புதிய வருடம் பிறப்பதற்கு முன்பு, டிசம்பர் கடைசி வாரம் பத்திரிக்கை, தொலைக்காட்சி ஊடகங்கள் அனைத்தும் அந்த வருடத்தின் நிகழ்வுகளைத் தொகுத்து வெளியிடும். சில நிறுவனங்கள் சிறந்த செயல் புரிந்தவர்களுக்கு விருது அளிக்கும்.

ஆனந்த விகடன் தமிழில் முன்னணியில் இருக்கின்ற வெகுசன வார இதழ் என்பதை நாம் அறிவோம். ஆனந்த விகடன் பத்திரிக்கையும் ஆண்டு இறுதியில் விருது பட்டியல், வருடத்தின் முக்கிய பிரச்சனைகள் குறித்த பட்டியல் வெளியிடும். தமிழ்ச் சூழலில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும் உண்மையான கருத்துகளை இதுவரை வெளியிட்டு வந்தது. ஆனால் இந்த 2013ம் ஆண்டுக்கான பட்டியல் இப்பொழுது வெளிவந்து உள்ளது. இதைப் பார்க்கும் போது ஆனந்த விகடனின் பத்திரிக்கை தர்மம் மீது சந்தேகம் எழும்புகிறது.

மாணவர் போராட்டம்:-

பாலகன் பாலச்சந்திரன் மரணம் அடைந்த புகைப்படங்கள் சேனல் 4 ஆவணப்படத்தில் வெளியானது. இதைப் பார்த்த மாணவர்கள் கொதித்து எழுந்தனர். 2013ம் மார்ச் மாதம் 8ம் நாள் இலயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் சாகும்வரை உண்ணாநிலைப்  போராட்டத்தைத் தொடங்கினார். அந்த போராட்டத் தீ தமிழகம் எங்கும் பரவியது. மாணவர்கள் வீதியில் இறங்கினார்கள். தமிழக அரசியல் மட்டுமல்ல உலகளவில் மிகப் பெரிய கருத்தியல் மாற்றத்தைச் செய்தது இந்த மாணவப் போராட்டம். தமிழகத்தில் பல அரசியல் மாற்றங்கள் இதனால் நிகழ்ந்தது. தமிழ் அறிவுஜீவிகள் வட்டத்தில் மாணவர் போராட்டம் என்பது ஆரோக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்பட்டது (EPWவில் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் மாணவர் போராட்டத்தை எழுதும் போது கூட “Tamil Nadu student upsurge: A Tamil Spring தமிழ்நாட்டு மாணவர்களின் எழுச்சி: தமிழின் புது மலர்ச்சி” என்று எழுதினார்). ஆனால் பார்ப்பனியத்தை தூக்கிப் பிடிக்கும் சுப்ரமணிய சுவாமி போன்றவர்களுக்கு அது மிகப் பெரிய பிரச்சனையாக தோன்றியது என்பதை அன்று செய்திகளை கவனித்த அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்று ஆனந்த விகடனின் டாப் 10 பிரச்சனைகளில் மாணவப் போராட்டம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு போராட்டத்தை வெகுசனப் பத்திரிக்கை பிரச்சனையாக வகைப்படுத்தும் போது, போராட்டம் குறித்து எதிர்மறையான கருத்துக்களை உருவாக்குகிறது. மாணவப் போராட்டத்துடன் வகைப்படுத்தப்பட்டுள்ள மற்ற பிரச்சனைகள் அனைத்தும் சமூகத்திலிருந்து களையப்பட வேண்டிய பிரச்சனைகள். இதற்கு மத்தியில் மாணவப் போராட்டமும் இடம் பெற்று உள்ளது. மின்வெட்டுப் பிரச்சனையும், சாதிய வன்முறையும் போன்றது தான் மாணவர் போராட்டமும் என ஆனந்த விகடன் கூறுகிறது.

மாணவப் போராட்டம் குறித்து மதிப்பிற்குரிய எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அவர்கள் கட்டுரை எழுதியுள்ளார்.

மாணவப் போராட்டம் பற்றிய தெளிவான தகவல்கள் இக்கட்டுரையில் இல்லை மற்றும் வரலாற்று பிழைகள் உள்ளது. கட்டுரையின் தொடக்கத்தில் பிளாசி போரை பற்றிக் கூறிள்ளார். 1757யில் பிளாசிப் போர் நடந்தது. ஆனால் 1847 என தவறாக உள்ளது. இது அச்சுப்பிழையா இல்லை; உண்மையில் பிழையாக எழுதப்பட்டதா? என்று கூறினால் நலமாக இருக்கும். இதில் மாணவப் போராட்டத்தின் வெற்றியாக ஐயா மூன்று கருத்துக்களை முன்வைக்கிறார். அவை அவரின் தனிப்பட்ட கருத்துகளாக உள்ளன‌.

//முதல் கருத்து(வெற்றி): எந்த அரசியல் கட்சிகளுக்கும் கட்டுப்படாமல், அதே நேரம் அனைத்துக் கட்சிகளையும் அந்நியப்படுத்தி மேலெழுந்தார்கள் மாணவர்கள்.

இரண்டாம் கருத்து(வெற்றி): மாணவர்களின் எழுச்சி தன்னை தேர்தலில் வேரோடு பிடுங்கி எறிந்து விடுமோ என்ற நடுக்கத்தில் நடுவண் அரசின் (காங்கிரஸ்) கூட்டணியில் இருந்து வேகவேகமாக விலகிவந்தது தி.மு.க.

