையர் நவி பிள்ளை வாதிட்டுள்ளார்.

“பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் ஒரு உண்மையாக இருக்கும் சாதி அடிப்படையிலான அறியாமை, வெறுப்பு, அச்சம், துன்பம், ஆகியவையும் ஐக்கிய அரசியத்திலும் பிற நாடுகளிலும், இன்றைய உலகில் விரவியிருக்கும் குடியேற்ற சமூகங்களிலும் மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.

176 அரசுகள் ஒப்புதல் தெரிவித்துள்ள, இனப்பாகுபாட்டை ஒழிப்பதற்கான ஐக்கியநாடுகள் அவையின் குழு, “ஐக்கிய அரசியத்தின் சட்டத்தில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டிற்கு குறிப்பான தடையைச் சேர்ப்பதற்கான கோரிக்கையை” வைத்துள்ளது என்று நவி பிள்ளை கூறியுள்ளார்.

உலகளாவிய உரிமைகள் சட்டகத்திற்குள் இந்தப் பிரச்னையை முன்வைத்ததன் மூலம் ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் தீர்மானமும் நவி பிள்ளையின் உரையும் ஒன்றாகச் சேர்ந்து, சாதிப் பாகுபாட்டு எதிர்ப்பு இயக்கத்திற்கு புதிய வலுவைச் சேர்த்துள்ளன

“இந்தச் சட்டத்திருத்தத்தைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள உறுதிப்பாட்டை வரவேற்கும் அதேவேளையில், கால அட்டவணையில் கொண்டுவந்துள்ள மாற்றம் குறித்துத் தாங்கள் ஏமாற்றமடைந்துள்ளதாகவும், அது அளவுக்கு மிகுந்த காலநீட்டிப்பும் அதிகாரவர்க்கத் தன்மை கொண்டதும் ஆகும்” என்று சாதிப் பாகுபாட்டு எதிர்ப்புக் கூட்டணியின் செய்தி அறிவிப்பாளர் பிரன்ட்லைன் இதழிடம் கூறினார்.

இது ஒரு சிக்கலான பிரச்சனை, எனவே முழுமையாக விவாதிக்கப்பட வேண்டும் என்று இந்து அமைப்புக்களின் கூட்டணி முன்வைத்த வாதத்திற்கு அந்தச செய்தி அறிவிப்பாளர் கூறியதாவது: “சாதி பற்றி நன்கு தெரியாதவர்களுக்கு வேண்டுமானால் அது சிக்கலான பிரச்சனையாகத் தோன்றலாம் – ஆனால் சாதி அடிப்படையிலான பாகுபாடு சிக்கலானதல்ல. சமத்துவ சட்டம் 2010 இல் நிர்ணயிக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட பண்பியல்கள் கொண்ட எந்த ஒரு நபருக்கும் எதிரான எந்த ஒரு பாகுபாட்டையும் போலவே தீங்கு விளைவிப்பது ஆகும்.”

சாதி எதிர்ப்புச் சட்டத்திற்கு வழிவகுக்கும் அரசாங்க ஆலோசனையின் ஒரு பகுதியாக சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் ஆணையம் ஏற்பட்டு செய்துள்ள, ஐக்கிய அரசியத்தில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டின் நிகழ்வு மற்றும் வடிவங்கள் பற்றிய ஒரு ஆய்வு நடப்பில் உள்ளது. இந்து அமைப்புக்களின் கூட்டணி அந்தக் குழுவின் உள்ளடக்கம் மற்றும் பணி குறித்து கேள்வி எழுப்பி ஒரு பத்திரிகை செய்தியை வெளியிட்டுள்ளது.

சமத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்கான ஆணையத்தின் தலைமை நிர்வாகி மார்க் ஹம்மான்ட், அந்தக் குழு செய்துள்ள பணியை ஆதரித்துக் கூறியதாவது: “நாங்கள் நியமித்துள்ள ஆய்வுக் குழு அவர்களுடைய முன்மொழிதலின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டதாகும், தனிப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் கருத்துகள் அடிபபடையில் நியமிக்கப்படவில்லை, திட்ட விவரங்கள் ஆணையத்தின் வலைத்தளத்தில் வெளியிடப்ட்டுள்ளன.” “அந்தக் குழு அந்தப் பணியை பக்கச் சார்பின்றி அணுகும்” என்றும் “அதைத் தவிர வேறு ஒன்றையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஐக்கிய அரசியத்தில் – 2,00,000 – 4,00,000 வரை – வசிக்கும் தலித் மக்களைப் பொறுத்தவரை, இந்த ஆய்வின் முடிவும், பாராளுமன்றத்தின் பதிலளிப்பும் அந்த நாட்டில் அவர்களுடைய சமூகப் பொருளாதார நிலைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

Pin It