ஐஸ்லாந்து நாட்டில், Blaer Eidsdottir என்ற பெண், தனது தாயார் தனக்குச் சூட்டிய பெயரை, தான் தொடர்ந்து வைத்துக் கொள்வதற்கு ஒப்புதல் கேட்டு, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து உள்ளார். ஐஸ்லாந்திக் மொழியிலான இவரது பெயரின் பொருள் light breeze.

ஐஸ்லாந்து நாட்டில், 1712 ஆண் பெயர்; 1853 பெண் பெயர்களுக்கு மட்டுமே அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. இவை, ஐஸ்லாந்து மொழியின் இலக்கணப்படியும், ஒலிக்க வேண்டிய முறைப்படியும் எழுதப்பட்டு உள்ளன.

குழந்தையாக இருந்த பிளேயருக்கு ஞானஸ்நானம் செய்வித்த தேவாலயத்தின் அருட்தந்தை, அரசு பெயர்ப் பட்டியலைச் சரிபார்க்காமல், அந்தப் பெயரைச் சூட்ட ஒப்புதல் அளித்து விட்டார். பின்னர் சரிபார்க்கையில் தம் தவறை உணர்ந்து, அந்தப் பெயர், அரசுப் பட்டியலில் இல்லை என்பதை, குழந்தையின் தாய்க்குத் தெரிவித்து உள்ளார். எனவே, பெயரை, பெயர்ப் பதிவு ஆணையம் ஏற்க மறுத்து விட்டது. (Times of India, Mumbai 4.1.2013).

ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளிலும் இத்தகைய நடைமுறை உள்ளது. அரசாங்கம் ஒப்புதல் அளித்து உள்ள பெயர்களை மட்டுமே, குழந்தைகளுக்குச் சூட்ட முடியும். அப்பெயர்கள், அந்த நாட்டின் இலக்கிய, இலக்கண மரபுகளுக்கு ஏற்ப அமைதல் வேண்டும். பெயரின் முதற்பகுதி, பால் இனத்தைக் குறிக்க வேண்டும்; குழந்தையின் மன நலத்தைப் பாதிக்கின்ற, எதிர்மறையான பெயராக இருக்கக்கூடாது. அது மட்டும் அல்ல; அந்தப் பெயரை, தங்கள் விருப்பம் போல எழுதி விடவும் முடியாது. எப்படி எழுத வேண்டும் என்பதையும், அரசே தீர்மானித்து உள்ளது. அந்த எழுத்துகளை மட்டுமே எழுத முடியும். இங்கே தமிழகத்தில் பெயர்களைக் கொலை செய்வது போல, ராசி பார்த்து, எண் கணிதம் பார்த்து எழுத முடியாது.

இங்கிலாந்து நாட்டில், எதிர்மறையான பெயர்கள் வைத்துக் கொள்ள முடியாது.

நியூசிலாந்து நாட்டில், எதிர்மறையான பெயர்களைச் சூட்டக் கூடாது. தேவை இல்லாமல் நீளமான பெயராக இருக்கக்கூடாது; ஆகக் கூடுதலாக 100 எழுத்துகளுக்கு மேல் இருக்கக்கூடாது; அரசு அலுவல் மற்றும் அதிகாரப் பெயராக இருக்கக்கூடாது. அதாவது, Lucifer, V8, Ananl, 4Real, Justice போன்ற பெயர்களைக் கொண்டதாக இருக்கக்கூடாது.
 
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில், 40 எழுத்துகளுக்கு மேல் இருக்கக்கூடாது.

சீனாவில், கணினியில் எழுத முடியாத சீன எழுத்துகளைக் கொண்ட பெயரை, பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்ட முடியாது.

போர்ச்சுகல் நாட்டில், அரசு வகுத்து உள்ள பெயர்ப்பட்டியலில் இருந்துதான், பெயர்களைத் தேர்வு செய்ய முடியும். லோலிதா, மரடோனா, மோனாலிசா போன்ற பெயர்களை வைத்துக் கொள்ள முடியாது.

டென்மார்க், ஸ்பெயின், அர்ஜென்டைனா ஆகிய நாடுகளிலும் அரசு பெயர்ப்பட்டியலில் இருந்துதான் தெரிவு செய்ய முடியும்.

நோர்வேயில், நோய்களின் பெயர்கள், எதிர்மறையான பெயர்கள், முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது.

ஆந்திராவிலும், வட இந்தியாவிலும், ரெட்டி, நாயுடு, யாதவ், டெண்டுல்கர், கங்குலி, சட்டோபாத்யாயா, சட்டர்ஜி, முகர்ஜி, பானர்ஜி என சாதிகளின் பெயர்களாலேயே ஒருவர் அழைக்கப்படுகின்றார். தமிழகத்தில் ஒருவரது பெயரை வைத்து, அவர் எந்த ஊர்க்காரர் என்பதை ஓரளவுக்குக் கண்டுபிடிக்க முடியும். பெரும்பாலும், உள்ளூர்க் கோவில் சாமியின் பெயரை அல்லது குலதெய்வத்தின் பெயரைச் சூட்டுவார்கள். எடுத்துக்காட்டாக, கோமதி என்ற பெயரில் ஒரு பெண் இருந்தால், அவர் சங்கரன்கோவிலைச் சேர்ந்தவராக இருப்பார். அல்லது, அவரது பெற்றோர், சங்கரன்கோவில் திருக்கோவிலுக்கு வந்து சென்று இருக்க வேண்டும்; அல்லது, அந்தக் கோவில் சாமியின் பெயர் அவர்களுக்குப் பிடித்தமானதாக இருந்திருக்க வேண்டும்.

தந்தை பெரியாரின் கொள்கைத் தாக்கங்களால், தமிழகத்தில் சாதியின் பெயர்களை எழுதுவது ஒழிந்தாலும், இப்போது சில சுயநல சக்திகள் அந்த வழக்கத்தைக் கொண்டு வந்து விட முயல்கின்றன. தேவநாதனின் வின் தொலைக்காட்சி, சாதிப்பெயரை எழுதுங்கள், சொல்லுங்கள் என்று 24 மணி நேரமும் ஓயாமல் முழங்கிக் கொண்டே இருக்கின்றது. இத்தகைய சுயநல சக்திகளைத் தமிழகம் புறந்தள்ள வேண்டும். ஜெர்மனியில் உள்ளது போல, தமிழ்ப் பெயர்களை இலக்கண முறைப்படி எவ்வாறு எழுத வேண்டும் என, தமிழக அரசு வரையறுக்க வேண்டும்.

- அருணகிரி

Pin It