மூன்றாம் கருத்து(வெற்றி):தமிழீழத்திக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்; இனப்படுகொலையாளர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி பன்னாட்டு விசாரணை நடத்திட ஜ.நா. முன்வர வேண்டும் எனும் சிறப்பான தீர்மான‌ங்களை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றச் செய்தது.//

கடைசி இரண்டு கருத்துக்கள் போராட்டத்தின் விளைவாக நடந்தது; அவை வெற்றிகள் அல்ல. இன்னும் தெளிவாகஜ் கூறினால் உண்மையான வெற்றியை நோக்கி மாணவர்கள் நகரக் கூடாது என்பதற்காக நிகழ்த்தப்பட்ட நிகழ்வுகள்.

முதல் கருத்து உண்மை தான். ஆனால் இந்தப் போராட்டம் ஏன் கட்சிகளுக்குப் பின்னால் இல்லை என்றால் இன்றைய அரசியல் சூழலில் எந்த அரசியல் கட்சியும் மாணவர்கள் மத்தியிலோ அல்லது மாணவர்களின் கருத்தியலிலோ இடம்பெறவில்லை. எனவே தான் அரசியல் கட்சிகள் கீழ் இந்தப் போரட்டங்கள் வரவில்லை. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது திராவிட இயக்கத்தின் கருத்தியல் மாணவர் மத்தியில் இருந்தது. எனவே தான் பின்னாளில் தி.மு.க. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கைப்பற்றியது (ஆனால் ஜயா பா.செயப்பிரகாசம் போன்ற சிலர் இந்த சூழ்ச்சியில் சிக்காமால் கடைசி வரை தெளிவாகப் போராடினர்). இன்று பல கட்சிகளுக்கு கருத்தியல் தளமே இல்லை. எனவே தான் மாணவர் போராட்டம் கட்சிகளின் ஆளுமையின் கீழ் வரவில்லை. இது இன்றைய அரசியல் சூழ்நிலை. இதை வெற்றியாகக் கருத முடியாது. மாணவர் போராட்டத்திற்கு ஏற்பட்ட நன்மையாகத் தான் கருத முடியும்.

இந்தப் போராட்டத்தின் வெற்றி என்பது அடுத்தகட்ட போராட்டத்திற்கான தளத்தை அமைப்பது தான். ஏனெனில் இது தமிழீழ‌த்திற்கான ஒரு தொடர் போராட்டம். பகத்சிங் கூறுவது போல் தான் "இந்தப் போராட்டம் என்னோடு தொடங்கவும் இல்லை, என்னோடு முடியப் போவதும் இல்லை”. அந்த கோணத்தில் தான் இந்தப் போராட்டத்தின் வெற்றியைப் பார்க்கிறோம். மாணவப் போராட்டத்தால் தேசிய ஊடகங்க‌ளில் ஒரு சிறு விவாதத்தை ஏற்படுத்த முடிந்தது. ஆனால் இதுவும் ஒரு முழுமையான வெற்றியல்ல.

மிகவும் முக்கியமான நிகழ்வு என்பது அமெரிக்காவின் முகத்திரை கிழித்து எறியப்பட்டது தான். ஈழத் தமிழர்களுக்கு தீர்வாக சொல்லப்பட்ட அமெரிக்கத் தீர்மான‌ம் குறித்து உண்மை வெளிகொணரப்பட்டது. அமெரிக்கத் தீர்மான‌ம் என்பது அயோக்கியத் தீர்மான‌ம் என்பதை மாணவர்களின் மூலம் இந்த உலகம் தெரிந்து கொண்டது. இதனால் அமெரிக்கத் தீர்மானம் தாண்டி ஈழம் குறித்துப் பேசவும், போராடவும் வேண்டும் என்ற கட்டாய நிலை உருவாக்கப்பட்டது. இதைத்தான் தற்கால வெற்றியாகக் கருதுகிறோம்.

இக்கட்டுரையில் விடுபட்ட ஒரு முக்கியமான செய்தி “மாணவர்கள் தீர்மான‌த்தை எதிர்த்தார்கள் என்பதும், அந்தத் தீர்மான‌த்தை எரித்தனர் என்பதும்”. எதற்காக இந்தப் போராட்டம் நடத்தப்பட்டதோ அந்த கருத்தே இல்லை. இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு செய்தி, பக்கம் 38யில் டாப் 50 சம்பவங்களில் பாலச்சந்திரனின் மரணம் இடம் பெற்று உள்ளது. அதில் அமெரிக்கத் தீர்மான‌த்தை ஆதரித்து மாணவப் போராட்டம் நிகழ்ந்தாக எழுதப்பட்டுள்ளது. இது கட்டாயமாக அச்சுப்பிழை இல்லை; கருத்துப்பிழை.

முன்பக்கத்தில் தவறான தகவல் (அமெரிக்கத் தீர்மான‌த்தை மாணவர்கள் ஆதரித்தாக) மாணவப் போராட்டம் குறித்த கட்டுரையில் அமெரிக்கத் தீர்மான‌ம் குறித்து தகவலே இல்லை. போராட்டத்தின் உண்மையான நிகழ்ச்சியைக் கூறாமல், வேறு கருத்துகளை கூறுவது என்பது திட்டமிட்டு கோரிக்கையை மழுங்கடிக்கும் செயல்.

ஆண்டின் இறுதி இதழில் தவறான செய்தி வருகின்றது என்றால், அது வரலாற்றுப்பிழை. ஆனந்த விகடன் வரலாற்றுப்பிழை செய்துள்ளது. தி.மு.க. ஊடகங்கள் தான் அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரித்து மாணவப் போராட்டம் நடந்ததாக பொய்ப் பரப்புரை செய்தன‌. இன்று ஆனந்த விகடனும் இதைச் செய்கிறது. இதற்கான விளக்கத்தை ஆனந்த விகடன் தருமா?

- கு.சிபி லெட்சுமணன், ஒருங்கிணைப்பாளர், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம்

Pin It